பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக மாற்றி இருக்கிறார்கள். போற்றுதலுக்குரிய மாற்றம். சமூக நீதியே மானுட விடுதலையை உறுதிப்படுத்தும். சமதர்ம நிலையை சமூக நீதி தான் ஸ்திரப்படுத்தும்.

periyar 232கி மு, கி பி என்பது போல நாம் பெ மு, பெ பி என்று தான் இந்த வாழ்வின் பேரோட்டத்தை இனி கூற வேண்டும். அதாவது பெரியாருக்கு முன். பெரியாருக்குப் பின்.

கல்வி வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு கிடைக்கிறதென்றால் அது பெரியார் திறந்து வைத்த கதவின் வழியே வந்த விடுதலை தான்.

இருள் சூழ்ந்த ஒரு சமூகத்தில் ஜுவாலை ஏந்திக் கொண்டு அக்கினிக் குஞ்சாக பெரியார் வந்தார். தெற்கில் இருந்து கிளம்பிய பெரியார் எனும் சூரியன் தான் மொத்த இந்தியாவுக்குமான சமூக நீதியின் தேவையை உணர்த்தியது என்றால் அது தான் சரித்திரம்.

மத ரீதியாக... சாதி வாரியாக பிரிந்து கிடந்த தமிழ்ச் சொல்லை கழுவி சுத்தம் செய்த ஒரு கலகக்காரர். கலகம் உடன் பிறந்தது என்றாலும்.... காலம் அதைக் கொண்டே அவரை பெரியாராக்கியது. வீரிய வித்து ஒருபோதும் விடை காணாமல் விடாது. காசியில் பிச்சை எடுத்து உண்டபோது சக மனிதனின் பசி புரிந்தது. அதே நேரம் காசியில் தன்னைப் போன்றோருக்கு வேலை கிடைக்காது என்று புரிந்தபோது சாதியில் கொழுந்து விட்டெரியும் காசி புரிந்தது. ஏற்றத் தாழ்வை செய்யும் நோக்கத்தின் ஏகாதிபத்தியம் இங்கே ஆதிக்க வர்க்கமாக இருப்பதை உணர்கையில் வர்ணாசிரமமும் வஞ்சக உலகமும் புரிந்தது.

எப்போதெல்லாம்.... நெருக்கடிக்கு மனித குலம் உள்ளாகிறதோ அப்போதெல்லாம் வழிகாட்ட ஒரு வாடைக் காற்று வரும். அப்படி காலம் ஏற்றி வாய்த்த ஜோதி... நம்ம பெரியார்.

மொழியே அறிவைக் கடத்துகிறது. சான்றோனைக் கண்டால் ஓடி ஒளியாத கூட்டமே சத்தியத்துக்கானது. அது இங்கே நம்மை ஒன்று சேர்த்து நன்று காண் என்றிருக்கிறது.

இந்த வாழ்வின் மீது சாதியும் சமயமும் எந்த இடத்தில் தன் பங்கைச் செலுத்துகிறது என்ற பெரிய வினாவை நம்மை நோக்கி நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். பெரியார் அதைத்தான் செய்தார். ஏன் என்று கேள். எதற்கென்று கேள். எப்படி என்று கேள். கேள்விகள் அறிவியலானால் பதில்கள் அறத்தோடு கிடைக்கும்.

'பகுத்தறிவை மனிதன் தப்பாகப் பயன்படுத்தி மாட்டிக் கொண்டிருக்கிறான். இந்த தொல்லைக்கு பரிகாரமாக கடவுளை அவனே சிருஷ்டித்துக் கொண்டான்' என்று சொல்லும் பெரியார்... ஏழை...பணக்காரன்... அரசன்... குடிமக்கள்... ஆண்டான்... அடிமை... மேல் சாதி கீழ்சாதி... கீழ்சாதி அதுக்கும் கீழ்சாதி... இடைசாதி கடைசாதி... எஜமானன் பிச்சைக்காரன்... என்று கடவுள் இப்படி மனிதர்களை பிரிந்து கிடக்க விடுவானேன் என்கிறார். சிந்தித்துப் பார்க்க சிரிப்பு தான் மிச்சம்.

இந்த உலகம் ஒற்றைப் பொத்தானில் முளைத்து விடவில்லை. மாறாக லட்சம் யுத்தங்களால் உருவானது.

பெரியாரின் நோக்கத்தின் அடிப்படை அசரீரிகளாலும்.... அவதாரங்களாலும் ஆனவை அல்ல. மாறாக அர்த்தமுள்ள மானுடத் தேவைகளால் ஆனது. வர்க்க ரீதியில் பிரிந்து கிடக்காத வகைமையைச் சார்ந்தது. அது தான் இன்றைய பல்வேறு கட்டுகளில் இருந்து இந்த மானுடகுலம் விடுபடும் இடம். வர்க்க பாகுபாடுகளையும் சாதி மத கேலிக் கூத்துக்களையும் எதிர்த்து தான் ஆக வேண்டும். சுய சிந்தனையே ஒருவரின் அறிவுப்பூர்வமான வளர்ச்சி. அது தான் பரிணாமத்தின் வடிவம். இன்னும் மனிதனை மனிதன் இழிவுபடுத்துகிறான் என்றால் தமிழ் மொழி கற்றுத் தந்த உன்னதம் தான் என்ன. 2300 வருட பாரம்பரியத்தின் பரிணாமம் மொண்ணையாகி விடாதா.

எத்தனை நாளைக்கு யாரோ சொல்வதையே கேட்டுக் கொண்டிருப்பது. சொந்த முடிவுகள் எப்போது.

சாமி சமயம் வெட்டி சுமை என்று அறிய வேண்டுமானால் ஆன்லைனில் பெரியார் வந்துதான் ஆக வேண்டும். உலகத் தரத்தில் மானுடத்தை விதைக்க வேண்டுமெனில் பெரியாரின் தேவை தவிர்க்க முடியாதவை.

தேவையே வாழ்க்கை. ஆனால் அந்த வாழ்க்கை கட்டுப்பாடான தேவைகளால் ஆனது. இரண்டுக்கும் ஆகிருதி எந்த சாயமும் பூசாத அறிவுத் தெளிவு.

*

நூறாண்டுகளுக்கு முன்பே பெண்ணடிமைக்கு குரல் கொடுத்த மகத்துவர்.

பெண் என்பவள் பிள்ளை பெறும் இயந்திரம் அல்ல.. ரத்தமும் சதையுமான சக மனுஷி என்று புகை மண்டிக் கிடந்த மூளைக்கு புது வரம் கொடுத்தவர்.

விதவைத் திருமணத்தை ஆதரித்தவர். மனைவி இறந்தால் இரண்டாம் மாதம் கணவன் புது மாப்பிளை. அப்படியே கணவன் இறந்தால் அவள் காலத்துக்கும் உதவாத வெள்ளைக் காகிதமா...? என்ன வெங்காய நியாயம் இது. மறுமணம் சம்பந்தப்பட்ட நபரின் விருப்பத்துக்கு உட்பட்டது. அதை எந்த வெட்டி நியாயமும் பேசி குளிர்காய யாருக்கும் உரிமை இல்லை... என்பதை பெரியார் காலம் தான் பெயர்ந்து கிடந்த இந்த பூமிக்கு பாடம் சொன்னது.

1938ல் சென்னையில் நடந்த மகளிர் மாநாட்டில் பெண்களால் தான் அவருக்கு பெரியார் என்ற புனைப்பெயர் சூட்டப்பட்டது.

பூஜை புனஸ்காரம் என்று புத்திக்குள் கலங்கிய தவிப்பை தவிர்க்கச் செய்தவர்... மந்திரம் ஓதி ஒரு மாற்றமும் நிகழப் போவதில்லை என்று உறுதி பட பறை சாற்றியவர். பூஜை என்பதே நம்மை அடிமைப்படுத்தும் வழிமுறை என்பதை பொதுவில் போட்டு உடைத்தவர்.

கருவறைக்குள் அனுமதி இல்லை. ஒரு சாரருக்கு வாசலோடு அனுமதி முடிந்தது. ஒரு சாரருக்கு அதற்கும் வெளியே. கடவுள் உண்மை ஆனால் இத்தனை பேதங்களை பார்த்துக் கொண்டு அமைதியாய் வேடிக்கை பார்க்குமா என்று கேட்கிறார். கேள்வி லாஜிக்கா தானே இருக்கிறது.

தேங்காய் விக்கிற விலைக்கு சாலையில் உடைத்து விட்டுப் போக எப்படி மனம் வருகிறது. நெருப்பில் ஊற்றும் நெய்யினால் வயிறெரிகிறது.

காசு கொடுத்தால் இந்த வழியாக சாமியிடம் செல்லலாம். கொஞ்சம் அதிகமாக கொடுத்தால்.. அந்த வழியே செல்லலாம்... காசே கொடுக்கவில்லை என்றால்.. வேர்த்து விறுவிறுத்து அடித்து பிடித்து கூட்டத்தோடு கூட்டமாக மூச்சடைத்து இந்த வழியே செல்லலாம் என்பதெல்லாம்... எந்த மாதிரி கடவுளின் வடிவம் என்று தெரியவில்லை.

கடவுள் இருப்பது உண்மையானால் கடவுள் இல்லை என்று மனிதன் சொல்லும் எண்ணமே அவனுக்கு வந்திருக்காதே என்று கேட்கிறார். அசரடிக்கும் லாஜிக்.

*

அடுத்து குலக்கல்வி என்று ஒரு குறுக்கு புத்தி திட்டத்தை வேரோடு பிடுங்கி வீசிய தீர்க்கதரிசி பெரியார்.

குலக்கல்வி என்றால்... மதியம் வரை வாத்தியார் வீட்டுத் திண்ணையில் பாடம் படிக்கலாம். பிறகு அந்தந்த குழந்தைகள் அவரவர் அப்பா செய்யும் தொழிலை பழகச் சென்று விட வேண்டும். என்ன மாதிரி கிறுக்குப் புத்தி திட்டம் இது. முடி வெட்றவன் பையன் முடிதான் வெட்டணும். டாக்டர் ஆக கூடாது. ஓட்டுநர் பையன் டிரைவர் தான் ஆகணும். போலீஸ் ஆக கூடாது. அதுக்கு ஆப்பு வைத்தவர்... நம்ம தாடிக்காரர்.

அறியாமை என்ற சொல்லை காலத்துக்கும் போர்த்தி விட்டு ஏய்த்து பிழைப்பு நடத்தும் ஆதிக்க வர்க்கத்தின் அட்டூழியம் இது என்று ஊருக்கே சொன்னார். எத்தனை வழக்குகள். அத்தனையும் சமாளித்தார். எத்தனை பகை... வஞ்சம்... அத்தனையும் எதிர்த்தார். மனம் கோணும் என்பதற்காக நாசூக்காக சொல்லும் எந்த சமாளிப்புகேசனும் அவரிடம் இல்லை. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான். ஏனெனில் அவர் பேச்சில் உண்மைக்கு புறம்பாக ஒருபோதும் எதுவும் கலந்ததில்லை.

மத உணர்ச்சி கூடாது. மாறாக மனித வளர்ச்சி கூட வேண்டும். அதுவும் இளம் பிள்ளைகள் ஒருபோதும் பழமைவாதத்துக்கு தங்களை பலி ஆக்கிக் கொள்ளவே கூடாது... என்று வலியுறுத்திச் சொல்கிறார். அவர்களே நாட்டின் கண்கள். அவர்கள் கண்களில் அறிவியலின் வழியே உலகை காணும் கருப்பு வெள்ளை தான் உருள வேண்டும். அதுதான் உருளும் உலகத்தின் வண்ணங்களுக்கு அடிகோலும்.

*

இந்தி திணிப்பு எதிர்ப்பு விஷயம் இப்போது வரை நம்மை துரத்துவதை நாம் அறிவோம்.

ஒருவர் எத்தனை மொழிகளை வேண்டுமானால் கற்றுக் கொள்ளலாம். அது அவரவர் விருப்பம். ஆனால் ஒரு மொழியை ஆட்சியின் அதிகாரத்தைக் காட்டி... அரசியல் பிழைப்புக்கு இன்னொருவர் மீது திணிப்பது அறத்துக்கு எதிரானது. அதற்கு அப்போதே எதிர்க்குரல் கொடுத்தவர் பெரியார்.

பெரியார் எனும் ஆயுதமே தமிழகத்தை இன்று வரை காத்துக் கொண்டிருக்கிறது என்றால் எப்படி என்று யோசிக்க வேண்டும்.

தீண்டாமை... மத பாகுபாடு.. சாதி இறுக்கம்... மூட நம்பிக்கை.... மூட பழக்க வழக்கம்... என்று இன்றும் தமிழன் கட்டுண்டு எவனோ எப்போதோ பற்ற வைத்த நெருப்பில் புகைந்து கொண்டே கிடப்பதை உணர வேண்டும்.

இப்போதும் பேருக்கு பின்னால் சாதி பெயரை இணைத்துக் கொள்ளும் அவலம் இருக்கத்தானே செய்கிறது.

"அர்த்தமற்ற சாவு
கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியிலும்
சாதிப்பெயர்"

என்று நான் ஒரு கவிதை கூட எழுதி இருக்கிறேன்.

தீண்டாமை என்ற பெரும் நோயை விரட்ட எல்லா தரப்பு மக்களும் தங்களுள் சம்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார். அந்த திருமணங்கள் கூட சுயமரியாதைத் திருமணமாக நடக்க வேண்டும் என்கிறார்.

ஆணும் பெண்ணும் நிகர் என்கையில் தாலி கட்டுதல் எப்படி முறையாகும். ஒரு கை ஓங்கி மறு கை இறங்கி இருத்தல் எப்படி சமமாகும். கணவனும் மனைவியும் நண்பர்களாக உணர வேண்டும். ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர தொல்லை கொடுத்தல் ஆகாது. அங்கே அதிகாரத்துக்கு இடம் இருக்க கூடாது. பெண்ணடிமைத் தனத்தை முதலில் கணவன் எனும் ஆணிடம் இருந்து தான் அகற்ற வேண்டும். அதற்கு அந்த ஆணும் கை கொடுக்க வேண்டும்.

*

தனி மனித ஒழுக்கம் குறித்து மிகவும் வலியுறுத்துகிறார். பக்தி இல்லாமல் கூட ஒருவனின் இருத்தல் நிகழும். ஆனால் அவன் ஒழுக்கத்தில் இருந்து விலகினால் அது அவனை மட்டுமல்ல அவனை சுற்றி இருப்போரையும் பாதிக்கும் என்கிறார்.

சமுதாய வாழ்க்கையில் பக்தியை விட ஒழுக்கமே முதன்மையானது. இன்றியமையாதது. சமூக சீர்கேடுகளுக்கு தனிமனித ஒழுக்க தவறுதல் தான் காரணம் என்கிறார். உணர்வோம்.

*

கருப்பு சட்டை ஏன் என்ற கேள்விக்கு பெரியாரின் பதில்... அது துக்கத்தின் வெளிப்பாடு.

என் மக்கள் இப்படி சாதியாலும் மதத்தாலும்... அறிவீலியாலும்... அறியாமையாலும்.. பிரிந்து கிடப்பதை காண சகியாமல் தான்.... அந்த துக்கத்தை சட்டையில் ஏற்றி காட்ட வேண்டி இருக்கிறது என்கிறார்.

*

தன் மனைவி நாகம்மை இறந்த போது கூட கல் மாதிரி நின்றவர்... நண்பர் ராஜாஜி இறந்த போது கண்ணீர் விட்டார்.

இத்தனைக்கும் கொள்கையாலும்... தத்துவார்த்தங்களாலும்... எடுத்துக் கொண்ட முன்னெடுப்புகளாலும் அப்படியே நேரெதிர் இருவருமே. ஆனாலும் நட்பென்பது வேறு... நடப்பு அரசியல் என்பது வேறு என்று புரிந்து கொண்டு நடந்தவர் பெரியார்.

தான் நடத்தும் அரசியலுக்கும் உண்மையாக... அதே நேரம் தான் நேசிக்கும் நண்பருக்கும் உண்மையாக இருக்கத் தெரிந்த பெரியார் கிளிஷேக்கலுக்கு அப்பாற்பட்டவர். உண்மைக்கு அருகாமையில் இருப்பது பற்றி ஒன்றுமில்லை. உண்மையாகவே இருப்பது பற்றி தான் எல்லாம் என்று முன் மாதிரியாக நடந்து கொண்டவர்.

அவர் கோபம் கொள்வார், இவர் தவறாக நினைத்துக் கொள்வார் என்று எந்த ஒரு நல்லவைகளையும் செய்யாமல் விட்டது இல்லை. உள்ளே ஒன்று வெளியே பூச்சு எல்லாம் இல்லை. சரி எனப் பட்டதை பட்டவர்த்தனமாக போட்டு உடைப்பவர். ஆனால் அவரே சொல்வார்... நான் சொன்னேன் என்பதற்காக எதையும் அப்படியே கேட்டு அப்படியே பின்பற்றவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. உன் அறிவுக்குள் போட்டு அதை அலசி ஆராய்ந்து உன் மனதுக்கு அது சரி என்று பட்ட பிறகு அதை நிறைவேற்று என்பார். அன்பும் அழுத்தமும் வேலைக்காகாது என்று உணர்ந்திருந்தார். அனுபவமே ஆசான் என்றும் அறிந்திருந்தார்.

மனித குலத்தை மூழ்கடிக்கும் முட்டாள்தனங்களை... மூட நம்பிக்கைகளை மிக மூர்க்கமாக எதிர்த்தவர்.

வட மாநிலங்களில் வெகு சுலபமாக நடந்து விடும் குற்றங்கள் இங்கு பெரும்பான்மையாக நடக்காமல் இருக்கக் காரணம் பெரியார் எனும் பேராயுதம் நிகழ்த்தி விட்டுப் போன சாகசம் தான். அது தான் இன்று வரை இந்தளவிலாவது நம்மை காத்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த தாடியும் அந்த தடியும் நாட்டைக் காக்கும் கவசங்கள் என்றால்... மறுப்பு சொல்ல ஆயிரம் பேர் வரலாம். லட்சம் பேர் மறுத்தாலும் பெரியார் எனும் கருப்பு நெருப்பு... என் கடன் பணி செய்து கிடப்பதே என்று தொடர்ந்து தொண்டாற்றிக் கொண்டு தான் இருக்கும்.

ஏகாதிபத்தியம் இருக்கும் வரை எதிர்க்கும் குரல் இருக்கத்தான் வேண்டும். முன்னால் பெரியார் இருக்கிறார். பின்னால் வீறு நடை போடுவோம்.

- கவிஜி

Pin It