கடந்த ஆட்சியில் அதிமுக அரசு கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதாக திமுக கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்தது. நெல்லை, சென்னை போன்ற ஊர்களில் மறைக்கப்பட்ட கொரோனா மரணங்களை பட்டியலிட்டு “உயிரோடு விளையாட வேண்டாம்! தமிழக அரசு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்” என்று ஸ்டாலின் அவர்கள் பேசினார்.
ஆனால் இந்த ஆட்சியில் அதைவிட பல மடங்கு கொரோனா மரணங்கள் மறைக்கப் பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை, திருச்சி கோவை, கரூர், திருப்பூர், வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கடந்த ஏப்ரல் மே மாதங்களில் 11,699 நோயாளிகள் இறந்துள்ளதாக மருத்துவமனை ஆவணங்களில் குறிப்பிடப் பட்டிருக்கின்றது.
ஆனால் இதே காலகட்டத்தில் 2019 ஆம் ஆண்டு 7262 உயிரிழப்புகளும் 2020 ஆம் ஆண்டு 8462 உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
ஆனால் இந்தாண்டு குறிப்பிட்ட அதாவது கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த ஏப்ரல் மே மாதங்களில் சம்மந்தப்பட்ட 6 மருத்துவமனைகளில் 863 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனை கணக்கில் கொண்டால் 6 மருத்துவமனைகளில் 8 மடங்கு மரணங்கள் குறைத்துக் காட்டப்பட்டிருப்பதாக தெரிகின்றது.
இந்த கணக்கீட்டை தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் பொருத்திப் பார்த்தோம் என்றால் இந்தாண்டு ஏப்ரல் மே மாதங்களில் ஒரு லட்சத்து 26,126 மரணங்கள் மறைக்கப் பட்டிருப்பதாக தெரிகின்றது.
ஆனால் அரசுத் தரப்பில் 12870 பேர் மட்டுமே உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு பெரிய மனிதப் பேரவலங்களை ஏன் அனைத்து கட்சிகளும் அது திமுகவாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி திட்டமிட்டு மூடி மறைக்கின்றன என்றால் மக்களை காப்பாற்ற வக்கற்ற தங்களின் முதலாளித்துவ அடிமைத்தனத்தை மறைத்துக் கொள்ளத்தான்.
மருத்துவக் கட்டமைப்பு சிறப்பாக உள்ளதாக சொல்லப்படும் தமிழ்நாட்டிலேயே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரணங்கள் மூடி மறைக்கப்பட்டிருக்கின்றன என்றால் நாம் உபி, மபி, குஜராத் போன்ற மாநிலங்களை சொல்லவே தேவையில்லை.
ஆனால் சொல்லி வைத்தார் போல இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஊடகங்களும் அரசு தரும் மரண எண்ணிக்கையை மட்டுமே மக்களுக்கு தெரியப்படுத்தியதே தவிர அந்த விவரங்கள் உண்மையா என சோதனை செய்யக் கூட அவை முயலவில்லை.
ஊடக அறம் என்பது ஊடக முதலாளிகளின் நலனை காப்பதுதான் என மாறிப்போன காலத்தில் நாம் ஊடகங்களிடம் இருந்து எந்த வகையான நேர்மையையும் எதிர்ப்பார்க்க முடியாது.
பெரும்பாலான ஊடகங்கள் கள்ளக்காதல் விவகாரங்களை ஆய்வு செய்யும் அளவுக்குக்கூட அரசு தரும் புள்ளி விவரங்களை ஆய்வு செய்ய ஆர்வம் காட்டுவதில்லை.
கொரோனா மரணங்களை குறைத்துக் காட்டுவதன் மூலம் தங்களின் புனிதபிம்பங்களுக்கு சேதாரம் ஏற்படாமல் காத்துக் கொள்வதோடு கொரோனாவல் உயிரிழந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை கொடுக்காமல் மோசடி செய்யவும் இது பயன்படுகின்றது.
தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் கொரோனாவுக்கு பெற்றோரை இழந்த வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைக்கு ரூ.5 லட்சமும், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைக்கு ரூ.3 லட்சமும் அரசால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம் கேர் நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் வைப்புத் தொகையாக வழங்கப்படும் எனவும் அவர்கள் 23 வயதை எட்டிய பின் இந்தத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் 18 வயதை அடைந்தவுடன் அவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகையும் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தற்போது வரை, நாடு முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோர் இருவரையும் இழந்துள்ளதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்திருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது அரசு சொல்லும் இந்த எண்ணிக்கைக் கூட பல நூறு மடங்கு குறைவாக இருக்கவே வாய்ப்புள்ளது.
சாமானிய மக்களை ஏமாற்றுவதிலும் அவர்களின் பிழைப்பை கெடுப்பதிலுமே குறியாய் இருக்கும் கார்ப்ரேட் அரசுகளுக்கு சாமானிய மக்களின் மரணங்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே. ஆனால் ஒவ்வொரு மரணத்தாலும் சிதைந்து போன குடும்பங்களுக்கு அது பேரிழப்பாகும்.
தன்னை எல்லா வகையிலும் முற்போக்கு என காட்டிக் கொள்ள பிரயத்தனப்படும் ஒரு அரசு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரணங்களை மறைத்திருக்கின்றது என்பதும் அதைப் பற்றி எந்த ஒரு அரசியல் கட்சியும் அலட்டிக் கொள்ளவில்லை என்பதும் நாம் எதுபோன்ற ஆட்சியாளர்களின் உலகில் வாழ நிர்பந்திக்கப் பட்டிருக்கின்றோம் என்பதைத்தான் காட்டுகின்றது.
ஆற்றில் அடித்து வந்த பிணங்களுக்குக் கூட ஒரு கணக்கு இருந்தது ஆனால் ஆளும் வர்க்கத்தின் கேடுகெட்ட கார்ப்ரேட் அடிமைத்தனத்தை மூட மறைக்க ரகசியமாக அழித்தொழிக்கப்பட்ட பிணங்களுக்கு இன்று எந்த அடையாளமும் இல்லாமல் போய்விட்டது.
கணக்கில் காட்டப்பட்ட பிணங்களுக்கே நிவாரணம் கொடுக்க வக்கற்ற ஆட்சியாளர்களிடம் கணக்கில் காட்டப்படாத லட்சக்கணக்கான பிணங்களுக்கு நம்மால் என்ன நிவாரணத்தை கோரமுடியும்?
தடுப்பூசிகளுக்காக மக்கள் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றார்கள். இன்னும் 30 சதவீத மக்களுக்குக் கூட தடுப்பூசி போடப்படவில்லை. அடுத்து ஒரு பேரழிவுக்கு மக்களை இந்த அரசுகள் தயார் செய்துகொண்டு இருக்கின்றன.
பிணங்களை காணாமல் போகச் செய்யும் மந்திரவாதிகளின் ஆட்சிகளின் கீழ் நாம் வாழ்ந்து வருகின்றோம். பிணங்களை வைத்தே அரசியல் செய்ய பழக்கப்பட்டவர்களுக்கு பிணங்களை மறைப்பது இன்னும் மகிழ்ச்சியான வேலையாக மாறிப்போய் இருக்கின்றது.
காணாமல் போன மனிதர்கள் எப்போதாவது வருவார்கள் என எதிர்ப்பார்த்து காத்திருப்பது போல காணாமல் போன பிணங்களும் தங்களுக்கு ஒரு எண் கிடைக்காதா என எங்கோ காத்துக்கிடக்கின்றன.
யாருக்கு தெரியும் நாளை உயிரோடு இருப்பவர்கள் கூட எண்ணிக்கையில் இருந்து விடுபட்டு போக வாய்ப்பிருக்கின்றது. அதனால் நம்மை நாமே மீண்டும் மீண்டும் நொடிக்கொருதரம் எண்ணிக்கொள்வோம்.
- செ.கார்கி