சகோதரர்களே!

உங்கள் வரவேற்பு பத்திரத்தை நான் ஒப்புக்கொள்ள முடியாதானாலும், என்னைப் பற்றிய புகழுரைகள் போக மீதி உள்ள வாசகங்கள் எனது கொள்கையை தாங்கள் மனப்பூர்வமாய் ஒப்புக் கொண்டு அதன்படி நடப்பதோடு அதை மற்று அனுபவத்திலும் கொண்டு வர தங்களுடைய சம்மதத்தை தெரிவிக்கின்றன. ஆதலால் அதைப் பொருத்தவரை வந்தனத்துடன் ஏற்றுக் கொள்ளுகிறேன்.

periyar 745நான் ஏதோ பிரமாதமான காரியங்கள் செய்துவிட்டதாகவும், பெரும் தியாகம் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறீர்கள், அவ்விதமாகச் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை. ஜெயில் வாசத்தைப் பற்றி சொல்லியிருப்பது மிகவும் வேடிக்கையானது. ஜெயிலுக்குப் போவதனால் பெரிய கஷ்ட நஷ்டம் ஒன்றுமில்லை. சந்தோஷமாகவும், சாந்தியுடனும் ஓய்வெடுத்துக் கொள்ள மனிதனுக்கு ஜெயிலை விட வேறு இடம் இல்லை. ஜெயிலில் இருக்கிற காலம் வரை வெளியில் தொண்டு செய்வதற்கு சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடுகிறதே என்கிற ஒரு கவலை தவிர மற்றபடி வேறு ஒன்றும் இல்லை. ஆனால் வெளியில் வந்தால் முன்னிலும் அதிகமாக வேலை செய்யக்கூடிய ஆற்றலும் எழுச்சியும் உண்டாய்விடுகிறது. ஆதலால் அது ஒரு குறிப்பிடத்தக்க விஷயமே அல்ல.

உலகத்தில் உள்ள மக்களும் மற்றும் ஜீவன்களும் அதனதன் உயிர் உள்ளவரை யாதாவது ஒரு தொழில் செய்து கொண்டுதான் இருக்க வேண்டியது ஜீவ சுபாபம். தொழிலில்லாமல் இருக்கவே முடியாது. சும்மா இருப்பது என்பதும் ஒரு தொழிலேயாகும், அன்றியும் அது மற்ற எல்லாத் தொழிலையும் விட மிகவும் கஷ்டமானது. கிரமமாய்ச் சொல்வதானால் செத்தால் தான் சும்மா இருக்க முடியும். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு தொழிலில் ஈடுபட்டு இருப்பது போல் அதாவது ஒருவன் வியாபாரம், ஒருவன் உத்தியோகம், ஒருவன் சாமியார், ஒருவன் பத்திரிகை ஆசிரியன், ஒருவன் தேசத் தலைவன், ஒருவன் பூசாரி, ஒருவன் தாசி வியாபாரம், ஒருவன் கள்ளு வியாபாரி என்பதாக பலர் பல தொழில் செய்வதுபோல் நானும் ஏதேதோ தொழில் செய்து இப்போது இந்த தொழில் செய்கிறேன். இவைகள் செயற்கை வாசனை, தற்செயல் முதலிய பல காரணங்களால் இது ஏற்பட்டனவே தவிர இதற்குப் பிரமாதமான யோக்கியதை ஒன்றும் கொடுக்க வேண்டியது இல்லை என்பதே எனது அபிப்பிராயம்.

மனித வாழ்வில் ஒவ்வொருவனுக்கும் இம்மாதிரி ஏதாவது ஒரு தொழில் இருந்துதான் தீரும். எந்த தொழிலை யார் செய்தாலும் அவனவன் ஜீவ சுபாவத்தைக் காட்டுவதிலொன்றாகுமே ஒழிய அதற்கு யோக்கியதை கொடுக்க வேண்டியதில்லை. இவைகள் உலக வாழ்க்கையில் மாறிமாறி வரவும் கூடும். இந்நிலையில் ஒரு மாற்றம் மக்களுக்கு அனுகூலம் இருப்பது போலவும், ஒரு சமயம் அவருக்கு மாத்திரம் சுயநலம் இருப்பதுபோலவும், மற்றொரு சமயம் ஒன்றுக்கும் உதவாமல் மக்களையும் கெடுத்து தானும் கெடுவதாகவும் காணப்படும். இவ்வித ஜீவ சுபாவமான தோற்றங்களைக் காணுவதினாலேயே ஆச்சரியப்படத்தக்கதும், புகழத்தக்கதும் ஒன்றுமில்லை. தவிர எனது தொண்டாகிய சுயமரியாதை இயக்கத்திற்கு பொது மக்களின் எதிர்ப்பு இருக்குமோ என எண்ணிப் பயந்துகொண்டு வந்த உங்கள் ஊரில் நீங்கள் ஆதரித்திருப்பதானது எனக்கு மேலும் மேலும் மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அடக்க முடியாத மன உறுதியையும் கொடுக்கிறது.

சுயமரியாதை தத்துவமும், இயக்கமும் நமக்கு புதிதல்ல, அது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அது மனிதன் எந்தக் காலத்தில் ஏற்பட்டானோ, எந்தக்காலத்தில் மனிதத் தன்மையும், பகுத்தறிவு உணர்வும் அவனுக்கு ஏற்பட்டதோ, அன்று முதலே சுயமரியாதை உணர்ச்சி மக்களுக்கு ஏற்பட்டுத்தான் வருகிறது. ஆனால் அதன் எதிரிகள் அதாவது ஒரு மனிதனுக்கு சுயமரியாதை உணர்ச்சி ஏற்படுவதால் மற்றொரு மனிதனுடைய சுய வாழ்க்கைக்கும், உயர்வுக்கும் தடை ஏற்படுமானால், அந்த தடைக்கு ஆளாகிறவன் மற்றவனின் சுயமரியாதைக்கு விரோதமாயிருந்து அதனை ஒழிக்க வேண்டியது அவனது கடமையாகிற காலத்தில் கொஞ்சம் கொஞ்சம் மறைபடுகிறதுண்டு. ஆனால் அது ஒரே அடியாய் ஒரு நாளும் மறைந்து போகக்கூடியதல்ல.

ஆதிதிராவிடர்

தவிர, ஆதிதிராவிடர்கள் என்கிற பெயரால் எனக்கு ஒரு வரவேற்பு பத்திரம் அளித்துக் கொடுத்திருப்பதற்கு இரண்டொரு வார்த்தை சொல்லுகிறேன். நீங்கள் ஆதி திராவிடர்கள் என்று ஒரு பெயர் பெற்று இருப்பது உங்கள் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட இழிவை மாற்றிக் கொள்வதற்கு அனுகூலமானதென்று நினைத்திருக்கிறீர்கள். உங்களை கொஞ்ச காலத்திற்கு முன்பு பறையர்கள், சக்கிலியர்கள், பள்ளர்கள் என்று சொல்லிக்கொண்டிருந்த காலத்தில் அவ்வார்த்தைகளுக்கு என்ன பொருளும் தத்துவமும் இருந்ததோ அதே பொருளும் தத்துவமும் தான் “ஆதிதிராவிடர்” என்ற வார்த்தையிலும் இருக்கிறதேயல்லாமல் எந்த விதத்திலாவது அது மறைவுபட்டதாக காணவில்லை.

“பெருமாள்” என்பதாக பெயரையுடைய ஒரு ‘பறையன்’ ஒரு பார்ப்பனனிடம் அடிமையாய் இருந்த காலத்தில் அந்த பார்ப்பனன் அந்த பறையனை பெருமாள் என்று கூப்பிடுவது தனது பார்ப்பனீய கௌரவத்திற்கு குறைவாய் இருப்பதாக எண்ணி போய் வேறு பெயர் மாற்றிக் கொண்டு வரும்படி, கொஞ்சம் பொருள் கொடுத்து கேட்டுக்கொண்டதாகவும், அந்த பறையன் பெருமாள் என்ற பெயரை மாற்றி, பெரிய பெருமாள் என்று வைத்துக்கொண்டு வந்ததாகவும், அதன் பேரில் இந்த பார்ப்பனன் பழைய பெயரைவிட புதுப்பெயர் ரொம்பவும் மோசமாக போய்விட்டதாக கருதினதாகவும் ஒரு கதை சொல்வதுண்டு. அதுபோலவே பறையர் என்கிற பெயர் மாறி ஆதிதிராவிடர் என்கிற பெயர் வந்ததினால் “பறையருக்குண்டான” இழிவு தத்துவம் ஒரு சிறிதும் மாறாமல், ஆதிதிராவிடன் என்றால் பறையன் இழிந்த மகன் என்ற அர்த்தத்தைக் கொடுப்பதோடு, தேசத்தின் யோக்கியதையையும் இழிவுபடுத்தத்தக்கதான பொருளும் அதில் அடங்கி இருக்கிறது. இதை விட பழய பெயரே மேலானதென்பது எனது அபிப்பிராயம்.

சமூகத்திற்கோ, சங்கத்திற்கோ ஒரு பெயர் வைக்க வேண்டுமானால் எந்த குற்றத்தை நீக்குவதற்காகவோ, அல்லது எவ்வித இழிவை விலக்குவதற்காகவோ எம்மாதிரி முன்னேற்றத்தை அடைய வேண்டுமென்பதற்காகவோ நாம் கருதி இருக்கிறோமோ அந்தக் கருத்தை கொண்டதான பெயரை ஒரு பிரசாரத்திற்கோ, இயக்கத்திற்கோ இடுவதுதான் அறிவுடைமையாகும். உதாரணமாக நமது நாட்டில் பார்ப்பனர் தவிர ஏனைய மக்கள் பார்ப்பனர்களால் இழிவுபடுத்தப்பட்டும், கொடுமைப்படுத்தப்பட்டும் இருப்பதை உணர்ந்து அவ்விழிவிலும் கொடுமையிலுமிருந்து மீள்வதற்காக ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சங்கத்திற்கும் வைத்துக் கொண்டிருக்கும் பெயர்களை பார்த்தால் உங்களுக்கு விளங்காமல் போகாது. பார்ப்பனர்களுடைய கொடுமையிலிருந்தே மீளுவதற்காக ஏற்படுத்திக்கொண்ட கூட்டமாதலால் “பார்ப்பனரல்லாதார்” என்கிற பெயரோடும் அக்கொடுமையால் தாழ்த்தப்பட்டதிலிருந்து விலகி பார்ப்பனரல்லாதார் உரிமையை அடைவதற்காக ஏற்படுத்திய சங்கமாதலால் அதே கருத்து தொனிக்க தெ.இ.ந.உ. சங்கமென்பதாகவும் பெயர் கொடுக்கப்பட்டிருப்பதை நீங்கள் உணரலாம். மற்றபடி வேறு எந்த பெயர் வைத்தாலும் இழிவு மறையவோ, இழிவுபடுத்தினவர்களுடைய சூழ்ச்சிகளிலிருந்து தப்பவோ, முன்னேற்றமடையவோ, பெயர் மூலியமாய் அடையக் கூடி நன்மையை அடையவோ முடியாது.

எத்தனையோ சமூகத்தார் தங்களை மற்றவர்கள் இழிவு படுத்துவதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாமென்று கருதி எவ்வளவோ பெயர்களை மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் அவர்கள் எந்த இழிவை மறைக்க நினைத்தார்களோ அது ஒரு சிறிதும் மறைபடாமலும் அந்தப் பெயர் ஏற்படுத்துவதற்கு முன் எப்படி இருந்தார்களோ அது போலவே தான் இருந்து வருகின்றார்களே தவிர புது மாதிரியான மாறுதல் ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை. உதாரணமாக ஆசாரிமார்கள் தேவாங்க சமூகத்தார்கள் முதலியவர்கள் தங்களுக்கு விஸ்வ பிராமணர்கள், தேவாங்க பிராமணர்கள் என்பதாக பெயர் வைத்துக்கொண்டதாலும் நாயக்கர்மார்கள், படையாச்சிமார்கள், நாடார்மார்கள், தங்களுக்கு பல்ஜிய க்ஷத்திரியர் கள், வன்னிய க்ஷத்திரியர்கள், அக்கினி குல க்ஷத்திரியர்கள் என்பதாக பெயர் வைத்துக் கொண்டாலும் நாட்டு கோட்டை நகரத்து செட்டியார், கோமுட்டி செட்டியார், வாணிகச் செட்டியார், வேளாளர் முதலியோர் தங்களுக்கு முறையே தனவைசியர், நகரத்து வைசியர், ஆரிய வைசியர், வாணிப வைசியர், பூவைசியர் என்பதாக பெயர் வைத்துக் கொண்டாலும் புராணங்கள் மூலியமாக இதற்கு ஆதாரம் கண்டு பிடித்தாலும் மற்ற எத்தனையோ வகுப்பார் மற்ற எத்தனையோ பெயர்களை வைத்துக் கொண்டு இருந்தாலும் இந்த பெயர்கள் அல்லாத “சூத்திரர்கள்” என்கிற பெயருக்கு உண்டான பொருளும், தத்துவமும் அனுபவ உண்மையும் கிரகிக்கப்படுகிறதேயல்லாமல் ஒரு சிறிதாவது மாற்றம் ஏற்படாததோடு எந்த கொள்கையை உத்தேசித்து இந்த பெயரை வைத்துக்கொள்ளுகிறோமோ, அந்த கொள்கைகளின் மூலியமாகவே நாம் நம்மைவிட மற்றொரு கூட்டத்தார் உயர்வு என்பதையும் மற்றொரு கூட்டத்தாரை விட நாம் தாழ்ந்தவர்கள் என்பதையும் ஒப்புக்கொண்டதோடு அதை நிலை நிறுத்தவும் பாடுபட்டவர்களாகிறோம்.

ஆகவே, இம்மாதிரி பெயர்களை வைத்துக்கொள்வது “சப்தம்” மாத்திரத்தில் உயர்வாக தோன்றினாலும் தத்துவத்தின் மூலியமாக அதில் தாழ்மையே இருக்கிறது. ஆதிதிராவிடர் என்று சொல்லிக் கொள்பவர்களாகிய நீங்கள் உங்களை யார் தாழ்ந்தவர்கள் என்று சொல்லுகிறார்களோ, யார் கொடுமைப்படுத்துகிறார்களோ, யார் அதற்கு ஆதாரமாய் இருக்கிறார்களோ அவர்கள் பெயரை வைத்து “அவர்கள் அல்லாதார்” என்பதாக வைத்துக் கொண்டால் அந்தப் பெயரும் கொடுமையும் ஞாபகத்தில் இருப்பதோடு அதிலிருந்து விலகுவதற்கு உண்டான அறிவும் சக்தியும் அதிலிருந்து ஏற்படும். இந்த கூட்டத்திலேயே ஒரு கனவான் உங்களை ‘ஒடுக்கப்பட்டார்’ என்றழைக் கலாம் என்பதாக சொல்லுகிறார். எனக்கு அது கூட அவ்வளவு சரியான பெயர் என்பதாகத் தோன்றவில்லை. வேண்டுமானால் “ஒடுக்கினவர்கள் அல்லாதார்” “கொடுமைக்காரர்களல்லாதார்,” “அயோக்கியர்கள் அல்லாதார்” என்று பெயர் வைத்துக்கொண்டால் அவர்களையும் உங்கள் கூட்டத்தில் சேர்க்காமல் சீக்கிரத்தில் இக்கொடுமை நீங்கவும் மார்க்கம் ஏற்படும். அப்படி ஏற்பட்டதுடன் இப்பெயர் மறைந்து விடுவதற்கும் அநுகூலம் ஏற்படும். அப்படிக்கில்லாமல் க்ஷத்திரியர், வைசியர், அருந்ததியர், ஆதிதிராவிடர், இந்திரகுலத்தார், நீலகண்டனார், பார்க்கவனார் என்று அம்மாதிரி பெயர் வைத்துக்கொள்வதால் நமக்கு நாமே சொல்லிக்கொண்டு கர்ப்பகோடி காலம், இந்த இழிவிலேயே இருக்க வேண்டியதுதானே ஒழிய நாம் கோரும் பலன் ஒருசிறிதும் அதனால் உண்டாகாது.

சிலர், இந்த கொள்கையோடு பேர் வைப்பதின் மூலம் பெருத்த ஆnக்ஷபனை இருப்பதாக காட்டிக் கொள்ளுகிறார்கள். அது ஒரு சிறிதும் உண்மையானதென்றாவது மனப் பூர்த்தியாய் சொல்லுகிறார்கள் என்றாவது ஒரு சிறிதும் எண்ணுவதற்கு இடம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அதாவது “பார்ப்பனரல்லாதார்” என்று சொல்வதால் பார்ப்பனர் என்று ஒரு ஜாதி இருப்பதாக ஒப்புக்கொள்வதாகவும், அந்தப் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் என்கிற தத்துவத்தை ஒப்புக்கொள்வதாகவும் ஜாதி வித்தியாசம் ஒழிய வேண்டும் என்கிற எண்ணத்தோடு ஏற்படுத்தின இயக்கம் அதை நிலை நிறுத்துவதற்கு வேலை செய்வதாக ஆகும் என்றும் சொல்லுகிறார்கள். இந்த வார்த்தைகளில் ஏதாவது கடுகளவு சத்து இருக்கிறதா? பார்ப்பனர்கள் என்ற ஒரு கூட்டத்தாரை நாம் தினம் கண்ணில் பார்த்துக் கொண்டு வருகிறோம். அவ்வொரு கூட்டத்தார் இந்த நாட்டில் இருந்து கொண்டு இருக்கிறார்கள். அதை யாரும் திரை போட்டு மறைத்து விட முடியாது. ஆனதினால் அப்படி ஒருவர் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்வதாகுமென்பது அர்த்தமேயில்லை. அடுத்தாற்போல் இப்படிச் சொல்வதன் மூலம் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் என்பதை ஒப்புக் கொள்வதாகின்றது என்பது நமக்கு அதிசயமாக இருக்கிறது. பார்ப்பனர் என்று சொன்னால் பார்ப்பனன் உயர்ந்தவன் என்று ஒப்புக்கொள்வது ஆகிறது என்று எந்த அகராதியில் எழுதியிருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை. அல்லது பார்ப்பனன் என்று சொல்லும்போது அவன் உயர்ந்தவன் என்று எண்ணிக் கொண்டு சொல்லுகிறோமா? என்று பார்த்தால் அதுவும் இல்லை. ‘ஆதிதிராவிடர்’ என்று சொல்லும்போது அவர்கள் மிகத் தாழ்ந்தவர்கள் என்ற உணர்ச்சி தோன்றி விடுகிறது. பார்ப்பனர்கள் என்று சொல்லும்போது நமக்கு பலவித கொடுமைகள் செய்தவர்கள் என்றுதான் தோன்றுகிறதேயல்லாமல் பலரும் அம்மாதிரியே நினைக்கும்படியாக கொடுமைகளை ஞாபகபடுத்தக் கூடியதாக இருக்கிறதேயல்லாமல் வேறு ஏதாவது உயர்வு அதில் இருக்கிறதா? ஏற்படுகிறதா? ஆகவே பார்ப்பனன் உயர்ந்தவன் என்பதை நிலைநிறுத்துவதாக அந்த பதம் இருக்கிறது என்று சொல்லுவது தர்மம் ஆகுமா? அதில் ஏதாவது, யோக்கிய பொறுப்பிருக்கிறதா? தவிர இந்த பெயர் இருப்பதினாலேயே எந்த விதத்தில் வித்தியாசம் நிலைத்து விடும் என்பதும் நமக்கு விளங்கவில்லை. நமது நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான வகுப்பு வித்தியாசங்களை ஒழிப்பதற்காகவே அவ்வித்தியாசங்களுக்கு மூலாதாரமானவர்களை அந்த வித்தியாசத்தை விட்டு விட்டு நம்மோடு வந்து சேரும்படி அழைக்கும் தத்துவத்தோடு கூட அந்த பெயர் வைக்கப்பட்டிருக்கிறதே அல்லாமல் அதை நிலைநிறுத்தும் தத்துவம் அதனிடத்திலில்லை. அதற்கு உதாரணமாகவே பல பார்ப்பனர்கள் இந்த இயக்கத்தில் வந்து சேரப் பிரியப்படுவதும், நாம் இது சமயம் பலகாரணங்களால் அவர்களிடம் நம்பிக்கையில்லாமலும், சேர்ந்து கொள்வதற்கு இல்லாமலும் இருப்பதால் வேண்டாம் என்று சொல்வதாகவும் இருக்கிறதேயல்லாமல் வேறல்ல. நிற்க,

ஆதிதிராவிடர்களுக்கு தனி ஸ்தாபனம்

ஆதி திராவிடர்களுக்கு என்று தனியாக கிணறு, கோவில், பள்ளிக் கூடம் முதலியவைகள் ஏற்படுத்துவது புண்ணியம் என்று சிலர் கருதுகிறார்கள். நான் அதை ஒப்புக் கொள்ள முடியாததோடு வெறுக்க வேண்டியவனாகவும் இருக்கிறேன். சென்ற வருடம் இதே ஊருக்கு வந்திருந்த சமயம் காந்தி கிணறு என்ற ஒரு கிணற்றை ஆதிதிராவிடர்களுக்கு மாத்திரம் என்று வெட்டி அதைத் திறந்து வைக்கும்படி கேட்டு கொண்டபோது நான் இதே அபிப்பிராயத்தை தான் தெரிவித்தேன். காரணம் என்னவென்றால் அவர்கள் படிக்கக் கூடாது என்பதற்காகவாவது அவர்களுக்கு தனி சௌகரியம் ஏற்படுத்தி கொடுக்கக்கூடாது என்பதற்காகவாவது அல்லவே அல்ல. இம்மாதிரி ஒரு வகுப்பாருக்கு தனி சௌகரியம் ஏற்படுத்தி கொடுத்து நம்மோடு கலந்து வாழும்படி செய்யாததின் பயனாய் நிரந்தரமாய் இவர்கள் இழிந்தவர்கள் என்பதை நிலைநிறுத்தி அவர்களை மீளவிடாமல் செய்தவர்களாகின்றோம். அதுபோலவே பார்ப்பனர்களுக்கும் சிறுதனி உரிமைகள் செய்துகொடுத்து நம்மோடு கலர விட்டு விடாமல் செய்து வருவதின் பயனாகவே அவர்கள் உயர்ந்தவர்கள் என்பதையும் நாம் தாழ்ந்தவர்கள் என்பதையும் நிலை நிறுத்தினவர்களாகின்றோம். இன்னும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு கோடிக்கணக்கான தொகைகளைச் செலவு செய்து தர்மம், புண்ணியம், மோட்சம் என்பதின் பெயரால் பார்ப்பனர்களுக்கு தனிப்பள்ளிக்கூடங்களும் சத்திரங்களிலும் கோவில்களிலும் ஏனைய இடங்களிலும் தனி உரிமைகளும் “பறையர்களுக்கு” தனி கிணறும், தனி பள்ளிக்கூடம் முதலியவைகளும் செய்து கொண்டு வருவதானாலும் ஒருக்காலும் நமது மக்கள் சுயமரியாதை அடைந்து நாடு விடுதலை அடையும் என்று எண்ணுவதற்கு கொஞ்சம் கூட இடமேயில்லை.

தாழ்த்தப்பட்ட மக்களை முன்னுக்கு கொண்டு வருவதற்கும் சமத்துவம் அடையச் செய்வதற்கும் பாடுபடும் பெரியோர்கள் அந்த சமூகத்திற்கென்று தனியாக கிணறும், கோவிலும் பள்ளிக்கூடமும், வெட்டவும், கட்டவும் ஏற்படுத்தவும் நினைப்பதானது அச்சமூகத்தாரை நிரந்தரமாய் இழிவுபடுத்தி வைப்பதற்கு ஆதாரங்களையும், அவசியங்களையும், கற்சிலைகளையும், சிலாசாசனங்களையும் உண்டாக்கி வைத்தவர்களே ஆவார் கள் (இப்படிச் சொல்லிக்கொண்டு வரும்போது திரு. ஏ.வி. தியாகராஜ் அவர் கள் ஒன்றுமில்லாமல் இருப்பதற்கு இது மேலல்லவா? என்று கேட்டார்கள்) ஒன்றுமில்லாமல் இருப்பதை விட இது எந்தவிதத்திலும் மேலாகாதென்றும், கிணறும், பள்ளிக்கூடமும், கோயிலும் இல்லாமல் போனால் குடிக்கவும், படிக்கவும், கும்பிடவும் இல்லாமல் போகலாமே தவிர தாழ்ந்தவன் என்பதை நிரந்தரமாய் நிலை நிறுத்தாது என்பதை கவனியுங்கள். நமது நாட்டில் அதைபோல அநேக பெரியார்கள் எவ்வளவோ காலமாக இதைவிட மிகப் பெரும் பெரும் தருமங்களை அக்கூட்டத்தாருக்கு செய்து வந்திருந்தும் இதுவரையில் ஒரு சிறிதாவது அவர்கள் நிலைமை முன்னேறியிருப்பதாக சொல்வதற்கில்லை. உதாரணமாக தஞ்சாவூர் ராஜாவின் தர்மசாசனத்தை நான் பார்க்க நேர்ந்த பொழுது இந்த பறையர்களுக்கு என்பதாக பள்ளிக்கூடம், சத்திரம் மற்றும் பல தர்மங்கள் முதலியவைகளுக்கு பெரும்பாகமான பணத்தை ஒதுக்கி வைத்ததோடு, செய்து வந்ததாகவும் தெரிகிறது. ஆனால் அந்த ஜில்லாவில்தான் இந்த பறையர்கள் எல்லாரைவிட அதிகமாக அடிமைகளாக விற்கவும், வாங்கவும் படுகிறார்கள். எனவே அந்த வகுப்பாருக்கு யாராவது நன்மை செய்ய வேண்டுமானால் மலையளவு செய்யக்கூடிய தன்மையானது கடுகளவு செய்யக் கூடியதாக ஏற்பட்டாலும் அவர்களும் நாமும் கலந்து பழகுவதற்கு தகுந்தபடி ஏற்படுத்துவதுதான் அவர்களை முன்னேற்றத்திற்கு கொண்டு வருவதற்கு தக்க விதமாக ஏற்படுத்தியதாகுமே தவிர அவர்களுக்கு வேறு, நமக்கு வேறு என்பதாகவும் அவர்களும் நாமும் சேர்ந்து புழங்குவதற்கு சந்தர்ப்பம் இல்லாததாகவும் செய்வதானது, செய்தவர்க்கு தர்மம் செய்தார் என்று சொல்லிக்கொள்ள உதவலாமே அல்லாமல் ஒருக்காலும் அந்த கொடுமை செய்யப்பட்ட சமூகத்திற்கு நன்மை செய்வதாக ஆகாது. அதோடு தீமை செய்ததாகவும் ஆகலாம். நமது பெரியோர்கள் பார்ப்பனர்களுக்கு வேறு நமக்கு வேறு என்று பல காரியங்கள் செய்து வந்ததின் பயனாகவே அவைகள் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் அவர்களை விட நாம் இழிந்தவர்கள் என்பதற்கு சிலாசாசன ஆதாரமாக இருந்துவருகிறது.

குறிப்பு : 20.7.27-ல் சிறாவயல் காந்தி ஆசிரமத்தாரும், ஆதிதிராவிடர் சமூகத்தார்களும் அளித்த வரவேற்பில் ஆற்றிய சொற்பொழிவு.

குடி அரசு - சொற்பொழிவு - 31.07.1927

Pin It