உலக அகராதியில் அரசியல் என்ற சொல்லே அசிங்கம் என அர்த்தப்பட்டுப்போனதை யாரும் மறுக்க முடியாது. அனைத்து துறையிலும் அரசியல் அசிங்கம் அரங்கேறுவதுதான் இன்றைய நவீன உலகம் என்றாகிவிட்டது. இதில் சாமான்ய மக்கள் புழங்கும் இடங்களான கல்விக்கூடங்களும் இறைவனின் ஆலயங்களும் கூட விதிவிலக்கல்ல. இவற்றை தட்டிக் கேட்பதற்கென பொதுநல இயக்கம் அமைத்தால் அதிலும் அரசியல்.

எந்தவொரு செயலை எடுத்துக்கொண்டாலும் அதில் அரசியல் செய்வது பெருவாரியான மனிதர்களின் நாகரீகமாகிவிட்டது. இங்கு நான் கூற வருவது நிலப்பரப்பு எல்லைகளை (நாட்டை) ஆளும் சக்தியான அதிகாரவர்க்கமான அரசியலன்று. அடித்தள மக்கள் அண்டி வாழும் சிறு சிறு சமூகத்தினூடே பொதுநல நோக்கு எனும் போர்வையுடன் வளர்ந்துள்ள மேற்கூறிய அமைப்புகளைத்தான் கூறுகிறேன். நிலங்களை ஆளும் அரசியல் மக்களை மறைமுகமாக தாக்கி வருகின்றன. அதாவது அறிவார்ந்தோர்க்கு அது நேரடித்தாக்குதல் என்பது புரிகிறது. ஆனால் அடித்தள மக்கள் அனைத்து தாக்குதல்களையும் ஏற்று வாழ பழகிக்கொண்டுள்ளார்கள்.

இவர்களுக்கு கோயில் குளங்கள்தான் சற்று ஆறுதலான விசயம். ஆனால் அதன் பின்னணியில் நடைபெறும் கூத்தை யாரும் அறிவதில்லை. அதில் ஆர்வமும் அதிகம் காட்டுவதில்லை. இதுபோன்ற அமைப்புகளில் உள்ளோர் அனைத்து தரப்பு மக்களையும் சமமாகப் பாவித்து அன்பு காட்டுவோராக இருத்தல் அவசியம். ஆனால் இங்கு நிலைமையோ வேறு. இவ்வமைப்புகளின் நிர்வாகிகளுக்கும் மக்களுக்கும் உள்ளத் தொடர்பின் இடைவெளி அதிகரித்துக்கொண்டு செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

அதற்கு முன் அகமதாபாத்தில் தமிழர்களின் சிறு வரலாற்றினை அறிந்து கொள்வது அவசியம். இங்கு பஞ்சாலைகள் நிறைந்து தொழில் நகரமாக திகழ்ந்த காலம் அது. தமிழன் வேலைத்தேடி இங்கு தஞ்சமடைந்த காலமும் கூட.

தமிழர்கள் தாங்கள் எங்கு சென்றாலும் தங்களுடைய பண்பாட்டினை மறவாதவர்கள் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. ஆனால் அந்த குணம் கீழ் நடுத்தர வர்க்கத்தினரால் மட்டுமே அதிகம் கடைபிடிக்கப் படுகிறதென்றால் அதுவும் மறுக்க முடியாத உண்மை. பல்வேறு காலக்கட்டங்களில் தமிழையும் தமிழ்ப்பண்பாட்டையும் கட்டிகாத்த பெருமை இவ்வகை மக்களையே சாரும். ஆனால் பணம் சேரச்சேர அவரவர் பண்பாட்டை மறக்கத் தொடங்குவதே நம்மவர்களின் வழக்கமாகி வருகிறது.

இதுபோல் பிழைப்பிற்காக இங்கு குடியேறிய தமிழர்கள் தங்களுக்கென கோயில்களும், தமிழ் இயக்கங்களும், கல்விச்சாலைகளும் அமைத்து பெருமை சேர்த்தனர். ஆனால் காலம் செல்ல செல்ல சுயநலங்கள் பெருகி இவ்வகை அமைப்புகள் மக்களிடத்தில் இருந்து விலகி தங்களுக்கென தனி அரசாங்கம் நடத்தி வருகின்றன. நன்கொடை பெறுவதற்கு மட்டும் அனைத்து தரப்பு மக்களையும் அணுகும் இவர்கள் கோலாகல விழாக்களைத்தவிர இம்மக்களுக்கென ஒரு சிறு நல்லத்திட்டங்களையும் வகுத்தோரில்லை. ஓரே குடும்பமாக தமிழர் எனும் தனி அடையாளத்துடன் சிறு சமுதாயமாக திகழும் இவர்களுக்கு நல்லது புரிவோர் மிகவும் குறைவு.

கோயில்களுக்கு சொத்துக்கள் சேர்ந்து திருமண மண்டபம் கட்டியாகிவிட்டது. அதிலும் தமிழர்களுக்கு தனிச்சலுகையென்று ஒன்றும் கிடையாது. கோயில்கள் மூலம் தமிழர்களுக்கு வேறெந்த பொதுச்சேவையும் கிட்டுவதில்லை. இது போன்ற ஆலயங்களினால் ஆறுகால பூசை தவிர மக்களுக்கு வேறெந்த நேரடிப் பயனும் இல்லை என்பது என் கருத்து.

அம்மன்கோயில் நான்கு முருகன் கோயில் ஒன்று என கொண்ட இவ்வூரில் அவரவர் கோயில் நிர்வாகம்தான் சிறந்தது எனப் போட்டி பொறாமை. இங்குள்ள வசதி அங்கு கிடையாது என வீண் பெருமை. இத்தகைய சிறிய அதிகாரத்தில் உள்ளவர்களே இந்தளவு தான்தோன்றிகளாய் இருப்பார்களேயானால், நாட்டையே ஆளும் அத்தகைய அரசியல்வாதிகள் செய்யும் அட்டகாசங்கள் அதிசயமாகாது.

மேலும் சில நல்ல உள்ளங்களின் முயற்சியால் தமிழ் மேநிலைப்பள்ளியும் அமைத்தனர். இம்மாநில அரசாங்கத்தின் மானியமும் கிட்டி அதன் மூலம் பள்ளி நிர்வாகமும் சீருடன் நடை போடத் தொடங்கியது. ஆனால் குறுகிய காலத்திலேயே கயவர்கள் சிலர் கையில் சிக்கிய பாவையாக பள்ளியின் முன்னேற்றம் தடைப்பட்டு போனது. கட்டுபாடற்ற காட்டாற்று வெள்ளம் போல் பள்ளி நிர்வாகம் சீர்குலைந்து போனது. இரண்டு தலைமுறையாக இருந்து வரும் பள்ளிக்கு சொந்த கட்டடம் கூட இல்லாது போனது சாபக்கேடு என்றுதான் நொந்துக்கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் கூறுவதற்கு முன்பு என்னை நானே ஆத்ம பரிசோதனை செய்து பார்ப்பது அவசியமாகிவிட்டது. 2001 ம் ஆண்டு சுதந்திர தின விழா முதல், பொதுத்தேர்வில் (10 மற்றும் 12 ம் வகுப்பு) தமிழ்ப்பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பரிசு அளிக்க முடிவு செய்தேன். தமிழின்பால் கொண்ட பற்றினால் தமிழுக்கென ஏதாவது நாம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தினால் இவ்வாறு நான் உறுதிபூண்டேன்.

நாம் அனைவராலும் அறியப்பட்டவராக இருக்க வேண்டும் என்று நினைப்பது மனிதனின் இயல்பு. இதற்கு நானும் விதிவிலக்கல்ல. இதனால்தானே உலகில் வில்லங்கமே உருவாகிறது. இப்படி நினைப்பது கூட ஒரு வகையில் தவறுதானோ என்று நினைக்க வைத்துவிட்டது இச்சம்பவம். மாணவர்களுக்கு பரிசு கொடுப்பது என முடிவெடுத்த பின்பு அதை தனிப்பட்ட முறையில் விளம்பரமில்லாமல் எளிமையாக வீட்டிலேயே கொடுத்தால் என்னவென்றும் நினைக்க வைத்தது.

சுதந்திர தின விழா (15.08.2002) அன்று பள்ளிக்கே சென்று பரிசு கொடுப்பதற்காக நம் ஒரே தமிழ் மேநிலைப்பள்ளியாம் நான் பயின்ற இவ்வருமைப்பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகி அனுமதி பெற்றேன். அவரும் காலை 8.30 மணிக்குள் வந்துவிடுமாறு கூறினார். நானும் 8.20 க்கு நண்பனுடன் பள்ளிச்சென்று அடைந்தேன். ஆனால் அதற்குள் கொடியேற்றி முடித்தாகிவிட்டது. பள்ளியின் நிகழச்சி ஆரம்பமாகிவிட்டது. அப்போது தலைமை ஆசிரியரை அணுகி சரியான பொறுப்புள்ள பதிலை பெறுவதற்குள் பள்ளியின் நிர்வாகி ஒருவர் குறுக்கிட்டு பள்ளி நிகழ்ச்சி ஆரம்பித்துவிட்டதாகவும் அதெல்லாம் இனி வெளியில்தான் என பொறுப்பற்று பட்டும்படாமல் அலட்சியமாக ஒரு சொல்லை உதிர்த்தார். இது என் மனதை மிகவும் ரணமாக்கியது. தமிழர்களுக்கென உள்ள நம் பள்ளியிலேயே நமக்கு இந்தளவு உரிமைக்கூட இல்லாதது கண்டு உள்ளம் கொதித்து போனேன். உடனே அவ்விடத்தைவிட்டு அகன்று பரிசை அளிக்காமலேயே வீடு திரும்பி விட்டோம். நம் மன நிறைவிற்கென செய்யும் செயலாதலால் அதனை எங்கு செய்தால்தான் என்ன என்று மனதை தேற்றிக்கொண்டேன்.

இச்சம்பவம் எனக்கு ஒரு படிப்பினையாக அமைந்தது என்றே கூறலாம். தமிழ் மீதுள்ள அளவற்ற ஆர்வத்தினால் இதுபோல் பரிசளிக்க ஆவல் கொண்டேன். ஆனால் பலபேர் மத்தியில் பள்ளியில்தான் தரவேண்டுமா? இதுபோன்ற சிறு சிறு புகழைக் கூட விரும்பாமலிருந்தால், அதுபோன்ற பரந்த மனமில்லாத ஆசாமிகளின் அலட்சியப்போக்கையும் காண நேரிடாதே என்றும் விளங்கினேன்.

அதன் பின் மாணவர்களை வீட்டிற்கு அழைத்து பரிசுகளை அளித்து விட்டேன். ஆனால் தான் படித்த பள்ளி வாளாகத்தினுள்ளே அந்த பரிசை வாங்குவதற்கே அதில் ஒரு மாணவன் ஆசைக் கொண்டிருப்பதும் புரிந்தது. ஆனால் நமது பள்ளியின் பொறுப்புணர்வை உணர்ந்த எனக்கு மனம் மிகவும் வருந்தியது.

இதே போன்று கோயில் நிர்வாகி ஒருவரின் பரந்த குணத்தையும் குறிப்பிடுகிறேன்.

ஒரு முறை நான் சார்ந்த இயக்கத்தின் சார்பாக கோயிலில் தீபாவளியை முன்னிட்டு இரண்டு நாள் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அந்த ஆண்டு மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய பரிசுகள் சில கொடுக்கப்படாமல் இருந்தது. அந்தப் பரிசுகளை கோயிலின் கலை நிகழ்ச்சி மேடையிலேயே கொடுக்க எண்ணி கோயில் நிர்வாகியிடம் தெரிவித்தோம். ஆனால் அவர் அதனை திட்டவட்டமாக மறுத்து விட்டார். அவர் சொன்ன காரணம், கோயில் நிகழச்சியில் மற்ற நிகழ்ச்சிகளுக்கு இடமில்லையாம். ஆனால் அந்த நிகழச்சியையே நாங்கள்தானே பொறுப்பேற்று நடத்துகிறோம். எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் பயனேதும் கிட்டவில்லை. நம் தமிழர்களுக்கான பொதுக்கோயிலில் நம் தமிழர்களின் பிள்ளைகளுக்கு பரிசளிக்க இரண்டு நிமிடம் கொடுக்க முடியாத அளவிற்கு என்ன சட்டதிட்டமோ என்று புரியவில்லை.

இதனை ஒத்துக்கொள்வதால் அவருக்கும் அவர் சார்ந்த கோயிலுக்கும் என்ன கவுரவக்குறைச்சலோ என்று எனக்கு இன்று வரை விளங்கவில்லை. ஆமாம், கள்ளமில்லா நம் நெஞ்சில் அவர்கள் கூற்றின் உட்பொருள் விளங்காததில் வியப்பொன்றும் இல்லை.

இன்று நினைத்தாலும் இந்நிகழ்ச்சி என் மனதில் பெரியதொரு ரணத்தினை ஏற்படுத்துகிறது.

இது போன்றவர்கள் பின்னர் இதே தமிழரிடத்தில்தானே கோயிலுக்காக நன்கொடை வசூலிக்க வருகிறார்கள். இவ்வாறு பொதுநலம் கொண்ட கல்விக்கூடங்களும், ஆலயங்களும், இயக்கங்களும் ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுத்துக் கொள்ளவில்லையென்றால் இவ்வமைப்புகளினால் ஒரு துளியும் பயனில்லை.

இன்று பஞ்சாலைகள் முழுவதும் நிரந்தரமாக மூடப்பட்ட நிலையில் இந்த தலைமுறையினர் படித்து வெள்ளாடை பணிகளில் அமர்ந்து விட்டதால் பஞ்சாலைகளை நம்பி வாழும் நிலை மாறியிருக்கிறது. இது மகிழ்ச்சியளிக்கக் கூடிய விசயமாகும். ஆனால் இவர்கள் படித்ததாலேயே தமிழரின் நிலையெண்ணி வருந்தினோரில்லை. தமிழையும் மதித்தோரில்லை. தம் பிள்ளைகளுக்கு தமிழை ஒரு பாடமாக ஊட்டினோருமில்லை.

பொதுநலம் என்று கூறிக்கொள்ளும் இவ்வமைப்புகள் அனைத்தும் ஒன்றுபட்டு உண்மையுடன் செயல்பட்டால் தமிழர்களின் தரம் இவ்வூரில் இன்னும் உயரும் என்பதில் ஐயமில்லை.

- த.வெ.சு.அருள் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It