Collchel M Yusuf Plagiarismஇராஜபாளையத்தில் நடைபெற்ற இலக்கியக்கூடுகை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள், இந்த நாட்டில் எழுத்தாளர்களுக்கு உண்டான “மரியாதை”யைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் "உரிமைத் தொகை" (royalty) என்று உண்டு. இது, மற்ற நாடுகளில், எழுத்தாளருக்கு முறையாக, சட்டப்பூர்வமாக வழங்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மட்டும் தான், எழுத்தாளர் இந்த "உரிமைத் தொகை" யை எதிர்பார்க்க முடியாது. ‘ராயல்டி’ என்பது, எழுத்தாளருக்கு வழங்கப்படும் ‘ராயலான டீ’ மாத்திரமே என்றார். இது அங்கிருந்த கூட்டத்தினரை அதிர வைத்தது. எழுத்தாளருக்கு, அவருக்கென்று உண்டான நியாயமான உரிமைத் தொகையை, அந்த பிரசுரகர்த்தர் வழங்குவது ஒரு புறம் இருக்கட்டும். அந்த எழுத்தாளர் எழுதிய அந்த படைப்பையே, அவர் தன்னுடையதென்று சொந்தம் கொண்டாட முடியாத நிலைமை உள்ளது.

"புனைசுருட்டு" (Plagiarism):

ஒருவரின் படைப்பைத் திருடி, தன்னுடைய படைப்பாகக் காட்டிக் கொள்ளுவதற்கு "புனைசுருட்டு" (plagiarism) என்று பெயர். இத்தகைய இலக்கியத் திருட்டிற்கு வேறு பெயர்களும் உள்ளது. அறிவுத் திருட்டு, கருத்துத் திருட்டு, நகல் எழுத்து ஆகிய பெயர்களும் உள்ளன. மறைமலையடிகள், தனது "பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை" (1957) என்ற நூலின் முகவுரையில், இந்த இலக்கியத் திருட்டைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ஒருவர், தன் சொந்த முயற்சியால் உருவாக்கிய படைப்பை, இன்னொருவர் தன்னுடையது தான் என்று சொந்தம் கொண்டாடுவது அறிவு உலகின் அசிங்கம். அது, கிட்டத்தட்ட இன்னொருவரின் உள்ளாடைகளை எடுத்து அணிந்து கொள்ளுவது போலத்தான். அது ஓர் அநாகரீகமான செயல் மட்டுமல்ல, ஊரான் பிள்ளைக்கு தான் உரிமை கொண்டாடுவது போலத்தான் இதுவும். இது பற்றிய தரவுகளைத் திரட்டிய போது, எமக்கு பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது. அச்சு ஊடகம், புனைவு வெளி, இசை, கூத்து போன்ற நுண்கலைகள், செல்லுலாய்டு சிருஷ்டிகள் என்று எந்த திசைக்குள் பிரவேசித்தாலும் இந்த "புனைசுருட்டு" என்ற அமிசத்தைக் கண்கூடாகக் கண்டோம், அதிர்ச்சி கொண்டோம். தான் இருக்கும் ஒரு துறையில், தானே ஜாம்பவான் என்று தானும், பிறரும் எண்ணிக் கொண்டிருக்க, அத்தகையவர்கள் இத்தகைய இலக்கியத் திருட்டில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சி உண்டாக்கியது.

அச்சு ஊடகம்

பருவ சஞ்சிகைகளை நாம் ஏராளமாக வாசிக்கிறோம். அவைகளில் உள்ள துணுக்குகள், நகைச்சுவை, குறுங்கட்டுரைகள், சிறுகதைகள், தொடர்கதை போன்றவற்றை வாசிக்கும் போது, சில நேரங்களில், இதை எங்கேயோ நாம் வாசித்திருக்கிறோம் என்ற எண்ணம் வரக்கூடும். காரணம், நமது தமிழ் எழுத்தாளர்களுக்கு கை வந்த கலை ஒன்று உண்டு. எங்காவது ஒரு நல்ல விஷயத்தைப் படித்து விட்டால், அதையே வேறு விதமாக மாற்றி , தன்னுடைய படைப்பாக உருவாக்கி, அதற்குத் தன்னுடைய பெயரைப் போட்டுக் கொள்ளுவது தான்.

இதற்கு, சான்றாக ஒன்று கூறலாம். 1981-ல் ‘ஆனந்த விகடன்’ வார இதழ், தன்னுடைய பொன் விழாவை ஒட்டி ஒரு நாவல் போட்டியை அறிவித்திருந்தது. அதற்குப் பல எழுத்தாளர்களும் தங்கள் படைப்புகளை அனுப்பி வைத்திருந்தனர். முதல் பரிசு, அந்நாளில், ரூபாய் 20,000. இந்தப் போட்டிக்கு, இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் "தூரத்து இடி முழக்கம்" என்ற ஒரு புதினத்தை அனுப்பி வைத்திருந்தார். அந்தப் புதினத்திற்கு முதல் பரிசு வழங்கப்பட்டு, அந்தப் புனைவு ‘ஆனந்த விகடன்’ இதழில், வாரம் தோறும் வெளியாகத் துவங்கியது. ஒரு சில வாரங்களுக்குப் பின்பு, அந்த ‘ஆனந்த விகடன்’ அலுவலகத்தை தொடர்பு கொண்ட இன்னொரு எழுத்தாளர், அந்த ‘தூரத்து இடி முழக்கம்’ என்ற புனைவு தன்னுடையது என்றும், தன்னுடைய படைப்பை அந்த இலங்கை எழுத்தாளர் திருடி, தன்னுடைய பெயரில் வெளியிட்டு விட்டதாகப் புகார் தெரிவித்திருந்தார். உடனே, விகடன் ஆசிரியர் குழு அந்த விஷயத்தை விசாரித்து, அது உண்மை தான் என்று கண்டுபிடித்தது. பெரும் பிழை செய்த அந்த இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளரிடமிருந்து, அந்தப் பரிசுத்தொகை மீளப் பெறப்பட்டது.

ஒரு படைப்பின் இறுதியில், வால் போல "இது இந்த மொழியில் வெளி வந்த இந்தப் படைப்பின் மொழியாக்கம்" என்று அந்தப் படைப்பின் மூலத்தை அடையாளம் காட்டுவது ஒரு நல்ல அறிவு நாகரீகம். ஆனால், அந்தப் படைப்பை மொழிபெயர்த்து விட்டு, அதன் மூல ஆசிரியரை அடையாளம் காட்டாமல் இருப்பது முழு மோசடி. இன்னொருவரின் படைப்பை எடுத்தாளுவது என்பது வேறொரு விஷயம். பாரதியாரின் "வந்தே மாதரம் " கவிதையின் மொழிபெயர்ப்பில், அது பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயர் என்பவர் எழுதியதன் மொழி பெயர்ப்பு என்று குறிப்பிட்டு, அதன் மூலப்பிரதியின் ஆசிரியருக்கு அங்கீகாரம் தருகிறான் பாரதி.

ஜாதீய கீதம்
( பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயர் எழுதிய
வந்தே மாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பு )

இனிய நீர்ப்பெருக்கினை ! இன்கனிவளத்தினை !
தனிநறுமலயத்தண்காற்சிறப்பினை !
பைந்நிறப்பழனம்பரவியவடிவினை! (வந்தே)…

இந்த நேர்மை, வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூரிடம் இருந்திருக்குமா என்பது சந்தேகம் தான். பரிசுத்த வேதாகமத்தில், பழைய ஏற்பாட்டில் உள்ள சாலமோன் தீர்க்கதரிசியின் "உன்னதப்பாட்டு" என்ற பகுதியை வாசித்துப் பாருங்கள். மணவாட்டி, மணவாளனைத் தேடி அலையும் ஆன்மீக ரீதியிலான வருணிப்புகள் இருக்கும். ஜெயதேவரின் "அஷ்டபதி" நூலை வாசித்துப் பாருங்கள். பிறகு, தாகூரின் "கீதாஞ்சலி" நூலை வாசித்துப் பாருங்கள். மேற்சொன்ன, இந்த மூன்றுக்கும் சில பொதுப்பண்புகள் இருக்கும். ஆனால், தாகூர், தனது நோபல் பரிசு பெற்ற நூலுக்கு எது ஆதி என்பதை சுட்டிக் காட்டவில்லை.

இணையத்தின் இன்னல்கள் :

இப்போது, அச்சில் வெளியாகும் கதைகள் என்பதையெல்லாம் கடந்து, இணைய தளங்களில் ஏராளமான கதைகள் வெளியாகின்றன. இந்த இணைய தளங்களை உலகமெங்கும் இருக்கும் தமிழ் மக்கள் விரும்பி வாசிக்கிறார்கள். அச்சில் வெளி வரும் புத்தகத்தை விட, நூறு மடங்கு வீச்சில், இத்தகைய கதைகள், உலகமெங்கும் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று விடுகிறது. பிரச்னையே இங்கு தான் ஆரம்பிக்கிறது. இணையத்தில், ஆயிரக்கணக்கான கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவைகளை வாசிப்பவர்களுக்கு, அவைகளை எடுத்தாளுவதற்கான சவுகரியமும், அதனுடன் இணைந்தே வந்து விடுகிறது. பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள், பிடிஎப் (pdf) வடிவில் எளிதாக இணையத்தில் கிடைக்கின்றன. இவைகளை எடுத்து வாசிப்பவர்கள், கதைகளைக் கையாடல் செய்து விடுகின்றனர்.

இதைப் போலவே, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்காக "நாலடியார்" என்ற செவ்விலக்கியத்தை, மலையாளத்தில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார் நாஞ்சில் வட்டாரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் குளச்சல் மு. யூசுப். அந்த நூலைப் பிழை திருத்தம் செய்வதற்காக, மலையாள எழுத்தாளரான விஜயன் கோடாஞ்சேரி என்பவரிடம் கொடுத்திருக்கிறார். அவர், அந்த நூலை, கோழிக்கோட்டைச் சேர்ந்த முண்டியடி தாமோதரன் என்பவரிடம் கொடுத்திருக்கிறார். அந்த முண்டியடி தாமோதரன், அந்த நூலை தன்னுடைய பெயரிலேயே வெளியிட்டு விட்டார். இப்படி ஒரு திருட்டு மலையாள இலக்கிய உலகில் நடந்திருக்கிறது. இதில், நகைப்புக்குரிய விஷயம் என்னவென்றால், அந்த "சகலகலா வல்லவரான" முண்டியடி தாமோதரனுக்குத் தமிழ் மொழியே தெரியாது என்பது தான். இது ஒரு துளி தான். பிறருடைய படைப்புகளை அப்படியே கபளீகரம் செய்து தன்னுடைய படைப்பு என்று சொல்லிக் கொள்பவர்கள் அநேகர்.

பல்கலைக்கழகங்களில் புனை சுருட்டு :

பல்கலைக்கழக ஆய்வு வெளிகளில், இத்தகைய புனைசுருட்டு வேலைகள் அடிக்கடி நிகழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்தகைய "திருட்டை"ச் செய்தவர் ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார் என்பது தான் இதில் உள்ள சோகமான நிலை. தில்லியில் உள்ள புகழ் பெற்ற ஒரு கலைக்கல்லூரியில் தமிழ்த் துறையில் பணியாற்றும் பேராசிரியர் ச. சீனிவாசன் ஆவார். இவர் எழுதிய "ஒப்பிலக்கியம் இனவரைவியல் சமூகம்" (2008) என்ற நூலிலிருந்து, சுமார் 32 பக்கங்களை அப்படியே எடுத்துக் கையாண்டு விட்டு, மூல நூலின் ஆசிரியரின் முன் அனுமதியைப் பெறாமல், "ஒப்பிலக்கியக் கொள்கைகள் : நோக்கும், போக்கும்" (2015) என்ற தனது நூலில் அதை அப்படியே வெளியிட்டிருக்கிறார் மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முனைவர் உ. கருப்பத்தேவன். இப்படி இலக்கியத் திருட்டு செய்த ஒருவரின் வண்டவாளத்தைப் பற்றி, மனம் வெதும்பி, அந்தத் தில்லி கல்லூரிப் பேராசிரியர் ச. சீனிவாசன், "காலச்சுவடு" - மாத இதழில் கட்டுரை எழுதி, சம்பந்தப்பட்ட மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியரின் நிஜ சொரூபத்தைத் தோலுரித்து விட்டார். (பார்க்க: "காலச்சுவடு" - நவம்பர், 2016, "போலித்தமிழ் நூல்கள்: ஆய்வுலகில் சில கருத்து திருட்டுகள்.", பக். 37-40).

அது மட்டுமல்ல, இவர் ஆய்வுக்காக தெரிவு செய்து கொண்ட நூல் மணிவாசகரின் திருவாசகமாகும். முனைவர் உ.கருப்பத்தேவன் எழுதி வெளியிட்ட "திருவாசகத் திருமுறை" (2013) என்ற நூலின் இரண்டாம் பகுதியான "திருவாசக உள்ளடக்கம்" என்ற பகுதியில் (பக்கம் 61 முதல் 142 வரை), திருப்பெருந்துறைக்காட்சி , புறக்காட்சி, அகக்காட்சி, இறைவனின் சோதி வடிவக்காட்சி, இறைக்கலப்பு, பரதுரியாதீத நிலை, மாணிக்கவாசகரின் பற்று நீக்கம், திருவாசகத்தில் ஒளி நெறி, இருளிரவு, ஒன்றும் நெறி ஆகிய உட்தலைப்புகளும், அதில் இடம் பெறும் செய்திகளும், மறைந்த முனைவர் திருமதி. இராதா தியாகராஜன் எழுதிய "திருவாசகத்தில் அருளியல்" (முதற்பதிப்பு, 1983, வானதி பதிப்பகம், சென்னை) என்ற நூலின் அப்பட்டமான நகல் ஆகும். (பார்க்க: “காக்கைச் சிறகினிலே”- செப்டம்பர், 2017, ‘தமிழியல் ஆய்வில் தொடரும் (ஆராய்ச்சி) ஊழல்கள் – போலித் தமிழ் நூல்கள்: திருவாசக ஆய்வை முன் வைத்து’, பக். 57-61)

இப்படி பட்டப்பகல் இலக்கியத் திருட்டுகளைச் செய்தவர் இன்று, அந்த பல்கலைக்கழக ஒப்பிலக்கியத் துறையின் தலைவர் ஆகி விட்டார். துறைத் தலைவராகி விட்ட அந்த உதவிப் பேராசிரியரின் மீது, அவர் பணிபுரியும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இது தான் மில்லியன் டாலர் கேள்வி. இனி, அந்தத் தமிழ்ப் பேராசிரியருக்கு பதவி உயர்வு தரப்பட்டு, விரைவில், அவர் அதே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. துணைவேந்தர் பதவி என்பது, கசடறக் கற்ற அறிஞர்களுக்கு தரப்பட்டு வந்த காலம் போய், காசு கொடுப்பவர்களுக்கே அந்தப் பதவி என்பது தான் நடைமுறை உண்மை. சில ஆண்டுகளுக்கு முன்பு, கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர், லஞ்ச ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இது தான், இன்றைய பல்கலைக்கழகங்களின் லட்சணம்.

இந்த விஷயத்தில், பதிப்பகங்களும் ரொம்ப "கெட்டிக்காரர்கள்" தான். அடுத்தவர் படைப்பை அப்படியே திருடி, "பேச்சுக் கலையில் தேர்ச்சி கொள்வோம்" என்ற நூலை வெளியிட்டு சென்னையைச் சேர்ந்த "புதிய நூற்றாண்டுப் பதிப்பகம்" தனது ஸ்தாபனத்திற்கு மாறாத களங்கத்தை தேடிக் கொண்டது.

திரைப்பட உலகில் "சிங்கியா முங்கியா" வேலைகள் :

பல்கலைக்கழக ஆய்வு உலகம் மட்டுமல்ல. “சுருட்டுவது” என்பது எல்லாத் துறைகளிலும் அமோகமாக நடந்துள்ளது.1986-ல் வெளி வந்த ஹாலிவுட் திரைப்படம், "தி ப்ளை" (The Fly )."ப்ரூக்ஸ் பிலிம்" என்ற திரைப்பட நிறுவனம் தயாரித்த இந்தத் திரைப்படத்தின் கதை "டெலிபோர்டேஷன்" (Teleportation) ஆகும். அதாவது, ஒரு மனிதனைப் பற்றிய உயிரியல், உயிரணு, மற்றும் பிற தகவல்களை வைத்து, அவனைப் போலவே இன்னொரு மனிதனை வேறொரு இடத்தில் உருவாக்குவது என்பது தான் இந்தத் திரைப்படத்தின் கதை. இதைப் பார்த்த மறைந்த எழுத்தாளர் சுஜாதா, அதே கதையை வைத்து ‘இன்னொரு பாலு’ என்ற சிறுகதையை ‘குமுதம்’ நாளிதழில் எழுதி, அது இரண்டு வாரங்களாக வெளி வந்தது.

ஹாலிவுட் திரைப்படத்தை அப்படியே ‘அஜால் குஜால்’ செய்வதில் எழுத்தாளர் சுஜாதா மிகவும் கெட்டிக்காரர். அவர் ‘குமுதம்’ இதழில் எழுதிய தொடர் கதை தான் ‘விக்ரம்’. இது, கமலஹாசன், அம்பிகா, டிம்பிள் கபாடியா, சத்யராஜ், லிசி ஆகியோர் நடிக்க, ‘விக்ரம்’ (1986) என்ற திரைப்படமாக வெளி வந்தது. ஓரளவு வெற்றிப்படம் தான். அந்தப் படத்தின் திரைக்கதை, ஏற்கனவே ரோஜர் மூர், ஜேம்ஸ் பாண்டாக நடித்து வெளி வந்த "ஆக்டோபுஸ்ஸி " (Octopussy -1983) என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் அப்பட்டமான தழுவல் ஆகும். இதில் சந்தேகமிருந்தால், இந்த இரண்டு திரைப்படங்களும் இணையத்தில் கிடைக்கின்றன. நீங்களே பார்த்துக் கொள்ளலாம்.

இதே போல வேறொரு உதாரணம் ஒன்றும் கூறலாம்.

சமீபத்தில், ‘ரோமன் ஹாலிடே’ (Roman Holiday -1953) என்ற பழைய கிளாசிக் வகை ஹாலிவுட் திரைப்படத்தை பார்த்தேன். அதைத் தயாரித்து இயக்கியவர் வில்லியம் வைலர் என்பவர். அதன் கதாநாயகன் க்ரிகரி பெக் என்பவர். ஆன் என்ற பட்டத்து இளவரசி, தன்னுடைய ராஜ அந்தஸ்தை விட்டு விட்டு, ஒரு சாமானியன் மேல் காதல் கொள்ளுவது தான் அந்தத் திரைப்படத்தின் கதை. அந்தக் கதையை அப்படியே தமிழில் (‘கையாடல்’) கையாண்டிருக்கிறார்கள். அது, தமிழில், "மைக்" மோகன், நதியா, சுஜாதா, விஜயகுமார், நடிக்க ‘உயிரே உனக்காக’ (1986) என்ற பெயரில் வெளி வந்துள்ளது. கோவைத்தம்பி தயாரித்து, கே.ரங்கராஜன் இயக்கி வெளி வந்த அது ஒரு வெற்றித் திரைப்படம்.

இந்தக் கட்டுரை, புனை சுருட்டு என்ற மோசடிப் பழக்கத்தினைக் குறித்து, ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வருவதற்கான துவக்கம் மட்டுமே. இதைப் போலவே, இன்னும் தமிழ்த் திரை உலக ஜாம்பவான்களின் ‘கையாடல்’ வேலைகளைக் குறித்து இன்னும் எழுதுகிறேன்.

முக்கிய வேண்டுகோள் :

அங்கே, இங்கே, என்று கடும் முயற்சி செய்து, நிறைய தரவுகளை வாசித்து, அடியேன் இந்த புனை சுருட்டு குறித்த கட்டுரையை தயார் செய்திருக்கிறேன். தயவு செய்து, இதைக்கட்டுரையை வாசிக்கும் யாராவது, அடியேனுடைய படைப்பை, "சுருட்டி" தன்னுடைய படைப்பு என்று வேறு ஒரு பத்திரிகையில் வெளியிட்டு விட வேண்டாமென்று அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.

உசாத்துணை நின்ற குறிப்புகள் :

1. “போலித்தமிழ் நூல்கள்: ஆய்வுலகில் சில கருத்து திருட்டுக்கள்." –எஸ். சீனிவாசன் , "காலச்சுவடு" -- நவம்பர், 2016.
2. ‘தமிழியல் ஆய்வில் தொடரும் (ஆராய்ச்சி) ஊழல்கள் – போலித் தமிழ் நூல்கள்: திருவாசக ஆய்வை முன் வைத்து’, எஸ். சீனிவாசன் ,“காக்கைச் சிறகினிலே”- செப்டம்பர், 2017,
3. “தேவை : ஆய்வுகளுக்கான தேசியத் தர நிர்ணய ஆணையம் “, முனைவர் ச. சீனிவாசன், “பெயல்” - அக்டோபர், 2017- மார்ச்,2018.
4. https://mkuniversity.ac.in/new/school/sts/faculty_profile.php

 

- ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்

Pin It