நீதிக்கு முன் அனைவரும் சமம் என்னும் தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட நமது நீதித் துறை, குடியரசுத் தலைவர் முதல் சாமானிய குடியானவன் வரை அனைவருக்குமான பொதுவான நியதியினைக் கொண்ட அரசியலமைப்பாக இருப்பினும் நடைமுறையில் எப்படி இருக்கின்றது எனக் கேட்டால் கேள்விக்குறிதான் பதில்… 

supreme court 255சட்டம் பல நேரங்களில் தன் கடமையினை அப்பாவியான, ஒடுக்கப்பட்டவனை நோக்கியே வேகமாக செயல்படுத்துகின்றது. மாறாக அதிகாரத்தில் இருப்பவனையோ, ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களையோ சட்டமும், நீதியும் எவ்வாறு காண்கின்றது என்பது குறித்து பட்டிமன்றமே நடத்தலாம். 

சிபிஐ நீதிபதியான ஜே.டி.உத்பத், சொராபுதீன், அவர்தம் மனைவி கவுசர் பீ போலி என்கவுண்டர் வழக்கினை விசாரித்தபோது குற்றம் சுமத்தப்பட்ட அமித்ஷாவை இந்த வழக்கின் விசாரணைக்கு மே மாதத்தில் ஆஜராகுமாறு கோரினார். அதன் பின் 2014 ஜூன் 26 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மாற்றமானார். அதன் பின் வழக்கு விசாரணை ஒப்படைக்கபட்ட நீதிபதி லோயாவின் அமர்விலும் அமித் ஷா ஆஜாராகாமல் இருந்தார். இறுதியாக டிசம்பர் 1ம் தேதி நாக்பூரில் மர்மமான முறையில் இறந்தார். இறுதியாக எம்.வி.கோசவி என்கிற நீதிபதி குற்றச்சாட்டுகளில் எந்தவித ஆதாரமும் இல்லை எனக் கூறி அமித்ஷாவை வழக்கிலிருந்தே விடுதலை செய்தார். 

வரிசையாக இவைகளைப் படித்து பாருங்கள்

1) வழக்கினை விசாரித்த ஒருவர் மாற்றப்படுகின்றார்.

2) அவர் இடத்திற்கு வந்த மற்றொருவர் மர்மமான முறையில் இறக்கின்றார்.

3) அவரிடத்தில் வந்த இன்னொருவர் வழக்கே போலியானது எனக் கூறி குற்றம் சுமத்தப்பட்டவரையே விடுதலையே செய்து விடுகின்றார் .

ஏதோ சினிமாவைப் போல மர்ம முடிச்சுகளைக் கொண்ட திரைக்கதையை நினைவூட்டுகின்றதல்லவா! ஆனால், சினிமா அல்ல... நிதர்சனமான ”நீதியின் மறுபக்கம்”. 

சில நாட்களுக்கு முன் நிகழ்ந்த டெல்லி கலவரம் குறித்தான தனது விசாரனையினைத் துவங்கிய நீதிபதி முரளிதர், "கலவரம் நிகழக் காரணமான வன்முறைப் பேச்சுகளுக்கு உரித்தான மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஸ் வர்மா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கபில் மிஷ்ரா மீது இன்னும் ஏன் வழக்கினை பதிவு செய்திடவில்லை? கலவரத்தினை ஏன் இன்னும் கைகட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள்" எனக் கூறி தன இல்லத்தில் கலவரக் காட்சிகளை ஓளிபரப்பி விட்டு அரசு நடவடிக்கைகள் எடுக்க இது போதுமா என அரசு வழக்கறிஞரிடம் கடிந்து கொண்டு மறுதினமும் விசாரனைக்கு வர வேண்டும் எனக் கூறிய அன்றே (26 பிப், 2020) பஞ்சாப் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார். (அடுத்த நாள் விசாரணைக்கு வந்த மற்றொரு நீதிபதி விசாரணையை ஒத்தி வைத்தார்).

'இது வழமையான ஒரு நடவடிக்கைதான். அதாவது கடந்த 12 ஆம் தேதியே 'கொலிஜியம்' அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுதான்' என அரசுத் தரப்பில் விளக்கம் அளித்திருப்பது மேலும் சந்தேகத்தினை வலுவாக்குகின்றது. நீதிபதி அரசை கண்டித்த அன்றுதான் நீதித் துறை செயலாளர் இடமாற்ற ஒப்புதலுக்கு கையொப்பம் இட்டிருக்கின்றார் என்பதே சந்தேகத்திற்குக் காரணம். 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வி.ஹே. தஹில் ரமானி, தான் மேகலாயா நீதிமன்றத்திற்கு மாற்றபட்டதைக் கண்டித்து பதவி விலகியதும், முறைகேடாக அடுக்குமாடியினை வாங்கியதாகக் கூறி அவர் மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக் கொண்டதும், அரசியல் இடையூறு காரணமாகத்தான் இருக்கும் என பரவலாகப் பேசப்படுகின்றது. 

முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறுகின்றார், "நீதிபதிகளும் மக்கள் ஊழியர்களே... அவர்களும் விமர்சனங்களுக்கு உட்பட்டவர்களே!!"

ஆனால், அதிகாரத்திற்கு எதிரான நீதிபதிகள் தொடர்ந்து பாதிப்பிற்கு உள்ளாவது, ஜனநாயகம் உயர்ந்த நிலையில் இருக்கும் நம்மைப் போன்ற நாட்டிற்கு நல்லதல்ல.

 - நவாஸ்

Pin It