முன் எப்போதையும் விட காந்தியின் மாகோன்மியங்கள் இந்த ஆண்டு அதிகமாகவே பரப்புரை செய்யப்பட்டது. தன்னைக் கொன்றவர்களையே தன்னைப் பற்றி போற்றவும், புகழவும், தன் தேவையை உணர்த்தவும் செய்திருக்கின்றார் காந்தி. அவரின் கோட்பாடுகள் அவரின் காலத்தைக் கடந்தும், எல்லைகளைக் கடந்தும் உலக மக்களுக்கு போதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சாமானிய மக்களில் இருந்து பெரும் கார்ப்ரேட்டுகள் வரை அவரைக் கொண்டாடுகின்றார்கள். சாதாரண ஆத்மாக்களின் வரலாறு அவர்களின் மரணத்தோடே முடிந்துவிட, மகாத்மாக்களின் வரலாறோ அவர்கள் இறந்த பின்னும் தொடர்ச்சியாக படிப்பதற்கும், பரப்புரை செய்யப்படுவதற்குமான தேவைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றது.

 gandhi 600சாதாரண ஆத்மாக்கள் மகாத்மாக்களாய் மாறுவது அவ்வளவு ஒன்றும் எளிய காரியமில்லை. ஒரு வர்க்கச் சமுதாயத்தில் புனிதமாகத் தெரியும் ஒன்று, மற்றொரு வர்க்கச் சமுதாயத்தில் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிவதற்குக் கூட தகுதியற்ற ஒன்றாக மாறிவிடும். காந்தி கூட ஒரு வர்க்க சமூகத்தின் பிரதிநிதியே ஆவார். அந்த வர்க்கம்தான் அவரை மகாத்மா நிலைக்கு உயர்த்தியதும், துதிப்பதும். இப்போதும் அதே வர்க்கம்தான் நம்மையும் துதிக்கும்படி நிர்பந்திக்கின்றது. அந்த வர்க்கம் முதலாளித்துவ வர்க்கம் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை. காந்தியின் கோட்பாடுகள் முதலாளிய சமூக அமைப்பு பெற்றெடுத்ததாகும். அவரின் அகிம்சைக் கோட்பாடுகள் முதலாளியத்தின் கொடூர முகத்தை மறைக்கும் முகமூடியாகும். எனவே முதலாளிய சமூக அமைப்பு இருக்கும் வரை அவரின் கோட்பாடுகள் விதந்தோதப்படுவதும் இருந்து கொண்டே இருக்கும்.

 சுதந்திரத்துக்கு முன்பு புரட்சிகர தேசிய விடுதலை இயக்கங்களை ஒழித்துக் கட்டவும், புரட்சிகர சித்தாந்தத்தை நோக்கி ஈர்க்கப்பட்ட இளைஞர்களின் சிந்தனைகளை காயடிக்கவும் பயன்பட்ட காந்தியின் அகிம்சையை வெள்ளை ஏகாதிபத்தியமும், இங்கிருந்த தேசிய, தரகு முதலாளிய வர்க்கமும் அன்றே தனக்கான சித்தாந்தமாகக் கண்டு கொண்டன. காந்தி எப்போதுமே தன்னை அவர்களுக்கான சித்தாந்த வழிகாட்டியாகவே அடையாளப்படுத்திக் கொண்டார். அவர்கள்தான் அவருக்கு பொருளாதார, அரசியல் செயல்பாடுகளுக்கு ஆதரவு தந்ததோடு புரவலராகவும் இருந்தனர். காந்தி தன்னுடைய எளிமையை அம்பாலால் சாராபாய், ஜம்னாலால் பஜாஜ், ஜி.டி.பிர்லா போன்றோர் கொடுத்த பண மூட்டைகளின் மேல் உட்கார்ந்து கொண்டு நிருபித்துக் கொண்டிருந்தார். காந்தியிடம் இருந்து நாடு என்றோ விடுதலை அடைந்தாலும் அவரின் கருத்தியலின் பிடியில் இருந்து விடுதலை அடைய முடியாமல் சீரழிந்து கொண்டிருக்கின்றது.

 காந்திக்கு எல்லாவற்றைப் பற்றியும் ஒரு கருத்து இருந்தது. சாதியைப் பற்றி, மதத்தைப் பற்றி, கடவுளைப் பற்றி, பொருளாதாரத்தைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றி, நவீன அறிவியலைப் பற்றி என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் அவரின் ஒட்டுமொத்தமான சமூகம் சார்ந்த பார்வை என்பது பிற்போக்குத்தனமாகவே இருந்தன.

 நவீன கல்வி முறையின் மீதும், அறிவியலின் மீது தீராத வெறுப்பு கொண்டவராகவும், அதே நேரம் இந்துமத சனாதனக் கருத்தியலின் மீது தீராத காதல் கொண்டவராகவுமே தான் வாழ்நாள் முழுவதும் காந்தி இருந்தார். ரயில் பாதைகள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், தபால் சேவை ஆகிய அனைத்தையும் இல்லாது ஒழிக்க வேண்டும் என்று இந்து சுயராஜ்யாவில் அவரால் எழுத முடிந்தது. அதில், இரயில் பாதைகள் இல்லாதிருந்தால் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி இருக்க முடியாது என்றும் இரயில்கள் வந்த பின்புதான் கொள்ளை நோய்கள் பரவியது என்றும், அடிக்கடி பஞ்சம் ஏற்படுவதற்குக் கூட ரயில் போக்குவரத்துதான் காரணம் என்றும், மனிதனிலுள்ள தீய குணங்கள் கூட ரயில் போக்குவரத்தால் மேலும் கூடுகின்றது என்றும் எழுதினார். இன்னும் ஒருபடி மேலே சென்று “பாவங்களைப் பரப்பும் இடம்தான் மருத்துவமனைகள். மனிதர்கள் தங்கள் உடல்நலம் பற்றி அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. எனவே அதிகமான இறப்புகள் நிகழ்கின்றன. ஐரோப்பிய மருத்துவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள். படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர்களைவிடப் போலி மருத்துவர்களே நல்லது என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு” என்றார்.

 அவர் எப்போதுமே தன்னுடைய கருத்தியலை புற உலகின் எதார்த்தத்தில் இருந்து பெறாமல், அகத் தூண்டுதலின் மூலமே பெற்றார். அது சரியா, தவறா என்பதைப் பற்றி அவர் எப்போதுமே ஆய்வு செய்தது கிடையாது. தன்னுடைய கருத்துக்கள் தனக்கு கடவுளால் சொல்லப்பட்டவை என்று அவர் நம்பியதால் மிக பிற்போக்கான, நகைக்கத்தக்க செய்திகளைக் கூட எந்தவித மன உறுத்தலும் இல்லாமல் வெளிப்படுத்தினார். தபால் சேவையைப் பற்றி கூறும்போது “ஓர் அணா செலவில் கடிதம் எழுதி யாரை வேண்டுமென்றாலும் பழித்துரைக்க முடிகிறது” என்றார். இயந்திரமயமாக்கலைப் பற்றி அவரது கருத்து மிக பிற்போக்கானதாகும். “மேலை நாகரிகம் இயந்திரங்களை நம்பியுள்ளது. எனவே அனைத்து அறக்கேடுகளுக்கும் அவை காரணமாகின்றது. இந்தியாவை ஏழ்மை நிலைக்குத் தள்ளியது இயந்திரங்கள்தான். ஐரோப்பாவை இயந்திரங்கள் பாழடித்துக் கொண்டு இருக்கின்றன. இங்கிலாந்தின் வாயிலில் அழிவு காத்துக் கொண்டிருக்கிறது. நவீன நாகரிகத்தின் முக்கியமான அடையாளம் இயந்திரம்தான். அது தீயது அனைத்தையும் தன்னுள் கொண்டுள்ளது” என்று கூறினார்.

 காந்தி தன்னுடைய இயல்பான பார்ப்பனிய கருத்து நிலையில் இருந்து இந்துமதவாதிகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்தது மட்டுமல்லாமல், இஸ்லாமிய மதவாதிகளுக்கும் அவர் ஆதரவு கொடுத்து வந்தார். உலகம் முழுவதிலுமுள்ள இஸ்லாமிய சமூகத்தின் தலைமைப் பதவியான கலிபா பதவியைத் துருக்கிய சுல்தானுக்கு மீண்டும் கொடுக்க வேண்டும் என்பதற்காக இஸ்லாமிய மதவாதிகளால் நடத்தப்பட்ட கிலாபத் இயக்கத்தின் தீவிர ஆதரவாளராக காந்தி இருந்தார். இதனால் 1919 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி டெல்லியில் நடந்த அகில இந்திய கிலாபத் மாநாடு காந்தியை தலைவராகத் தேர்தெடுத்தது. காந்தி தன் வாழ்நாளின் இறுதிவரை மத அடிப்படைவாதிகளான உலாமாக்களையும், மவுலானாக்களையும் தன்பால் ஈர்த்து வைப்பதில் குறியாக இருந்தார்.

ஒரு பக்கம் இந்து முஸ்லிம் ஒற்றுமையை விரும்பிய காந்தி, மறுபக்கம் அப்படியான ஒன்று என்றுமே ஏற்பட்டு விடாதபடிக்கு கவனமாக தன்னுடைய அரசியல் செயல்பாடுகளை கட்டமைத்துக் கொண்டார். “என்னைப் பொருத்தவரையில் மதமின்றி அரசியல் இல்லை. அனைத்துமே மதத்திற்கு அடிபணிய வேண்டியவைதான். மதம் இல்லாத அரசியல் நச்சுப் பாம்பு போன்றது. ஏனெனில் அது ஆன்மாவையே கொன்று விடுகின்றது” என்பதுதான் மதம் பற்றிய காந்தியின் கருத்து. ஆனால் அவரின் கொலை இந்தக் கருத்தை பொய்யாக்கியதோடு, நச்சுப் பாம்புகளை உற்பத்தி செய்வதே மதம்தான் என்பதை நிருபித்தது.

 அவருக்கு பொதுவுடைமை தத்துவத்தின் மீது அளவு கடந்த வெறுப்பும் முதலாளியத்தின் மீது பாசமும் இருந்தது. “போல்ஷ்விசம் என்றால்என்ன என்பதை இன்னமும் நான் அறியாதவனாகவே இருக்கிறேன்… ஆனால் அது வன்முறையையும் கடவுள் மறுப்பையும் அடிப்படையாகக் கொண்டது என்றளவில் அது பற்றி எனக்குத் தெரியும். அது எனக்கு வெறுப்பூட்டுவதாகவே உள்ளது என்பதை நான் அறிந்தே இருக்கிறேன்… உயர்ந்த நோக்கங்களுக்கு உதவுவதற்காகக்கூட வன்முறை வழிகளை ஏற்க முடியாத அளவுக்கு அவற்றுக்குச் சமரசமற்ற எதிரி நான்.” என்று கூறிய காந்தி பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான தன்னுடைய ஆன்மீகக் கட்டளையை 1931 ஆம் ஆண்டு மார்ச் 22 நவஜீவன் (குஜராத்தி) ஏட்டில் ‘அரசர்களும் ஆண்டிகளும்’ என்ற தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் வெளிப்படுத்தினார் “...செல்வந்தர்கள் மேல் வன்மம் வைக்காமல் இருப்பதுதான் ஏழைகளின் தர்மமாகும். தம் வறுமைக்குப் பெரிதும் காரணம் தம் சொந்தக் குற்றமே, தம் சொந்தத் தவறுகளே என்பதை ஏழைகள் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்றார்.

 காந்தியைப் பற்றி சொல்வதற்கும், எழுதுவதற்கும் ஏராளமான கருத்துக்கள் குவியலாக இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் காந்தி என்ற மகாத்மாவை சாதாரண ஆத்மாவாகக் கூட இருக்கத் தகுதி இல்லாத நபராகவே நமக்குக் காட்டுகின்றன. 1915 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த காந்தி தொடர்ச்சியாக வெள்ளை ஏகாதிபத்தியத்தை ஆதரிப்பதன் மூலவே தனது எண்ணங்களை சாதித்துக் கொள்ள முடியும் என நம்பினார். அவரது அகிம்சை எப்போதுமே ஒருதலைப் பட்சமாகவே இருந்தது. தங்கள் நாட்டின் சொந்த மக்களை சுட மறுத்த கர்வாலி வீரர்களை அவர் கடுமையாகக் கண்டித்தார். “துப்பாக்கிச் சூடு நடத்துமாறு போடப்படும் ஓர் உத்திரவை ராணுவ வீரர் ஒருவர் மறுப்பதென்பது, அவர் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை மீறுவதாகிறது. இதன் மூலம் கீழ்ப்படியாமை என்ற குற்றத்தைச் செய்தவராகிறார்” என்றார்.

 இப்படி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாகவும், இந்தியப் பெருமுதலாளிகளின் செல்லப் பிள்ளையாகவும் இருந்த காந்தியின் ஒழுக்க விழுமியங்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அருவருப்பு ஊட்டுவதாக இருந்தது. காந்தி தனது தனிப்பட்ட வாழ்வில் காமக்களியாட்டங்களில் ஈடுபட இருந்தபோது இராமன் அவரைக் காப்பாற்றியதாக அவரே கூறியிருக்கின்றார். ”என்னுடைய நடத்தை பற்றி மிகவும் புகழ்ந்து பேசியுள்ளேன். ஆனால் உச்சரிப்பதற்கு இராமன் பெயர் இல்லாதிருந்திருக்குமானால் நான் மூன்று பெண்களை சகோதரிகள் என்று அழைத்திருக்க முடியாது” என்றார். காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனை மிகவும் புகழ் பெற்றதாகும். அதாவது இரவில் பெண்களைக் கட்டிப் பிடித்து படுத்தவராக, தன் உடலின்ப உணர்ச்சிக்கு ஆட்படுகிறேனா என்று காந்தி தன்னை எப்போதுமே பரிசோதனை செய்து கொண்டார்.

இப்படி எல்லாவகையிலும் நேர்மையற்று, சூழ்ச்சி நிறைந்த மனிதராகத் தான் வாழ்நாள் எல்லாம் வாழ்ந்த காந்தி இந்திய சமூகத்திற்குக் கொடுத்துச் சென்றது வெறும் அற்பவாதக் கருத்தியலை மட்டுமே. அந்த அற்பவாதக் கருத்தியல் இந்திய முதலாளிகளுக்கு மட்டுமல்லாமல், உலகப் பெரு முதலாளிகளுக்கும் தன்னை காப்பாற்றிக் கொள்ளக் கிடைத்த அரிய கருத்தியல் ஆயுதமாக இன்றும் பயன்பட்டுக் கொண்டிருகின்றது. கடுமையான வேலை இழப்புகள் மற்றும் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, மத வன்முறைகள் என்று அனைத்து வகையிலும் தோல்வியடைந்த ஒரு மோசமான மக்கள் விரோத அரசாக நடந்து கொண்டிருக்கும் மோடி அரசு, அதன் ஊடாக மக்கள் மனதில் கனன்று கொண்டிருக்கும் வெறுப்பில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளவும், வருங்கால தலைமுறையை அரசியலற்ற அற்பக் கூட்டமாக மாற்றவுமே காந்தியை பெரிய அளவுக்கு எடுத்துச் செல்ல முயன்று வருகின்றது.

 காந்தியை யார் தூக்கிப் பிடித்தாலும் அவர்களின் உண்மை நோக்கம் பார்ப்பனியத்தையும், முதலாளித்துவத்தையும் காப்பாற்றுவதே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பொதுவுடைமை சித்தாந்தம் பேசுபவர்கள் காந்தியை எப்போதுமே தங்கள் சித்தாந்தத்தின் எதிர் நிலையில் நிறுத்தியே விமர்சிக்க வேண்டும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கோட்பாட்டிற்கே விரோதமானது காந்தியின் அகிம்சை. முதலாளியத்தின் கைக்கூலிகளாய், பார்ப்பனியத்தின் சேவகர்களாய் அற்ப பதர்களாய் வாழ்ந்து அதிகாரத்தையும், ஆதாயத்தையும் அடைய நினைப்பவர்களுக்கு மட்டுமே காந்தி எப்போதும் மகாத்மா ஆவார்.

  • செ.கார்கி
Pin It