பொதுவாக ஒரு சமூகம் சிறந்த வாழ்வியலைக் கொண்டதாக இருக்கின்றது அல்லது இருந்தது என்பதினை அறிய அச்சமூதாயத்தின் வாழ்வியலின் வழிமுறைகளை அறிவதின் மூலம் தெரிந்து கொள்ளலாம்! அந்த வாழ்வியலில் உழைப்பு, உணவு, உறக்கம் போன்றவற்றோடு சேர்ந்து விளையாட்டும் மிக முக்கியமான ஒன்றாக அமைந்து விடுகின்றது.

இந்த நூற்றாண்டின் மிக உன்னதமான கண்டுபிடிப்பான கீழடி அகழாய்வுகளில் எத்தனையோ தகவல்கள் தினம் தினம் அன்றைய மக்களின் வாழ்வியலான கட்டடக்கலை, வணிகம், விவசாயத்திற்கான கால்நடை வளர்ப்பு, உணவுக்கான விலங்கு வளர்ப்பு போன்றவற்றை தன்னிடமிருந்த எச்சங்களை வெளிபடுத்திக் கொண்டிருப்பதின் வாயிலாக உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. 

keezhadi pakadai coinsஅந்த வகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைபொருட்களான வட்டச்சில்லுகள், ஆட்டக்காய்கள், சதுரங்கக் கட்டைகள் மூலம் அன்றைய சமுதாயம் பொழுதுபோக்கு அம்சங்களையும் சிறப்பாகக் கொண்டிருந்ததை அறிய முடிகின்றது.

பெண்களையும் சக மனிதராக கருதும் மனப்பான்மை 

கீழடி அகழாய்வுகளில் கிடைக்கப் பெற்ற பொருட்களில் அதிகமான வட்டச்சில்லுகள் 600 எண்ணிக்கையில் (தற்போதும் இவ்விளையாட்டு ‘பாண்டி’ என்ற பெயரில் விளையாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது) கிடைத்திருக்கின்றது.

மேலும் தாய உருட்டி விளையாட்டுக்கான பகடைக்காய்களும் கிடைத்துள்ளன. இதன் மூலம் பெண்களையும் ஆண்களுக்கு சமமாகக் கருதும் மனப்பான்மை உடையவர்கள் கீழடி நகர நாகரீகத்தினர் என்பது அறிந்து கொள்ளலாம்.

keezhadi round coinsபெண்களுக்கு ஆன்மா என்ற ஒன்று இருக்கின்றதா இல்லையா என்ற கேள்வி உலக நாகரீகத்தின் ஊற்றுக்கண்ணாகக் கருதபடும் கிரேக்கத்திலேயே எழுந்த அதே காலகட்டத்தில், தமிழ்ச் சமூகமான கீழடியில் பெண்களையும் சமமாகக் கருதி, அவர்களும் தங்கள் களைப்பு நீங்க விளையாட வேண்டும் என்ற அடிப்படையில் விளையாட்டுப் பொருட்களை இருப்பதைப் பார்க்கும்போது, நாங்கள் உலகத்திற்கே முன்மாதிரியாக வாழ்ந்த சமூகமாகவே இருந்திருக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.

 சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள் 

அகழாய்வில் சிறுவர்கள் கயிறு கட்டி விளையாடும் சுடுமண்ணாலான வட்டச்சுற்றிகள், வண்டி இழுத்து விளையாடும் சக்கரங்களும், பெரியவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் விளையாடும் சதுரங்க விளையாட்டுக் காய்களும் பல்வேறு அளவில் 80 எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. இதன் மூலம் ஒரு நகர நாகரீகத்தினர் தன்னுடைய சக மாந்தர்கள் எப்படி தங்களின் வாழ்வியலின் பொழுதுகளை திறம்படக் கழித்திட வேண்டும் என்பதை கீழடி பாடம் நடத்துகின்றது.

kezhadi play coinsநம்முடைய நிலை

கீழடியில் அதிக அளவில் கிடைத்துள்ள இந்தத் தொல்பொருட்களின் மூலம் தமிழர் வரலாறு நமக்கு பாடம் ஒன்றை நடத்துகின்றது.

நாகரீகமற்றவர்கள் எனக் கிண்டலடிக்கப்படும் ஆதி கால மக்கள் தத்தமது வாழ்வியலை சிறப்பாக அமைத்திருக்கின்றார்கள். அடிப்படைத் தேவைகளை பூர்த்தியாக்கி வாழ்வியலை செம்மையாக்கி வேலை, ஊண், உறக்கம், ஓய்வு என திட்டமிட்டு வாழ்ந்து, தமது எச்சங்களை பின்பு ஒரு காலத்தில் சிறப்பாக வெளிப்படும் வண்ணம் தரமாக்கி நமக்கு அறிவுப்பாடம் எடுத்திருக்கின்றனர்.

நாம் நமது அண்டை வீட்டில் வசிக்கும் நெடுநாள் குடியானவனையும் கூட அறியாது ஒரு அவசர கால வாழ்க்கையினை வாழ்ந்து நமது சிறப்பான வாழ்வினை அழித்துக் கொண்டு வருகின்றோம்.

இயந்திரத்தனமான கார்ப்ரேட் வாழ்வு, அதில் பிழைக்கத் தெரிந்தவனைத் தவிர மீதம் உள்ளவனை மிதித்துச் சென்றிடும் போக்கு, தமது பெற்றோர்களுக்கும் - பெற்றவர்களுக்கும் - கரம் பிடித்தவளுக்கும் சிறிது நேரம் கூட ஒதுக்க இயலாத நிலை என ஒவ்வொன்றாக நாம் இழந்து கொண்டிருக்கும் விசயங்கள் ஏராளம்.

- நவாஸ்

Pin It