அண்மையில் கெளரி லங்கேஷ் கொலை தொடர்பாக 'ஸ்ரீராம் சேனா' அமைப்பைச் சார்ந்த பரசுராம் வாகுமார் என்பவன் கைது செய்யப்பட்டான். தான்தான் கொலை செய்ததாக அவன் ஒப்புக்கொண்டான். நிச்சயமாக இந்து பயங்கரவாதிகள்தான் கெளரி லங்கேஷை கொன்றிருக்க வேண்டும் என்று கொலை நடந்த அன்றே அனைவருக்கும் உறுதியாகத் தெரியும். அதனால் இந்து பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவன் கைது செய்யப்பட்டதில் எந்த வியப்பும் ஏற்படவில்லை. ஆனால் மிக அபாயகரமான சூழ்நிலை என்னவென்றால், இந்தக் கொலையைச் செய்தவன் கெளரியின் மீதான முன்விரோதத்தாலோ, இல்லை கருத்து வேறுபாட்டாலோ செய்யவில்லை என்பதுதான். கூலிப்படையை ஏவி கொல்வது போல இந்தக் கொலை நடைபெற்றிருக்கின்றது.

Muthalik and Prashuramகாசுக்காக கொலை செய்பவனுக்கு தான் கொல்லப் போகும் நபர் நல்லவரா, கெட்டவரா என்று ஆராய்ச்சி செய்து பார்ப்பது தேவையில்லாதது போல, மதத்திற்காக கொலை செய்பவனுக்கும் தான் கொல்லபோகும் நபர் எப்படிப்பட்டவர் என்று கூட அல்ல, யார் என்று கூட தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதை கெளரி லங்கேஷ் கொலை வெளிப்படுத்தி இருக்கின்றது.

இந்தக் கொலையை அரங்கேற்றிய பரசுராம் வாகுமார் கொடுத்த வாக்குமூலம், இந்துபயங்கரவாதிகள் எப்படி அப்பாவி இளைஞர்களை மதவெறியூட்டி தனது கீழ்த்தரமான கொலைவெறியை தீர்த்துக் கொள்கின்றார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றது. அவன் கொடுத்த வாக்குமூலத்தில் “யாரைக் கொலை செய்யப் போகிறேன் என்று எனக்குத் தெரியாது. அவர் பெயர் கூட எனக்குத் தெரியாது. இந்த கொலைக்கு ‘ஆப்ரேஷன் அம்மா’ என்று பெயர் வைத்து இருந்தார்கள். அதேபோல், இந்தக் கொலையை செய்தால் இந்து மதம் நன்றாக இருக்கும் என்றனர். இந்து மதத்தின் நன்மைக்காக கொலை செய்தேன். ஆனால் அந்தப் பெண்ணை கொன்று இருக்க கூடாது என்று இப்போது நினைக்கிறேன். ஸ்ரீராம் சேனா என்ற அமைப்பு சொல்லித்தான் கொலை செய்தேன். ஆனால் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் என்னிடம் பெயர் சொல்லவில்லை. கொலை செய்த பின்பும் கூட யாரும் என்னிடம் பெயர் சொல்லவில்லை. அப்படி பெயர் கேட்பதும், சொல்வதும் இந்து மதத்திற்கு விரோதமானது என்று கூறினார்கள். அதனால், அந்த இயக்கத்தைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியவில்லை.

என்னை செப்டம்பர் மாதம் பெங்களூருக்கு அழைத்து வந்தனர். எனக்கு துப்பாக்கி சுடத் தெரியாது. ஸ்ரீராம் சேனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் காட்டுப்பகுதிக்குள் துப்பாக்கி சுட கற்றுக் கொடுத்தார். (தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் தீவிரவாதிகள் பயிற்சி எடுக்கின்றார்கள் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்). சரியாக இரண்டு வாரம் குறி பார்த்து சுட கற்றுக்கொண்டேன். அதன்பின் என்னை, அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போது கூட எனக்கு அவர் பெயர் தெரியாது. ஒரு வாரம் அந்தப் பெண்ணின் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தோம். எப்படி சுடலாம் என்று அவர்களே திட்டத்தை தெரிவித்தார்கள். ஒவ்வொரு முறை என்னை வேறுவேறு நபர் அந்த வீட்டிற்கு கொண்டு சென்றார்கள். நான் மூன்றாவது நாள் கொலை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் அன்று என்னால் கொலை செய்ய முடியவில்லை. அவர் வேலையை விட்டு வந்த பின் எங்குமே வெளியே செல்லவில்லை. அதனால் அவரை என்னால் பார்க்க முடியவில்லை. அவர் வீட்டிற்குள்ளேயே இருந்தார். அதனால் அன்று அவரைக் கொல்ல முடியவில்லை. அதற்கு மறுநாள் கொலை செய்யும் திட்டத்தை ஒத்திவைத்தோம். அதன்பின் சரியாக செப்டம்பர் 5ம் தேதி கொலைக்கு நாள் குறிக்கப்பட்டது. அன்று மாலை நான் துப்பாக்கியுடன் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றேன். என்னுடன் மூன்று பேர் வந்திருந்தனர். அவர்களின் முகத்தை சரியாகப் பார்க்கவில்லை. அவர்கள் ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள். ஆனால் யார் என்று தெரியவில்லை. அந்தப் பெண் வெளியே வரும்வரை காத்திருந்தேன். அந்தப் பெண் வெளியே வந்ததும் அவரின் அருகே சென்றேன். அப்போது இருமினேன். அவர் என்னை திரும்பிப் பார்த்தார். அப்போது சரியாக துப்பாக்கியால் அவரை சுட்டுவிட்டு நாங்கள் நான்கு பேரும் தப்பித்தோம். அந்த மூன்று பேர் எங்கே சென்றார்கள் என்று தெரியாது. அவர்களை அதற்குப்பின் பார்க்கவில்லை” என்று வாக்குமூலம் அளித்துள்ளான்.

கெளரி நிச்சயமாக கொல்லப்பட்டே ஆகவேண்டும், அவர் இருக்கும் ஒவ்வொரு நாளும் கர்நாடகாவில் தங்களது அடித்தளம் அரித்தெடுக்கப்படுவதை தடுக்க முடியாது என்று காவி பயங்கரவாதிகள் நன்கு உணர்ந்திருந்தார்கள். அவர் யாருக்கும் அஞ்சுபவராகவோ, அடிபணிந்து போகிற‌வராகவோ இருக்கவில்லை. தொடர்ச்சியாக காவி பயங்கரவாதிகளை தனது பத்திரிகை மூலம் அம்பலப்படுத்தி வந்தார். 2003 ஆம் ஆண்டு காவி பயங்கரவாதிகளால் இந்துக்களும் முஸ்லிம்களும் கூட்டாக வழிபடும் சூஃபி ஞானி பாபா மற்றும் இந்துக் கடவுளான தத்தாத்ரேயா கோயிலை கைப்பற்ற முயன்ற போது அதற்கு எதிராக போராட்டம் நடத்தினார். பெண்கள், தலித்துக்கள், முஸ்லிம்கள் போன்றவர்களின் பிரச்சினைக்காக களத்தில் நின்றார். லிங்காயத்துக்கள் இந்துக்கள் அல்ல என்பதை தொடர்ச்சியாக பரப்புரை செய்தார். அவர் துவங்கிய ‘கெளரி லங்கேஷ் பத்திரிக்கே’ மூலம் காவி பயங்கரவாதிகளையும், சமூகவிரோதிகளையும், ஊழல் பேர்வழிகளையும் தொடர்ச்சியாக சமூகத்தின் முன் அம்பலப்படுத்தினர். இதனால் அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் அவர் முடங்கிவிடவில்லை.

கொள்கையில் துணிச்சலும் சக மனிதர்களிடம் பெரும் அன்பையும் காட்டிய கெளரி கர்நாடகாவின் எளிய மனிதர்களுக்கு எப்போதுமே தேவைப்படுபவராக இருந்தார். ஆனால் சாமானிய எளிய மனிதர்களை இந்துமதவெறி ஊட்டி, அவர்களை தலித்துக்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும், கிருஸ்தவர்களுக்கு எதிராகவும் தூண்டிவிட்டு தங்களது இந்து அரிப்பை தீர்த்துக் கொள்ளத் துடிக்கும் கொலைவெறியர்களுக்கு கெளரி பெரும் அச்சுறுத்தலாகத் தெரிந்தார். அதனால் ஆர்.எஸ்.எஸ், பிஜேபியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதன் கூலிப்படை அமைப்பான ஸ்ரீராம் சேனா மூலம் அவர் 2017 அம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொலை செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு இந்து மத்தைப் பற்றியோ, கெளரியைப் பற்றியோ எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதுதான் மிக முக்கியமானது. இந்து மதத்தில் உள்ள கேடுகெட்ட சாதியக் கொடுமைகளைப் பற்றியும், அதன் ஆபாச வக்கிரங்கள் பற்றியும், அதே போல கெளரி யார், அவர் யாருக்காக எழுதுகின்றார், அவரின் நியாயம் யாருக்கானது என்பதைப் பற்றியும் தெரிந்த ஒருவன் நிச்சயம் அவரைக் கொன்றிருக்க மாட்டான். எதைப் பற்றியுமே தெரியாத அப்பாவிகள் இந்து மத வெறியர்களால் மிக எளிதாக வீழ்த்தப்படுகின்றார்கள். அவர்களின் சுய அறிவுக்கும், செயல்பாட்டுக்குமான இடைவெளியை மதவெறியைக் கொண்டு இந்துமத வெறியர்கள் நிரப்புகின்றார்கள். இதுதான் மிக அபாயகரமான போக்கு. காவி பயங்கரவாதிகள் தங்களிடம் உள்ள மதவெறி என்னும் ஆயுதத்தைக் கொண்டு அவர்கள் விரும்பும் ஒவ்வொருவரையும் ஏதும் அறியாத அப்பாவிகளைப் பயன்படுத்தி வீழ்த்திக் கொண்டே இருக்கின்றார்கள்.

மூடநம்பிக்கைக்கு எதிராகப் போராடிய டாக்டர் நரேந்திர தபோல்கர், இந்து மத வெறிக்கு எதிராகப் போராடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கோவிந்த பன்சாரே, கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி போன்றவர்களும் இதே போலத்தான் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். கெளரியை சுட்ட அதே துப்பாக்கிதான் அவர்களையும் சுட்டிருக்கின்றது. கெளரியைக் கொல்ல திட்டமிட்ட அதே மூளைதான் மற்றவர்களையும் கொல்லத் திட்டமிட்டிருகின்றது. ஆனால் கொலை செய்தவனை பிடித்த காவல்துறை, திட்டம் திட்டிய ஸ்ரீராம் சேனாவின் தலைவர் முத்தலிகையும், அவனுக்கு உத்திரவிட்ட ஆர்.எஸ்.எஸ், பிஜேபியைச் சேர்ந்தவர்களையும் இன்னும் கைது செய்யாமல் உள்ளது. அவர்கள் தாங்கள் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்துதான் அப்பாவி இளைஞர்களைத் தூண்டிவிட்டு கொலைகளை செய்ய வைக்கின்றார்கள். அதனால் மாட்டிக்கொண்டால் மிக எளிதாக கொலை செய்தவன் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவன் இல்லை என்று நழுவி விடுகின்றார்கள். ஆனால் கொலை செய்த பரசுராம் வாகுமார் முத்தலிக்குடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி இருக்கின்றது. இந்த அயோக்கியன் தான் கெளரி கொலையைப் பற்றி பிரதமர் கருத்து தெரிவிக்கவில்லையே என பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு “நாய்கள் இறந்தால் கூட பிரதமர் கருத்து தெரிவிக்க வேண்டுமா?” என்று கேட்டவன்.

அப்பட்டமாகவே கொலைக்கான திட்டமிடலைச் செய்தது யார் என்று தெரிந்தும் இன்னும் முத்தலிக்கோ, இல்லை அவனுக்கு உத்திரவிடும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களோ கைது செய்யப்படாமல் இருப்பதில் இருந்தே பாபர் மசூதி வழக்கைப் போன்றும், குஜராத் கலவர வழக்கைப் போன்றும் அரசியல் செல்வாக்கு படைத்த குற்றவாளிகளை தப்புவிக்கும் வேலையை கர்நாடக அரசு திட்டமிட்டு செய்வதாகவே தெரிகின்றது. கிளைகளை மட்டும் வெட்டிவிட்டு ஆணிவேரை அப்படியே விட்டுவிட்டால், அது மீண்டும் மீண்டும் கிளைகளை உற்பத்தி செய்துகொண்டே தான் இருக்கும்.

- செ.கார்கி

Pin It