மற்ற மாநிலங்களில் அமைதியாக எவ்விதப் பிரச்சினையும் இன்றி நடந்த ரத யாத்திரையைத் தமிழ்நாட்டில் மட்டும் அனுமதிக்காமல் மறுப்பது சட்டவிரோதம் என்றும், இந்துக்கடவுளான ராமனை இந்து விரோதிகள் திட்டமிட்டு அவமானப்படுத்துகின்றார்கள் என்றும், சங்பரிவாரத்தைச் சேர்ந்த வானரங்கள் குய்யோ முய்யோ என்று கத்திக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் பெரும்பாலான தமிழ் மக்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டாலும் யாரும் வீதிக்கு வந்து ‘எப்படி நாங்கள் கடவுளாக வணங்கும் ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் ஊர்வலத்தை எதிர்க்கலாம்?’ என்று யாரும் போராட இல்லை. மக்கள் அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆளும் கட்சியையும், சில பார்ப்பன அடிவருடி கட்சிகளையும் தவிர மற்ற கட்சிகளும், இயக்கங்களும் போர்க்கோலம் பூண்டு எதிர்ப்பு தெரிவிப்பதால், அந்த எதிர்ப்பில் நிச்சயம் நியாயம் இருக்கும் என்ற அடிப்படையிலேயே மக்கள் இந்த எதிர்ப்பை புரிந்து கொண்டிருக்கின்றார்கள். இன்னும் சில பேருக்கு ராமனின் யோக்கியதையைப் பற்றிய சந்தேகம் கூட இருக்கலாம். அவனுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம் என்ற சந்தேகம் கூட இருக்கலாம். அதைத் தீர்க்க வேண்டியது நம்முடைய கடமையாகும். பெரியாரின் எழுத்துக்களின் துணைகொண்டு ராமனை இனி நாம் அணுகலாம்.
இந்த உலகில் மகா விஷ்ணுவானவர் ஒன்பது அவதாரங்களை எடுத்துள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் சனாதன சாதிய தர்மம் மிகவும் சீர்கெட்டு போயுள்ள இந்தக் காலத்தில் நிச்சயம் தோன்றுவார் என்று நாம் நம்பலாம். ஒவ்வொரு அவதாரமும் ஓர் அநீதியை ஒழிப்பதற்காகவே எடுக்கப்பட்டது என்பது வைணவப் புராணங்களின் வழி நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. அப்படி இந்த உலகமே போற்றும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதாரம், இந்த உலகில் எதற்காக எந்தக் காரணத்தின் பொருட்டு நிகழ்ந்தது என்பதை வால்மீகி ராமாயணத்தின் வழி நின்று ராமபிரானின் பக்தகோடிகளுக்கு விளக்க வேண்டிய பெரும் கடமை நமக்குள்ளது என்பதால் விளக்க ஆரம்பிப்போம்.
ஒரு சமயம் ஜலந்தராசுரன் என்பவனின் பத்தினியாக இருந்த பிருந்தை என்பவளுடன் ஸ்ரீமான் ராமச்சந்திர மூர்த்தி 'ஆன்மீக ஆராய்ச்சி' செய்ய ஆசைப்பட்டார். கடவுள்கள் அடுத்தவன் பொண்டாட்டியுடன் 'ஆன்மீக ஆராய்ச்சி' செய்வதெல்லாம் இந்து தர்மத்தைப் பொருத்தவரை ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதிகள் என்பதால், விஷ்ணுவானவர் தன்னைப் போலவே 'ஆன்மீக ஆராய்ச்சி' செய்வதில் வல்லவரான சிவனிடம் தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகின்றார். கடவுள்கள் தமக்குள் இது போன்ற மிக முக்கியமான லோக நலன் சார்ந்த விசயங்களில் உதவிக் கொள்ளாவிட்டால், இந்த உலகில் 'ஆன்மீக ஆராய்ச்சி' என்ற ஒன்றே இல்லாமல் போய் ஜீவராசிகள் பெரும் துன்பத்தை அடைந்துவிடும் என்பதால் சிவனும் ஒப்புக்கொண்டு ஜலந்தராசுரனுக்கு மோட்சம் கொடுக்கின்றார். 'ஆன்மீக ஆராய்ச்சி'க்குத் தடையாக இருந்த ஜலந்தராசுரனுக்கு தனது நண்பர் மோட்சம் கொடுத்த அடுத்த நொடியே, விஷ்ணுவானவர் ஜலந்தராசுரனின் வடிவெடித்து பிருந்தையிடம் சென்று 'ஆன்மீக ஆராய்ச்சி'யில் ஈடுபடுகின்றார். ஆனால் ஆராய்ச்சி வழக்கமான பாணியில் இல்லாமல் வேறு விதமாக இருப்பதை பத்தினியான பிருந்தை உணர்ந்து, ஆராய்ச்சி செய்ய வந்தவன் தனது கணவன் அல்ல கடவுள் என்பதை கண்டுபிடித்து விடுகின்றாள். கண்டுபிடித்தது மட்டுமில்லாமல் தனது கணவனைக் கொன்று, தன்னோடு ஆன்மீக ஆராய்ச்சியிலும் ஈடுபட்ட விஷ்ணுவுக்கு சாபமும் கொடுக்கின்றாள். அது என்ன சாபம் என்றால், ‘நீ எப்படி என்னிடம் ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபட்டாயோ அதே போல உன் பொண்டாட்டியிடமும் ஒருவன் ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபடுவான்’ என்பதே ஆகும்.
பத்தினி சாபம் பழிக்கும் என்பது தர்மமானதால் மகா விஷ்ணுவானவர் ஸ்ரீமான் ராமச்சந்திர மூர்த்தியாக இந்தப் பூலோகத்தில் பிறந்து, விதிப்படி தன்னுடைய மனைவி சீதையை 'ஆன்மீக ஆராய்ச்சி' செய்ய இராவணனிடம் அனுப்பும்படியான நிலைமை ஏற்பட்டுவிட்டது. அதனால் வால்மீகியின் கதைப்படி சீதையை ராவணன் தூக்கிக் கொண்டு போய் அசோகவனத்தில் வைத்து 'ஆன்மீக ஆராய்ச்சி' செய்தது என்பது விதிப்படி நேர்ந்த செயலாகுமே அன்றி, ராவணன் மேல் குற்றம் சொல்ல கதைப்படியும், விதிப்படியும் ஒன்றுமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் விஷ்ணுவானவர் பிருந்தையிடம் 'ஆன்மீக ஆராய்ச்சி' செய்யாமல் இருந்திருந்தால், அப்பாவி தமிழனான ராவணன் தேவையில்லாமல் சீதையிடம் 'ஆன்மீக ஆராய்ச்சி' செய்து இருக்க மாட்டான்; ராமனால் கொல்லப்பட்டும் இருக்க மாட்டான்.
சரி அது கிடக்கட்டும். இந்த உலகமே கொண்டாடும் ஏக பத்தினி விரதனான ராமன் தன்னுடைய சாபத்தைக் கழிக்க இந்த மண்ணில் அவதாரம் எடுக்க பிறந்த போது, அவனைப் போலவே ஏகபத்தினி விரதனாக இருக்கும் ஒருவன் வயிற்றில் அல்லவா பிறந்திருக்க வேண்டும். ஆனால் தசரதன் போன்று அறுபதாயிரம் மனைவிகளைத் திருமணம் செய்துகொண்டு, அதுவும் போதாமல் மேலும் மூன்று மனைவிகளை திருமணம் செய்துகொண்ட, ஒழுக்கம் கெட்ட, இன்னும் சொல்லப்போனால் பால்வினை நோய்க்கான கிருமியை அந்தக் காலத்திலேயே உற்பத்தி செய்திருப்பான் என்று எண்ணக்கூடிய ஒருவனுக்கு ஏன் பிறந்தான் என்பதுதான். இந்த இடத்தில் தான் வால்மீகி சாமர்த்தியமாக ஒரு திருப்புமுனையை வைத்திருக்கின்றார். அது என்னவென்றால் அறுபது ஆயிரம் மனைவிகளைக் கட்டி ஆண்மையை இழந்ததால், குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த தசரதன் தன் கடைசி மூன்று மனைவிகளான கைகேயி, சுபத்தரை, கவுசலை ஆகியோரை வைத்து அஸ்வமேதா யாகம் நடத்துகின்றான். யாகம் முடிந்த இரவு தசரதன் தன் கடைசி மூன்று மனைவிகளையும் யாக புரோகிதர்களுக்கு தானமாகக் கொடுத்து விடுகின்றான். பிறகு புரோகிதர் தசரதனின் மனைவிகளுக்கு புத்திர பாக்கியம் கொடுக்கின்றார். இப்படியாகத்தான் ஏக பத்தினி விரதனான ராமன் இந்த உலகில் பிறந்தான்.
வால்மீகி ராமாயணத்தின் படி கைகேயியை மணம் முடிக்கும் போது அவள் வயிற்றில் பிறக்கும் குழந்தைக்குத்தான் தனது ராஜ்ஜியம் முழுவதும் என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டு தனது ராஜ்ஜியத்தை அப்போதே கைகேயிக்கு சுல்கமாக கொடுத்துவிடுகின்றான் தசரதன். கைகேயிக்கு பிரதிநிதியாகவே இருந்து நாட்டை ஆண்டு வருகின்றான். இப்படி தனக்கு சொந்தமில்லாத நாட்டை தசரதன் வேண்டுமென்றே கோசலையின் மகனான ராமனுக்கு தாரைவார்க்கத் திட்டமிடுகின்றான். அதுவும் பரதன் நாட்டில் இல்லாமல் அவனது பாட்டனார் வீட்டில் இருக்கும் போது. இதற்கு மந்திரிகளும், வசிட்டன் முதலான குருமார்களும் உடந்தையாக இருக்கின்றார்கள். இராமனுக்கு பட்டம் சூட்டும் செய்தி தசரதனின் மகன்களான பரதனுக்கும், சத்துருக்கன் போன்றவர்களுக்கும் கைகேயியின் அப்பனான கேகய மன்னனுக்கும், கைகேயிக்கும் தெரியாமல் அவசர அவசரமாக முடி சூட்ட முற்படுகின்றான். இதுதான் தசரதனின் யோக்கியதை; அதை மறுக்காமல் முடிசூட்டத் தயாரான ஸ்ரீமான் ராமச்சந்திர மூர்த்தியின் யோக்கியதை.
இந்த மோசடியை அறிந்து, கைகேயி தசரதனை சகட்டு மேனிக்குத் திட்டுகின்றாள். (கிழட்டுப் பயலே, ஆண்மையற்றவனே, பெண் பித்தனே, மோசடிப் பேர்வழியே என்னையே ஏமாற்றப் பார்க்கின்றாயே என்று). இறுதியில் இந்த மோசடி தெரிந்தும் வெட்கம் கெட்ட முறையில் உடந்தையாக இருந்த ராமனை காட்டிற்கு அனுப்புமாறு பணிக்கின்றாள். தான் செய்த மோசடித்தனம் அம்பலமானதால் வேறு வழியின்றி தசரதனும் ராமனை காட்டிற்கு அனுப்புகின்றான். ராமன் சீதையிடம் “நீ காட்டிற்கு வர வேண்டாம்” என்கின்றான். ஆனால் சீதை இதை மறுத்து ராமனுடனேயே காட்டிற்கு வருகின்றாள். உடன் இலட்சுமணனும் செல்கின்றான்.
இப்படி காட்டிற்குச் சென்ற ராமன் அங்கே என்ன செய்தான்? ஆடு, மாடு, குதிரை, மனிதர்கள் முதலியவற்றை யாகத்தில் போட்டு அழித்துக் கொண்டிருந்த பார்ப்பன கும்பலை யாகம் செய்யவிடமால் தடுத்து உயிர்கள் மேல் கருணை பாராட்டிய தாடகையைக் கொன்றான், பிருந்தையைத் திருட்டுத்தனமாகப் புணர்ந்த ராமன், தன்னிடம் நேர்மையாக வெளிப்படையாக ஆசையை வெளிப்படுத்திய சூர்ப்பநகையின் மூக்கையும், காதையும் அறுக்கின்றான். அடுத்தவன் கணவன் மேல் ஆசைப்பட்டவளின் மூக்கையின் காதுகளையும் அறுக்கலாம் என்றால், அடுத்தவன் பொண்டாட்டியை திருட்டுத்தனமாக புணர்ந்த விஷ்ணுக்கு எதை அறுக்கலாம் என்று ராமபக்தர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அடுத்தது கிஷ்கிந்தா ராஜ்யத்திற்கு சொந்தக்காரனாக இருந்த வாலியை, அவன் தம்பி சுக்ரீவனை கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அநீதியான முறையில் கொன்றான்.
அடுத்து விபீஷணனின் துணையுடன் ராவணனைக் கொன்றது. இது எந்த வகையிலும் கதைப்படி நியாயமான செயலாக ஆகாது. ஏனெனில் ராமன் முற்பிறவியில் ஜலந்தராசுரனின் மனைவி பிருந்தையிடம் திருட்டுத்தனமாக ஆன்மீக ஆராய்ச்சி செய்து அவளால் கண்டுபிடிக்கப்பட்டு, அவள் விட்ட சாபத்தின் காரணமாகவே இந்தப் பிறவியில் ராமனாக விஷ்ணு அவதாரம் எடுத்திருக்கும்போது, சீதையை கடத்தியதற்காக ராவணனைக் கொல்வது என்பது அப்பட்டமான விதிமுறை மீறலாகும். வால்மீகி ராமாயணத்தின்படி ராமனால்தான் ராவணன் சீதையை கடத்திக்கொண்டு போக வேண்டிய விதிவினைக்குத் தள்ளப்பட்டான். எனவே ராவணனை ராமன் கொன்றது முறையற்ற செயலாகும். ராமன் உண்மையில் கடவுளாக இருந்திருந்தால் சீதையை சாபம் கழிக்க அவனே ராவணனுடன் அனுப்பியிருக்க வேண்டும்.
ராமன் காட்டில் மாயமானை தேடிச் சென்றபோது சீதை லட்சுமணனிடம் போய் “நீ ராமனைப் பார்த்துவா” என்று சொல்கின்றாள். ஆனால் லட்சுமணன் மறுத்து விடுகின்றான். அதற்கு சீதை “ராமன் எப்படியாவது தொலைந்தால் என்னை நீ கைப்பற்றி அனுபவிக்கலாம் என்று கருதி , ராமனை காப்பாற்றப் போக மறுக்கின்றாயா? என்று கேட்கின்றாள். இராமனோடு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வந்த அவன் தம்பி லட்சுமணனிடம் இப்படி ஆபாசமாகப் பேசியதில் இருந்தே சீதையின் யோக்கியதை எவ்வளவு தரங்கெட்டது என்பதையும் ராம பக்தர்கள் புரிந்து கொள்வார்கள்.
மேலும் லட்சுமணனிடம் மிக ஆபாசமாகப் பேசியது போலவே ராமனிடமும் பல முறை பேசுகின்றாள் சீதை. ராமனை அற்பன் என்றும், “நீ வேஷத்தில் ஆணே ஒழிய காரியத்தில் உம்மிடம் ஆண்மை இல்லை" என்றும், “உன்னிடத்தில் ஒரு சக்தியும், ஒரு தன்மையும், தேஜசும் இல்லை” என்றும், “தன் மனைவியைப் பிறனுக்கு விட்டு அதனால் பிழைக்கும் கூத்தாடியைப் போல நீயாகவே என்னைப் பிறருக்கு கொடுத்து பயன்பெறக் கருதுகின்றாயே” என்கின்றாள். இதில் இருந்து சீதையின் பெருந்தன்மையான பேச்சு எப்படி இருந்தது என்பதும், ராமனின் யோக்கியதை சீதையிடம் எப்படி இருந்தது என்பதையும் நம்மால் பார்க்க முடிகின்றது. தசரதன், அவன் மகன் ராமன், அவனின் மனைவி சீதை ஆகிய அனைவருமே தரங்கெட்டவர்களாக, பண்பாடோடு பேசும் தார்மீக ஒழுக்கம் இல்லாதவர்களாகவே வால்மீகியால் காட்டப்படுகின்றார்கள்.
இப்படிப்பட்ட ஒழுக்கம் கெட்ட ஆர்ய கூட்டத்தைப் பற்றியும், அதை வைத்துதான் அரசியல் செய்து பிழைக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் ஒழுக்கம் கெட்டவர்கள் பற்றியும் நாம் இன்னும் கொஞ்சம் அடுத்தடுத்த கட்டுரையிலும் பார்ப்போம்.
- செ.கார்கி