திக்கென்று உள் சென்று மனித பரிணாமத்தின் பின் நோக்கி ஒரு வேட்டை சமூகத்துக்குள் அதற்கு முந்தைய காலத்துக்குள் அதற்கும் முந்தைய வெளிக்குள் அதற்கும் முந்தைய யாருமற்ற வெறும் மழையின் சபதத்துக்குள் சென்று விட்ட கணத்தை என்னால் அப்படியே இங்கு கொட்ட முடியவில்லை.

நினைக்க நினைக்க ஊரும் மனக்கேணி....மழை

rain 350மழை நினைத்தாலே நிறையும் பால்யம். மழை கொண்டுள்ள நினைவுகளின் நிமித்தமே... தொய்வுகள் மறைந்து வேகம் பிடிக்கிறது வாழ்வு. மழை முதுகெலும்பின் ரத்தம். சோறு வேண்டுமென்றால் நீரு வேண்டும். நீரு வேண்டுமென்றால் நிலம் வேண்டும். நிலம் வேண்டுமென்றால் தளம் வேண்டும். தளம் வேண்டுமென்றால் மானுடம் கை விரித்து வணங்க வேண்டும். வணங்குதல் நிஜம் செய்யும். நிஜமே வாழ்வின் மீதி.

நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படித்தான் உங்களை சுற்றியுள்ள இயற்கை சூழல் இருக்கும். அல்லது உங்களை சுற்றியுள்ள இயற்கை சூழல் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் உங்கள் வாழ்வு இருக்கும். இயற்கைக்கும் உங்களுக்கும் உள்ள தொப்புள் கொடி உறவு இது. இதுதான் அறிவியல். ஆண்டவன் சொன்னாலும் ஆதவன் வந்தால்தான் அது விடியல். மயக்க நிலை எதுவென்றாலும் மேகம் கருத்தால்தான் அது பொழிதல். மழையே வாழ்வாதாரம். மழை இல்லை என்றால் மானுடம் என்னாகும். மழை மட்டுமே இருந்தால் மானுடம் வீணாகும். சிலிர்த்தது தேஅகம். சிறு மழையில் நனைந்தேன். பெரு மழையில் நகர்ந்தேன்.

மழைதானே ஆரம்பம். இந்த பூமி மீதான தோல் மழை கொண்டே ஈரமாக்கப் படுகிறது. மழை கொண்டே சோறாக்க படுகிறது. மழை இல்லாத நிலையில் மலை மீதேறி சாகத்தானே வேண்டும் மானுடம். சுட்டெரிக்கும் கோடையில் வரும் ஒரு மழை... மனதுக்குள் எத்தனை புத்துணர்ச்சி. வருடம் தவறாமல் வரும் மழைக்காலம் எத்தனை அற்புதமானது. அது ஒரு சுழற்சி. மேகம் கறுத்து ஈரக்காற்று பட்டு மழையாகி பூமி வந்து மீண்டும் வெய்யில் பட்டு அதே மழை மேகமாய் மீண்டும் கறுத்து.......அப்பப்பா....... இயற்கையின் கைவண்ணத்தில் அத்தனையுமே சித்திரங்கள். ஆக சிறந்த முத்திரைகள்.

மழைக்கால பால்யங்களை மறக்க முடியுமா..... குடை இல்லாத மழையில் குழந்தையாய் விளையாடியதை இப்போது நினைத்தாலும் சாரல்தானே மனதுக்குள். மழை இல்லாத காதல்கள் எங்கும் இல்லைதானே? அது ஒவ்வொரு துளிகளிலும் பூமியின் உயிரை சாட்சியாய் துளிர்க்கத்தானே செய்கின்றன. மழையை கவிதை செய்யாத கவிஞன் எங்கிருக்கிறான். மழையை காவியம் செய்யாத காலம் எங்கிருக்கிறது. அது மனிதன் நிழல் போல காலம் முழுக்க அவனை பின் தொடர்கிறது. அதன் வியாக்கியானங்கள்... தூறலாகவும்....சாரலாகவும்......மிதமாகவும்.......கனமாகவும் துளிர்ப்பதை எங்கனம் கண்டும் காணாமல் கடக்க முடியும். காக்கா குருவிகளும் காடு மலைகளும்... ஆறு அருவிகளும்... நதியோரங்களும்... கடலும் காலமும் மழையை கொண்டாடி தீர்க்கின்றன. விவசாயி மனத்தை மழைதானே நிறைக்கிறது. முதல் துளி விழுகையில்... மானுடம் கடவுளைக் காண்கிறது.

"மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர" என்று கவிஞன் எழுதுகிறான். மழை பொய்த்து போனால் பஞ்சம் தலை விரித்தாடும். உலக வரலாற்றில் ஒவ்வொரு பஞ்சமும் மிக கொடுமையான பாடத்தை வழங்கி சென்றிருக்கிறது. மழையை கைக்கொள்பவன் கடவுளை கைக்கொள்கிறான். பஞ்சத்தின் சூதுதனை மழையே கவ்வும். மழையே நீராகி வேராகி பூமி முழுக்க உள்ள சமன்பாட்டினை நேர் நிறுத்துகிறது. மழையே இல்லையென்றால் குடிக்க நீர் எப்படி. குளிக்கதான் நீர் எப்படி. எதையும் உருவாக்கி விடும் மனிதனால் நீரை உருவாக்க முடியவில்லை. நீர்தான் மனிதனை உருவாக்குகிறது. ஏன் அடுத்த கிரகங்களுக்கு மனிதனால் இன்னும் தீர்க்கமான அடி எடுத்து வைக்க முடியவில்லை. நீர் இல்லை. நீர் இல்லை என்றால் காற்று இருக்காது. காற்று இல்லையென்றால் வெளிச்சம் இருக்காது. வெளிச்சம் இல்லை எனில் மழை இருக்காது. மழை இல்லையெனில் மானுடம் தழைக்காது.

மானுட சொர்க்கங்கள் மழையால் சொட்டப்படுகின்றன

"அந்தி மழை பொழிகிறது.......ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது........" எத்தனை அற்புதமான ஆலாபனை.

உன் முகம் என்பது இங்கே காதலி முகமாகலாம். அம்மாவின் முகமாகலாம். அப்பாவின்... தங்கையின்.....மகனின்....மகளின்... தோழனின்......தோழியின்...... உறவுகளின்.... உயிர்களின்....முகமாகலாம். முகங்களின் மலர்ச்சி மழையாலே சாத்தியம். மழை நாளில் மழைக்குள் காலாற நடந்து பாருங்கள். உடலுக்குள் உயிர் எங்கிருக்கிறது என்று கண்டு பிடித்து விடலாம். வீதி நனைக்கத்தான் தெரியும்...மழைக்கு, சாதி நனைக்க தெரியாது.

மழை பெய்ய வேண்டுமானால் காற்று மாசு படக்கூடாது. அதற்கு மரம் வேண்டும். மனிதம் வேண்டும். ஆசை இருக்கும் வரை புத்தனும் வாழ்ந்திருந்தான். பேராசை வந்த போதுதான் அவனும் மாண்டான். தேவைக்கு வாழும் போது மரமும் இருக்கும் மழையும் இருக்கும். மழையே ஆதி.

"மழைத் துளி என்ன தவம்தான் செய்ததோ... மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே..." என்ற கவிஞனின் வரியில் துளியாவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் ஆப்பிள் நிலையின் தவம் கலைந்த மானுடத்தினால்.

மழையின் மறுபக்கம் சீற்றம் நிறைந்தவை. குடைகள் அற்றவை. கொட்டும் மற்றவை.

நெருப்பில்லாமல் புகையுமா...? இல்லாமலும் புகையும் அருவியின் வீழ்ச்சி போலத்தான் மழையின் மறுமுனை......துளிகளின் விழிகள் கூர் கொண்டவை.

முன்னொரு காலத்தில் மழை கொட்டியது. இப்போதெல்லாம் மழை கொட்டுகிறது. மழை பெய்யும் காலத்தில் குளிர் அடிக்கிறது. குளிர் அடிக்கும் காலத்தில் வெயில் அடிக்கிறது. வெயில் அடிக்கும் காலத்தில் பனி கொட்டுகிறது. காலநிலை பருவமாற்றங்கள் தான்தோன்றித்தனமாக இருந்த காலத்தில் அதனதன் போக்கில் கச்சிதமாக இருந்தன. மானுடம் ஓங்க ஓங்க இயற்கை அழியத் துவங்கி விட்டது. மழை குடை நனைக்க எப்போதாவது வருகிறது. அல்லது குடை உடைக்க எப்போதும் வருகிறது. மனநிலை பாதிக்கப்பட்ட மனதின் பித்து நிலை பிதற்று நிலை போலத்தான், தேங்கி கொண்ட மழையும் கொட்டித் தீர்க்கிறது.....அல்லது கொட்டாமல் தீர்த்துக் கட்டுகிறது.

"நேரம் காலம் தெரியாமல் இப்படி மழை பெஞ்சா எப்படி பொழைக்கிறது" என்ற வார்த்தைகள் மழைக்கு வலிக்கிறது என்னவோ எனக்கு வலிக்கிறது. மழையை சாமியாக பார்த்த காலம் போய், சாத்தனாய் பார்க்கும் காலத்தில் இருப்பது கொடுமையிலும் கொடுமை. இரண்டு நாட்கள் தொடர்ந்து மழை வந்து விட்டாலே... மனதுக்குள் இனம் புரியாத பயம் தொற்றிக் கொள்ளத் தொடங்கி விடுகிறது. நீருக்கு ஞாபக சக்தி அதிகம். எப்போது எங்கு வர வேண்டுமோ.. எங்கு வந்து தங்குமோ அங்கு என்றைக்கு இருந்தாலும் வந்தே தீரும். சில சூழ்நிலைகளில் அது வராமல் இருக்கும் காலகட்டத்தில் அந்த இடம் ஏரிக்கான இடமோ....... குளத்துக்கான இடமோ............. தாழ்வான பகுதியோ........... அதை அப்படியே விட்டு விட வேண்டுமே தவிர அங்கு பிளாட் போட்டு விற்க கூடாது. அதையும் கம்மி விலை என்று லோன் போட்டு வாங்கவும் கூடாது. மழை வந்து அழித்த இடமெல்லாம் மழைக்கு சொந்தமானவை. அங்கே மானுடம் அத்துமீறி நுழைந்ததன் விளைவே இன்று மழையைக் கண்டவுடன் மனதுக்குள் வரும் பேரச்சம்.

மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கை.. மழை வந்தால் நீர் வெளியேற நடவடிக்கை... சாலை சீரமைப்பு...... தூர்வாரும் முன்னெடுப்பு.......பாலம் கட்டுதல்.....அணை கட்டி நீரை பிரித்தெடுத்தல்.. நீரை கையாளும் முறை என்று ஒரு வெங்காயமும் செய்யாமல் மழையை திட்டுவது மல்லாக்க படுத்துக் கொண்டு மூத்திரம் போவது போலதான். ஆயிரம் ரூபாயை வாங்கி கொண்டு ஓட்டை விற்றால் மழைக்கு பயந்து சாகத்தான் வேண்டும். மானத்தை விற்பது போல மழையைக் காவு கொடுப்பது. மழைக்குக் காவு கொடுப்பது. வீட்டையும் நாட்டையும் நாம் தான் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு முகப்புத்தகம் தாண்டியும் நாம் களம் இறங்க வேண்டும்.

வாசலை பெருக்குவது போல புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும் தலைவர்கள் மலத்தை அள்ளுவது போல போஸ் கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம். அப்படித்தான் இருக்கிறது... மழையில் கப்பல் விட்டு விளையாடிய காலம் போய் மழையே கவிழும் இந்தக் காலம்.

நான் கண்ட மழையின் சாரல்.. என் ஜன்னல் தாண்டும் என் வெளி என்று என் சாரம்... எல்லாம் கலந்து யோசிக்கையில்.... வாசிக்கையில்.... மழை என்பது பெரும் வரம் என்பதில் துளியும் ஐயமில்லை. வரத்தை சாபமாக்கி வானத்தை யாகமாக்கி வாழ்க்கையை யாசகமாக்கி விட்ட நாம் தான் தண்டிக்கப் படவேண்டியவர்கள். நாம் என்பது ஓட்டு போட்டவனையும் சேரும். ஓட்டு வாங்கியவனையும் சேரும். கள்ள ஓட்டு போட்டவனையும் சாரும். ஓட்டே போடாமல் டிவி பார்த்துக் கொண்டு கிடந்தவனையும் சாரும். பார்த்து பார்த்து இயற்கை கட்டிய மானுடம் சரியத் துவங்கி வெகு காலமாகிவிட்டது.

நோவாவின் படகு இன்னொரு முறை கிடைக்கும் என்று உறுதியாக கூற இயலாது.

முன்னொரு காலத்தில் கொட்டிய மழை
இன்றெல்லாம் கொட்டுகிறது
காயம் மழைக்கும்தான்.

கசடுகளாலும்.....தூர் வாரப்படாமலும்....
கெட்டு பட்டுக்கிடப்பது ஆற்று படுகைகள் மட்டும் இல்லை.
நம் மூளைகளும்தான்.

மாற்றி மாற்றி குற்றம் சொல்லிக் கொண்டே செத்து போக துணிந்து விட்ட நாம்தாம் மழையை கெடுத்த கயவர்கள்.

மழை சந்தோசம் என்பது போய் மழை பயம் என்ற நிலை மானுட வீழ்ச்சி. மழைக்கு வானம் பார்த்த விவசாயி நிலைகெட்ட தொடர் மழையால் தலை கவிழ்ந்தே கிடக்கிறான். உச்சத்தில் உத்திரம் தலை காக்கும் என்பது அவனின் வாக்கு. எல்லாம் சரியாக பூமி உள்ள காலம் வரை பூமியில் மழை இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே வழி. அதுவும் சீரான இடைவெளியில் தேவைக்கு வேண்டும் என்பதுதான் சிறந்த வழி. அதை குழப்பி விட்ட மனிதம் குகை தாண்டி வந்து விட்ட போதிலும் வேட்டை மனதை கை விடாத கார்ப்பரேட்காரனாய் உருவம் எடுத்திருப்பது வேதனையும் வேதனை சார்ந்த காலம். வழக்கமாய் இருக்கும் காலம் தாண்டி இன்னொரு காலம் ஒன்று முளைத்திருக்கிறது. அது நவம்பர் டிசம்பர் பேய் மழைக்காலம். அது ஒரு போதும் மனிதனுக்கு அமைதியைத் தருவதில்லை. நதி நீர் இணைப்பு சாத்தியம் எனில் கொஞ்சம் தப்பித்துக் கொள்ள வாய்ப்பு உண்டு. ஏரிக்குள் வீடுகள் இருக்கும்வரை அடுத்த வருடமும் மழை கொலைதான் செய்யும்.

இல்லை என்றபோது தான் இருப்பதை நோக்கி நகரும், மனதின் மாயம். அது இங்கேயும் நிகழக்கடவது

- கவிஜி

Pin It