ஆர்.எஸ்.எஸ். சாகாவில் பயிற்சி பெற்ற நீதிபதிகளும், பார்ப்பனியத்துக்குத் தங்களை ஒப்புக்கொடுத்த நீதிபதிகளும் மோடி அரசு பதவியேற்றதில் இருந்து வெளிப்படையாக வெளியே வந்து, தங்களது அரசியல் அரிப்பை தீர்த்துக் கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். இந்துத்துவ செயல்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஏற்ற அடிப்படைகளை அவர்கள் திட்டமிட்டு உருவாக்கி வருகின்றார்கள். அரசியல் சட்டம் வழங்கியுள்ள வரம்பற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, என்ன வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம் என்று அவர்கள் ஒரு முடிவோடு, தங்கள் முன் வரும் வழக்குகளைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். இன்னும் சில நீதிபதிகள் பினாமி பெயரில் வழக்கு தொடர வைத்து, அந்த வழக்கை தங்கள் அமர்வில் வரும்படி செய்துகொண்டு திட்டமிட்ட தங்களது சதிவேலையை அரங்கேற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். நாம் மாட்டிறைச்சி விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை பார்த்தோம் என்றால், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கும் வழக்குத் தொடர்ந்தவர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை கண்டுகொள்ள முடியும். வழக்குத் தொடர்ந்தவர்களும், தீர்ப்பு வழங்கியவர்களும் பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ். சார்பு உள்ளவர்களாகவே இருப்பார்கள்.

madurai High Court 560

ஆர்.எஸ்.எஸ்- பிஜேபி கும்பல் மற்ற எந்த ஒரு வழிமுறையைப் பயன்படுத்தி, தங்களது பார்ப்பனிய கருத்தியலை நிலை நிறுத்துவதை விடவும், நீதிமன்றத்தைப் பயன்படுத்தி அதைச் செய்வதை மிக சுலபமான காரியமாக கருதுகின்றது. இதற்கு நீதித் துறையில் பெருமளவில் இருக்கும் பார்ப்பன நீதிபதிகளும் ஒரு காரணம். நூற்றுக்கு தொன்னூற்று ஒன்பது சத பார்ப்பன நீதிபதிகள் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை சுவீகரித்துக் கொண்டவர்கள் தான். அப்படிப்பட்டவர்கள் முன் வரும் வழக்குகளில் தீர்ப்பு வழங்கும்போது, அதில் ஏதாவது மனுநீதியை நுழைக்க முடியுமா, பார்ப்பனிய கருத்தியலுக்குச் சட்டவடிவம் கொடுக்க முடியுமா என்றுதான் பார்ப்பார்கள். தீர்ப்புகள் 97 சதவீத மக்களை 3 சதவீத பார்ப்பன கும்பலுக்கு அடிமைப்படுத்தும் கருத்தியலை ஆதரிப்பதாகவே பெரும்பாலும் பார்ப்பன, பார்ப்பன அடிவருடி நீதிபதிகளால் வழங்கப்படுகின்றது.

மதுரை உயர்நீதிமன்றம் தற்போது நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் திறக்க அனுமதி வழங்கியுள்ளதையும் நாம் அந்தக் கண்ணோட்டத்தில் இருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த ஜெயக்குமார் தாமஸ் என்ற நபர் தமிழகத்தில் நவோயதா பள்ளிகளை திறக்க உத்திரவிட வேண்டும் என்று தொடுத்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதி மன்ற நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் நவோதயா பள்ளிகளைத் திறக்க அனுமதித்து உத்திரவிட்டுள்ளனர். வழக்கை தொடுத்தவரின் நோக்கமும், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளின் நோக்கமும் தமிழ்நாட்டில் இந்தியைத் திணிப்பதை வெளிப்படையாகக் கொண்டவை என்பதை அறிய நாம் பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் வெளிப்படையாக இந்தித் திணிப்பு என்பதை செய்ய பயந்துகொண்டு தமிழக கிராமப்புற மாணவர்களின் நலன், ஏழை மாணவர்களின் நலனுக்கானது என்ற போர்வையில் இது செயல்படுத்தப்பட்டுள்ளது.

உண்மையிலேயே இவர்களுக்குக் கிராமப்புற மாணவர்கள் மீதும், ஏழை மாணவர்கள் மீதும் அக்கறை இருக்குமானால் தமிழக அரசு கிராமப்புற பள்ளிகளில் அடிப்படை கட்டுமானங்களை சரி செய்யச் சொல்லியும், ஆசிரியர்களை நியமிக்கச் சொல்லியும் கேட்டிருக்கலாம். அதைவிட்டுவிட்டு நவோதயா பள்ளிகள் திறந்து அதன் மூலம் தரமான கல்வி கிடைக்க வழி செய்யச் சொல்லி கேட்பதில் இருந்தே வழக்குத் தொடுத்தவரின் உள்நோக்கம் இந்தியைத் திணிப்பதுதான் என்று தெரிகின்றது. நீதிபதிகளும் அதைப் பற்றி எந்தக் கவலையையும் இன்றி நவோதயா பள்ளிகளைத் திறக்க அனுமதி கொடுத்து மறைமுகமாக தமிழகத்தில் இந்தியைத் திணிக்க உதவியுள்ளனர்.

நவோதயா பள்ளிகள் இந்தியாவில் 576 மாவட்டங்களில் 598 இடங்களில் செயல்பட்டு வந்தாலும் தமிழ்நாட்டில் மட்டும் செயல்படுத்த முடியாமல் இருந்தது. நவோதயா பள்ளிகளில் மும்மொழிக்கொள்கை கடைபிடிக்கப்படுவதாலும், இந்தியைக் கட்டாயமாக திணிப்பதாலும் அதைத் தமிழக அரசு எதிர்த்து வந்தது. திமுக, அதிமுக இரண்டுமே தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க அனுமதி மறுத்தே வந்தன. ஆனால் இன்று பிஜேபியின் பினாமியான எடப்பாடி அரசு நீதிமன்றத்தில் வலுவான வாதங்களை வைக்காமல் ஏனோ தானோ என்று வழக்காடியதால் நீதிபதிகள் அதைச் சாதகமாக எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் திறக்க அனுமதி அளித்துள்ளனர்.

ஏற்கெனவே 2012 ஆம் ஆண்டு அதிமுக அரசு தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.சி பள்ளிகளில் தமிழை கட்டாயமாகக் கற்பிக்க வேண்டும் என்று உத்திரவிட்டது. ஆனால் இந்த உத்திரவில் இருந்து கேந்திரிய வித்யாலயா, சைனிக் பள்ளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தப் பள்ளிகளில் தமிழில் படிக்காமலேயே கல்வி கற்க முடியும் என்ற நிலையைச் சட்டப்படியே ஜெயலலிதா ஏற்படுத்தினார். ஆனால் கர்நாடகாவில் கேந்திரிய வித்யாலயா, நவோதையா, சைனிக் பள்ளிகள் என எதில் பயின்றாலும் கன்னட மொழியை கற்காமல் கல்வி கற்க முடியாது என்ற நிலையை அம்மாநில அரசு ஏற்படுத்தி இருக்கின்றது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒருவன் தமிழே படிக்காமல் கல்வி கற்க முடியும் என்ற நிலை உள்ளது.

இப்போது உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள ஜவகர் நவோதயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கூட தேசிய அளவில் தகுதித்தேர்வு நடத்தியே சேர்க்கப்படுகின்றார்கள். அப்படி இருக்கும் போது அதில் எப்படி கிராமப்புற மாணவர்களும், ஏழை மாணவர்களும் சேர முடியும் என்பது பெரிய கேள்வியாகும். ஏற்கெனவே தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராடிக்கொண்டு இருக்கும் போதும், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், அனைவருக்குமான பொதுக்கல்வியை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பட்டுவரும் சூழ்நிலையிலும், அதைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கல்விச் சூழலுக்கு ஏற்ப என்ன கற்பிக்க வேண்டும் என்பதை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டுமே ஒழிய அதை வடநாட்டு கும்பல் முடிவு செய்ய முடியாது.

தமிழ்நாட்டில் இந்தியைத் திணித்துக் கொண்டு இருக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளையும், சைனிக் பள்ளிகளையும், சி.பி.எஸ்.சி பள்ளிகளையும் இன்னும் திருட்டுத்தனமாக மாநில அரசு பாடத்திட்டதை வைத்துக் கொண்டே இந்தியை கற்பித்துக் கொண்டு இருக்கும் தனியார் பள்ளிகளையும் ஒழித்துக் கட்டினால்தான் தமிழையும், தமிழரின் தன்மானத்தையும், சுயமரியாதையையும் காப்பாற்ற முடியும். இந்தி எந்த வடிவத்தில் தமிழ்நாட்டில் திணிக்கப்பட்டாலும் அதை ஒழித்துக் கட்ட வேண்டும்.

பெரியார் அவர்கள் தாம் வாழ்நாள் முழுவதும் இந்தி தமிழ்நாட்டில் திணிக்கப்படுவதற்கு எதிராக பெரும் போராட்டங்களை நடத்தியவர். அதன் மூலம் வடநாட்டு பார்ப்பனக் கும்பலும், இந்து மதவெறி சக்திகளும் தமிழகத்தில் தலை எடுக்க முடியாமல் செய்தவர். இன்றும் தமிழ்நாட்டில் வடநாட்டு ஆர்.எஸ்.எஸ் காலிகளின் ஜம்பம் எடுபடாமல் இருப்பதற்குக் காரணம் மேற்படி தமிழ்நாட்டு மக்களுக்கு இந்தி தெரியாது என்பதுதான். ஒருவேளை இந்தி தெரிந்திருந்தால் இந்நேரம் மோடியும், அமித்ஷாவும் தமிழ்நாட்டை குட்டிச்சுவராக மாற்றியிருப்பார்கள். இதைக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் பார்ப்பன கும்பலும், அவர்களுக்கு சேவை செய்யும் சூத்திரக் கும்பலும் பள்ளிகூடங்களில் இந்தியைத் திணிப்பதன் மூலம் இந்தி தெரிந்த ஒரு தலைமுறையை உருவாக்கி அவர்கள் மூலம் இந்துத்துவ செயல்திட்டத்தை கொண்டு வர திட்டம் தீட்டுகின்றது. அதன் ஒருபகுதியாகத்தான் தற்போது இனத் துரோக நீதிபதிகளால் தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியை எந்த வகையில் தமிழக பள்ளிகளில் கற்பிக்கப்படுவதையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியை கற்பதால் ஒரு ஐந்து பைசாவுக்குக் கூட பிரயோசனம் இல்லை என்பதுதான் உண்மை. பெரியார் அவர்கள் சொன்னது போல இந்தியைப் படித்தால் இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் தான் படிக்க முடியுமே ஒழிய உலகில் உள்ள வேறு எந்த அறிவையும் கற்றுக் கொள்ள முடியாது. வேதியியல், இயற்பியல், பொறியியல், மருத்துவம், என அனைத்துமே ஆங்கிலத்தில்தான் உள்ளது. இந்தியில் எந்தக் கருமமும் கிடையாது. அதனால்தான் பெரியார் அதை லம்பாடி மொழி என்றார். இந்தியைக் கற்பது தமிழர்களை இழி நிலைக்கு இட்டுச்செல்லும் என்றார்.

பெரியாரின் பெயரைச் சொல்லி இன்று கல்லா கட்டிக்கொண்டு இருக்கும் துரோகிகள், அந்த லம்பாடி மொழியில் கல்வி கற்பிக்கும் பள்ளிகளை தமிழ்நாட்டில் திறக்க அனுமதி கொடுப்பது அவர்கள் தன்மானத்தையும், சுயமரியாதையையும் இழந்து இழி நிலையை அடைந்துவிட்டார்கள் என்பதைத்தான் காட்டுகின்றது. தமிழ்நாட்டில் உள்ள முற்போக்கு இயக்கங்கள் அனைத்தும் ஓர் அணியில் திரண்டு இந்த ஜவகர் நவோதயா பள்ளிக்கு எதிராகப் போராட வேண்டும். அது மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் இந்தியை வலுக்கட்டாயமாக கற்பித்துவரும் சி.பி.எஸ்.சி, கேந்திர வித்தியாலயா, சைனிக் பள்ளிகள் இன்னும் மாநில பாடத்திட்டத்திற்கு அனுமதி வாங்கிவிட்டு திருட்டுத்தனமாக இந்தியை கற்பித்துவரும் மானங்கெட்ட தனியார் பள்ளிகளுக்கு எதிராகவும் போராட வேண்டும். இப்படியே விட்டால் தமிழ்நாட்டை இன்னொரு உ.பியாகவோ, மகாராஷ்டிராவாகவோ இல்லை குஜராத்தாகவோ பார்ப்பன அடிவருடி நீதிபதிகள் மாற்றி விடுவார்கள்.

இந்தியைத் திணிப்பதன் வாயிலாக பார்ப்பனியத்தை இன்னும் தீவிரமாக தமிழக மக்கள் மீது திணிக்கவும், அவர்களை சுயமரியாதை அற்ற பிண்டங்களாக, பார்ப்பானுக்கு கூழைக்கும்பிடு போடும் அடிமைகளாக மாற்ற ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் முயலுகின்றது என்பதை தமிழக மக்களுக்கு உணர்த்தி 1938, 1952, 1963 இல் நடந்தது போன்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைக் கட்டமைத்து நடத்தினால் தான் தமிழ்நாட்டில் இருந்து பார்ப்பன லம்பாடி மொழியான இந்தியை நாம் விரட்டியடிக்க முடியும். அத்தோடு சேர்ந்து இந்தியை திணிக்க முயலும் இன துரோகிகளுக்கும் புத்திபுகட்ட முடியும்.

- செ.கார்கி

Pin It