art nagarajanஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 -ம் நாள் மொழிப்போர் தியாகிகளைப் போற்றும் வீரவணக்க நாளாக திராவிட முன்னேற்ற கழகத்தால் அனுசரிக்கப்படுகிறது.

1965ஆம் ஆண்டு ஜனவரி 25 -ஆம் நாள் ஒன்றிய அரசின் கட்டாய இந்தி மொழித்திணிப்பைக் கண்டித்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கியது.

தமிழகத்தில் தொடங்கிய மொழிப் போராட்டத்தில் இளைஞர்கள் பலர் தங்கள் உடலில் தீ வைத்துக் கொண்டு மாய்த்துக் கொண்டனர்.தொடர்ந்து ஐம்பத்தைந்து நாட்கள் தொடர்ந்து நடந்த இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் அரசின் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மாணவர்களின் தீவிரமான போராட்டத்தால் இந்தி மொழித் திணிப்பை ஒன்றிய அரசு கைவிட்டது. 1938ம் ஆண்டு தந்தை பெரியாரால் தொடக்கி வைக்கப்பட்டு ஏறக்குறைய 85 ஆண்டுகளாக, பலப்பல கட்டங்களாக இன்று வரை நீடித்துக் கொண்டே வருகிறது மொழிப்போர்!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகளின் எண்ணிக்கை வெறும் இருபத்திரண்டு மட்டுமே! இந்த இருபத்திரண்டு மொழிகளைத்தான் ஏறத்தாழ 90 சதவீதம் பேர் பேசுகின்றனர்.

பிரிட்டிஷ் இந்தியாவில் முதன்முதலாக இந்தியா முழுக்க இந்தியைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்ட காந்தி, இந்தி மட்டுமே இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கவேண்டும் என்றும், இந்தியர்கள் அனைவரும் ஒரே இந்திய மொழியை பேசுவதுதான் இந்தியாவின் சுயமரியாதை ஆகும் என்றார்.

1937 பிப்ரவரியில் நடந்த இந்தியத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று 1937 ஜூலை 15 அன்று சென்னை மாகாணத்திற்கு (பிரீமியர்) முதல்வரான ராஜகோபாலாச்சாரி, 1938 - 39ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சென்னை மாகாணத்தில் நூற்றி இருபத்தைந்து உயர்நிலைப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமொழியாகப் பயிற்றுவிக்கப்படும் என்று அறிவித்து, 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் நாள் சென்னை மாகாண அரசின் உத்தரவாகப் பிறப்பித்தார் அவர்.

அதனைத் தொடர்ந்து 1938 மே 15ஆம் நாள் குடிஅரசு ஏட்டில் "எச்சரிக்கை கலந்த கோரிக்கை அறிவிப்பு" என்று ஒரு தலையங்கத்தைத் தந்தை பெரியார் எழுதினார்.

1938 ஆகஸ்ட் ஒன்றாம் நாள் இந்தி எதிர்ப்பு நாள் "நடைபயணம்" அனுசரிக்கப்பட்டது திருச்சியிலிருந்து நூறு பேர் கொண்ட ஒரு பெரும்படை சென்னை நோக்கிப் புறப்பட்டது. அதில் திராவிட இயக்கத் தலைவர்கள் பட்டுக்கோட்டை அழகிரியின் தலைமையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மொத்தம் 42 நாட்கள் நீடித்த அந்தப் பயணம் செப்டம்பர் 11, 1937 அன்று சென்னை நகரை வந்தடைந்தது.

சென்னை கடற்கரையில் நடைபயணப் பேரணியை வரவேற்பதற்கு மட்டும் சுமார் 70,000 பேர் திரண்டிருந்தனர். இந்தி எதிர்ப்புநாள் நடைபயணம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திருவல்லிக்கேணி கடற்கரையில் நடந்த பாராட்டுவிழா பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார், மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், நீதிக்கட்சித் தலைவர் பி.டி. ராஜன், சௌந்தரபாண்டியன், சி.என்.அண்ணாதுரைஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதன் தொடர்ச்சியாக 1938 நவம்பர் 13ஆம் நாள் சென்னை ஒற்றைவாடை அரங்கில் பெண்கள் மாநாடு மறைமலையடிகளின் மகள் நீலாம்பிகை அவர்களின் தலைமையில் நடந்தது. இந்த மாநாட்டில் தந்தை பெரியார் சிறப்புரையாற்றி இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பெண்களை அழைத்தார்! மூவாலூர் ராமாமிர்தம் அம்மாள், டாக்டர் தர்மாம்பாள், அலர்மேலு மங்கைத் தாயாரம்மாள், மஞ்சுளாபாய் சண்முகம், NVN.புவனேஸ்வரி, பட்டம்மாள், சீத்தம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தந்தை பெரியார் அவர்கள் தானே வழக்காடி, சிறைத்தண்டனை பெற்றார்.

இந்தப் போராட்டத்தில் கைதான சென்னை பெரம்பூரைச் சேர்ந்த "நடராஜன்" 1939 சனவரி 15 ஆம் நாள் சிறையிலேயே மரணமடைந்தார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த "தாளமுத்து" தஞ்சைச் சிறைச்சாலையில் கொடுமைகளால் 1939 மார்ச் 12ம் நாள் மரணமடைந்தார்.

பின்னாளில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பின்பு மொழிப்போர் தியாகிகளான "தாளமுத்து - நடராசன்" பெயரில் சென்னை எழும்பூர் தமிழ்நாடு அரசு அலுவலக மாளிகைக்கு "தாளமுத்து நடராசன் மாளிகை" என தி.மு.க. அரசு பெயர் சூட்டி மகிழ்ந்தது.

1952 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் அரசு மீண்டும் இந்தியைத் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. 1952 ஜூலை 27இல் விடுதலை நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் "இந்தி நம் கழுத்துக்குச் சுருக்கு" என்ற தலைப்பில் தலையங்கம் எழுதினார்.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் ரயில் நிலையங்களில், மற்றும் பெயர்ப்பலகைகளில், உள்ள இந்தி எழுத்துகளைத் தார்பூசி அழிக்கும் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தார்.

இதன் நீட்சியாக 1953 ஆகஸ்டு 14ஆம் தேதி டால்மியாபுரம் என்ற பெயரை "கல்லக்குடி" என பெயர் மாற்றம் செய்யும் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்திற்குக் கலைஞர் கருணாநிதி தலைமை தாங்கினார். பின்னாளில் கலைஞர் கருணாநிதி முதல்வரானபின் டால்மியா புரத்தைக் கல்லக்குடி - பழங்காநத்தம் என்று பெயர் மாற்றினார்.

1964 ம் ஆண்டு சனவரி 25 ஆம் தேதி திருச்சி ரயில் நிலையத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து கீழப்பழுவூர் சின்னச்சாமி உடலில் தீவைத்துக் கொண்டு இந்தி ஒழிக, தமிழ் வாழ்க என்று கூறிக்கொண்டே உயிர் துறந்தார். இந்தித் திணிப்பைக் கண்டித்து நான்காம் கட்ட மொழிப்போரில் முதல்களப்பலியாக மாறியிருந்தார் சின்னச்சாமி.

1978 மார்ச் 12ஆம் தேதி இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்கள் இந்தி அலுவல் மொழியாக்கப்படுவது அவசியமான ஒன்று என்றார்.

பின்னர் 1986 இல் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது "இந்தி வாரம்" கொண்டாடப்பட்டது. அதை எதிர்த்து 1986 நவம்பர் 17ஆம்தேதி அரசியல் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தைத் திமுக தொடங்கியது. சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் பேராசிரியர் அன்பழகன் உட்பட ஏழு பேரைப் பதவி நீக்கம் செய்தார் அதிமுக ஆட்சியின் சபாநாயகர் பி. எச். பாண்டியன்.

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் 1938 இல் தொடங்கினாலும் 1965 இல் நடந்த போராட்டம் சர்வதேச கவனத்தை ஈர்த்தது.

மொழிப்போர் என்பது இந்தி மொழியைப் பேசுகின்ற வட இந்தியர்களுக்கு எதிராகத் தமிழர்கள் தொடுத்த ஆயுதப்போர் அன்று! இந்திய அரசுக்கு எதிராகத் தமிழக மக்கள் தொடுத்த யுத்தமும் அன்று! அது எங்கள் உரிமைப்போர்! போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

- ஆர்ட் நாகராஜன்

Pin It