பள்ளியில் படிக்கும் போது கிரிக்கெட் கொஞ்சமாக ஆர்வம். இந்தியா எப்போதெல்லாம் விளையாடுகிறதோ அப்போதெல்லாம் பார்க்கும் அளவுக்கு மட்டுமான ஆர்வம். சச்சின் அடித்த சிக்சர் பற்றி கணக்கெடுத்து அடுத்த நாள் பள்ளியில் ‘செம ஷாட்ல’ அப்டினு பேசுவதில் ஒரு அலாதி இன்பம்!..இந்தியா பாகிஸ்தான் மேட்ச்க்கு மட்டும் குரூப் சேர்ந்து இந்தியா சுழட்டியடிக்கும் போது ஆரவாரத்துடனும் பாகிஸ்தான் கொஞ்சம் முன்னேறுனதும் கண்டபடி திட்டுறதும் எனச் சென்ற பள்ளி வாழ்க்கையின் கிரிக்கெட் நினைவுகள் கல்லூரியில் தலைகீழ்..

கல்லூரி அதிலும் ஹாஸ்டல் வாழ்க்கை! முதல் ஆளாக ஹாஸ்டலுக்குள் நுழைந்ததால் துண்டு போட்டு ஒரு இடத்தை புடிச்சு ஆள் வர வர கோஷ்டி சேந்தாச்சு. கல்லூரி முதலாண்டு படிப்பவர்களுக்கு மட்டும் தனி விடுதி கட்டிடம்! முஸ்லிம் பசங்க மட்டும் தனியாக ஐந்து பேர் ஒரு ரூம் என எனது ரூமிற்கு அருகில் எடுத்து கொண்டார்கள். என் காது பட எதுக்கு டா உங்காளுக மட்டும் தனி ரூம் எடுத்துட்டு உள்ள ரகசியமாக என்னடா பண்றீங்க என கலாய்த்த சக நண்பர்களும் அதிகம் உண்டு. கேலி பேசும் நண்பர்களிடத்தில், ‘புகைத்தலும் குடித்தலும் இருக்கிற இத்தன ரூம்கள்ல எங்களுக்குனு தனி ரூம் அவசியம் நாங்க அஞ்சு வேலை தொழுகனும் சுத்தமா இருந்தா தான் தொழ முடியும் அதனால தான் எங்களுக்கு தனி ரூம் அவசியமாகுதுனு’ என சொல்ல நினைத்தாலும் அந்த நிமிடத்தில் அதையெல்லாம் பொறுமையா பேசும் அளவுக்கு எனக்கும் அறிவு இல்லை! பசங்களுக்கும் பொறுமை இல்லை.

கல்லூரிக்குள் நுழைந்தவுடன் எல்லா மதமாச்சர்யங்களும் உடைந்து போகும் நிமிடங்கள் ஆரம்பமாகும். அந்த இடைவெளிகளில் எப்போதாவது மதம் ஒரு பிரச்சனையாக பார்க்கப்படும் தருணம் மிக மோசமானதாக அமையும்.

விடுதியில் பெரிய டைனிங் ஹால் இருக்கும். ஒட்டுமொத்த கல்லூரி சக விடுதி மானவர்கள் உட்கார்ந்து கிரிக்கெட் பார்க்கும் இடமும் இதே! கல்லூரியில் கிரிக்கெட் ஆர்வம் சுத்தமாக இல்லையென்பதால் மேட்ச் நடக்கும் சமயங்களில் இந்தியா அடிக்கும் பவுண்டரிக்கெல்லாம் கட்டிடம் அதிரும் ஒலியை மட்டும் ரூமிலிருந்து அனுபவித்ததுண்டு.

சக முஸ்லிம் தோழன் ஒருவன் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் தீவிர ரசிகன். பாகிஸ்தான் மேட்ச் காலங்களில் அவனது வாட்சாப் படத்தில் பாகிஸ்தான் வீரர்கள் தான் அலங்கரிப்பார்கள். இந்தியா- பாகிஸ்தான் மேட்ச் காலங்களில் முழு கல்லூரி பட்டாளமே குதூகூலத்துடன் பார்த்துக் கொண்டிருக்க பாகிஸ்தான் அடிக்கும் புவுண்டரிக்கும் சிக்சருக்கும் தனி ஒருவனாக கை தட்டும் போது ஒட்டுமொத்த சக மாணவ பார்வை இவன் மீது மட்டும் தான்.

இது போலான சம்பவங்களின் போது தான் எனக்கு பாகிஸ்தான் அணியின் மீதான புரிந்து கொள்ள முடியாத ஆர்வம் ஏற்பட்டது. இருக்கதிலேயே மோசமான ஃபார்மில் இருப்பது என்னவோ பாகிஸ்தான் அணி என்றாலும் காரணமில்லாமல் மற்ற மாணவர்களுக்கு இருக்கும் பாகிஸ்தான் மீதான வெறுப்பு உண்மையில் எனக்கு ஒரு நெருக்கத்தை உணர வைத்தது. என்னையுமறியாமல் இந்த மேட்ச் ஆவது பாகிஸ்தான் ஜெயிச்சிட்டா தான் இவனுக அடங்க்குவானுக அப்டினு நினைத்த நிமிடங்களும் உண்டு.

ஒடு விளையாட்டை இவ்வளவு வன்மமாக பார்க்க முடியும் என்பதே கல்லூரி காலங்களில் தான் தெரிந்தது. அந்த பாகிஸ்தானிய ரசிகனை மட்டும் இதற்காக கடிந்து கொண்ட எனது சக நண்பர்கள் நிறைய… என்னடா அபூ, அவன் பாகிஸ்தானுக்கு இவ்ளோ சப்போர்ட் பண்றான்!! நானும் உங்களில் ஒருவன் காமிச்சுக்கனும்றதுக்காக அவன் அப்படித்தான் விடுடானு சொல்லி சமாளிச்சதும் உண்டு.

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டு ஒரு நாள் பேசும் பொருளாக மட்டும் இருந்து விட்டால் பிரச்சனையில்லை. ஒருவன் பாகிஸ்தான் அணியின் ரசிகன் என்பதற்காகவே பாகிஸ்தான் சிட்டிச்சன் சிப் வாங்கிவிட்டு போ என்று பேசும் ஒவ்வொருவரும் பாசிசவாதிகள் தான்!

ஞாயிறு மதியம் வரை தான் கடை! எல்லாம் முடித்து கிளம்பும் போது, சித்திக்! இன்னைக்கு மேட்ச் யாரு ஜெயிப்பாங்க.. அவரது மொத்த எதிர்பார்ப்பும் நான் முஸ்லிம் என்பதால் நான் பாகிஸ்தானுக்கு ஆதராவாக பேசுவேன் என்பதுதான். எப்பவும் போல இந்தியாவுக்கு ஓட்டு போட்டு கிளம்பிவிட்டேன். நான் நடித்தால் தான் நாளை எனக்கு வியாபாரம்.

கிரிக்கெட் என்ற தொழில்முனைவோர்களின் விளையாட்டில் எனது தேசத்தின் மானம் அடங்கியிருப்பதாக நான் கருதவில்லை. எனது தேசத்தின் பெருமையை காப்பாற்ற சுற்றியுள்ள மனிதத்தை நேசிக்கிறேன். முடிந்தால் அதை செய்வோம்...

- அபூ சித்திக்

Pin It