இந்துஸ்தான் டைம்ஸ் மாவோயிஸ்ட் புரட்சிப் பாடகர் கத்தார் அவர்கள் ஆன்மீகவாதியாக மாறிவிட்டதாக செய்தி வெளியிட்டு இருந்தது. இது எந்த வகையான அதிர்ச்சியையும் நமக்குள் ஏற்படுத்தவில்லை. காரணம் இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு அவர்கள் மார்க்சியம், லெனினியம், மாவோயிசம் என எதைக் கடைபிடிப்பவர்களாக இருந்தாலும், இந்திய சமூகத்தில் பொருள்முதல்வாதம் பற்றிய அவர்களின் கருத்து ஒரே மாதிரியாக இருப்பதால்தான். அவர்களால் இன்னும் இங்கு சோபிக்க முடியாமைக்குக் காரணமாகவும் நாம் இதைத்தான் பார்க்க வேண்டி இருக்கின்றது. இந்திய சமூக அமைப்பு பற்றிய அவர்களின் சரியான புரிதலின்மைதான் அவர்களைத் தொடந்து சாதி ஒழிப்பு, கடவுள் ஒழிப்பு போன்றவற்றை செய்யாமல் தடுத்து வைத்திருக்கின்றது. அதே புரிதலின்மைதான் அவர்களை ஆன்மீகத்தின் பக்கமும், சாதிவெறியர்களின் பக்கமும் சாய்வதற்கு இட்டுச் செல்கின்றது.

gaddar“மதத்தின் துயரம் என்பது ஒரே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடாகவும், அதற்கு எதிரான கண்டனமாகவும் இருக்கிறது. மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஜீவனற்ற நிலைகளின் ஜீவனாகவும் இருக்கின்றது” என்ற மதம் பற்றிய மார்க்சின் அணுகுமுறையைத் தங்கள் பிழைப்புவாதத்திற்குத் தக்கவாறு அவர்கள் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்கள். மதம் என்பது வர்க்க சுரண்டல் நடப்பதையும், சமூகத்தின் சுரண்டப்படும் வர்க்கங்களின் பிரச்சினைகளுக்கான உண்மையான காரணத்தை அறியவிடாமல் அவர்களை ஆசுவாசப்படுத்த உதவும் ஒரு போலியான சாதனமாகவும் உள்ளது என்ற பொருளில் அதைப் புரிந்துகொள்ளாமல் அவர்கள் அதைத் திரித்துப் புரட்டி இந்திய நிலைமைக்குத் தகுந்தவாறு அதைப் பார்ப்பனியத்துக்கு பாதகம் வராத ஒரு கருத்தாக மாற்றினார்கள்.

 28/03/2017 அன்று வெளியான தமிழ் இந்து நாளிதழில் ஆர்.கே.நகர் தொகுதி CPM வேட்பாளர் ஆர்.லோகநாதன் தொகுதியில் வாக்கு சேகரிக்கும்போது தொகுதியில் உள்ள ஒரு பெண் ஒருவர் அவருக்கு ஆரத்தி எடுப்பதைப் போன்றும், ஆராத்தியை அவர் வணங்குவது போன்றும் ஒரு புகைப்படம் வெளியாகி இருந்தது. இது ஒன்றும் புதிதல்ல; பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடுவது, கொழுக்கட்டை கொடுப்பது, ஆயுத பூஜை கொண்டாடுவது, பொறி கொடுப்பது, மேலும் உள்ளூர் கோயில் திருவிழாக்களில் ஆர்வத்துடன் கட்சி இலச்சினை போட்டே பேனர் வைப்பது, மேலும் விழாவை சிறப்பிக்க விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவதுவரை தோழர்கள் எப்போதுமே தமிழ்நாட்டில் பொருள்முதல்வாதத்தைப் பரப்புவதில் முதலிடத்தில் இருப்பவர்கள். முதலாளித்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு போன்றவற்றில் தோழர்கள் காட்டும் அக்கறையில் நூறில் ஒரு பங்கு கூட இது போன்ற பொருள்முதல்வாதக் கருத்துகளுக்கு அவர்கள் கொடுப்பது கிடையாது. விளைவு ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை தொண்டன் அதிமுக தொண்டனைப் போன்றோ, இல்லை பிஜேபி தொண்டனைப் போன்றோ ஆன்மீக செயல்களில் எந்தவித குற்ற உணர்வும் இன்றி பங்கெடுத்துக் கொள்கின்றான். அவனுக்குத் தான் செய்வது கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை சித்தாந்தத்திற்கே வேட்டு வைக்கும் செயல் என்பது தெரிவதில்லை.

 கத்தார் போன்றவர்களை நாம் கம்யூனிஸ்ட் கட்சியில், கம்யூனிசம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கும் தோழர்களுடன் ஒப்பிட முடியாதுதான். எப்படி பெரியாரியலில் கரை கண்ட பெரியார்தாசன் போன்றவர்கள் தன் வாழ்நாளில் கடைசிப் பகுதியில் இஸ்லாத்திற்கு மாறினார்களோ, அதே போலத்தான் நாம் கத்தார் போன்றவர்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆயிரக்கணக்கான மக்களின் அபிமானத்தைப் பெற்ற கத்தார் போன்றவர்கள் பொதுவெளியில் தன்னை ஒரு ஆன்மீகவாதியாக பிரகடனப்படுத்திக் கொள்வதும், அதற்கு அந்தோனியோ கிராம்ஷி போன்றவர்களை மேற்கோள் காட்டுவதும் ஏதோ தன்னளவில் இயல்பாக ஏற்பட்ட வளர்ச்சியின் ஒரு படிநிலை என்று எடுத்துக் கொள்ள இயலாது. ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்சிய - லெனினிய - மாவோ சித்தாந்தத்தில் தோய்ந்த கத்தார் போன்றவர்கள் தன் வாழ்நாளின் இறுதியில் இவ்வளவு எளிமையாக இதுவரை கடைபிடித்து வந்த சித்தாந்தத்திற்கு எதிர்நிலையான சித்தாந்தத்தைத் தழுவுவது என்பதற்குப் பின், நிச்சயமாக மாபெரும் துரோகம் மறைந்திருக்கும். அந்தத் துரோகத்தை வெளிக் கொண்டு வருவதில் தான் இன்னுமொரு கத்தார் உருவாகாமல் நம்மால் தடுக்க முடியும்.

 கத்தார் ஏன் மாறினார்? நமக்கு இன்னும் தெரியாது. அது எந்தக் காரணமாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடாகவோ, இல்லை அவரது அகநிலையில் ஏற்பட்ட சித்தாந்த நெருக்கடியாவோ, இல்லை பொருளாதார நெருக்கடியாகவோ எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அவர் எதற்காக மாறினாலும் அது துரோகமாகவே பார்க்கப்பட வேண்டும். இந்திய சமூக அமைப்பில் ஒருவன் தன்னுடைய ஆன்மீகத் தேவைக்காக இந்துக் கடவுளையும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் மதத்தையும் ஏற்றுக் கொள்வது என்பது ஒரு முஸ்லிம் அல்லாவையும், குரானையும் ஏற்றுக் கொள்வதைப் போன்றோ இல்லை. ஒரு கிருஸ்தவன் ஏசுவையும், பைபிளையும் ஏற்றுக்கொள்வதைப் போன்றோ நம்மால் இயல்பான பிரச்சினைகள் அற்ற ஒன்றாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் கத்தார் தன்னுடைய ஆன்மீக தேவைக்காக தேர்ந்தெடுத்தது இந்து மதத்தை. இத்தனை ஆண்டுகளாக அவர் எதற்காகப் போராடினாரோ அந்த அடிப்படைக் கருத்துக்கே எதிரான ஜனநாயக விரோதமான,  இந்திய சமூகத்தில் புரட்சி ஏற்படாமல் இருப்பதற்கு அடிப்படைக் காரணமான சாதிய சனாதன தர்மத்தை. கத்தாரின் ஆன்மீக சரணாகதி என்பது படிநிலை வரிசையையே தன்னுடைய பாதுகாப்பு அம்சமாகக் கொண்ட பார்ப்பனியத்திற்கு சேவை செய்யும் இழிதன்மை கொண்டது.

 இது எல்லாம் கத்தாருக்குத் தெரியாது என்று நம்மால் சொல்ல முடியாது. நிச்சயம் அவருக்கு நன்றாகவே தெரியும். தன்னுடைய இந்த மாற்றம் புரட்சிகர சக்திகளுக்கு எவ்வளவு பெரிய இழப்பைக் கொண்டுவரும் என்று தெரிந்தேதான் இதை அவர் செய்திருக்கின்றார். கத்தார் மட்டும் அல்ல, பல தோழர்கள் தங்களுடைய பிழைப்புவாதத்திற்காக இது போன்ற வேசித்தனமான செயல்களை தெரிந்தே செய்துவருகின்றார்கள். புரட்சிக்காக எதை வேண்டும் என்றாலும் சமரசம் செய்யலாம் என்று ஆரம்பித்து ஒரு கட்டத்தில் அவர்கள் புரட்சியையே தியாகம் செய்கின்றார்கள். கட்சியின் கடைநிலையில் உள்ள தொண்டன் தவறு செய்யும் போது அவனை சுயவிமர்சனம் செய்துகொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்தும் தலைமைகள் தாங்கள் வேசித்தனமாக நடந்துகொள்ளும் போது மட்டும் அதைத் தொண்டன் கேள்விக்கு உட்படுத்தக்கூடாது என்று நினைக்கின்றன. சாதிக்கு எதிராகவும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் போர்முரசு கொட்டிய கத்தார் இன்று எப்படி கொஞ்சம் கூட சூடு சுரணையில்லாமல் பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டாரோ, அதே போல பார்ப்பனியத்துக்கு மறைமுகமாக சேவை செய்யும் பல கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைகள் இன்னும் பொதுவெளியில் அம்பலப்படாமல் இருக்கின்றன அவ்வளவுதான் வித்தியாசம்.

 “தோழர், சாதி வெறியனை மேடையேற்றுகின்றீர்களே இது தவறில்லையா” என்று கீழ்மட்டத் தொண்டன் கேள்வி கேட்டால் “அப்படி சொல்லாதீங்க தோழர்... அவர் சாதிமீது பற்று கொண்டவர்தான். ஆனால் பார்ப்பனியத்தை எதிர்ப்பவர்” என்று சொல்லும் கேவலமான நிலைமையில்தான் இன்று புரட்சிகர கம்யூனிஸ்ட் என்று தங்களை சொல்லிக் கொள்ளுபவர்களே உள்ளார்கள். அவர்களைப் பொருத்தவரை சாதி வேறு, பார்ப்பனியம் வேறு. சாதிப் பற்று கொண்ட ஒருவனை அவர்களால் பார்ப்பன எதிர்ப்பாளனாக பார்க்க முடிகின்றது என்றால், பிரச்சினை மார்க்சியத்திலோ, இல்லை லெனினியத்திலோ, இல்லை மாவோயிடமோ இல்லை. பிரச்சினை இவர்களின் பிழைப்புவாதத்திலும், சுயநலத்திலும், கட்சியில் இருக்கும் தொண்டனை முட்டாளாகப் பார்க்கும் மேட்டிமைத்தனத்திலும் இருக்கின்றது. இது கூட பரவாயில்லை... சாதிவெறியனை அழைத்துவிட்டு, பேசவைக்காமல் அனுப்பிவிட்டால் அவரின் மனம் புண்படும் என்று சொல்லும் வேசித்தனமான கம்யூனிஸ்ட்கள் கூட தமிழ்நாட்டில் உள்ளார்கள். இது போன்றவர்கள் தான் தீவிரமான பொருள்முதல்வாதத்தை சமரசம் இன்றி முன்னெடுத்த பெரியாரை புரட்சிக்காரர் கிடையாது, அவர் சீர்திருத்தவாதி என்று முத்திரை குத்துபவர்கள். சரி, அந்தக் கருமம் போகட்டும். நாம் பிரச்சினைக்கு வருவோம்.

கத்தார் போன்றவர்கள் இன்று இந்தியாவில் உள்ள அத்தனை கம்யூனிஸ்ட் அணிகளிலும் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். சிலர் வெளிப்படையாக வெளியே வந்து தங்கள் அம்மணத்தை வெளிக்காட்டிக் கொள்கின்றார்கள். இன்னும் சிலர் கூச்சப்பட்டுக் கொண்டு பதுங்கிப் பதுங்கி வாழ்கின்றார்கள். காலம் நிச்சயம் அவர்களையும் வெளிக்கொண்டுவரும் என்று நாம் உறுதியாக நம்பலாம். தங்களை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொண்டு ஆயுத பூஜை கொண்டாடுகின்றவர்களையும், சாதி பார்த்துத் திருமணம் செய்து கொள்பவர்களையும், ஜோசியம் பார்ப்பவர்களையும், ஆன்மீக சாமியார்களைத் தொழுபவர்களையும், வெளியே மார்க்சியம் பேசிவிட்டு வீட்டிலும், அலுவலகத்திலும் சாமி போட்டோவை மாட்டிவைத்து அதற்குப் பூஜை செய்பவர்களையும், வெளியே முதலாளித்துவ பயங்கரவாதத்தை வாய் கிழிய பேசிவிட்டு, தான் நடத்தும் தொழிற் நிறுவனத்தில் தொழிலாளியை அற்பக்கூலிக்கு வேலை வாங்குபவர்களைப் பற்றியும் நாம் பேச ஆரம்பித்தோம் என்றால் கத்தார்கள் வரிசையாக வந்துகொண்டே இருப்பார்கள். இந்திய புரட்சிகர இயக்கத்தை பீடித்த தீராத நோய்கள் இவர்கள். சாமானிய மக்களைக்கூட நம்மால் நேர்மையான மனிதர்களாக வார்த்தெடுக்க முடியும். ஆனால் இது போன்ற 420 கம்யூனிஸ்ட்டுகளை நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது.

- செ.கார்கி

Pin It