திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர் ஃபாரூக்கை துடிதுடிக்க கொன்று போட்டிருக்கின்றார்கள் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள். தோழர் ஃபாரூக் ஒரு இஸ்லாமியராகப் பிறந்தும் தன்னுடைய கொள்கையாக குரானைத் துறந்து, பெரியாரியத்தை ஏற்றுக் கொண்டவர். பேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் தொடர்ச்சியாக கடவுள் நம்பிக்கைக்கு எதிராகவும், மத நம்பிக்கைக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தவர். அவருடைய வாட்ஸ்அப் குரூப்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 400 பேர்வரை இருந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலான நபர்கள் பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு உடையவர்களாய் இருந்துள்ளனர். இது இஸ்லாமிய மத வெறியர்களுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் தனது குழந்தைகள் கையில் ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லை’ என்ற முழக்கம் இருக்கும் பதாகைகளைக் கொடுத்து அதைப் புகைப்படம் எடுத்து பதிவிட்டிருக்கின்றார். தன்னுடைய குழந்தைகளை வருங்காலத்தில் நாத்திகர்களாக வளர்க்கப் போவதாகவும் சபதம் செய்திருக்கின்றார் தோழர் ஃபாரூக் அவர்கள். அதனால் இஸ்லாமிய மத வெறியர்களின் கடும் கண்டனத்துக்கு ஆளாகி இருக்கின்றார். ஆனால் அதைத் தோழர் ஃபாரூக் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்லாமிய மத வெறியர்கள் ஃபாரூக்கை திட்டமிட்டுக் கொலை செய்திருக்கின்றார்கள். மனித உயிர்களை இவ்வளவு மலிவாக நினைத்து அதை அழிக்க முடியும் என்றால், இங்கே எவனும் தலையோடு நடமாட முடியாது.

farook with kidsஇதுவரை கோவை போத்தனூரைச் சேர்ந்த அன்சாத், கூழை சம்சு (எ) சம்சுதீன், சதாம் உசேன் என்ற மூன்றுபேர் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்து இருக்கின்றார்கள். இன்னும் சிலரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் அவர்களும் பிடிபடுவார்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

 ஃபாரூக்கின் கொடூரக் கொலையை அறிந்ததில் இருந்து மனம் நிலைகொள்ளாமல் தவிக்கின்றது. நாத்திகனாக, முற்போக்குவாதியாக இருப்பது இந்தப் பிற்போக்குச் சமூகத்தில் அவ்வளவு பெரிய குற்றமாகக் கருதப்படுகின்றதே! ஃபாரூக் என்ன தவறு செய்தார்? யார் குடியைக் கெடுத்தார்? மசூதியை இடிக்க கடப்பாரையைத் தூக்கிக்கொண்டு போனாரா? இல்லை கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, கருவறுக்கப் போனாரா? கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்ற கோழைகளே, முட்டாள்களே! நிராயுதபாணியாய் வந்த ஃபாரூக்கை கத்தியால் குத்திக் கொல்லத் தூண்டியது உங்களுடைய மதம்தான் என்றால், அது நிச்சயம் கோழைகளின் மதம். பாரூக்கைக் கொன்றால்தான் உங்களது கடவுளைக் காப்பாற்ற முடியும் என்றால், உங்கள் கடவுள் மிகவும் பலவீனமானவர்.

நீங்கள் ஃபாரூக்கைக் கொன்றதன் மூலம் உங்கள் மதம் ஃபாரூக்கின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாதவர்களின் மதம் என்பதை வெளிப்படையாகத் தெளிவாக்கியிருக்கிறீர்கள். ஒரு நபரைக் கொல்ல இத்தனை பேர், அதுவும் மோசடியான முறையில் ஃபாரூக்கை வெளியே வரவழைத்து, மறைந்திருந்து கொன்ற உங்களது வீரம் இழிவானது. அற்பப் பிறவிகளே! ஃபாரூக்கின் குழந்தைகளைப் பார்த்தீர்களா? ஃபாரூக்கை கொல்லும்போது உங்கள் நெஞ்சம் பதறவில்லையா? குற்ற உணர்வுக்கு ஆளாகவில்லையா? அந்த அழகான பிஞ்சு மழலைகளை அநாதை ஆக்கிய அயோக்கியர்களே! உங்கள் கடவுளும், அதன் கொள்கைகளும் அழிந்து போகட்டும்.

 நாடுமுழுவதும் நாத்திகர்களுக்கும், முற்போக்குவாதிகளுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் எதிரான சகிப்புத்தன்மையற்ற போக்கு நிலவி வருகின்றது. இது திட்டமிட்டு கடுங்கோட்பாட்டுவாதிகளால் தங்களுடைய சுயநலத்திற்காக உருவாக்கப்படுகின்றது. கடவுள் எதிர்ப்பு, மத எதிர்ப்பு, சாதி, தீண்டாமை எதிர்ப்பு என்பதெல்லாம இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவரும் ஒன்றுதான். புத்தரும், சித்தர்களும் பேசாத நாத்திகத்தையோ, சாதி எதிர்ப்பையோ இன்று யாரும் புதிதாகப் பேசவில்லை. அன்றும் இதை எல்லாம் பேசியவர்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன, அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். ஆனால் இன்று இந்தியா தன்னை ஒரு மதச் சார்பற்ற நாடாக அரசியல் அமைப்புச் சட்டபடி அறிவித்துக் கொண்டிருக்கின்றது. எனவே இதுபோன்ற சகிப்புத்தன்மையற்ற கொலைச் சம்பவங்கள் நடைபெறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். ஒரு உயிரின் மதிப்பு என்னவென்று தெரியாமல் அவர்களைக் கொன்றுபோடும் மதவாதிகள் எப்படி நேர்மையான மனிதர்களாய் இருக்க முடியும்? நான்காம் தர பொறுக்கிகளாக, ரெளடிகளாகத்தான் இருக்க முடியும்.

நாத்திகர்கள் மனிதர்களை மிகவும் நேசிக்கின்றார்கள். அவர்கள் தான் உண்மையில் ஒவ்வொரு மனிதனின் அறிவு வளர்ச்சிக்காகவும் தங்களை அர்பணித்துக்கொள்கின்றார்கள். எந்த நாத்திகனும் திருடுவதற்கோ, கொள்ளையடிப்பதற்கோ, கொலை செய்வதற்கோ, பாலியல் பலாத்காரம் செய்வதற்கோ மக்களைப் பயிற்றுவிப்பது கிடையாது. தங்களது சொந்த வாழ்க்கையில் ஆயிரம் இழப்புகள் இருந்தாலும், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் மக்கள் பணிக்காக தங்களை முழுவதும் அர்பணித்துக் கொண்டவர்கள். ஆனால் ஆத்திகர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் காலிகள்தான், தினம், தினம் ஆயிரக்கணக்கான கொலைகள் செய்கின்றார்கள், குழந்தைகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுகின்றார்கள், நாட்டு மக்களை சுரண்டுகின்றார்கள், இயற்கை வளங்களைச் சூறையாடுகின்றார்கள், நாட்டை பன்னாட்டு முதலாளிகளுக்குக் கூட்டிக் கொடுகின்றார்கள். அதை எல்லாம் தட்டிக் கேட்கத் துப்பற்ற உங்கள் மதமும், கடவுளும் ஒரு ஏழை பகுத்தறிவுவாதியைக் கொன்றுபோட மட்டும் முதலில் வந்து நிற்கின்றதே. மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படாமல் கேவலம் ஒரு மத நூலின் முட்டாள்தனங்களைக் காப்பாற்ற - உயிர்வாழும் புல்லுறுவிகளான நீங்கள் - இந்த முட்டாள் சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்காக பாடுபட்ட ஃபாரூக்கை கொல்லை என்ன உரிமை உள்ளது?

 தினம் தினம் ஆத்திகர்களின் அனைத்து அட்டகாசங்களையும் கடந்துதானே நாத்திகர்கள் அமைதியாகப் போகின்றார்கள். எந்த நாத்திகனாவது கோயிலில் எதற்காக காதுகிழியும் அளவுக்குப் பக்திபாடல்களைப் போட்டு இப்படி எங்களைத் துன்புறுத்துகின்றீர்கள் என்று சண்டைக்குப் போய் இருக்கின்றார்களா? இல்லை பள்ளிவாசலில் பாங்கு ஒலிக்கும் போது அதைப்போய் விடியற்காலையில் எங்கள் தூக்கத்தை ஏன் கலைக்கின்றீர்கள் என்று அதட்டியதுண்டா? இல்லை அல்லோலூயா சொல்லும் கிருஸ்துவத் தோழர்களிடம் சண்டைக்குப் போனதுண்டா? அனைத்தையும் கடந்து அமைதியாகத் தானே போகின்றோம். எங்கள் விமர்சனங்களை வன்முறை மூலம் அல்லாமல் கருத்தாகத்தானே எடுத்துவைக்கின்றோம்.

 எப்போதாவது எந்த நாத்திகனாவது, முற்போக்குவாதியாவது ஆன்மீகவாதிகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஓடி ஒளிந்திருக்கின்றார்களா? இல்லை கேள்வி கேட்பவரைத் தாக்கியிருக்கின்றார்களா? முதலில் சக மனிதனை, அவனின் உயிரை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள். பிறகு ஈசனையும், ஏசனையும், அல்லாவையும் கும்பிடலாம். கருத்தைக் கருத்தால் எதிர்க்கொள்வதுதான் ஜனநாயகம். எனக்குப் பிடிக்காததை யாராவது பேசினால் நான் கொலை செய்வேன் என்றால் இங்கே எந்த மதத்தைக் கடைபிடிப்பவனும் உயிரோடு இருக்க முடியாது. உங்கள் மதநூல்களும், உங்களது வழிபாடும் உங்களுக்குச் சகிப்புத்தன்மையைச் சொல்லிக் கொடுக்கவில்லை என்றால் உங்களது மத நூல்களையும், அது கற்பிக்கும் கடவுளையும் குப்பைத் தொட்டியில் வீசி எறியுங்கள். சக மனிதனை கொலை செய்யச் சொல்லும் மதம் மயிறுக்குச் சமம்.

 எப்படி இந்து மதத்தில் பார்ப்பனியத்தால் பீடிக்கப்பட்ட அடிப்படைவாதிகள் உள்ளார்களோ அதே போல இஸ்லாத்திலும் மிக அதிகமாகவே உள்ளார்கள். இது பொய்யல்ல... தோழர் ஃபாரூக்கின் கொலையை மட்டும் வைத்துச் சொல்லவும் இல்லை. நானே நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கின்றேன். திருச்சியில் உள்ள ஒரு பிரபல இஸ்லாமியக் கல்லூரியில் நான் இளங்கலை அறிவியல் படித்தேன். அதே கல்லூரி நடத்தும் விடுதியில்தான் தங்கியிருந்தேன். மதவெறி என்றால் எப்படி இருக்கும் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். பொதுவாக விடுதியில் மாணவர்கள் லுங்கிதான் கட்டியிருப்பார்கள். இந்து மாணவர்கள், இஸ்லாமிய மாணவர்கள் என்ற வேறுபாடு எல்லாம் இதில் கிடையாது. நான் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயம் இரண்டு மாணவர்கள் வந்து “உன்னை வார்டன் அழைக்கின்றார்” என்று அழைத்துச் சென்றார்கள். அங்கே சென்ற உடன் வார்டன் “நீ படிக்க வந்தாயா இல்லை குப்பை கூட்ட வந்தாயா” என்று கோபமாகக் கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. “சார் படிக்கத்தான் வந்தேன்” என்று பதில் சொன்னேன். அதற்கு அவர் “அப்படினா எதுக்கு லுங்கியைத் தரையில் படும் வரை கட்டியிருக்க ஒழுங்க கணுக்காலுக்கு மேலே ஏத்திக்கட்டு” என்றார். மேலும் “உன்னை மீண்டும் லுங்கியைத் தரையில் படும் வரை கட்டியதைப் பார்த்தேன் என்றால் விடுதியில் இருந்து துரத்திவிடுவேன்” என்று மிரட்டினார். அப்போதுதான் லுங்கியைக் கட்டும் விதத்தில் கூட மதம் இருப்பதை முதன் முதலாக உணர்ந்தேன்.

மற்றொரு சமயம் மாலை விடுதி அறைக்கு வெளியே இருக்கும் அமரும் இடத்தில் உட்கார்ந்துகொண்டு இருந்தேன். அது தொழுகை நேரம். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு வார்டன் “தொழுகப் போகும் போது உனக்கு இங்கே என்ன வேலை, ஒழுங்க உன்னோட ரூமில் போய் உட்கார்” என்று மிரட்டினார். இதற்கெல்லாம் உச்சமாக நான் கடைசி ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயம் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கத்தைச் சேர்ந்த மாணவன் பெரியார் அவர்களை மிக இழிவாக என்னிடம் பேசினான். பதிலுக்கு நானும் நபிகள் நாயகத்தின் அற்புதங்களைக் கேள்விக்குள்ளாக்கினேன். இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து, என் அறையில் இருந்த என்னுடன் வகுப்பில் ஒன்றாகப் படிக்கும் இஸ்லாமிய மாணவன் என்னை பக்கத்து அறைக்கு அழைத்தான். நானும் என்னவென்று தெரியாமல் அவனுடன் அவன் கூப்பிட்ட அறைக்குப் போனேன். உள்ளே ஒரு பதினைந்து நபர்கள் இருந்தார்கள். அனைவரும் அதே கல்லூரியில் படிக்கும் இஸ்லாமிய மாணவர்கள். அத்தனை பேரும் ஒன்றாக சேர்ந்துகொண்டு “நீ நபிகள் நாயகத்தைப் பத்தி தப்பா பேசியிருக்க. அதுவும் எங்க காலேஜ்ஜிலேயே வந்து, உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும். ஒழுங்கா மன்னிப்பு கேட்டிரு இல்லைன்னா உன்ன இங்கேயே அடிச்சு பேனில் தொங்க விட்டுருவோம்” என்று மிரட்டினார்கள்.

நான் “அந்த மாணவன் பெரியாரைப் பற்றி அசிங்கமாகப் பேசியதால் தான் நான் நபிகள் நாயகத்தைப் பற்றி பேச வேண்டி வந்தது. நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? பெரியாரைப் பற்றி முதலில் அசிங்கமாகப் பேசிய அந்த மாணவன்தான் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றேன். அப்போது அந்த மாணவனும் அவர்களுடன் தான் இருந்தான். “அதெல்லாம் அவன் கேட்க மாட்டான் இது எங்கள் காலேஜ். இங்க நாங்க என்ன வேண்டும் என்றாலும் பேசுவோம், ஒழுங்கா மன்னிப்புக் கேட்கப் போறீயா இல்லை சாகப்போறியா” என்று மிரட்டினார்கள். ஏறக்குறைய அரைமணி நேரம் நீடித்த இந்தப் பிரச்சினையில் கடைசியில் கடுமையாக மிரட்டி என்னை வெளியே அனுப்பினார்கள். சரி இத்தோடு பிரச்சினை முடிந்தது என்று நினைத்தேன். ஆனால் நான் மன்னிப்பு கேட்காததால் தினம் தினம் யாராவது எனது அறைக்கு வந்து மிரட்டுவது தொடர்கதையானது. நான் அந்தக் கல்லூரியில் படித்து முடித்து வெளியேறும் வரை இந்த அச்சுறுத்தல் தொடர்ந்துகொண்டே இருந்தது. அதில் ஒரு இஸ்லாமிய மாணவன் எனக்கு ஒரு குரான் புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுத்து “இதை முழுவதுமாகப் படி, அப்போதுதான் உனக்கு அல்லாவைப் பற்றி புரியும்” என்று அறிவுரை வேறு சொன்னார். அந்தக் குரானை இன்னமும் நான் வைத்திருக்கின்றேன்.

 ஆனால் அனைத்து மாணவர்களும், வார்டன்களும் அப்படி இருந்தார்கள் என்று சொல்லமுடியாது. என்னுடைய நண்பர்களில் பல பேர் இஸ்லாமியர்கள் தான். அதிலும் சிலபேர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். கல்லூரியில் பல பேராசிரியர்கள் உண்மையில் மத நம்பிக்கை உடையவர்களாக இருந்தும், அதை வகுப்பறையில் எப்போதுமே காட்டிக்கொள்ளாதவர்கள். இன்னும் சொல்லப்போனால் எனக்கு பெரியாரையும், மார்க்சையும், சேகுவேராவையும் அறிமுகப்படுத்தியதே இஸ்லாமியப் பேராசிரியர்தான். பல திராவிட இயக்க நூல்களை எனக்குப் படிக்கத் தந்தார். அவர் இல்லை என்றால் இன்று நான் இல்லை. அதனால் அனைத்து இஸ்லாமியர்களும் அதுபோன்ற அடிப்படைவாதிகளாக இருப்பது கிடையாது. பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரம் குஜராத் படுகொலை போன்றவற்றிக்குப் பின்னே எழுச்சி பெற்ற இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் இதையே அடிப்படையாக வைத்து பல இளைஞர்களை வென்றெடுக்கின்றன. இவர்கள் ஒருபுறம் என்றால், தீவிர வாஹாபிச கொள்கைகளைக் கடைபிடிக்கும் சனாதன இஸ்லாமிய மத வெறியர்கள் மற்றொரு பக்கம். இவர்களுக்கு முதல் எதிரி யார் என்றால் இஸ்லாமின் கொள்கைகளை சரியாகக் கடைபிடிக்காத இஸ்லாமியர்கள் தான். அவர்கள் ஒழுங்காக கடைபிடித்தால் நாட்டில் பூகம்பம், சுனாமி போன்றவைகூட வாரது என நம்பும் கடுங்கோட்பாட்டுவாதிகள். தம் சொந்த மக்களையே கொல்லும் கொலைகாரர்கள் . இப்போது ஃபாரூக் கொல்லப்பட்டது கூட இது போன்ற வாஹாபிச சிந்தனை கொண்டவர்களால் தான்.

உண்மையில் இங்கிருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு நண்பனாக இருப்பது பெரியாரியக்கத் தோழர்களும், அம்பேத்கர் இயக்கத் தோழர்களும், மார்க்சிய இயக்கத் தோழர்களும் தான். இவர்களின் அரவணைப்பு இல்லை என்றால், இந்நேரம் காவி பயங்கரவாதிகள் இதை இன்னொரு குஜராத்தாக மாற்றி இருப்பார்கள். இந்தக் கொலை பெரியாரியக்கத் தோழர்களை அச்சுறுத்த அல்ல. இஸ்லாமிய இளைஞர்களை அச்சுறுத்த செய்யப்பட்டது. இனி யாரும் பெரியாரியக்கத் தோழர்கள் உடன் தொடர்புகொள்ளக்கூடாது என்ற அடிப்படையில் செய்யப்பட்டது. இது போன்ற கொலைகள் நிச்சயம் இஸ்லாமிய மக்களுக்குத்தான் பெரிய இழப்புகளை ஏற்படுத்தும் என்பதை இந்த வாஹாபிச முட்டாள்கள் உணர மறுக்கின்றார்கள். இஸ்லாமியத் தோழர்களுக்காக இந்தியா முழுவதும் பாடுபடும் முற்போக்குவாதிகளுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே இஸ்லாமிய மக்கள் இது போன்ற மதவெறி பிடித்த அயோக்கியர்கள் தங்களை நெருங்காமல் தனிமைப்படுத்த வேண்டும். அதுதான் நீங்கள் ஃபாரூக்குக்கு செய்யும் உண்மையான மரியாதை.

சுவடுகள் இன்றி மண்ணில் மறைந்து போக ஃபாரூக் ஒன்றும் மதவாதியோ, இல்லை சாதியவாதியோ கிடையாது. பெரியாரியக் கொள்கைகள் இந்த மண்ணில் உள்ள வரை ஃபாரூக் என்றும் நினைவுகூறப்படுவார். ஃபாரூக்கை என்றும் உங்களால் கொல்ல முடியாது. அவர் ஒவ்வொரு பெரியாரின் பிள்ளைகளின் சிந்தனையிலும் வேரூன்றி, என்றும் நினைவில் நிலைத்து இருப்பார். பெரியார் மண்ணில் மத அடிப்படைவாதிகளுக்கு என்றுமே இடம் கிடையாது. அந்தப் பணியைப் பெரியார் இயக்கத் தோழர்கள் தொடர்ந்து எடுத்துச் செல்வார்கள். தியாகி ஃபாரூக் அவர்களுக்கு வீர வணக்கம்.

- செ.கார்கி

Pin It