பவானி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரள அரசின் வேகமும், தமிழக அரசு வழக்குத் தொடுத்த முறையும்
ஒரு புரட்சிக்கான சூழல் இல்லாமல் புரட்சி என்பது சாத்தியமில்லை; அதே நேரத்தில், அனைத்து புரட்சிக்கான சூழல்களும் புரட்சியாக மாறுவதுமில்லை – லெனின்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடங்கியபோதே, கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் விவகாரம் தொடங்கி பல்வேறு போராட்ட நிலைகளைக் கடந்து, இன்னும் ஒரு தீர்வு எட்டப்படாமல் பயணித்துக் கொண்டிருக்கிறது.
கேரள அரசின் இந்த சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையை, தடைகளைக் கடந்து புகைப்பட ஆதாரங்களைத் திரட்டி போராட்ட களத்திற்கு இட்டுச் சென்றவர் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் தோழர் ராமகிருஷ்ணன் ஆவார்.
கடந்த ஒரு மாத காலமாக கோவையில் மனிதச் சங்கிலிப் போராட்டம், ஆனைகட்டியில் முற்றுகைப் போராட்டம் மற்றும் மலையாள சமாஜம் முற்றுகைப் போராட்டம் என பல்வேறு போராட்டங்களும், ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன் சத்திரம் ஆர்பாட்டம் மற்றும் மொடக்குறிச்சி ஆர்பாட்டம் என பல்வேறு நிலைகளில் போரட்டங்கள் நடத்தப்பட்டன.
பவானி ஆற்றில் கேரள அரசு தடுப்பணைகள் கட்டிவருவதைத் தடுத்து நிறுத்த, தமிழக அரசு வழக்கு தொடரும் என சனவரி 31 ஆம் தேதி முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வழக்கின் தீர்ப்புக்காக நம்பிக்கையுடன் காத்திருந்த போதும், கேரள அரசு தொடர்ந்து தடுப்பணைகளை வேகமாகக் கட்டிவரும் முயற்சியைக் கண்டித்து ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் பிப்பரவரி 7 ஆம் தேதி ஆர்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்த அனைவரும் வழக்கின் தீர்ப்பு இன்று மாலை வரும் என எதிர்பார்ப்போடு பேச, விவசாயிகள் சங்க மூத்த தலைவரும், ஈரோடு பாரதி வித்யபவன் உருவாகக் காரணமாக இருந்தவர்களில் ஒருவருமான, பழுத்த காந்தியவாதி இ.ஆர்.குமாரசாமி அவர்கள், "இந்திய அரசிடம் நமக்கு நீதி கிடைக்காது, தனித் தமிழ்நாடு ஒன்றே நிரந்தரத் தீர்வு" என முழங்கி அனைவரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கினார். அன்று வெளிவந்த தீர்ப்பு அவரது கூற்றை உண்மையாக்கியது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, “கேரள அரசு பவானி ஆற்றில் தடுப்பணைகள் கட்டுவது தொடர்பான வழக்கு உள்பட , காவிரி சம்பந்தமான அனைத்து வழக்குகளும் மார்ச் 21க்கு மேல் விசாரிக்கப்படும்” எனத் தீர்ப்பளித்தது. ஆனால் அதிகபட்சம் இன்னும் 20 நாட்களில் கேரள அரசு திட்டமிட்ட இரண்டு இடங்களில் எளிதாக தடுப்பணைகளைக் கட்டிவிடும்.
இத்தீர்ப்பில் மார்ச் 21 ஆம் தேதிவரை கேரள அரசின் தடுப்பணை கட்டும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்காததற்கான காரணம், பவானி ஆற்றில் அணை கட்டுவதைத் தடையாணை பெற்று நிறுத்திவைக்கும் வகையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகவில்லை என்பதேயாகும்.
தமிழக அரசின் போக்கு இப்படியென்றால் , ஊடகங்களின் போக்கு மெய்சிலிர்க்க வைக்கிறது. கேரளத் தொலைக்காட்சிகள் இச்செய்தி பற்றி மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், தமிழக தொலைக்காட்சிகளில் பவானி ஆற்றைப் பற்றி பேச்சுக் கூட அடிபடவில்லை.
காவிரி, பவானி, பாலாறு, பாம்பாறு போன்று தமிழகத்திற்குள் வரும் நதிகளை அணைளைக் கட்டி தடுக்கும் அண்டை மாநிலங்களின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த, ஒன்றுபட்ட பெரும் மக்கள் திரள் போராட்டம் ஒன்றே தீர்வாகும்.