முந்தைய பகுதி: பொதுவுடைமை தான் என்ன? - 2. அடிமைச் சமூகம்

அடிமைச் சமூகத்தில் இருந்தது போலவே நிலப்பிரபுத்துவச் சமூகத்திலும் உழைக்கும் வர்க்கமும் சுரண்டும் வர்க்கமும் இருந்தன. நிலங்கள், நிலப் பிரபுக்களின் உடைமைகளாக இருந்தன. பண்ணை ஆட்கள் உழைக்கும் மக்களாக அவர்களிடம் வேலை செய்தனர். உழைக்கும் மக்கள் நிலத்தோடு கட்டுண்டு கிடந்தனர். அதாவது இந்த நிலங்களில் உழுது பயிரிடுவதும். கொத்தனார் வேலை, கொல்லர் வேலை, நெசவு வேலை, வண்ணான் வேலை மற்றும் மனிதர்களுக்குத் தேவைப்படும் வேலைகளைச் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்யும் உழைக்கும் மக்கள், நிலப் பிரபுக்களின் பிடியிலேயே இருந்தனர். அவர்களால் தங்கள் எஜமானர்களை விட்டுப் போக முடியாது. அப்படிப் போக முயன்றால் மற்றவர்கள் அவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது மட்டும் அல்ல; அரசு அப்படி முயன்ற 'குற்றத்திற்காக' அவர்களைத் தண்டிக்கும்.

அடிமைச் சமூகத்திற்கும் நிலப் பிரபுத்துவச் சமூகத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் அடிமைச் சமூகத்தில் ஆண்டை தன் அடிமையைக் காரணத்துடனோ, காரணம் இன்றியோ கொல்வது அவரது உரிமையாக இருந்தது. அதை யாரும் கேட்க முடியாது. ஆனால் நிலப் பிரபுத்துவச் சமூகத்தில் எஜமானர்கள் தங்கள் பண்ணை ஆட்களை அடிக்கவும் காயப்படுத்தவும் உரிமை இருந்தது. ஆனால் கொல்வது மட்டும் தடை செய்யப்பட்டு இருந்தது. அடிமைச் சமூகத்தில் அடிமைகள் உழைத்து உருவாக்கிய பொருட்கள் அனைத்தும் எஜமானர்களுக்கே உரிமையாக இருந்தன. நிலப் பிரபுத்துவச் சமூகத்தில் பண்ணையாட்கள் எஜமானர்களுக்காக உழைத்தவற்றை எஜமானர்களுக்குக் கொடுத்த பின், தங்களுக்காக உழைத்தவற்றைத் தாங்களே வைத்துக் கொள்ளும் உரிமை இருந்தது. (சில சின்ன புத்தி எஜமானர்கள், உழைக்கும் மக்கள் தங்களுக்காக விளைவித்ததைத் தட்டிப் பறித்ததும் உண்டு)

மனிதனால் இருந்த இடத்தில் இருக்க முடியாது. நின்ற இடத்தில் நிற்க முடியாது. ஒரே மாதிரியாக வாழ முடியாது. அவன் சாதித்த சாதனைகளே அவனைச் சும்மா ஒரு இடத்தில் முடங்கிக் கிடக்க விடாது. வேட்டை ஆடுபவனாக ஒன்றும் இல்லா நிலையில் இருந்த போதே வேட்டைக் கருவிகளைச் செம்மைப் படுத்திய, விதைகள் மண்ணில் விழுந்து மீண்டும் வளர்வதைக் கண்டு விவசாயத்தைக் கண்டு பிடித்த மனிதன், அதை விட, பல வசதிகளுடன் வாழும் போது அதில் இருந்து மேலும் முன்னேற்றத்தைத் தேடாமல் இருக்க முடியுமா?

அவ்வாறு தேடியதன் விளைவு தான் இயந்திரங்களின் கண்டுபிடிப்பு; அதாவது தொழிற் புரட்சி. இயந்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்ட பின் பல பொருட்கள் அதிக அளவிலும், குறைந்த விலையிலும், மிக நேர்த்தியாகவும், உற்பத்தி செய்யப்பட்டன. இது வரைக்கும் நிலம் மட்டுமே மிகப் பெரிய சொத்து என்ற நிலை மாறி இயந்திரங்கள் நிலத்தை விட அதிக செல்வம் ஈட்டும் சொத்து என்ற நிலை உருவாகியது. இது நிலப் பிரபுத்துவத்தின் அடிப்படையையே அசைக்க ஆரம்பித்தது.

இவ்வாறு இயந்திரங்களை வைத்துப் பொருட்களை உற்பத்தி செய்ய முயன்றவர்களுக்கு, நிலப் பிரபுத்துவ அமைப்பு மிகப் பெரிய தடையாக இருந்தது. இவ்வமைப்பில் உழைக்கும் மக்கள் நிலத்துடன் கட்டுண்டு கிடந்தனர். ஆகவே புதிதாக உருவாகி வந்த முதலாளிகளுக்கு வேலை செய்ய உழைப்பாளிகள் கிடைக்கவில்லை. ஆகவே முதலாளி வர்க்கம் 'சுதந்திரம்; சமத்துவம்;சகோதரத்துவம்' என்ற முழக்கங்களை முன் வைத்துப் போராடியது. நிலத்துடன் கட்டுண்டு கிடக்கும் உழவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் விருப்பப்படி யாரிடம் வேண்டுமானாலும் வேலை செய்யும் ‘சுதந்திரம்’ இருக்க வேண்டும் என்றும் கூற, அது அடிமைப்பட்டுக் கிடக்கும் உழவர்களை மிகவும் கவர்ந்து இழுத்தது.

பொருள் உற்பத்தி என்ற நோக்கில் பார்க்கும் போது, நிலப் பிரபுக்களை விட, முதலாளிகளுக்குப் பல மடங்கு அதிகமாகப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆற்றல் இருந்தது, முதலாளிகளின் இந்த ஆற்றலும், உழைக்கும் மக்களின் நிலத்துடன் கட்டுண்டு கிடப்பதில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்ற உணர்வும், நிலப் பிரபுத்துவ அமைப்பை அடியோடு நொறுக்கிப் போட்டன. முதலாளித்துவச் சமூகம் உதித்தது.

(தொடரும்)

- இராமியா

Pin It