Deviprasad chattopaththiyayaதேவி பிரசாத் சட்டோபாத்யாயா:

        தேவி பிரசாத் சட்டோபாத்யாயா அவர்கள் ஒரு புகழ்பெற்ற இந்தியத் தத்துவப் பேராசிரியர், மார்க்சிய அறிஞர். கணாதர் குறித்தும் அவரது வைசேடிக நூல் குறித்தும் அவர் பேசுகிறார். கணாதருக்கு இன்னொரு பெயர் உலூகர் எனவும், அதன் பொருள் ஆந்தை எனவும் அவர் கூறுகிறார். பின் அந்த ஆந்தை என்கிற பெயர் குறித்துப் பல பொருத்தமற்ற விடயங்கள் பேசப்படுகின்றன-(1). கணி+ஆதன் என்கிற தமிழ்பெயர் தான் கணாதன் என மாறியுள்ளது. ஆதன் என்பதை ஆந்தை எனக்கொண்டு பல விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன.

கபிலரின் சாங்கியம் - சட்டோபாத்யாயா:

            கபிலர் என்பவரே இதனைத் தோற்றுவித்தவர் ஆவார். சாங்கியத் தத்துவம் மிகத்தொன்மையானது, அவற்றின் தாக்கம் மிகப்பரந்து பட்டது. பண்டைய இதிகாசமான மகாபாரதம், மருத்துவ நூலான சாரக சம்கிதை, மனுசுருதி, பல்வேறு புராணங்கள் ஆகியன ‘கார்பி’ கூறுவது போல் சாங்கியக் கோட்பாடுகளாலேயே நிறைந்துள்ளன. உபநிடதங்கள் கூட சாங்கியம் அவைகளுக்கு முந்தியது எனக் காட்டுகின்றன. ஆனால் தொடக்க காலத்தில் சாங்கியத் தத்துவம் எப்படி இருந்தது என்பது இன்றைக்கும்கூடத் தெளிவில்லாமலேயே இருக்கிறது. சாங்கியக் கொள்கைகளை விளக்குவதாக இரண்டு நூல்கள் உள்ளன. அவை கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சாங்கிய காரிகை, கி.பி. 1400 எனக்கருதப்படும் சாங்கிய சூத்திரம் ஆகிய இரண்டும் ஆகும். ஈசுவர கிருட்டிணருடைய சாங்கிய காரிகை விருப்பம்போல் திருத்தப்பட்டது என திபெத்திய சான்றுகளைக் காட்டி வாஸ்சிலியேவ் என்பவர் கூறுகிறார்-(2).

            சாங்கியத் தத்துவத்தின் பெரும்பலமே பொருள் நிரந்தரமானது, அது இயக்கமற்ற நிலையை எப்போதும் அடைவதில்லை, ஒரு குறிப்பிட்ட வடிவத்திலிருந்து இன்னொன்றாக அது பரிணாமம் பெற்று வருகிறது என்பது தான் ஆகும். மனித குலச் சிந்தனை வரலாற்றில் மிகப்பண்டைய காலத்தில் பொருளின் நிரந்தரத்தன்மையையும், அது சதா மாறிக்கொண்டே இருக்கிறது என்பதையும் கூறியதன் மூலம் இந்தத் தத்துவ வாதிகள் பெருமை படைத்தவர்கள் ஆனார்கள் என்கிறார் ‘செர்பாட்சுகி’. சாங்கிய காரிகைக்கு முந்தைய சான்று என்பது சாரகர் எழுதியதாகக் கருதப்படும் சாரக சங்கிதை என்கிற மருத்துவ நூல் ஆகும். சாரகர், சாங்கியத்தின் ‘புருடன்’ குறித்து ஐந்து கருத்துக்களை முன்வைக்கிறார். பொருளாயாதத் தன்மைகொண்ட 24 தாதுக்களின் குவியல்தான் புருடன் என்கிற மூன்றாவது கருத்துக்கே சாரகர் முக்கியத்துவம் அளிக்கிறார். ஐந்தாவது கருத்து புருடன் என எதுவும் இல்லை என்கிறது. ஆக பொருள்முதல்வாதத்திலிருந்து தெளிவாக வேறுபடுத்த முடியாத பழைய சாங்கியக் கொள்கையை சாரகர் கூறுகிறார்.

சாங்கியமும் பிரம்மசூத்திரமும்:

        உபநிடதங்களில் உள்ள தத்துவக் கருத்துக்களை தொகுத்து, ஒழுங்கு செய்து 555 சூத்திரங்களைக்கொண்ட ‘பிரம்ம சூத்திரம்’ நூலை பாதராயணர் எழுதினார். இதன் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு என்கிறார் தாஸ்குப்தா அவர்கள். இதன் சூத்திரங்களை உரையாசிரியர் உதவியின்றி புரிந்து கொள்ள முடியாது.  கி.பி. 8ஆம் நூற்றாண்டு சங்கரர், கி.பி. 11ஆம் நூற்றாண்டு இராமானுசர் ஆகிய இருவரின் பிரம்ம சூத்திர உரைகள்தான் சிறந்தன ஆகும். இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். பிரம்ம சூத்திரம் சாங்கியத்தைப் பிரதானவாதம் என்கிறது. பிரதானம் என்பது முதன்மைப்பொருள் ஆகும். சாங்கியவாதிகள் முதன்மைப்பொருள் இயற்கை விதிகளின் காரணமாக மாறுதலடைந்து உலகம் தோன்றியது என்பர். சாங்கியம் சுபாவவாதம் என்கிற இயற்கை விதிக்கொள்கை எனவும் சொல்லப்படுகிறது. பௌத்த மதக் கோட்பாடுகள் சாங்கியத்திலிருந்து தோன்றியவை என்கிறார் அசுவகோசு அவர்கள். சாங்கியக் கொள்கைகள் வேதங்களுக்கு எதிரானவை என்கிறது பிரம்ம சூத்திரம். அதனால் கருத்துமுதல்வாதிகளான சங்கரர், இராமானுசர் போன்றவர்கள் சாங்கியத்தைத் தமது முக்கிய எதிரியாகக் கொண்டார்கள். சங்கரரின் பிரம்ம சூத்திர உரை சாங்கியத்தை எதிர்க்க 60சூத்திரங்களைப் பயன்படுத்தியுள்ளது. பிற தத்துவங்கள் எல்லாவற்றையும் மறுக்க 43 சூத்திரங்களை மட்டுமே பயன்படுத்தியுள்ளது. அதில் பௌத்தப்பிரிவுகளையும்  சமணத்தையும் எதிர்க்க முறையே 17சூத்திரங்களும், 4 சூத்திரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சங்கரர் ‘பிரதான மல்லனைத் தோற்கடித்ததன் மூலம் பிற மல்லர்களை நாம் ஏற்கனவே தோற்கடித்து விட்டோம்’ என்கிறார்-(3).

   கபிலர் ஒரு அசுரர். அவரது சாங்கியத்தில் கடவுளுக்கு இடமில்லை. புருடன் என்பதற்கு ஆன்மா என்னும் பொருள் காலப்போக்கில் ஏற்பட்டது. உண்மையில் அதன்பொருள் அதுவன்று. புருடன் என்ற சொல்லுக்குத் தொடக்ககாலப் பொருள் ஆணின் உடல் என்பதாகும். இந்த அர்த்தத்தில்தான் ஆரமபகால உபநிடதங்களில் ஆசிரியர்கள் இதைப் பயன்படுத்துகின்றனர். இந்தக் கருத்தை ஏற்கனவே பெல்வார்க்கர், இரானடே ஆகிய இருவரும் கூறியுள்ளனர்-(4).

கணாதரின் வைசேடிகம் – கோதமனாரின் நியாயவாதம்; சட்டோபாத்யாயா:

               சீன நாட்டைச்சேர்ந்த பௌத்தர்களின் மரபுப்படி கணாதரின் வைசேடிகம் என்பது பிற தத்துவங்களைக் காட்டிலும் உயர்ந்தது,  விசேடமானது என்கிற பொருளுடையது. இந்திய மரபுப்படி அது விசேடம் அல்லது தனித்தன்மையானது-(5). கணாதரின் வைசேடிக சூத்திரம், கோதமனாரின் நியாய சூத்திரம் ஆகிய இரண்டையும் குறித்துப் பேசவந்த தேவி பிரசாத் சட்டோபாத்யாயா அவர்கள் இவை பண்டைய காலத்தைச் சேர்ந்தவை அல்ல எனவும் இவைகளுக்கு அத்தகைய மரபு இல்லை எனவும் இவ்விரு தத்துவங்களில் காணப்படும் தனித்துவமான அம்சங்கள்  இந்தியத் தத்துவ மரபுக்குப் புதியவை எனவும் கூறுகிறார். இவைகளின் அணுக்கொள்கை இவைகளுக்கு முந்தைய தத்துவ ஆசிரியர்களால் எடுத்துரைத்து விவாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை எனவும் இந்த அணுக்கொள்கை போன்றே பொதுமைக்கொள்கை, முக்கூற்று முடிபுக்கொள்கை, உலகில் உள்ள எல்லாவற்றையும் தெளிவான வகைப் பிரிவில் பகுத்தல்  போன்றவைகளும் புதியவை எனவும் ஆனால் அவை கிரேக்கத் தத்துவ மரபில் வழக்கில் இருந்தவை எனவும் அதற்கான சமூகச்சூழல் அங்கு இருந்தன என்பதற்கு அங்கு ஆய்வுகள் நடந்துள்ளன எனவும் இந்தியாவில் அதுபோன்ற ஒரு ஆய்வு நடைபெறவில்லை என்பதால் இவை கிரேக்கத்தத்துவ  மரபிலிருந்து நேரடியாகக் கடன் பெற்றவை என கீத் போன்றவர்கள் கூறுகிறார்கள் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

         கிரேக்கத் தத்துவத்தின் அணுக்கொள்கை, பொதுமைகள், முற்கூற்று முடிவுகள், வகைப்பிரிவுகள் முதலிய கொள்கைகள், நியாய-வைசேடிக கருத்துக்களின் அச்சுநகலாக இருக்கவில்லை எனவும், இந்தியாவில் நீண்டகாலமாக நிலவிய திறந்தவெளி விவாதங்களின் விளைவாக நியாயத்தத்துவம் தோன்றியிருக்க வேண்டும் என செர்பாட்சுகி கருதுகிறார்  எனவும் அவர் கூறுகிறார். அனுபவமுறையிலான மூலமெய்ப்பொருள் ஆய்வு, அறிவுத்தோற்ற ஆய்வு ஆகியவற்றில் இவையிரண்டுக்கும் இணையாக வேறு நூல்கள் இந்தியத் தத்துவ மரபில் தோன்றவில்லை-(6).

அஜித கேசகம்பளி-

            இவர் தொடக்க காலத்தைச் சேர்ந்த பொருள்முதல்வாதி. புத்தரின் சம காலத்தவராக இருக்கலாம். “ஈகை என்றோ யாகம் என்றோ கொடை என்றோ எதுவும் கிடையாது. நற்செய்கை, தீச்செய்கை என்பவனவற்றிற்குப் பலனோ விளைவோ கிடையாது. மனிதன் நான்கு பூதச் சேர்க்கையால் உருவானவன்........... இந்தக் காணிக்கையும் இது தொடர்புடைய கொள்கைகளும் முட்டாள்தனமானவை. இதனால் பலனுண்டு என்று சொல்வது பச்சைப்பொய், வெட்டிப்பேச்சு. முட்டாள்களாயினும், அறிவாளிகளாயினும் அது யாராக இருந்தாலும் சரி, உடம்பு அழியும்போது அழிந்து போகின்றனர். மரணத்திற்குப் பின் அவர்கள் இல்லாதுபோகின்றனர்” என தொடக்ககால பௌத்த நூல் ஒன்று இவருடைய கருத்தை மேற்கண்டவாறு தொகுத்துக் கூறுகிறது-(7). இந்த அஜித கேசகம்பளி என்பவர் தமிழில் நரிவெரூஉத்தலையார் எனப்படுகிற புறம் 5, 195 ஆகிய பாடல்களைப் பாடியவர் ஆவார். ஆகவே இவர் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழர் ஆகிறார். அசிதம் = நரி, கேசம்=தலைமுடி என மொழிபெயர்த்து நருவெரூஉத் தலையார் என்கிற தமிழ்ப் பெயரை அசிதகேச கம்பாளர் என பெயர் மாற்றிவிட்டனர். இவர்தான் உத்தேசவாதம் என் கிற சிதைவுக் கோட்பாட்டை உருவாக்கியவர் ஆவார். இவரை மணிமேகலை ‘நரிமகன் அல்லனோ கேச கம்பாளன்’ எனச் சுட்டும். அஜித கேசகம்பளி என வட இந்திய மரபில் சட்டோபாத்யாயா போன்றவர்களால் அழைக்கப்படும் இவரின் கோட்பாடுகள் அடிப்படையில் தமிழியப் பூதவாதம் எனப்படும் உலகாயதமாகத் திகழ்கின்றன-(8).

கோதமனார் ஒரு தமிழர்:

       நியாயவாதத்தை தோற்றுவித்தவரின் பெயரும், புறம் 366ஆம் பாடலைப்பாடியவரின் பெயரும் கோதமனார் ஆகும். புறம் 366ஆம்   பாடல் அறவோனாக இருந்த ஒரு அரசனின் மகனுக்கு அறிவுரை கூறப்பாடியதாகத் தெரிகிறது. அறவோன் மகன் என்பதால் பிற்காலத்தவர் பாடப்பட்டவரைத் தருமபுத்திரன் என எழுதியுள்ளனர். அவருடைய காலத்தை அறிய இயலவில்லை. புறம் 366ஆம் பாடலைப்பாடிய கோதமனார் தான் நியாயவாதத்தை தோற்றுவித்தவர் எனலாம். பாடலின் கருத்தும், பெயரின் பொருத்தமும் இருவரும் ஒருவரே என்பதைக் காட்டுகின்றன.

தமிழ் சித்தர்கள்- சட்டோபாத்யாயா:

        தமிழ் சித்தர்கள் குறித்துத் தனது உலகாயதம் என்ற நூலில் சட்டோபாத்யாயா அவர்கள் தரும் முக்கியத் தரவுகளின் சுருக்கம் இங்கு தரப்படுகிறது. தமிழ் இலக்கியத்தில் ஏராளமான சித்தர் கவிதைகள் உள்ளன. அவை சித்தர்கள் எனப்படும் தாந்திரீகர்களால் எழுதப்பட்டவை. 18 சித்தர்களில் இருவர் போகர், புலிப்பாணி எனப்படும் சீனர்கள். போகர் கி.பி. 3ஆம் நூற்றாண்டில் தென்இந்தியாவிற்கு வந்தார். அங்கு தாந்திரீகத்தைக் கற்றார் புலிப்பாணியும் போகருடன் தமிழ் நாட்டிற்கு வந்து தங்கிவிட்டார். இவர்கள் மந்திரம், மருத்துவம், இரசவாதம், இயற்பியல் குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளனர். இவை தாந்திரீகக் கண்ணோட்டத்தில் தமிழில் எழுதப்பட்டவை. தமிழ் சித்தர்களின் பல நூல்கள் தென்னிந்தியாவின் மடாலயங்களிலும், ஆவண நூலகங்களிலும் காணப்படுகின்றன. இவற்றைத் தகுந்த முறையில் பதிப்பித்து ஆய்வுசெய்தால் இந்திய விஞ்ஞானத்தின் வரலாற்றை மீட்டெடுப்பதற்கான விவரங்கள் நமக்குக் கிடைக்கும். தமிழ் நூல்களின்படி தாந்திரீகத்தின் மூலம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பூர்வ விஞ்ஞானக் கருத்துக்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன என்பதும் விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பதற்கான அம்சம் தாந்திரீகத்தில் உள்ளார்ந்து இருக்கிறது என்பதும் ஆகிய இரு முக்கிய காரணங்களுக்காக தமிழ் சித்தர்களின் நூல்கள் குறித்து நாம் ஆர்வம் காட்டுகிறோம். தமிழ்ச் சித்தர்கள் சங்கரரது கருத்துமுதல்வாதத் தத்துவத்தினை கடுமையாக எதிர்த்தனர்-(9).

             போகர், புலிப்பாணி ஆகிய இருவரும் சீனர்கள் எனக் கருதப் படுகின்றனர். அவர்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக உள்ளன. அவர்கள் தங்கள் நூல்களை எல்லாம் தமிழில்தான் எழுதியுள்ளனர். இவர்களைக் குறித்த குறிப்புகள் எதுவும் சீனத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. பௌத்த மதம் சார்ந்த பல சீனப் பயணிகள் தமிழகம் வந்துள்ளனர். அவர்களின் பெயர்கள் சீனப் பெயர்களாகத்தான் உள்ளன. அவர்கள் தங்கள் கருத்துக்களை, பயண விபரங்களைச் சீன மொழியில்தான் எழுதியுள்ளனர். சீனத்தில் அவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆதலால் போகர், புலிப்பாணி ஆகிய இருவரும் சீனர்கள் என்பதில் ஐயப்பாடுகள் உள்ளன. சீனத்தோடு இவர்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் தொடர்புகள் இருந்திருக்கலாம். அதை வைத்து இவர்களைச் சீனர்கள் எனக் கருதும் கருத்து உருவாகி இருக்கலாம். இவை பற்றி மேலும் ஆய்வுகள் தேவை. தாந்திரீகக் கருத்துக்கள் தமிழில் ஆரம்ப காலம் முதல் இருக்கின்றன என்பதும் அவை அறிவியல் மனப் பான்மையை வளர்க்கக் கூடியவை என்பதும் அது சங்கரரது கருத்துமுதல் வாதத்தினை எதிர்த்தது என்பதும்  இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழ்ச் சிந்தனை மரபின் வீழ்ச்சி:

    இந்தியத்தத்துவத்தில் பொருள்முதல்வாத மெய்யியல் குறித்துப்பேசும் அனைவரும் இனக்குழு காலத்திய மந்திர தந்திரக் கூறுகள், பூதவாதம் என்கிற உலகாய்தம், கபிலரின் சாங்கியம், கணாதரின் வைசேடிகம், நியாயம், ஆசிவகம், யோகம் ஆகியவைகளைப் பற்றிப் பேசியுள்ளனர். இதில் யோகம் என்பது ஒரு தத்துவம் அல்ல. அது ஒரு பயிற்சி முறைகளின் தொகுப்பே. யோக சூத்திரங்களை எழுதிய பதஞ்சலி ஒரு தொகுப்பாசிரியர் மட்டும்தான். சிந்துவெளி காலத்திலிருந்து இப்பயிற்சிகள் வழக்கிலிருந்தன-(10).

    மந்திர தந்திரக் கூறுகள் என்பது ‘போலச்செய்தல்’ மூலம் இயற்கையைக் கட்டுப்படுத்த முடியும், தங்களது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளமுடியும்  என்கிற இனக்குழுகால நம்பிக்கையாகும். அவற்றின் தத்துவக்கூறுகள் பூதவாதம் என்கிற உலகாயதத்தில் இணைக்கப்பட்டுவிட்டன.  ஆகவே பூதவாதம் என்கிற உலகாயதம், கபிலரின் சாங்கியம், கணாதரின் வைசேடிகம், நியாயம், ஆசிவகம் ஆகியவற்றில் நியாயம் தவிர பிற அனைத்துப் பொருள்முதல்வாத மெய்யியல் தத்துவங்களும் மூலச் சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபில் தோன்றியவைகளே என்கிறார் க. நெடுஞ்செழியன் அவர்கள். நியாயவாதத்தின் அளவையியலும் இன்னபிறவும் உலகாயதம், சாங்கியம், வைசேடிகம் ஆகியவற்றில் அடக்கம். ஆகவே க. நெடுஞ்செழியன் அவர்களின் கருத்துப்படி இந்தியாவின் பொருள்முதல்வாத மெய்யியல் வரலாறு என்பது, தமிழகத்தில் தோன்றி சிறப்புடன் இயங்கி வந்த பூதவாதம் என்கிற உலகாயதம், சாங்கியம், வைசேடிகம், ஆசிவகம் ஆகிய நான்கு பொருள்முதல்வாத மெய்யியல் தத்துவங்களின் வரலாறு தான் எனக்கூறலாம். நமது கருத்துப்படி நியாயவாதத்தின் கோதமனாரும் தமிழரே ஆவார். ஆகவே க. நெடுஞ்செழியன் அவர்களின் கூற்று உண்மையே ஆகும்.

         கி.மு. 3ஆம் நூற்றாண்டுவரை இந்திய அளவில் புகழ் பெற்றவைகளாக இருந்த இத்தத்துவங்கள் கிறித்துவ காலத்துக்குப்பின் தமிழக அளவில் மட்டும் ஓரளவு செல்வாக்கு மிக்கவனாக இருந்து வந்தன. கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்குப்பின் தமிழகத்திலும் செல்வாக்கு இழந்து, இல்லாது போயின. தமிழகத்தில் களப்பிரர் ஆட்சியும், அதன்பின் வலிமை பெற்ற பல்லவர் ஆட்சியும், வடஇந்தியாவில் குப்தர் ஆட்சியும் இந்தியா முழுவதும் சமண, பௌத்தமயமாதல் பின் சமற்கிருதமயமாதல் என்பதைக் கி.பி. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டுவந்து கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குள், பொருள்முதல்வாத மெய்யியல் தத்துவங்களை இல்லாது ஆக்கின. அதன்பின் மூலச் சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு தனக்கான அடித்தளமாக இருந்த பொருள்முதல்வாத மெய்யியலை முழுமையாக இழந்தது எனலாம். கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குப்பின் இந்தியாவிலிருந்த அனைத்தும் சமற்கிருத மயமாக்கப்பட்டு, அனைத்துத் தத்துவங்களையும் வைதீக மரபின் கீழ் கொண்டுவரும்பணி வெற்றிகரமாக நிறைவேறியது. தத்துவமே இல்லாத வேதம், தத்துவங்களிலேயே தலைமையானதாகவும் கேள்விக்கு அப்பாற்பட்டதாகவும்  ஆக்கப்பட்டது.

         deviprasad chattopathiyayaaஇந்தியாவில் சாங்கியம் என்கிற எண்ணியத்தைத் தோற்றுவித்தவர் தொல்கபிலர்; வைசேடிக சூத்திரம் என்கிற நூலை எழுதி சிறப்பியத்தைத் தோற்றுவித்தவர் கணாதர்; எண்ணியம் என்கிற சாங்கியக் கோட்பாட்டின் தலைவராக இருந்து அணுக்கோட்பாட்டினை வளர்த்தெடுத்தவர் பக்குடுக்கை நன்கணியார்; ஆசிவகச் சமயத்தைத் தோற்றுவித்தவர் அறப்பெயர் சாத்தன் எனப்படும் மற்கலிகோசாலர்; உத்தேசவாதம் என்கிற சிதைவுக் கோட்பாட்டை உருவாக்கியவர் அசித கேச கம்பாளர் எனப்படும் நரிவெரூர்த்தலையார்; தற்செயல் கோட்பாட்டை உருவாக்கியவர் பூரண காயபர்; நியாயவாதத்தைத் தோற்றுவித்தவர் கோதமனார்.  இவர்கள் அனைவரும் சங்ககாலத் தமிழகத்து மெய்யியல் அறிஞர்கள் ஆவர். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் புறப்பாடல் ஆசிவக ஊழியலின் கருத்தைக் கொண்டுள்ளது. அதுபோன்றே கோப்பெருஞ்சோழனின், ‘செய்குவம் கொல்லோ’ என்கிற பாடல் ஆசிவகத்தின் தற்செயல் கோட்பாட்டைக் கொண்டுள்ளது-(11).

         ஆசிவகக் கோட்பாட்டிற்குரிய மூலச்சுவடுகள் எவ்வாறு தமிழ் இலக்கியங்களில் மட்டும் காணப்படுகின்றனவோ அதைப் போலவே சாங்கியத்தின் மூலச்சுவடுகளும் தமிழ் இலக்கியங்களில் தான் காணப் படுகின்றன. அத்துடன் சாங்கியம் யோகம், உலகாய்தம் ஆகிய பொருள்முதல்வாத மெய்யியல்களுக்குரிய அளவை இயலை அடியொற்றி அமைந்த இலக்கியங்கள் இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் மட்டுமே இருக்கின்றன-(12).

இடைக்காலம் - தின்னாகர்:

            சங்ககாலத்தில் மட்டுமில்லாது அதன் தொடர்ச்சியாக இடைக்காலத்திலும் தமிழ் அறிஞர்கள் மெய்யியலில் இந்திய அளவில் முன்னோடியாக இருந்தனர். இடைக்காலத் தமிழரான தின்னாகரே பௌத்த தருக்கவியலின் முதன்மையான ஆசிரியர் ஆவார். இவரைப்பற்றி பாரத்சிங் உபாத்யாயா, “பௌத்த தருக்கவியல் வரலாற்றில் முதன்மையான பெயர் தின்னாகர் ஆகும். இவர்தான் பௌத்த தருக்கவியலின் தந்தை.... இந்திய நாட்டின் தலைசிறந்த அளவைநூற் புலவர் இவர் என்பதில் ஐயமில்லை. இவரது பெயரைக் குறிப்பிடாத அளவை நூல் இவரது காலத்திற்கு பின் இல்லை எனலாம்” என்கிறார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட தருக்க நூல்களை எழுதியதாக திபெத்தியச் சான்றுகள் கூறுகின்றன. புகழ்பெற்ற சில நூல்கள் இன்றும் உள்ளன. தின்னாகருக்கு முன் அளவை நூல்கள் எதுவும் இல்லை. இவர் காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு(13).

தர்மகீர்த்தி:

             தின்னாகரைப் பின்பற்றி அளவை இயலை வளர்த்தவர் தர்மகீர்த்தி ஆவார். இவரும் தமிழரே. இவர் நாளந்தா சென்று அங்கு நாளந்தா பல்கலைகழகத்தின் தலைவராக இருந்த தமிழரான தருமபாலரிடம் பௌத்த அறிவியல்வாத நூல்களைக் கற்றார். தின்னாகரின் மாணவரான ஈசுவர சேனரிடம் தருக்கவியலைக் கற்றார். தர்மகீர்த்தி அவர்களை, ‘இந்தியாவின் கான்ட்(KANT)’ என அழைக்கிறார் செர்பாட்சுகி என்கிற இரசிய அறிஞர். இவர் காலம் கி.பி. 6ஆம் நூற்றாண்டு. இந்த இருவர் போக, தருமபாலர் நாளந்தா பல்கலைகழகத்தின் தலைவராக இருந்து பௌத்த நூல்களை மாணவர்களுக்கு போதித்து வந்தவர் ஆவார். திக்நாகர், தருமபாலர், போதி தருமர் ஆகியோர் காஞ்சியில் வாழ்ந்து பின் நாளந்தாவில் அறம் போதித்தவர்கள் என்பதைக் குறிப்பிடுகிறார் தெ.பொ.மீ. அவர்கள். தின்னாகர், தருமபாலர் போன்றோர் தமிழராக இருந்தும் அனைத்தையும் சமற்கிருதத்தில் தான் எழுதினர்-(14)

சங்க காலத்தில் கல்வி:

               கல்வியின் வளர்ச்சியும், மெய்யியலின் வளர்ச்சியும் ஒன்றோடொன்று இணைந்ததாகும். சங்ககாலக் கவிஞர்கள், அரசன் முதல் ஆண்டி வரை அன்றையத் தமிழ்ச் சமூகத்தின்  அனைத்துத் தரப்பிலும் இருந்துள்ளனர் என்ற செய்தி அன்றையத் தமிழ் சமூகத்தில், பரந்து பட்ட அளவில், அனைத்து தரப்பு மக்களும் கல்வி அறிவு கொண்டிருந்தனர் என்பதை உறுதி செய்கிறது. தற்காலத் தொல்லியல் சான்றுகளும் அதை உறுதி செய்கின்றன.

       இந்து நாளிதழ், 24.6.2010 இல் தொல்லியல் கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள், சங்க காலத் தமிழகத்தில், மிகப் பரந்த அளவில், சாதாரண மக்கள் கூட கல்வி அறிவு கொண்டிருந்தனர் என்பதை உறுதி செய்கிறார். ஒதுக்குப் புற கிராமப் பகுதியில் வாழும் கள் விற்பவர்கள் கூடத் தனது பானையில் தனது பெயரை எழுதி வைக்கும் அளவு தமிழகம் பரந்த அளவிலான கல்வி அறிவை சங்க காலத்தில் கொண்டிருந்தது என்பதை எடுத்துக் காட்டுகளோடு அவர் விளக்குகிறார்-(15). ஒப்பீட்டளவில் பண்டையத் தமிழகம் பரந்த அளவில் கல்வி அறிவு பெற்றிருந்தது. ஆனால் பண்டையத் தமிழ் சமூகத்தின் கல்வி முறை எப்படி இருந்தது என்பதை அறிய இயலவில்லை.

         “தொல்பொருள் ஆய்வுகளில் கிடைத்துள்ள பானை வரிகளும் பொறிப்புகளும் எழுத்தறிவு மிகப்பழங்காலத்திலேயே தமிழகம் முழுவதும் பரவிவிட்டதைத் தெரிவிக்கின்றன. தொகைநூல் புலவர் பட்டியலில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு சமூகப் பிரிவினர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதில் இருந்தும், தமிழ்நாட்டில் பரவியிருந்த எழுத்தறிவினை நன்கு அறியலாம்” என்கிறார் பேராசிரியர் அ. பாண்டுரங்கன் அவர்கள்-(16)

           பண்டைய வட இந்தியாவில் அல்லது பிற இந்தியப் பகுதிகளில் கல்வெட்டுகளில் அதுவும் அரசால் வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் மட்டுமே எழுத்துப் பொறிப்புகளைக் காண முடிகிறது. ஆனால் தமிழகத்தில் சாதாரண மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகளில், ஈமச்சின்னங்களில், மதிப்புமிக்க, மதிப்பற்ற தொல்பொருட்களில், நாணயங்களில், மோதிரங்களில் என எண்ணற்ற சாதனங்களில் எழுத்துப் பொறிப்புக்களைக் காண முடிகிறது. அதுபோன்றே பல நிலைகளில் உள்ள குடிமக்கள் சமயத் துறவிகளுக்கு வழங்கிய பாறைகளிலும்  எழுத்துப் பொறிப்புகளைப் பார்க்க முடிகிறது. தமிழகத்தைத்தவிர பிற இடங்களில் இதுபோன்ற நிலை இல்லை. இத்தரவுகள் மிக மிகச் சாதாரண மனிதர்கள் முதல் உயர் நிலையில் உள்ளவர்கள் வரை எழுதப்படிக்கத் தெரிந்திருந்தனர் என்பதைக் காட்டுகிறது.  

         அது போன்றே மிகமிகச் சாதாரண மக்களும் சங்க இலக்கியத்தின் படைப்பாளிகளாக இருந்துள்ளார்கள் என்பது சாதாரண மக்கள் எழுதப்படிக்க மட்டுமல்ல சங்க இலக்கியம் போன்ற உயர் நிலை இலக்கியங்களைப் படைக்கும் அளவு கல்வியறிவு கொண்டிருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது. ஆனால் இதற்கான கல்வி முறை எப்படி இருந்தது, அது எவ்வாறு அனைத்து மக்களுக்கும் கிடைத்தது, அதுவும் உயர்தரமான சங்க இலக்கியங்களைப் படைக்குமளவான கல்வியறிவை, புலமையை அவர்கள் எப்படிப் பெற்றார்கள் என்பது ஒரு பெரும் கேள்வியாக உள்ளது. வட இந்தியாவில் இருந்தது போன்ற குருகுலக் கல்வி சங்ககாலத் தமிழகத்தில் இருக்கவில்லை. ஆனால் அக்கல்விமுறை சிறந்ததாகவும், வேறுபட்டதாகவும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் விதமாகவும் இருந்தது

         “அன்றைய கல்வி, கற்பவனைச் சான்றோன் ஆக்கியது; அவனை உலக வாழ்வுக்குத் தகுதிப்படுத்தியது; கற்றோர் அவையிலும், ஊர்ப்பொது மன்றங்களிலும் முந்தியிருக்கச் செய்தது; அது வாழும் உலகை அதன் இன்பங்களை உறுதிப்படுத்துவதாக இருந்தது; மனித ஆற்றலில் விளங்கும் தன்னிறைவைக் கொண்டு வந்தது; அதில் குழந்தைகளின் மீதான  அன்பும், இல்லறத்தின் மீதான பற்றும் இருந்தது; காதல்செய்ய, மணம்புரிய, இல்வாழ, பொதுநலம் பேணி பிறர்க்கென வாழ இக்கல்வி கற்போரைத் தகுதிப்படுத்தியது; தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் பொதுவாழ்வு அதன் உள்ளார்ந்த மதிப்புக் கருதி பரிந்துரைக்கப்பட்டது” என்கிறார் சேவியர் தனிநாயகம் அடிகளார்-(17).

        கல்வி கற்றத் தமிழ் புலவன் புகழ்பெற்ற அரசனுக்குச் சமம் என ஒரு சோழ வேந்தனிடம் நேருக்கு நேர் கூறுகிறார் கி.மு. 2ஆம் 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்ககாலத் தமிழ் புலவர் கோவூர்கிழார்(புறம்-47). தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்கிற பெரும்புகழ் பெற்ற பாண்டிய மன்னனோ தனது அவைக்களத் தலைமைப் புலவரான மாங்குடி மருதனாரால் தான் பாடப்படுவதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறான். பெரும்புகழ்க் கபிலர் கல்வி கற்ற புலவனை இகழ்ந்ததால் இருங்கோவேள் என்கிற குறுநில மன்னனின் முன்னோர்கள் இரு பெரும் நகரங்களை இழந்தனர் என்கிறார். சங்ககாலத் தமிழ் சமூகத்தில் கல்வி கற்ற புலவர்கள் பேரளவு மதிக்கப்பட்டனர் என்பதற்கு இதுபோன்ற பல சான்றுகளைக் காணலாம். ஆகவே சங்ககாலச் சமூகத்தில் கல்வியும் கற்றவனும் மதிக்கப்பட்டதால் அனைவரும் கல்வி கற்றவர்களாக இருந்தனர். அன்றைய தமிழ் சமூகத்தில் பேரறிவும், பெரும் புலமையும் உடையவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு தரப்பட்டது.

         பாணர்கள், பாடினிகள் போன்றவர்கள் வழிவழியான குடும்ப மரபின் காரணமாக இக்கல்வி அறிவைப் பெற்றனர் எனலாம். ஆனால் மற்ற சாதாரணக் குயவர்கள், தச்சர்கள், கருமான்கள் போன்ற பலதரப்பட்ட தொழில் செய்வோரும், பிற தமிழ் சமூகத்தின் சாதாரண மக்களும், இவர்களின் சாதாரணக் குடும்பப் பெண்களும் இந்த புலமைக் கல்வியை எப்படிப் பெற்றனர் என்பது மேலும் நன்கு ஆய்வு செய்யப்படவேண்டிய விடயமாகும். வெண்ணிக் குயத்தியார் போன்ற சாதாரணக் குயவர்குலப் பெண்கள்  இந்தப் புலமைக் கல்வியை பெற்றது குறித்து விரிவாக ஆய்ந்தறிந்து கண்டறிவதன் மூலமே நமது பண்டைய தமிழகத்தின் கல்விமுறையை அறிந்துகொள்ள இயலும். அவர் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் ஆகும். அன்று சமணப் பள்ளிகளோ, புத்தப் பள்ளிகளோ இல்லை.

        மாதவி போன்று, பரத்திமை நிறுவனத்தில் இருந்த பெண்கள் பல்வேறு கலைகளில் சிறந்திருப்பது என்பதும், உயர்கல்வியைப் பெற்றிருப்பது என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதும், புரிந்துகொள்ளக் கூடியதுமாகும். ஆனால் இது போன்ற பரத்திமை நிறுவனங்கள் தமிழகத்தில் ஓர் உயர் வளர்ச்சியை கி.மு.முதல் நூற்றாண்டுக்குப்பின் தான் வந்தடைந்தன எனலாம். ஆனால் அந்தக் காலத்தில் இருந்து உயர்குடிப் பெண்கள் கல்வியறிவும் கலை அறிவும் பெறுவது குறைந்து போனது. மூவேந்தர்கள் பேரரசுகளாக ஆகியதும், வைதீகச் சிந்தனையின் கருத்துக்கள் பரவியதும் இதற்கான காரணங்கள் எனலாம். அதனால் தான் மாதவி அளவு கண்ணகி கல்வியறிவும் கலைஅறிவும் பெறவில்லை.

        கிரேக்கத்தில் ஏதென்சில் உள்ள உயர்குடியைச் சேர்ந்த குடும்பப் பெண்களைவிட பரத்திமை நிறுவனங்களில் இருந்த பெண்கள்தான் கல்வியிலும் கலைகளிலும் சிறந்து விளங்கினர். கிரேக்க உயர்குடிப்பெண்கள், அதன் பொற்காலத்தில் கல்வியறிவுகூட இல்லாதவர்களாகவும் குடும்ப பணிகளை செய்வதற்கான ஒரு தலைமை வேலைக்காரர்களாகவுமே நடத்தப்பட்டனர். கிரேக்கத்தில் மிகச் சிறந்த பெண் என்பவள் ஒரு பொது மகளாக இருந்தாக வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் ஸ்பார்ட்டவில் நிலைமை வேறுபட்டதாக இருந்தது. அங்கு பரத்திமை மதிக்கப்படவில்லை. உயர்குடிப் பெண்கள் நல்ல குணமும் மதிப்பும் உடையவர்களாகக் கருதப்பட்டனர்-(18).

            ஆதலால் ஏதென்சில் சாதாரணக் குடும்பங்களில் இருந்து வந்த பெண்கள் கல்வியறிவோ, கலையறிவோ பெற்றிருக்கவில்லை. பரத்திமைப்பெண்கள் தான் எங்கும் கல்வியறிவும், கலையறிவும் பெற்றவர்களாக இருந்தனர். ஆனால் தமிழகத்தில் தான் சாதாரணக் குடும்பப் பெண்கள் கூட கல்வியறிவு பெற்றவர்களாக இருந்துள்ளனர். ஆனால் மூவேந்தர் அரசுகள் பேரரசுகள் ஆகிய காலமான கி.மு. 1ஆம் நூற்றாண்டுக்குப் பின் இந்நிலைமை மாறத் தொடங்கிவிட்டது எனலாம்.

          கி.மு. 150 க்குப்பின் சமண, பொளத்த மடங்கள் தமிழகத்தில் உருவாகியிருந்த போதிலும் கி.பி.க்குப்பின் தான் அவை கல்வி கற்பிக்கும் கூடங்களாக உருவாகின. அவைகளும் கூட பெரு நகரங்களில் மட்டுமே செயல்பட்டு வந்தன. ஆனால் அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தின் சிற்றூர்களில் வாழும் சாதாரண மக்கள் கூட எழுதப் படிக்கக் கற்றிருந்தனர். அதில் சிலர் சங்க இலக்கியம் போன்ற உயர்தரமான இலக்கியத்தைப் படைக்கும் அளவு படைப்பாளிகளாக இருந்தனர். தொகை நூல்களில் இருக்கும் கல்வி, கற்றல், புலமை பற்றிய குறிப்புகளும், கல்வி, கற்றல், புலமை பற்றிய கருத்தாக்கங்களும் சமயம் சார்ந்ததாக இருக்கவில்லை என அறிய முடிகிறது. ஆக மிக நெடுங்காலங்களுக்கு முன்னரே தனக்கான ஒரு கல்வி முறையைத் தமிழகம் கொண்டிருந்தது, அதுவும் பரவலாக அனைத்து மக்களும் அக்கல்வியைப் பெறுமளவு அக்கல்விமுறை இருந்தது என்பது தான் மிகப்பெரிய விடயமாகும். தமிழகத்தின் கல்வி முறைக்கும் அதன் மெய்யியல் வளர்ச்சிக்கும் இடையே மிகப்பெரிய தொடர்பு இருந்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியடைந்த பொருள்முதல்வாத மெய்யியல் தனக்கே உரித்தான தனித்துவமான கல்விமுறையைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியிருந்தது.

                                                        - தொடரும்

- கணியன் பாலன், ஈரோடு

பார்வை:

1.தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, இந்தியத் தத்துவம்- ஓர் அறிமுகம், தமிழில் வெ. கிருஷ்ணமூர்த்தி, 2010, பக்:50-53.

2.    “     “     பக்: 195, 196.

3.   “   “     பக்:  201-209. உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எசு. தோதாத்ரி, NCBH,  ஜூன் 2010, பக்: 486-513.

4.தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, உலகாயதம், தமிழில் தோதாத்ரி, NCBH, ஜூன் 2010 பக்: 71-73.

5.   “    “    பக்:267.

6.தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, இந்தியத் தத்துவம்- ஓர் அறிமுகம், தமிழில் வெ. கிருஷ்ணமூர்த்தி, 2010, பக்:268-274.

7.    “    “     பக்: 313, 314 

8.க. நெடுஞ்செழியன்,சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும், 2009, பக்: 22, 23, 29.

9.தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, உலகாயதம், தமிழில் தோதாத்ரி, NCBH, ஜூன் 2010 பக்: 456-458.

10.     “       “      பக்: 210-216.               

11.முனைவர் க. நெடுஞ்செழியன், சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும், 2009, பக்: 18, 19, 21-23, 84.

12.முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்கள், தமிழர் இயங்கியல் - தொல்காப்பியமும், சரக சம்கிதையும், 2009, பக்: 51.

13, 14. நா.வானமாமலை அவர்கள், தமிழர் பண்பாடும், தத்துவமும், அலைகள் வெளியீட்டகம், 2008, பக்: 96, 126-130.

15. An epigraphic perspective on the antiquity of Tamil – Iravatham Mahadevan, The Hindu.  dt 24.6.2010.

16.பேராசிரியர் அ. பாண்டுரங்கன், ‘தொகை இயல்’ பக்: 194.

17.சேவியர் தனிநாயகம் அடிகளார், ‘பண்டையத்தமிழ் சமூகத்தில் கல்வி’ டிசம்பர்-2009, பக்: 64, 65.

18.ஏங்கெல்சு, “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” பாரதி புத்தகாலயம், பதிப்பு-2008, பக்: 80, 81.

Pin It