அடிப்படை அரசியல் நாகரிகமற்ற, நான்காம் தர தலைவர்கள் போல் பேசிய இளங்கோவனின் ரசக்குறைவான வார்த்தைகளுக்காக, இளங்கோவனையும், காங்கிரசாரையும் வறுத்தெடுக்கும் ஊடகவியலாளர்கள், இதற்கு முன்பு இதுபோல் ரசனையற்ற பேச்சுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத ஊடகங்கள், இந்தப் பேச்சையே தினம், தினம் விவாதமாக்கி வியாபாரம் செய்யும் ஊடகங்கள், எச்.ராஜா போன்றவர்களின் மகா மட்டமான பேச்சுகளுக்கு இதே அளவு முக்கியத்துவம் கொடுத்தார்களா? இந்த வினாவிற்கான விடையை ஊடகவியலாளர்களிடமே விட்டு விடுகிறேன்...

H Raja 340முந்தைய காலங்களில் திமுகவின் தீப்பொறி பேச்சாளர்களில் ஒருவரான வெற்றி கொண்டான் அவர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பேசிய கொச்சையான வார்த்தைகளையும், இளங்கோவன் பேசியதையும் ஒப்பிட்டுப் பார்த்தால், மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை உணரலாம்..

அப்போதெல்லாம் இந்த அளவிற்கு கொந்தளிக்காத அதிமுகவினர், இன்று கொக்கரிப்பதைப் பார்த்தால், அதனுள் ஒளிழிந்திருக்கும் மட்டமான அரசியல் பாமரனுக்கும் பட்டவர்த்தனமாகத் தெரிந்ததே..!!!

ஹெச்.ராஜா என்ற கழிவறை அரசியல்வாதி, வைகோவைப் பார்த்து மோடியை விமர்சித்து விட்டு பாதுகாப்பாக விடு திரும்ப முடியாது என்று பகிரங்கமாக மிரட்டல் கொடுத்தார்; தென்னகத்து சாக்ரடீஸ் அய்யா பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்றார். திராவிடர் கழகத்தை சார்ந்த வழக்குரைஞர் அருள்மொழி அவர்களுக்கு தாலி கட்டி விடுவேன் என்றார். இன்னும் ஏராளமான அருவருப்பு பேச்சுக்கள்.. இது பற்றி தமிழக பாஜகவைச் சார்ந்தவர்களிடம் கேள்வியெழுப்பும் போது, அது அவரது தனிப்பட்ட கருத்து என்று அவரின் பாசிச கருத்துக்களுக்கு முலாம் பூசி வருகின்றனர்.

சுப்பிரமணிய சாமி அவருக்கே உரிய கீழ்த்தரமான பாணியில், தமிழர்களை பொறுக்கிகள் என்று விமர்சித்த போது அதுவும் அவரது தனிப்பட்ட கருத்தாகவே மாறியது.

இப்போது மட்டும் இளங்கோவனின் பேச்சு ஒட்டு மொத்த காங்கிரசாரின் கருத்துக்கள் போன்று, சித்திரத்தை வரைவது சற்றும் சகித்துக் கொள்ள முடியாதது.

ஆக மொத்தத்தில் மது எதிர்ப்புப் போராளி அய்யா சசி பெருமாள் அவர்கள் உயிர்கொடுத்து துவக்கி வைத்த போராட்டம்!! இளங்கோவனின் பேச்சை காரணமாக்கி, அதை தனக்கு சாதமாக்கி ஒட்டு மொத்த கவனத்தையும் திருப்பி, சாராய எதிர்ப்புப் போராட்டத்தை சாகடித்து விட்டது ஆளும் சாராய அரசு!!

- ஆழ்வை சம்சுதீன்

Pin It