amitshah tamizhisai

 ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சதித்திட்டத்தை அரங்கேற்றி எப்படியாவது ஆட்சியைப் பிடிக்கும் பாஜக தமிழ்நாட்டில் எவ்வளவோ தகிடுதத்த வேலைகளைச் செய்து பார்த்தும் அதன் பப்பு வேகவில்லை. பாஜகயின் அங்கீகரிக்கப்பட்ட சதித்திட்ட வடிவமைப்பாளரான அமித்ஷா தன்னுடைய பெருமண்டையில் இருக்கும் சிறிய மூளையை எவ்வளவு கசக்கியும் ஒரு சட்டசபை தொகுதியைக்கூட தமிழ்நாட்டில் பெறமுடியாத துர்பாக்கிய நிலையிலேயே இன்றும் உள்ளது.

 கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆதிக்கச்சாதிக் கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு களம் இறங்கியும் கன்னியாகுமரியைத் தவிர மற்ற இடங்களில் காணாமல் போனது. ஏற்கெனவே பா.ஜ.க கூட்டணியில் இருந்து ம.தி.மு.க வெளியேறி விட்டது. பா.ம.க அதிகாரப்பூர்வமாக வெளியேறவில்லை என்றாலும் பா.ஜ.கவைப் போலவே கிடைக்கும் இடத்தில் எல்லாம் துண்டுபோட்டு வைக்கும் கட்சி பா.ம.க. எனவே அதையும் நம்பமுடியாது. அடுத்து தே.மு.தி.க, சொல்லவே வேண்டாம், அவர் யாருடன் கூட்டணி வைக்கப் போகின்றார் என்பது கடவுளுக்கும், கேப்டனுக்கும் மட்டும்தான் தெரியும். அடுத்து அதன் கூட்டணியில் இருக்கும் சில்லரைக் கட்சிகள் எல்லாம் ஐம்பது ஓட்டு, நூறு ஓட்டு உடைய கட்சிகள். இதை வைத்துக்கொண்டு வரும் சட்டசபைத் தேர்தலை சந்தித்தால் சந்திசிரித்துவிடும் என்பதால் தன்னுடைய புதிய வியூகத்தை அரங்கேற்றி இருக்கின்றது பாஜக.

 தமிழ் நாட்டில் ஆதிக்கச்சாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கும் போதும், அவர்களது வீடுகளைக் கொளுத்தும்போதும் அதற்கு ஆதரவாக நின்ற பாஜக இப்போது தன்னுடைய பார்ப்பன பாசத்தை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திருப்பி உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களை அவர்களின் சாதி இழிவில் இருந்து மீட்க வந்த மீட்பானாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றது. சமீபத்தில் மதுரையில் தேவேந்திர தன்னார்வ அறக்கட்டளையினர் நடத்திய மாநாடே இதற்கு சாட்சி. இந்த மாநாட்டில் பாஜக சார்பில் பங்கேற்ற பெரும் தலைகளில் தமிழிசையைத் தவிர அமித்ஷா, இல.கணேசன், எச்.ராஜா, ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற அனைவரும் பார்ப்பனர்கள். இவர்கள் தான் தாழ்த்தப்பட்ட மக்களை அவர்களின் தீண்டாமைக் கொடுமைகளில் இருந்து மீட்க வந்த மீட்பான்களாம். என்ன கொடும சார் இது!

 தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் பள்ளர் சாதியினர் அதிகம் உள்ளனர். இவர்களில் ஏழு உட்பிரிவினர் உள்ளனர். குடும்பர், பண்ணாடி, காலாடி. கடையர், தேவேந்திர குலத்தார், பள்ளர், வாதிரியார் போன்றவர்கள். இவர்கள் அனைவரையும் ஒன்றாக சேர்த்து தேவேந்திர குல வேளாளர்கள் என பொதுப்பெயரில் அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. போன தி.மு.க ஆட்சியில் இதற்காக நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அதற்குப் பின்பு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசும் இந்தப் பிரச்சினையைக் கண்டுகொள்ளவில்லை. எதை வைத்தாவது அரசியல் செய்து தமிழ்நாட்டில் காலூன்ற துடித்துக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு வெளிக்கி இருக்கப் போனவனுக்கு விளாம்பழம் கிடைத்த கதையாக இந்தப் பிரச்சினை கிடைத்திருக்கின்றது. உடனே ஒரு மாநாட்டைக் கூட்டி விட்டார்கள். சும்மா கோரிக்கை வைத்தால் மட்டும் நிறைவேற்றி விடுவார்களா? அதில் பாஜகவுக்கு என்ன லாபம்? அதுதான் தேவேந்திர தன்னார்வ அறக்கட்டளையின் தலைவர் தங்கராஜை விட்டே பார்ப்பனியத்திக்கு ஆதரவாகப் பேச வைத்திருக்கின்றார்கள்.

 “தேவேந்திர சமுதாயத்தினர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் கிடையாது. இவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் அல்ல, பசுவை தெய்வமாக வணங்குபவர்கள்”.

 “எங்களுக்கு எஸ்.சி என்ற பட்டமும் வேண்டாம். அதனால் கிடைக்கின்ற இட ஒதுக்கீடும் வேண்டாம்”

 மாநாட்டில் கலந்துகொள்ளும் அமித்ஷாவை மகிழ்விப்பதற்காகவே திட்டமிட்டு இப்படியொரு உரையை அதுவும் தங்கராசைவிட்டே பேச வைத்திருக்கின்றனர். பசுவை தெய்வமாக வணங்குபவர்கள், மாட்டிறைச்சி சாப்பிடாதவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் அல்ல என்றால் என்ன அர்த்தம்? அதை சாப்பிடுபவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் அப்படித்தானே! தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நடத்தப்பட்ட மாநாட்டில் கூட பார்ப்பனியம் எப்படி பல் இளித்துக்கிடக்கின்றது என்று பாருங்கள்!

  இட ஒதுக்கீடு வேண்டாம் என்றால் எஸ்.சி பட்டம் போய்விடுமா? என்ன ஒரு மோசமான சிந்தனை. அப்படி ஒரு சூழ்நிலை இந்தியாவில் நிலவுகின்றதா? அப்படி இட ஒதுக்கீடு வேண்டாம் என்றால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டம் எல்லாம் போய்விடுமா? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உழைக்கும் மக்களை சூத்திரன் என்றும், பஞ்சமன் என்றும் பிரித்துவைத்து அவர்களுக்கு கல்வி மறுத்து, அவர்களை மற்றவர்களை அண்டிப்பிழைக்க வேண்டிய பஞ்சைப் பரியாரிகளாய் மாற்றிய இந்திய பார்ப்பனிய சமூகம் நீங்கள் இட ஒதுக்கீடு வேண்டாம் என்றால், உங்களை சகோதரனாக ஏற்றுக்கொள்ளுமா?

இட ஒதுக்கீடு என்பது சாதியின் பெயரைச் சொல்லி நம்மை சுரண்டிக்கொழுத்த ஆதிக்க சாதிகளிடம் இருந்து கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் நம்மை மீட்டெடுப்பதற்காக பெரியார், அம்பேத்கார் போன்றவர்கள் போராடி வாங்கித் தந்தது. இட ஒதுக்கீடு என்பது பிச்சை அல்ல; அது நம்முடைய உரிமை. இட ஒதுக்கீட்டால் தான் இன்று சூத்திரர்களும், பஞ்சமர்களும் ஒரளவேனும் பொருளாதாரத் தளத்தில் உயர்ந்து இருக்கின்றார்கள். சாதிய இழிவு நீங்கவில்லை என்பது உண்மைதான். அதற்காக இடஒதுக்கீட்டை வேண்டாம் என்று சொல்வது அபத்தமானதாகும்.

 இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லி விட்டால் இந்தியாவில் சாதிகள் இல்லாமல் போய்விடுமா? அல்லது அமித்ஷாவும், ஆடிட்டர் குருமூர்த்தியும், எச்.ராஜாவும், இல.கணேசனும் அவர்களுடைய பெண்களை சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும் திருமணம் செய்து தரப்போகின்றார்களா? ஒன்றும் கிடையாது. கோவிலுக்குள்ளேயே நம்மை விடாத இந்த அயோக்கியர்கள்தான் நம்முடைய சாதிய இழிவை நீக்கப் போகின்றார்களா? யாரால் நாம் அசிங்கப் படுத்தப்பட்டோமோ, யாரால் நாம் அவமானப் படுத்தப்பட்டோமோ அவனிடமே சென்று அதற்கான நிவாரணத்தைக் கேட்பது எந்த வகையான மான உணர்ச்சி! பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த போது இதில் எவனாவது ஒருவன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தானா? இல்லை இமானுவேல் சேகரன் அவர்களை தங்களுடைய தலைவராக ஏற்றுக்கொள்ள இவர்கள் தயாராக இருக்கின்றார்களா? போயும் போயும் அமித்ஷாவையும், இல.கணேசனையும், எச்.ராஜாவையும், ஆடிட்டார் குருமூர்த்தியையும் வைத்து மாநாடு நடத்துகின்றார்களே! இது ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.

 பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு தமிழ் நாட்டில் களம் அமைத்துக் கொடுக்கும் இது போன்ற அமைப்புகளை தாழ்த்தப்பட்ட மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவர்களது உண்மையான நோக்கம் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை கிடையாது. அவர்களை பார்ப்பன பாசிஸ்டுகளிடம் அடகுவைத்து வருமானம் ஈட்டுவதே. எஸ்.சி. என்ற அடையாளத்தை அழிப்பதென்பது இந்த கட்டமைப்பினால் எப்போதும் முடியாத ஒன்று. கருத்தியல் தளத்திலே சாதி, ஆதிக்கம் செய்துகொண்டு இருக்கும்போது இட ஒதுக்கீட்டை துறந்தால் சாதிய இழிவு நீங்கிவிடும் என்று நினைப்பது முட்டாள் தனமாகும். சாதிய இழிவு கண்டிப்பாக அழித்தொழிக்கப்பட வேண்டும். ஆனால் அதை அமித்ஷாவும், எச்.ராஜாவும், இல.கணேசனும் செய்வார்கள் என்று சொன்னால் நாம் எதனால் சிரிப்பது என்று தெரியவில்லை!

- செ.கார்கி

Pin It