திமுக தலைவர் கருணாநிதி தமிழகத்தில் மதுவிலக்கு அறிவிக்கப்படும் என சமீப காலங்களில் மிகத் தீவிரமாக கூறி வருகிறார். இதை நாம் வரவேற்கும் நிலையில், இவரது இந்த அறிவிப்பு எவ்வளவு நேர்மையானது என, தமிழ் சமூகம் அய்யா சசிபெருமாள் அவர்கள் மதுவிலக்கு கோரி போராடி ஈகியான இந்த நிலையில் ஆராய வேண்டியது கட்டாயம் அவசியமாகும்.

karunanidhi 261மு.கருணாநிதி அவர்கள் தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத போது எப்போதும் தன்னை தமிழர் நலன் காக்கும் தலைவராகவும், ஆட்சியில் இருந்தால் டெல்லியிடம் மண்டியிட்டுக் கிடக்கும் - அவர்கள் இடும் அனைத்து உத்தரவையும் தலை மேல் தூக்கி வைத்து நடைமுறைப்படுத்தும் இந்தியனாகவுமே இருப்பார். தனது கட்சியின் அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கைக்கு மாற்றாக, 'சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு' கொண்டு வர ஆதரவு கொடுத்ததும், காட் ஒப்பந்ததை ஆதரித்து நடைமுறைப்படுத்தியதும், 'கூடங்குளம் அணு உலை'யை அமைக்க நடவடிக்கை எடுத்ததும் நம் கண் முன் நிழலாடும் சில உதாரணங்கள். சொல்லுக்கும், செயலுக்கும் முரணாக இருப்பது என்பதுவே அவரது சுருக்கமான 50 ஆண்டுகால வரலாறு ஆகும்.

தற்போது தமிழகத்தில் உள்ள மதுபான உற்பத்தி ஆலைகளில்

திமுக கட்சியின் முன்னணித் தலைவராக உள்ள டி.ஆர்.பாலு அவர்கள் நடத்தும் 'கோல்டன் வாட்ஸ்',

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகதத்ரட்சகன் அவர்கள் நடத்தும் 'எலைட்',

கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான படத்தைத் தயாரித்த ஜெயமுருகன் அவர்கள் நடத்தும் 'எஸ்என்ஜே',

திமுகவுக்கு நெருக்கமானவரான காரைக்காலைச் சேர்ந்த வாசுதேவன் அவர்கள் நடத்தும் புதுக்கோட்டை 'கால்ஸ்',

திமுக ஆட்சியில் தென்னை விவசாயிகள் நல வாரியத் துணைத் தலைவராக இருந்த கிருஷ்ணசாமி என்பவரின் மகன் தரணிபதி நடத்தும் 'இம்பெரியல்' போன்றவை உள்ளது. அவை அஇதிமுக ஆட்சிக்கு வந்ததால் தொழில் நடத்த முடியாமல் முடங்கிப் போய் மூடப் படவில்லை. இப்போதும் பல்லாயிரம் கோடிக்கு அவை மதுபானம் உற்பத்தி செய்து வருகின்றன.

கோல்டன் வாட்ஸ் = 3 வருடம் = ரூ.1664 கோடி மதுபானம் உற்பத்தி
'எலைட்' = 3 வருடம் = ரூ.2444 கோடி மதுபானம் உற்பத்தி
'எஸ்என்ஜே' = 3 வருடம் = ரூ.3892 கோடி மதுபானம் உற்பத்தி
'கால்ஸ்' = 3 வருடம் = ரூ.3777 கோடி மதுபானம் உற்பத்தி
இம்பெரியல் = 3 வருடம் = ரூ.1591 கோடி மதுபானம் உற்பத்தி

என, கடந்த மூன்று ஆண்டுகளில் (2011-2014), திமுக முதலாளிகள் மட்டும் மொத்தம் ரூ.13,368 கோடிக்கு மதுபானம் உற்பத்தி செய்து கொடுத்து, தமிழகத்திற்கு மாபெரும் 'மக்கள் சேவை' செய்துள்ளனர். அவர்களுக்கு ஜென்ம விரோதியாக காட்டிக் கொள்ளும் அஇதிமுக ஆட்சியிலேயே இப்படி என்றால் திமுக ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் எனச் சொல்ல தேவையில்லை.

இப்படிப்பட்ட மதுபான முதலாளிகள் எனப்படும் மது மஃபியாக்களை உள்ளடக்கி வைத்துள்ள திமுக, இந்தக் கட்சிக்கு பணம் கொட்டும் கற்பக விருட்சமாக இருந்து, மதுபான மஃபியாக்கள் நடத்தும் மதுபான தொழிற்சாலையின் வருமானம் பாதிக்கப்படாமல் எப்படி மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்துவார்கள் என்பதே நம் முன் உள்ள கேள்வி.

ஒரு காலத்தில் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் என்ன சொன்னாலும் அதை மக்கள் அப்படியே நம்பிக் கொண்டு விடுவார்கள் என்ற நிலை எல்லாம் இருந்தது.

தமிழக அரசு உடனடியாக மதுவிலக்கு அறிவிக்க வேண்டும் என்று உண்மையில் திமுகவினர் சொன்னால், முதலில் தங்கள் கட்சியான திமுகவுக்கு நெருக்கமானவர்கள் நடத்தும் மதுபான தொழிற்சாலைகளை மூடுகிறோம் என்று அறிவித்து முன் மாதிரியாக இருக்கத் தயாரா?. மதுபான ஆலைகள் நடத்துபவர்கள் அனைவரும் பல்லாயிரம் கோடி சொத்து கொண்டவர்களே. இந்தத் தொழிலை மூடினால் அடுத்த வேலை சோற்றுக்கு கதி அற்றவர்களோ, ஆலை மூடினால் கடன்பட்டு வாழ்கை இழந்து விடுபவர்களோ இல்லை. இதை நாம் கேட்டால், நமது நியாயத்தைப் பார்க்காமல், நம்மை பற்றி அவதூறு பேசி, மக்களிடம் திசை திருப்ப பல்வேறு பொய்யான விளக்கம் மட்டும் செய்வார்கள்.

ஆட்சியில் இருக்கும் போது, ஊழல் செய்கிறீர்களே எனக் கேட்டால் 'தேனை எடுத்தவன் புறங்கையை நக்குவான்' என விளக்கம் தருவதும், நீங்கள் மக்களிடம் தேர்தல் அறிக்கையில் சொல்லி இருப்பதை செய்யவில்லையே எனக் கேட்டால் 'வெறும் கரண்டி இருந்தால் எப்படி வேண்டுமானாலும் ஆட்டி ஆட்டி பேசலாம், ஆனால் கரண்டியில் பருப்பு இருந்தால் பார்த்துதான் நடக்க வேண்டும்' எனக் கூறி ஆட்சியில் இருந்தால் தான் எப்படிபட்டவன் என்றும், ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்றால் எப்படி இருப்பேன் என்றும் தனது நிலைமையை உவமையோடு கூறி, மு.கருணாநிதி அவர்கள் தனது நிலையை பலமுறை தெளிவுபடுத்தி உள்ளார். இந்த நிலைமையில் இருந்தே அவரது மதுவிலக்கு அறிவிப்பைப் பார்க்க வேண்டி உள்ளது.

இன்று பல்வேறு கட்சிகள், மக்கள் இயக்கங்கள் மதுவை எதிர்க்கும் மக்களின் மனநிலைமையை உணர்ந்து, டாஸ்மாக்கை எதிர்த்து முற்றுகை போராட்டங்கள் உட்பட பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்திக் கொண்டு, தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்படும் வகையில் களத்தில் நின்று போராடி வருகின்றனர்.

கடந்த காலங்களில் பல்வேறு முற்போக்கு, புரட்சிகர அமைப்புகளும், பல்வேறு கட்சியினரும் பல வகையில் மக்களைத் திரட்டி அரசுக்கு எதிராக போராட்டங்களை வீரியமாக நடத்தி, அடக்குமுறைகளை சந்தித்து அரசு எதிர்ப்பு மனநிலையை உருவாக்கி வைத்து இருக்கும் நிலையில், தேர்தல் நெருங்கும் கடைசி நேரத்தில் வலிமையான தேர்தல் கூட்டணி என ஒன்றை நீங்கள் உருவாக்கி, தமிழக அதிகாரத்தை பலமுறை கைப்பற்றியுள்ளீர்கள். அது போல் இப்போது முடியாது. இனி மேலும் நீங்கள் 'நீ அரிசி கொண்டு வா, நான் உமி கொண்டு வருகிறேன். இருவரும் கலந்து சேர்ந்து ஊதி, ஊதி திங்கலாம்' என்ற கதை இனியும் தமிழகத்தில் நடக்காது.

உங்களைப் போன்ற அரசியல் கட்சிகள்- மதுபான மஃபியாக்கள் -அதிகாரிகள் கள்ளக் கூட்டு என்பதெல்லாம் இன்று மக்கள் மத்தியில் அம்பலமாகி ஊரெல்லாம் அறியப்பட்டு கிடக்கிறது. ஊடகங்களும், சமூக வலைதளங்களும் பல்வேறு உண்மைகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்க்கின்றன. எனவே கருணாநிதி அவர்களே, இப்போவாவது நீங்கள் சொல்வதற்கு உண்மையாக இருங்கள். 100 வயதைத் தொடும் அகவையில் உள்ள மிக மூத்தவரான நீங்கள் இப்போதாவது சொல்லுக்கும் செயலுக்கும் முரண் இல்லாமல் அறம் சார்ந்து செயல்படுங்கள். மக்கள் நம்பக் கூடியவாறாக செயல்படுங்கள்.

இல்லையென்றால், வரலாற்றின் குப்பைத் தொட்டியில் உங்களுக்கு ஒரு இடம் காத்துக் கொண்டு இருக்கும்.

- முகிலன்

Pin It