ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத இரண்டு சம்பவங்கள் ஒரே செய்தியை இரு வேறு கோணங்களில் நமக்கு உணர்த்தி இருக்கின்றது. ஒன்று கலாமின் மறைவு; மற்றொன்று யாகூப் மேமன் தூக்கு. ஒரு புறம் கலாம் என்ற இஸ்லாமியருக்காக ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி போன்ற இஸ்லாமிய எதிர்ப்பு சித்தாந்தத்தையே கொள்கையாகக் கொண்டிருப்பவர்கள் கூட கண்ணீர் வடிக்கின்றார்கள். மறுபுறம் யாகூப் மேமன் என்ற இஸ்லாமியரை தூக்கில் போடச் சொல்லி மூர்க்கத்தனமாக போராடினார்கள். ஒரு புறம் கண்ணீரை துடைக்க கைக்குட்டை உடன் ராமேஸ்வரம் சென்ற அவர்கள், மறுபுறம் குரல்வளையை நெரிக்க தூக்குக் கயிருடன் நாக்பூருக்குப் போனார்கள். வரலாற்றில் இது போன்ற நிகழ்வு இனி நிகழுமா என்று நமக்குத் தெரியாது. அதனால் சில உண்மைகளை இந்த முரண்பட்ட செயல்பாடுகளில் இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

 yakub memon1993 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியதாக நம்பப்படும் தாவூத் இப்ராகிம் மற்றும் டைகர் மேமன் போன்றவர்கள் இன்னும் தலைமறைவாகவே உள்ளனர். இந்த சம்பவத்தில் டைகர் மேமனின் சகோதரர் யாகூப் மேமனுக்கும் தொடர்புள்ளதாக சி.பி.ஐ அறிவித்தது. அவர் மீது தாக்குதலுக்கு சதி செய்தல், பண உதவி செய்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. எனவே தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் போலியானவை என்பதை நிரூபிக்க யாகூப் மேமன் பாகிஸ்தானில் இருந்து தானாவே வந்து சி.பி.ஐ யிடம் சரணடைந்ததாக சொல்லப்படுகின்றது.

இந்திய நீதிமன்றங்களில் புரையோடிப்போய் இருக்கும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை அறியாத யாகூப் மேமன் அவர்கள் தானாகவே வந்து மாட்டிக்கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும். அவர் மீதான குற்றச்சாட்டுகள் இன்றுவரை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால் இந்தியாவில் ஒரு முஸ்லீம் தூக்கில் இடப்படுவதற்கு ஆதாரம் எதுவும் தேவையில்லை; அவர் ஒரு முஸ்லீமாக இருந்தாலே போதுமானது. இந்தியா எப்போதும் இவ்வாறுதான் தன்னுடைய பார்ப்பனிய கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்தி வந்திருக்கின்றது. அப்சல் குருவை தூக்கில் போடுவதற்கு என்ன ஆதாரம் இந்திய நீதிமன்றங்களுக்கு தேவைப்பட்டது? அவர் ஒரு முஸ்லீமாக இருந்தார். அதுவே அவரை தூக்கில் போடுவதற்கு போதுமானதாக இல்லையா!.

 அப்சல் குருவாக இருந்தாலும், யாகூப் மேமனாக இருந்தாலும் அல்லது வேறு எந்த முஸ்லீமாக இருந்தாலும் கதை ஒன்றுதான். இங்கே அரசியல் செய்வதற்காக பாபர் மசூதி இடிக்கப்படும்; குஜராத், முஸ்லீம்களின் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படும். ஆனாலும் அவர்கள் பேசாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவர்களுக்கு மாலை மரியாதை, ஏன் குடியரசுத் தலைவர் பதவிகூட கிடைக்கும். ஆனால் அவர்களை எதிர்த்துப் பேசினார்கள் என்றால் அவர்கள் கதை அவ்வளவு தான். அப்துல் கலாம் போன்றவர்கள் அப்சல்குருவிடம் இருந்தும், யாகூப் மேமனிடம் இருந்தும் வேறுபடுவது இந்தப் புள்ளியில்தான்.

 முஸ்லீம்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக இந்திய அரசு கட்டுமானத்தில் எங்கு வேண்டும் என்றாலும் போய் முறையிடலாம். ஆனால் எதுவும் நடக்கப்போவது கிடையாது. அனைத்து துறைகளும் ஏற்கனவே திட்டமிட்டு காவிமயப்படுத்தப்பட்டுவிட்டது. காவல்துறை, நீதிமன்றம் என எல்லாமே இன்று சங்பரிவாரங்களின் கோட்டையாக மாறியிருக்கின்றது. அதற்கு இன்னும் ஓர் உதாரணம்தான் யாகூப் மேமன் படுகொலை!

யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்குமாறு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்திருந்தனர். ஆனால் அந்த மனுவும் நிராகரிக்கப் பட்டுவிட்டது. பி.ஜே.பி ஆளும் மகாராஸ்ட்டிரா மாநிலத்தின் ஆளுநரும் அவரது கருணை மனுவை நிராகரித்து இருக்கின்றார். விடிய விடிய உச்சநிதிமன்ற நீதிபதி தத்து வீட்டில் நடந்த மேல்முறையிட்டு மனு மீதான கடைசி கட்ட விசாரணையும் யாகூப் மேமனுக்கு எதிராகவே முடிந்து விட்டது. ஓர் அப்பாவியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு விடிய விடிய நடந்த சட்டப் போராட்டம் ஒரு முடிவை அடைந்து விட்டது. இன்று காலை 7 மணிக்கு அவர் மகாராஸ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டு விட்டர். அதுவும் அவரது பிறந்த நாள் அன்றே! எவ்வளவு குரூரமானது நமது அரசு அமைப்பு! இந்திய நீதித்துறையின் மீது நம்பிக்கை வைத்து தானாகவே வந்து சரணடைந்த அந்த அப்பாவி இளைஞரை ஏறக்குறைய 21 ஆண்டுகள் சிறையிலேயே வைத்திருந்துவிட்டு இப்போது கொன்றிருப்பது என்பது விலங்காண்டித்தனமான செயலாகும்.

உண்மைக் குற்றவாளிகளை பிடிக்க துப்பற்ற சி.பி.ஐ தன்னைக் காப்பாற்றிக் கொள்ள கையில் கிடைத்த யாகூப் மேமனை பலிகடா ஆக்கியிருக்கின்றது. இப்படித்தான் அப்சல் குரு பாராளுமன்றத் தாக்குதல் சம்பவத்தில் பலிகடா ஆக்கப்பட்டார். அப்போதும் பி.ஜே.பி தான் ஆட்சியில் இருந்தது. இப்போதும் அவர்கள் தான் இருக்கின்றார்கள். இது ஏதோ தற்செயலானது அல்ல. இந்த தூக்கு தண்டனையின் பின்புலத்தில் நிச்சயம் காவி மூளைகளின் சதித்திட்டம் இருக்கின்றது. ஆனால் அந்த சதித்திட்டம் ஒரு போதும் கண்டுபிடிக்க முடியாதது. இது போன்ற சதித்திட்டங்கள் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டுக் கொண்டே தான் இருக்கப் போகின்றது.

 உங்களுக்கு மாயாபென் கோட்னானி, பிரக்யாசிங் தாகூர், ஆசிமானந்தா, பாபு பஜ்ரங்கி போன்றவர்கள் எல்லாம் யார் என்று தெரியுமா? அவர்கள் எல்லாம் பாரத மாதாவின் புதல்வர்கள். நாளை அவர்களுக்கு பாரத ரத்னா விருதுகள் பாரதமாதாவின் தவப்புதல்வர் மோடியின் திருக்கரங்களால் வழங்கப்படும். அந்த நிகழ்ச்சியில் தத்து, பிரணாப் முகர்ஜி போன்ற நேர்மையான மனிதர்கள் கலந்து கொள்வார்கள். இந்திய மக்களாகிய நாம் கைதட்டி அவர்களை உற்சாகப்படுத்துவோம்!

- செ.கார்கி

Pin It