ஈராயிரம் ஆண்டு தமிழ் இலக்கியப் பரப்பில் தமிழ் உரைநடை இலக்கியத்தில் குறிப்பாக சிறுகதை, புனைகதை வடிவங்களில் புதுமை பித்தனுக்குப் பிறகு அசல் வாழ்க்கை பதிவை தமது எழுத்தில் கொண்டு வந்ததில் ஜெயகாந்தன் தனித்துவமான இடத்தை பெறுகிறார். புதுமைபித்தனின் கதை மாந்தர்கள் புதுமை பித்தனால் சற்றே தள்ளி நின்று பார்க்கப்பட்டவர்கள் என்றால் ஜே.கே.யின் கதை மனிதர்கள் அசல் வாழ்க்கையிலிருந்து வருவதாக இருந்தார்கள். அவர்களில் ஒருவராக பேசினார்கள், சிரித்தார்கள், அழுதார்கள். துக்கித்தார்கள், அன்பு செலுத்திக் கொண்டார்கள். விளிம்பு நிலை மனிதரிலிருந்து நடுத்தர, மற்றும் பிராமண வகுப்பின் சமூக அரங்கிலிருந்தும் வந்த எண்ணற்ற கதை மனிதர்கள் தமிழ் சமூக அமைப்பு குறித்த அதிரவைக்கும் கேள்விகளை சதா எழுப்பிக் கொள்பவர்களாக இருந்தார்கள். அதுவரையிலான தமிழ் நெடுங்கதை வடிவம் அரைவேக்காட்டுத்தனமான சிக்கலிருந்து அல்லது சிக்கலில்லாத-பொழுது போக்கின் கதை நுகர்விலிருந்து விலகி வாழ்வின் அசல் தரிசனத்தை நமக்கு வழங்குவதாக இருந்தது. வாழ்வின் சகலவிதமான சிடுக்களிலும் நுழைந்து அதற்கென்றொரு தீர்வினை அல்லது முன்யோசனை ஒன்றை வழங்கும் வீச்சுடன் புறப்பட்டிருந்தன ஜெயகாந்தனின் கதைகள்.

jayakandhan 243எனது சிறுபிராயங்களில் தினமணி வார இணைப்பான தினமணிக்கதிரில் வந்திருந்த சிலநேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள் போன்ற நெடுங்கதைகளை பழய இரும்பு பெட்டிகளில் பத்திரமாக பைண்டிங் செய்து வைக்கப்பட்டிருந்ததை வாசிப்புத் தாகம் எடுத்து படித்து முடித்துவிட்டிருக்கிறேன். எனக்கு ஜெயகாந்தனின் நாவல் தந்த அனுபவம் ஒரு பக்கம் என்றால், இப்படியான கதைகளை பத்திரப்படுத்தி, திரும்பத் திரும்ப வாசிக்கும் வாசக நிலை எப்படி உருவானது என்ற கேள்வி என்னுள் எழுந்தவாறிருந்தது. சிலநேரங்களில் சில மனிதர்கள், கங்கா எங்கே போகிறாள் போன்ற நெடுங்கதைகளின் கதாபாத்திரமான கங்கா பிறகு, ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் ஹென்றி, அக்னிபிரவேசத்தில் வரும் தாய் என சமூக மனிதர்களின் ஏகப்பிரதிநிதியாய் நின்று பேசும் கதாபத்திரங்கள் குறித்து அன்றைக்கு ஒவ்வொரு குடும்பமும் பேசி, விவாதித்து, கலைந்து போயிருக்ககூடும்.! அக்காவோ, அம்மாவோ பக்கத்து வீட்டு ஜெயா மாமியோ ஜெயகாந்தன் கதைகள் குறித்து புழக்கடையிலும், வாசல் முற்றத்திலும், வேலிகாத்தான்களை கிள்ளியபடிக்கு உரையாடிக் கொண்டிருப்பதை கண்டிருக்கிறேன்! சிலசமயங்களில் அவை திருபுரசுந்தரி என்ற லெட்சுமியின் கதாபாத்திரங்களுடன் ஒப்பிடப்படும் எனினும் அவை கறாறான அளவுகளுடன் தர்கரீதியில் ஜெயகாந்தனின் படைப்பு சித்திரங்களே முன்னிலை பெறும் என்பதே இப்போது நினைக்கும்போது ஜெயகாந்தன் படைப்புகள், எளிய வாசக தளத்தை ஒரு சமூகம் சார்ந்த பிரக்ஞை வெளிக்கு கொண்டு சேர்த்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

சித்தப்பாக்கள் விகடனில் வரும் ஜெயகாந்தனின் முத்திரைக் கதைகளை கெட்டி அட்டையில் வால்யூம்களாக செய்து வைத்திருப்பார்கள். புரியாத வயதில் அவற்றை எல்லாம் வாசிப்பதற்காகவே வாசித்து பின்னர் புரிந்த வயதில் நூலகத்தில் தேடிப்போய் படிக்க என ஜெயகாந்தனின் படைப்புகள் வசீகரித்தபடியே இருந்தன. பெரும்பாலும் நூலகத்தில் புத்தகம் எடுத்துப் படிக்கும் வாசகர்கள் பெரும் விமர்சனக்காரர்களாகவோ அல்லது தமிழ் படைப்புலகம் பற்றி கரைத்துக் குடித்தவர்களாகவோ இருப்பதில்லை. ஆனால் நூலகத்தில் படிக்கும் தம்மைத் தூண்டக்கூடிய படைப்புகள் குறித்து தமது சுய விமர்சனங்களை, கருத்துக்களை இரண்ரொரு வரிகளில் ஓசையற்ற எழுத்துகளில், நூலாசிரியர் எழுதியிருக்கும் நூலின் கடைசி பக்கத்திலோ அல்லது பக்க இடைவெளிகளிலோ அவ்வகை விமர்சனங்கள் இருக்கும். நூலக வாசகர்கள் அவ்வாறு எழுதி செல்வார்கள். எனக்குத் தெரிந்து அவ்வாறான கருத்துகளும், விமர்சனங்களும் ஜெயகாந்தனின் படைப்புகளுக்கே அதிகம் நேர்ந்துள்ளதை கண்டுள்ளேன்!. முகம் தெரியாத அந்த வாசகர்களின் சத்திய ஆவேசம் ஜெயகாந்தனின் படைப்புகளோடு, இணைந்தும், எதிர்த்தும் முழங்குவதாக இருக்கும். கங்கா என்ன செய்தாள்?, என்ன செய்திருக்கக்கூடாது?. அக்னி பிரவேசத்தின் தாய் கதாபாத்திரம் அவள் மீது தண்ணீர் ஊற்றியே எல்லா கறைகளையும் போக்குவதாக சொல்வது எத்தகைய அறம் அல்லது நீதி சார்ந்தது. கங்கை புனித நீர் என்றால் கங்கா ஒரு மனுஷி அவள் புனிதமாக இருக்க இயலாதா அல்லது ஒருவரை ஒருவர் தழுவி புனிமாக இயலாதா என்றெல்லாம் முட்டி மோதி வெடிக்கும். நமக்கு அந்த கதைகள் பற்றிய ஒரு முன் விளக்கமாகவோ அல்லது அதனைக் கொண்டு மேலே செல்லவோ அவை கைபற்றி உதவும். ஜெயகாந்தனின் வாசகர்கள் இப்படித்தான் இருந்தார்கள்.

தலித் எழுத்துக்கள், பெண்ணிய எழுத்துக்கள் என்று இன்றைக்கு வகைமைப் படுத்திப் பேசப்படும் எழுத்துக்கள் எல்லாம் அன்றைக்கு ஜெயகாந்தனின் எழுத்தில் வகைமையின்றி பேசப்பட்டன. ஒரு தலித் எழுத்தையோ அல்லது பெண்ணிய எழுத்தையோ எழுத தலித்தாகவோ, அல்லது பெண்ணாகவோ இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கெல்லாம் அப்பால் அவர்களின் வலி உணர்ந்து எழுதுதிவலேயே அவற்றை சாத்தியப்படுத்த இயலும் என்பதை தனது எழுத்தில் காட்டினார் ஜே.கே. அக்கினி பிரவேசம் என்பது விளிம்பு நிலை பெண் ஒருத்தியின் கதை அதை அப்படியே பிராமண சமூகத்தின் இடத்தில் பொருத்தி அதன் இன்னல்களையும், வாதைகளையும் வெளிக் கொண்டுவந்து, அச்சமூக பெண்களின் விடுதலையை கோருகிறார் ஜெயகாந்தன். கலாசார மடிமை மிகுந்த அச்சமூகத்தில் விளிம்பு நிலை சமூகத்தின் அறங்களை, நீதிகளை கொண்டு புதிய கதவுகளை திறந்துவிடுகிறார் அவர். புனைவை சாத்தியங்களுக்கு அப்பால் கொண்டு செல்லவதல்ல நிகழ் காலத்துடனே வைத்து மிகச் சரியாகப் பொருத்தி தீர்வு காண்பது என்பதை அவரது எழுத்துக்கள் சொல்வதாக இருந்தது.

சமூக, பொருளாதார, அரசியல் காரணங்கள் தனிமனித வாழ்வில் நிகழ்த்திப் போகும் துயரங்களை, சிக்கல்களை வாழ்வின் யதார்த்தத்தோடு இணைத்துப் பார்க்கும் கதைகள் அவரது நோக்கில் அபாரமாக வெளிப்பட்டன. மார்க்சிடமிருந்தும், எளிய மனிதர்களின் வாழ்விலிருந்தும் சிடுக்குகளிலிருந்து வெளியேறும் மந்திரத்தை கற்றிருந்தார். கதைபோக்கின் தீர்வை, முடிவினை அவரது நாயக நாயகிகள் எடுத்தனர். அது புனைவின் முன் முடிவல்ல மாறாக சமூகத்தில் எங்கோ அவை அவ்வாறே இருந்தன. அவரது படைப்புகள் அல்லது கதை மனிதர்கள் என்பது அவரும் தான். தத்துவங்கள் நம்மை விடுவிப்பதற்குத்தனே தவிர சிக்கிக் கொள்ள அல்ல என்பதை அவரது எழுத்தும் பேச்சும், இயக்கமாக இருந்ததை அவதானிக்கலாம். அதனால்தான் தன்னை ‘கட்சியில் இல்லாத கம்யூனிஸ்ட்’ என்று அழுத்தமாக பதிவு செய்து கொள்ள முடிந்தது. ஒரு படைப்பாளியாக கட்டுக்குள் அடங்கா போக்கு அவருக்குள் இருந்தது. இது பாரதிக்குள் இருந்தது, பாரதிதாசனுக்குள் இருந்தது. சுந்தரராமசாமியிடம் இருந்தது. இன்றைக்கு கோவைஞானி பிரபஞ்சன், போன்றோர் இவ் விதமானவர்களே!.

ஜெயகாந்தனின் சமூக அசைவியக்கம் என்பது அவரது படைப்புதளத்தில் சதா இயங்கியபடி இருந்தது. அவர் எங்கெங்கு இருந்து இயங்கினாரோ அவ்வம் இடத்திலிருந்தே வெளிப்பட்டவாறிருந்தது. ஆனால் அவை தளமாக இருந்ததே ஒழிய தமது எழுத்தை ஒருபோதும் அடகு வைக்கும் இடமாகக் கொண்டிருக்கவில்லை. தாமரையில் என்ன எழுதினாரோ அதுவே விகடனுக்கும், குமுதத்திற்குமானதாக இருந்தது. அவரது அரசியல் களமும் அவ்வாறே இருந்தது. மேடைகள் மாறிக் கொண்டே இருந்ததே தவிர அவர் மாறினாறில்லை. ஒரு குழந்தை எல்லா இடத்திலும் குழந்தையாகவே இருக்கும். புறச்சூழலுக்கு அவை விலை போய்விடுவதில்லை. அதனால்தான் ‘எதிலும் கட்டுபடாத சிசு’ என்று தன்னைப் பற்றி ஒரு முறை கூறியிருந்தார். குழந்தையின் விடப்பிடியான அழுகை கோருவது போலவே அவரது அடர்ந்த மீசையும், தலைமுடியும் சொற்களும் பூச்சாண்டிகள் யாதொருவரும் நெருங்கி காயப் படுத்திவிடக்கூடாத எச்சரிக்கையை நிரந்தரமாகக் கொண்டிருந்தது.

அரசியலிலும், படைப்பிலும் தனக்கு சரியெனப்பட்டவற்றில் துணிந்து நிற்பதன் வழியேதான் தனக்கான கம்பீரத்தை பெற்றுக் கொண்டிருந்தார் அவர். காந்தியத்தை அவர் அரசியலாக கண்டடைந்திருந்தார். ஆனால் யதார்த்தத்தில் அதை அவர் காந்திக்குப் பிந்தய அரசியலில் தரிசிக்க முனைந்ததில் ஒரு குழந்தையைப் போன்றே ஏமாந்து கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு படைப்பாளியின் அரசியல் வாழ்வு கண்ணதாசன் போன்றே அலைகழிப்பிற்கு உள்ளானதை ஜே.கே.விலும் காணலாம். அதை அவர்களது அரசியல் தோல்வி என்பதிலும் பார்க்க அரசியலின் தோல்வி என்றுதான் சொல்லவேண்டும். தனிமனித சுரண்டலும், ஊழலும் நிரந்தர கொள்கையாக மாறிவிட்ட நவீன அரசியலில் ஜே.கே. போன்றவர்களுக்கு என்ன இடம் இருந்திருக்க இயலும். ஜே.கே.வின் படைப்பு நேர்மையை அரசியல் நேர்மையாக ஒத்துக் கொள்ளாதவர்கள் அல்லது படைப்புத்தள வாசர்களே, வாக்களார்களாகவும் இருந்துவிட இயலாது என்பதை அவரது சட்டமன்றத்திற்கான பின்னடைவு காட்டியது. எது எப்படி என்றாலும் வெற்றியடைபவர்களுக்கும் தோல்வியடைபவர்களுக்கும் ஒரு சில வாக்குகளே சமயத்தில் ஒரு வாக்கு கூட முடிவு செய்வதை சூதாட்ட அரசியலாகவே கருதினார் அவர். மாறாக, பிரதிநிதித்துவ முறைப்படியான தேர்தலே, பாராளுமன்ற தேர்தல் சனநாயகத்தை வலிமைப்படுது்ம் என்று கூறிவந்திருந்தார்.

இந்திய அமைதிப்படை இலங்கையில் நின்றிருந்தபோது அவர் கூறிய கருத்துகளும், வீரப்பன் போன்றோர் விடயத்தில் அவரது பார்வைகளும் முதிர்ச்சியற்றவை என்ற கடும் விமர்சனம் அவர் மீது வைக்கப்பட்டிருந்தது. இலங்கையில் இந்திய அமைதிப் படை நடத்திய அட்டூழிங்களை அவரது தேசியப்பார்வையும், கட்சிப்பார்வையும் ஒன்று சேர்ந்து மறைத்துவிட்டன. பின்னாளில் இந்தியாவின் இலங்கை தலையீட்டை ஒருவாறு விளங்கி கொண்டபோதும் அவரது குரலுக்கான காலத் தேவை கடந்து போய்விட்டிருந்தது. அது போன்றே சந்தனக் கடத்தல் வீரப்பன் ஒரு சமூக விளைவு என்பதை ஒத்துக் கொண்டாலும் வீரப்பன் சுடப்பட்டதை நியாயப்படுத்தியிருந்தார். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் மனிதன் தண்டிக்கப்படக்கூடாது என்பதிலும், அதிரடிப்படையினரால் வனக்குடிகள் வதைக்கப்படுவது விடுத்து அவர்களது மேம்பாட்டிற்கு உதவுவது மட்டுமே வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி்க் கொள்ளவது சரியாக இருக்க முடியும் என்றார்.

ஒரு படைப்புலகவாதி அரசியலுக்கு வரும்போது நேரும் துயரங்கள் எல்லாவற்றையும் ஜே.கே.வும் எதிர்கொண்டார். தொழில்முறை அரசியல்வாதிகள் போன்ற ஒன்றை ஜே.கே.விடம் எதிர்பார்த்த நடைமுறை சனநாயகத்திற்கு பழக்கப்பட்டுப்போனவர்கள் அவரை சந்தர்ப்பவாதி என்றனர். ஜெயகாந்தனுக்கு அது ஒரு பரிசோதனை முயற்சி. படைப்பைபோலவே அதனுள் சென்று அகலப்படுத்த முயன்றார். இது அவரது அரசியல் அப்பாவித்தனம். திராவிட இயக்கங்களின் கட்சி அரசியலும், தனிமனித அரசியலுமே அவரை அதற்கு எதிராக இயங்கவைத்தது எனலாம் படைப்புத் தார்மீகம்மும், அரசியல் தார்மீகமும் வேறு வேறு என்பதை நேர்மை அரசியலை விரும்பிய அவரால் பிரித்து விளங்கிக் கொள்வதில் இறுதி வரை அவரது படைப்பு மனம் குழப்பம் கொண்டிருந்தது. அதனால்தான் தனது அரசியல் நாட்களை ‘இலக்கியவாதியின் அரசியல் அனுபவம்’ என்றே எழுதினார் போலும்.

ஜெயகாந்தனின் படைப்பு வழியிலான அரசியல் என்பது பாராளுமன்றத்தை ஒட்டியதாகவே இருந்தது அந்தவகையில், சினிமாவுக்குப் போன சித்தாளு குறுநாவல் நேரடி அரசியல் தாக்கம் கொண்டவையாகும். தனிமனிதனை நடுவப்படுத்தும் அரசியல் அல்லது கவர்ச்சி அரசியல் சமூக வெளியில் ஏற்படுத்தும் நச்சு சனநாயகம் அல்லது நச்சு கலாசாரம் என்பதை கண்டிக்கும் வகையிலே இருந்ததன்றி எம்.ஜி.ஆர். என்ற தனிமனிதரை தூற்றும் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக ஒருபோதும் இருந்திருக்கவில்லை. அவரது மாடி சபை குமுதத்தில் ‘சபைநடுவினிலே’வாக வந்தபோதும் அவரது அரசியல் விமர்சனம் என்பது அப்படிப்பட்டதாகத்தானிருந்தது.

அதுபோலவே இறுகி கெட்டித்துப் போன நிறுவன தத்துவார்த்தங்களின் கூட்டுக்குள் நிரந்தரமாக அடைபடுவதை விரும்பாததையே அவரது நிரந்தரமற்ற கட்சி மற்றும் தத்துவார்த்த மாற்றங்கள் காட்டுவதாக இருந்தன. ஒரு பொழுது அவருக்கு மாஸ்கோ கடவுளாக இருந்ததும். மறு பொழுது வாஷிங்டன் வணக்கத்திற்குறியதாக மாறிப்போனதும் காங்கிரஸ் மேடையில் நின்றதும், ஜெஜெய சங்கர நாவலூடாக ஜெயேந்திரரை-சங்கர மடத்தை சரணடைந்ததையும் ஒருத் தன்மை வாய்ந்த பத்தினியாக புரிந்து கொள்ளலாம். அதாவது ஏற்கும் கொள்கைக்கு, தத்துவத்திற்கு நேர்மையாக இருத்தல். யார் கண்டது..சங்கரரில் ஏற்படும் போதாமை அவரை விரைவில் சங்கர மடத்திலிருந்து வெளியேற்றுவதாகக்கூட இருந்திருக்கக்கூடும். அதனால்தான் அவர், தன்னை முரண்பாடுகளின் மூட்டை என ஒற்றை பரிமாணத்தில் விளித்துக் கொண்டார். நம்புபவர்களிடம் நம்புவதும், நம்பாதவர்களிடம் வற்புறுத்தாமலிருப்பதும் எனது நாகரீகம். நம்புவது ஒரு நல்ல நாகரீகம். கடவுளை மட்டுமல்ல, கொதுவாகவே நம்பிக்கை நல்லது என்று வேறு ஒரு பொழுதில் குறிப்பிட்டிருந்ததையும் இவற்றோடு சேர்த்துப் பார்க்கலாம்.

படைப்பு மனம் என்பது மையத்திலிருந்து விளிம்பிற்கும் விளிம்பிலிருந்து மையத்திற்குமாக சதா அலைவுறுவது. இது சகல படைப்பாளிகளுக்குமானது. தன்னுள் தானே உரையாடி உடைந்து கொள்ளும் நிலையிலிருந்தே அலைகள் பிறப்பெடுக்கின்றன. ஜே.கே.யின் உடைப்பு நிலையில் எழுந்த படைப்புகள் அவரை கடந்து கரை திரும்பி மீண்டன. சமூக வெளியில் பெண்கள் படும் பாடுகள், சுமக்க இயலாத சுமைகள், கலாசார வதைகள் அவருள் பேற்றுவலியை உருவாக்கி உள்ளிருந்து உதைத்தன. “நீங்கள்(பெண்கள்) யார் உங்கள் தந்தை என்றும் காதலன் என்றும் கணவன் என்றும் நம்பி உங்களை ஒப்புக் கொடுக்கிறீர்களே அவர்கள் யார்?!“

“அவர்களே இந்த சமூகத்து மனிதர்கள். அவர்கள் கொடுமைக்காரர்கள். பெண்ணை மதிக்கத் தெரியாத மிருகங்கள். பெண்ணை மண்ணுக்கு இணையாக மதித்து உழுது மிதித்து, அகழ்ந்து தூர்க்கிறவர்கள். உன்னை அவர்கள் வேண்டாத சுமையாக எங்கோ தள்ளிப்போடவே விரும்புகிறார்கள். தலையிலே வந்து விடிந்துவிட்டதாக இறக்கிப்போட்டு எற்றி எறிகிறவர்கள். மாட்டை வணங்குவது போல உங்களை லட்சுமிகரமாக்கி அவர்கள் தொழுவார்கள். நேரம் வரும்போது தெரியும் இந்தக் கசாப்புக்காரர்களின் காதல். லட்சணம்!”.

“வசைக்குரிய சமூகத்தின் அடிமையாக அவனும் வாழ்கிறானே, அது பற்றி பிரக்ஞையற்று தான் ஒரு எசமானன் என்று உன்னிடம் வந்து ஒர் அடிமை அதிகாரியைப் போல, சுரண்டல் வியாபாரியைப் போல நடந்து கொள்கிறானே அதற்கெல்லாம் காரணம் அவனது சமூகத் தொடர்பேயாகும்“.

“சமூகம் என்பது ஏதோ தனித்துத் தெருவில் திரிவதுதல்ல. அது தந்தையாய், சகோதரனாய், சகதி வாய்ந்த பெரிய மனிதனாய், காதலனாய், கணவனாய் ஒவ்வொரு குடும்பத்திலும் வந்து ஆரோகனித்துத்துச் செய்கிற அட்டகாசங்களைத் திமிர்ந்த ஞானச் செருக்குடைய பெண்களைத்தவிர வேறு யார் அறிவர்?“ ஜெயகாந்தனின் சுந்தரகாண்டம் நாவல் முன்னுரை இப்படி பேசுகிறது. பெண்கள் , சமகால வாழ்வில் ஆண்களிடம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைப் பற்றிய விவரிப்பே சுந்தரகாண்டம். பெண்கள் தன்னையும் இந்த சமூகத்தையும் ஒருசேர மதி்க்கும்விதமாக ஒரு தெரிவை முன்வைக்கிறார் ஜே.கே. பெண்ணியம் என்பது பெண் விடுதலை மட்டுமே. மோசமான ஆண்களோடு போட்டியிட்டுத் தானும் மோசமாக மாறுவதை அல்ல என்றார். தனது ஒவ்வவொரு படைப்பிலும் தானே நிறைந்திருப்பதை ஒத்துக் கொண்ட அவர் கல்யாணியும், கங்காவும் தானே என்றார். சமூகத்தையும், தன்னையும் ஒருசேர நேசிக்கும் ஜே.கேவுக்குள் இருந்த பெண்.

மனிதர்கள் எதிர்கொள்ளும் உள்ளும் புறமுமான சகலத்தையும் தன்னுள்ளும் உணர்வது படைப்பு மனம் அது ஜெயகாந்தனிடம் இருந்தது ஆகவே அவர் படைப்பாளியாக இருந்தார். பேரன்பு என்பது ஞானம். படைப்புத்துவம். ஆகவே அவர் எழுதினார். படைப்பு என்பது பேரன்பின் விரிவாக்கம் என்பதை அவர் அறிந்திருந்தார். வாசகனும், தானுமாக மனுக்குலத்திற்கான விசேடமான அல்லது தனித்துவமான பேரன்பை புத்தகமாக்கிக் கொண்டிருந்தார்கள். காலத்தை முன்னோக்கி நகர்த்துபவர்கள், படைப்பாளிகளே ஜெயகாந்தன் ஒரு தலைமுறைக்கு முன்பாகவே தனது எழுதுகோலை மூடிவைத்துவிட்டாலும் இன்று நின்றிருப்பது அவர் விதைத்து வைத்து அறுவடைக்கு தயாராகும் காலத்தில்தான் என்பதை மறுத்துவிட இயலாது. எனினும் ஒரு சமூகமாக தனது படைப்பாளிகளை அடையாளம் கண்டு கொள்ளாத துயரம் நிறைந்த தமிழ் சூழலில் ஒரு ஆளுமை தனது பேனாவை முறித்துவைத்திருப்பது என்பது அச்சமூகத்தி்ன் தற்கொலைக்கு சமானமானதாகும். ஒரு எழுத்தாளனை மறப்பது தனது கூட்டு மனசாட்சியை கொல்வதற்கு நிகரானதாகும். ஒர் எழுத்தாளன் தனது எழுதுகோலை திறக்க எது தூண்டுதலாக இருந்ததோ, அதுவே நிரந்தரமாக மூடிவைக்கவும் காரணமாக இருப்பது சமூகத்தின் அவமானகரமான வீழ்ச்சியின் அடையாளமாகும்.

இன்றய இலக்கிய மதிப்பீடு என்பது நாளைதான் தீர்மானிக்கும் என்பதில் தீர்மானமாக இருந்தார் ஜே.கே. அதனால்தான் தனது விமர்சனத்தையும், தன்மீதான விமர்சனத்தையும் வேறுபடுத்திக் கொண்டிருந்தார். இலக்கிய விமர்சனம் என்று வரும்போது தற்போதய விமர்சனங்கள் தாங்கள் விரும்பாததை விரும்பாதமுறையில் வாசகனுக்கு சொல்வதாக இருக்கிறது என்றார் படிக்காதே என்று சொல்வதன் பொருள் அதில் இருப்பதாக அவர் கருதினார். அவரது படைப்பும் அவரும் ஒன்றே என்ற விமர்சனத்தைக் கொண்டு ஜே.கே ஒரு சுயமோகி என்று சொல்வதின் வழி 70 களின் பிரபல வெளிச்சத்தின் மீது இன்றய இருட்டுக் கற்களை வீசுகிறார்கள். உண்மையில் சுயமோகிகளே பிறரை நேசிப்பவர்களாகவும் இருந்துவிடுகிறார்கள். இலக்கிய மதிப்பீடுகள் பெரிதும் மாறி புதிய கணிப்புகள் உருவாகியுள்ள சூழலில் ஜெயகாந்தனின் காலம் முடிந்துவிட்டதாக எழுந்த பிரபல எழுத்தாளர்களின் ஆசைக்கு அவரது பதில் ஜெயகாந்தனை கடந்து செல்லுங்கள் என்பது மட்டுமே. இலக்கியம் என்பது ஜே.கேவுடன் தேங்கிவிடுவதில்லைதான். ஆனால் அவரை தவிர்த்துவிட்டு சென்றுவிட முடியும் என்பதுதான் மோசமான இலக்கிய அரசியலாக இருக்கமுடியும்.

ஜெயகாந்தன் இன்றய சூழல் பற்றி எழுதாமல் போனதால் என்ன நட்டம் என்று கேட்கலாம். எழுதாததே நட்டம்தான். அவரது எழுத்தில் நவீன சிக்கல்கள் பேசப்படாது உள்ளது. குறிப்பாக திருநங்கைகள், உலகமய நுகர்வு கலாசாரத்தின் சமூக தாக்கம் என சொல்லிக் கொண்டே போகலாம். இது ஜெயகாந்தனின் வாசகனாக, ஒர் சமூக மனிதனாக அந்த வெற்றிடத்தின் மீது கொள்ளும் பரிதவிப்பாகும். எழுதும்போது இருந்த புகழும், வசையும், எழுதாதபோதும் கொண்டிருந்த படைப்பாளி ஜெயகாந்தன் ஒருவாராகத்தான் இருக்கமுடியும். அது எழுத்தின் மீதான பயம். எழுத்து சாத்தியப்படுத்தும் வாசக வட்டத்தின் மீதான பயம். ஒரு காலத்தில் ஜெயகாந்தன் எழுதிய புத்தகங்களை அடையாளமாக வைத்திருப்பதே மதிப்புக்குறியதாக இருந்தது. அதுபற்றி விவாதிப்பது அறிவுஜீவி தோற்றத்தைத் தந்தது. கண்ணியமான மனிதர் என்ற பார்வையை தவிர்க்க இயலாமல் வழங்கியிருந்தது. எழுத்து என்பது மாற்றுக்கான சாத்தியத்தை முன் வைப்பது. கண்டடைவது. ஜே.கே. என்ற இரண்டு எழுத்து தமிழனுக்கு செய்தது இதைத்தான். தமிழன் என்ன செய்யப்போகிறான்.?!

                                -இரா.மோகன்ராஜன்

Pin It