கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை தன்மானத்தோடும், சுதந்திரத்தோடும், தற்சார்போடும் யாரையும் எதிர்பார்க்காமல், உலகத்திற்கே உணவளித்து வாழ்ந்து வந்த மக்கள், இன்று அகதிகள் போல் நிலம் இழந்து, சுயமரியாதை இழந்து, தனது அடுத்த வேளை சோற்றுக்கு நச்சை (விசத்தை) கக்கும் ஆலைகளில், அடிமை போல் வேலை பார்க்கிறார்கள் என்ற சொன்னால் நம்மால் நம்ப முடியுமா?.

coke 481ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், மற்றும் சென்னிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மிகப்பெரிய தொழில் வளர்ச்சி வளாகம் வருகிறது. இப்பகுதியை சேர்ந்த அனைவருக்கும் கோவையைப் போல் மிகப்பெரிய இயந்திர தொழிற்சாலைகளில், நூல் ஆலைகளில் உத்தரவாதமான வேலைவாய்ப்பு, தினமும் 8 மணி நேரம் வேலை செய்தாலே வாழ்கைக்கும் தனது குடும்பத்திற்கும் தேவையான வருவாய், தனது பாரம்பரிய நிலத்தை இழப்பதற்கு ஈடான மதிப்புமிக்க தொகை என அரசால் ஆசைகாட்டப்பட்டு அப்பாவி விவசாயிகளிடம் இருந்த நிலத்தை பிடுங்கி, குடியிருந்த ஊரிலிருந்தே மக்களை அகதிகளாக்கி அப்புறப்படுத்தி தொடங்கப் பட்டதுதான், 2700 ஏக்கர் அரசால் கையகப்படுத்தப்பட்ட ‘பெருந்துறை சிப்காட்’ வளாகமாகும்.

தங்கள் பகுதிக்கு அருகிலேயே இருந்த கோவையைப் போல மிகப்பெரிய இயந்திரத் தொழிற்சாலைகளும், நூற்பாலைகளும் வரும் என நிலத்தை இழந்த விவசாயிகள் கனவுகண்டு கொண்டு எதிர்பார்த்து காத்து இருக்க, பெருந்துறை சிப்காட் வளாகத்திற்கு வந்ததோ உலக நாடுகள் தங்கள் நாட்டில் தடைசெய்த தொழில்கள்தான்.

திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளுக்கு தேவையான துணிகளுக்கு சாயமிடும் சாயப் பட்டரைகளும், ஈரோட்டில் இருந்து காளிங்கராயன் கால்வாயை அழித்துக் கொண்டிருந்து நீதிமன்ற உத்தரவால் விரட்டப்பட்ட தோல் பதனிடும் தோழிற்சாலைகளும்தான் இங்கு வந்தது.

மேலும் மிகஅதிகமான சூடான வெப்பத்தை வெளியிட்டு அதனால் மேகக்கூட்டம் ஒன்று திரள முடியாமல் மழைபெய்வதையே தடுத்து விடக்கூடிய இரும்பு தொழிற்சாலைகளும், உலகில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தவே தடை செய்யப்பட்ட கல்நார் (ஆஸ்பெஸ்டாஸ்) உற்பத்தி செய்யும் தொழிற்சாலையும், 2200 டிடிஎஸ் (TTS) அளவில் வெளிப்படும் உப்புக் கழிவு நீரை வெளியிட்டு வரும் சானிடரிவேர்ஸ் உற்பத்தி செய்யும் ஆலைகளும்தான் சிப்காட்டுக்கு வந்தது.

இப்படி பெருந்துறை சிப்காட் வளாகத்திற்குள் அமைந்த பல்வேறு ஆலைகளால் மக்களின் வாழ்க்கை எண்ணற்ற வழிகளில் பாதிக்கப் பட்டுள்ளது. இப்போது மேலும் ஓர் இடியாக பகாசுர பன்னாட்டு நிறுவனமான அமெரிக்காவின் கொக்கோ-கோலா நிறுவனம் இங்கே அடி எடுத்து வைத்தது, இதனால் இதை எதிர்த்து பெருந்துறை சென்னிமலை பகுதியே போர்க்கோலம் பூண்டுள்ளது.

கொக்கோ-கோலா என்ற எமன்:

இன்று உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் எதைக் குடிக்க வேண்டும் என்ற மதிப்பீட்டை, ஒவ்வொருவரிடமும் உளவியல் ரீதியாக ஏற்படுத்தும் ஏகாதிபத்திய அமெரிக்காவின் பானங்களில் ஒன்றுதான் கொக்கோ-கோலா. மற்றொன்று அமெரிக்காவின் பெப்சி.

தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் 93 விழுக்காடு அளவில் குளிர்பானச் சந்தையை தனது கைப்பிடிக்குள் கொண்டுள்ள கோக், பெப்சி நிறுவனங்கள் என்பது வெறும் தாகத்தை மட்டும் தீர்க்கும் குளிர்பானம் மட்டுமல்ல. இவை நமது நாட்டின் தற்சார்பையும், மரபையும் இழிவுபடுத்தி கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருவது.

நமது தமிழ்நாட்டில் இயற்கையில் கிடைக்கக் கூடிய இளநீர், கம்மங்கூழ், மோர், பானகம், நீராகாரம் மற்றும் உள்நாட்டு குளிர்பானங்களை குடிப்பது என்பது மதிப்பிற்குரியதல்ல என்ற உளவியலை ஒவ்வொருவர் மனதிலும் திட்டமிட்டு ஏற்படுத்துகிறது. அமெரிக்காவின் பானமான கோக், பெப்சி குடிப்பது மட்டுமே உயர்வானது என்று தனது விளம்பர யுத்தத்தின் மூலம் ஒவ்வொருவரின் மூளையிலும் கருத்து ஏற்றப்படுகிறது. இதன்மூலம் ஒவ்வொரு தமிழர்களும் தன்னை அறியாமலேயே அமெரிக்க பண்பாட்டிற்கும், அமெரிக்க வாழ்க்கை முறைக்கும் தள்ளப்படுகின்றனர்.

கொக்கோ கோலாவும், பெப்சியும் அமெரிக்காவின் தாகத்தையும். ஏக்கத்தையும் நம் ஒவ்வொருவரிடமும் ஏற்படுத்தி அடிமைப்படுத்துகிறது, கோக், பெப்சி என்பது குளிர்பானமோ அல்லது பாட்டில் நீர் விற்கும் நிறுவனமோ மட்டும் அல்ல. அது அமெரிக்க பண்பாட்டின் மிக முக்கியமான குறியீட்டுச் சின்னம்.

உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் மூலாதாரம் நீர். ஒருவரது குழந்தைப்பருவத்தில் உடலில் 75 விழுக்காடு நீரும், மற்ற பருவத்தில் உள்ளவர்களுக்கு உடலில் 60 விழுக்காடு நீரும் உள்ளது என்கிறது அறிவியல். விவசாயத்திற்கு மிகவும் அடிப்படையானது தண்ணீர். “தாயைப் பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே” என்பது தமிழர்களின் முதுமொழி.

அப்படிப்பட்ட தண்ணீரை இழிவாக பார்க்க வைக்கும் மனநிலையை ஏற்படுத்தி, நமது தண்ணீரையே குடிக்கக் கூடாது என சிந்தனையை நமக்கு ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றால் இது எவ்வளவு பெரிய கொடூரம். எனவே கோக் என்பது வெறும் பானம் என்பது மட்டுமல்ல, நமது பண்பாட்டையும், வாழ்வாதாரத்தையும் அழிக்கும் எமனாகும்.

கோக் உருவான வரலாறும், இந்திய வருகையும்:

இன்று உலக குளிர்பான சந்தையில் 46 விழுக்காடு கோக்கும், 21 விழுக்காடு பெப்சியும் கைப்பற்றியுள்ளது. 1886ஆம் ஆண்டு அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தில் ஜான் ஸ்மித் என்னும் மருந்தாளுனர்தான் கோக்கின் சோடா கரைசலையும், 1898ஆம் ஆண்டு பெப்சியின் சோடாக் கரைசலை கால்ப் ப்ராதம் என்ற மருந்தாளுனரும் முதன் முதலில் உருவாக்கினார்கள். இன்று இந்த இரு நிறுவனங்களின் சொத்து மதிப்பு மட்டும பல லட்சம் கோடிகளாகும்.

அமெரிக்காவின் குளிர்பான நிறுவனங்கள் உலகம் முழுவதும் மக்களின் தாகத்தை தீர்த்து வைக்கும் கடவுளாக அவதாரமெடுத்து, பல்லாயிரம் கோடிகளை ஆண்டுதோறும் கொள்ளையடிப்பது நடந்து வருகிறது. இந்த நிலையை இவைகள் எப்படி அடைந்தது?

நமது ஊர்களில் தயாரிக்கப்பட்டு வரும் கலர் கோலி சோடாக்களின் இனிப்பு கரைசல் மற்றும் சோடா கரைசலை விடஎவ்விதத்திலும் உயர்வானதல்ல இந்த கோக், பெப்சி கரைசல். தண்ணீர், இனிப்பு, வண்ணம், கார்பன் ஆகியவற்றை கொண்டு இந்த சோடா கரைசல் தயாரிப்பதற்கு எளிதானதே. சாதாரணமாக தெருவிலும், சந்தையிலும், கோவில் திருவிழாக்களிலும் சோடா, கலர் தயாரிப்பதை நாம் பலரும் நேரில் பார்த்திருப்போம்.

இதில் மிகப்பெரிய, நுணுக்கமான தொழில்நுட்பமோ, இரகசியமோ எதுவும் இல்லை. அதே சமயம் அமெரிக்காவின் இந்த கோலாக்களில் இருக்கும் மற்ற வேதிப் பொருட்கள், போதை போல அடிமைப்படுத்தும் பொருட்கள் எதுவும் மற்றவர்கள் அறிய முடியாதது. இதை கண்டுபிடிப்பு இரகசியம் என்ற பெயரில் அந்த நிறுவனங்கள் இன்றுவரை அதுபற்றி வெளியிட மறுத்து வருகிறது. இன்று இந்த கோக், பெப்சி நிறுவனங்களின் சோடா கரைசலை உலகத்திலே சிறந்தது, தரமானது, அழகானது, அற்புதமானது, மதிப்புமிக்கது, குடிப்பது உயர்வானது என்ற ஒரு மனச்சித்திரத்தை தங்களது இடைவிடாத வஞ்சக பிரச்சாரம் மூலம் உலகெங்கும் ஏற்படுத்தி வெற்றி பெற்றுள்ளன கோக், பெப்சி நிறுவனங்கள்.

கோக் நிறுவனம் கோக் தவிர கிளாசிக் கோக், டயட் கோக், ஃபேண்டா, முதலான 25 வகைகளை கொண்டுள்ளது. பெப்சியும எண்ணற்ற வகைகளை கொண்டுள்ளது. “ஒட்டகம் தலையை நுழைந்த கூடாரம்” எப்படி சின்னாபின்னமாகுமோ அப்படி இந்திய சந்தையில் கோக், பெப்சி நுழைந்தவுடன், இந்திய சந்தையில் 90களில் 60 விழுக்காடு சந்தையை கொண்டிருந்த தம்ஸ்-அப், லிம்கா, கோல்டு-ஸ்பாட், ஃப்ருட்டி பானங்களை தயாரித்த பார்லே நிறுவனமும், தமிழகத்தின் காளிமார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர், லவ்-ஓ, லிவ்-ஓ, பன்னீர் சோடா உட்பட 2 லட்சம் சில்லரை வியாபார நிறுவனங்களும் அழிந்து காணாமல் போயின. அல்லது தட்டுத் தடுமாறி நடந்து வருகின்றன.

அது எப்படி பல்லாண்டுகளாக இருந்த பெயர் பெற்ற குளிர்பான நிறுவனங்களை ஒழிக்க முடியும் என்ற வேள்வி நமக்கு எழும். 1977-ல் இந்தியா சந்தையில் இருந்து பெரா(PERA) சட்டம் மூலம் விரட்டப்பட்ட கோக் 1990களில் உலகமயமாக்கலினால் இங்கு மீண்டும் வந்தது. 1990க்கு முன்பு கோலா வகை பானங்களுக்கு வரி மிக அதிகமாகவும், இந்திய குளிர் பானங்களுக்கும், பழரச வகைகளுக்கும் வரி குறைவாகவும் இருக்கும். நமது நாட்டில் பழவகை விளைச்சல் அதிகம் என்பதால் அரசின் கொள்கை இவ்வாறு இருந்தது. 1990 களில் உலகமயமாக்கல் கொள்கைப்படி, காட் ஒப்பந்தப்படி கோலாவுக்கான வரி மிகவும் குறைக்கப்பட்டது. அரசு கோக், பெப்சி நிறுவனங்களுக்கு எண்ணற்ற சலுகைகளை வாரி அள்ளி, அள்ளிக் கொடுத்தது.

தொழிற்சாலையை தொடங்க மிகவும் குறைந்த விலையில் இடம், விலையில்லா தண்ணீர் என்று சொல்லும் வகையில் மிகக் குறைந்த விலையில் தண்ணீர், இலவச மின்சாரம் அல்லது மிகக் குறைந்த விலையில் மின்சாரம், சாலை வசதி என எண்ணிலடங்கா சலுகைகளை வாரிக் கொடுத்து, அவர்களுக்கு விசுவாசமான அடிமைகளாக நடந்து கொண்டன ஆளும் அரசுகள். இதன் விளைவால் சந்தையில் யாரும் கொடுக்க முடியாத மிகக் குறைந்த சலுகை விலையில் கோக், பெப்சி விற்கப்பட்டது. ஒரு பக்கம் விலை குறைவு, மற்றொரு பக்கம் மனம் கவர்ந்த திரைப்பட நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்களை வைத்து விளம்பர யுக்தி. விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் அளவிட முடியாத சலுகைகளை அள்ளிக் கொடுத்தன கோக், பெப்சி நிறுவனங்கள்.

இவைகளுடன் போட்டி போட முடியாமல் இந்தியச் சந்தையில் 60 விழுக்காட்டை வைத்திருந்த பார்லே நிறுவனம் சந்தையில் நிற்கமுடியாமல் கோக், பெப்சி நிறுவனம் இந்தியா வந்த ஆறே மாதத்தில் தனது நிறுவனத்தை கோக்கிற்கே விற்ற அவலம் நடந்ததது. இந்திய சந்தையை வைத்திருந்த பார்லே நிறுவனமே இல்லாமல் போனபோது, தமிழக சந்தையை வைத்திருந்த காளிமார்க், வின்சென்ட், மாப்பிளை விநாயகர், லவ்-ஓ, லிவ்-ஓ, பன்னீர் சோடா போன்ற குளிர்பான நிறுவன நிலைமைகளை கூறத் தேவையில்லை. “ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்போது, இந்த இலவம் பஞ்சுகளின் நிலை” சொல்லத் தேவையில்லை.

இப்படி குளிர்பான சந்தையியே பிரம்மாண்ட முதலீடு, விரிவான உற்பத்தி, வலைப் பின்னல் விநியோகம், மாபெரும் பிரளயம் போன்ற விளம்பரங்கள், அரசின் எண்ணற்ற சலுகை பெறுதல், பிற நிறவனங்களை சதி, ஏமாற்று, மிரட்டல், கைப்பற்றல் போன்ற பல்வேறு சாம பேத, தான, தண்டம் வழிமுறைகளை கையாண்டுதான் கோக், பெப்சி இந்நிலையை இங்கு எட்டியது. இன்று இந்திய குளிர்பான சந்தையில் 53 விழுக்காடு கோக் நிறுவனமும், 40 விழுக்காடு பெப்சி நிறுவனத்திடமும் உள்ளது. இன்று நமது நாடு முழுவதும் கோக் 60ஆலைகளையும், பெப்சி 24 ஆலைகளையும் வைத்து உற்பத்தி செய்து வருகிறது.

கோக் குடிப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்:

இயற்கையில் கிடைக்கக்கூடிய பானங்கள் நமது மண் சார்ந்து கிடைக்க கூடியது. இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இயற்கையில் கிடைக்கும் இளநீர், பதநீர் மற்றும் கம்மங்கூழ், மோர், நீராகாரம், பானகம் போன்றவை குடித்து ஆரோக்கியமாக நமது முன்னோர்கள் வாழ்ந்து வந்தனர். உடல் வலிமையுடன் இருந்து பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைகூட சுகப்பிரசவமாக பெற்றெடுத்தனர் நமது தாய்மார்கள். ஆனால் பணவெறி பிடித்த பன்னாட்டு நிறுவனமான கோக் தயாரிப்பில் எண்ணற்ற செயற்கை பொருட்களும், இராசாயனங்கள், அமிலங்களையும், கலந்து வருகின்றனர் என பல ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கோக் நிறுவனம் இரகசியம் என மறைத்தாலும் அதில் கலக்கப்பட்டு உள்ளவற்றை கண்டுபிடித்தனர் மக்கள் நலனில் அக்கறையுடன் உள்ள அறிவியலாளர்கள். கோக், பெப்சி தயாரிப்பில் 80 விழுக்காடு முதல் 86 விழுக்காடு வரை தண்ணீர் உள்ளது. இதில் மணம் ஊட்டுவதற்காக காபைன் (cafine) போன்ற வாசனை தரும் செயற்கை பொருட்களை சேர்க்கின்றனர்.இனிப்பு சுவைக்காக சர்க்கரையும்(வெள்ளை சீனி).பல நேரங்களில் சாக்கிரினும் சேர்க்கின்றனர். இது இல்லையெனில் அஸ்பாரிஜன், பின்னல், அலானின் என்ற இரண்டு அமினோ அமிலங்கள் இணைந்த‘அஸ்பார்டோம்’ (Aspartame)என்ற இனிப்பு பொருளையும்சேர்க்கின்றனர்.

குடிக்கும்போது புத்துணர்ச்சி பொங்க கார்பன்-டை-ஆக்சைடை திரவ வடிவில் இதனுடன் இணைக்கிறார்கள். இதுதான் மூடியை திறந்ததும் நுரையாக பொங்கி, வாசனைப் பொருட்களை கலக்கி வெளியே கொண்டு வருகிறது. வாயின் உட்பகுதியில் பட்டதும் ஒருவிதமான குளிர்ச்சியையும் உண்டாக்குகிறது.

தாகம் தணிக்க சிட்ரிக் ஆசிட், பாஸ்பாரிக் ஆசிட், மேலிக் ஆசிட் என அமில வகைகளையும் சேர்க்கிறார்கள். இந்த அமிலங்கள் இனிப்பு சுவையை சுமாராக்கி தாகம் தணிக்கும் வேலையை செய்கின்றன. ‘பிரவுன்’கலர் கொடுப்பதற்கு காரமல் (CARAMEL)அல்லது பீட்டர் கரோட்டின் போன்றவற்றை சேர்க்கிறார்கள். கோலா கெட்டுப்போகாமல் இருக்க நேட்ரியம் பென்சோயேட் (Natrium Benzoate), பொட்டாசியம் சார்பேட் (Potassium Sorbate). இத்தகைய அமிலங்கள் சேர்வதால் ஒன்றுக்கொன்று மோதல் ஏற்பட்டு வேதி வினையேதும் நடைபெறாமல் இருக்க ‘அஸ்கார்பிக் ஆசிட்’ என்ற ஆண்டிஆக்ஸிடேன்ட்-ஐ சேர்க்கிறார்கள்.

மேலும் கலந்த எல்லா பொருட்களும் பானத்தில் நிரவி இருக்க பெக்டின், ஆக்ஸினேட்ஸ் காரகென் (கடல் பாசியிலிருந்து எடுக்கப்படுவது) ஆகியன சேர்க்கிறார்கள்.

இத்தனை இரசாயனப் பொருட்களின் கூட்டுக்கலவைதான் கோக்.

coke 450

இப்படிப்பட்ட இராசயன, அமிலக் கலவை நமது மென்மையான உடலின் உள் உறுப்புகள் வழியாக செல்லும்போது நமக்கு எவ்விதமான உடல்பாதிப்பு ஏற்படும் என்பதை நாம் உணர வேண்டும். பல்வேறு அமிலச் சேர்க்கையால் புற்றுநோய் கூட ஏற்படும் எனவும், எண்ணற்ற பலநோய்கள் வரும் எனபல ஆய்வின் மூலம் ஆய்வாளர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர்.

இப்படி உடல்நலனுக்கு கடுமையாக கெடுதியை கோக் போன்றவை ஏற்படுத்துகிறது என உறுதி செய்யப்பட்டதால்தான், கோக், பெப்சி போன்றவை டெல்லி பாராளுமன்ற வளாகத்தினுள் விற்க கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலும் விற்க தடை உள்ளது .

துருப்பிடித்துப்போன ஒரு இரும்பு ‘போல்ட்’டை கழற்ற வேண்டுமானால் கொக்கோ கோலாவை அதன் மேல் ஊற்றி ஊறவைத்து கழற்ற முடியும். நமது துணிகளில் ‘கிரீஸ்’ போன்ற நீக்க முடியாத கறை இருந்தால் கோலாவை வைத்து துடைத்து சுத்தம் செய்யலாம். கார் பம்பர், சைக்கிள் சக்கரங்களில் துருபிடித்து இருந்தால் கோலாவை வைத்து தடைத்து சுத்தம் செய்யலாம் என்பது நடைமுறை உண்மை, செடிகளில் பூச்சி இருந்தால் அதன் மீது கோக்கை தெளித்தால் அது உடனே இறப்பதை பார்க்கலாம்.

இப்படியெல்லாம் கொக்கோ கோலா பயன்படுகிறது என்றால் எவ்வளவு அபாயகரமான பானம் அதுஎன்பதை உணரலாம். இதே போல்தான் பெப்சியின் தரமும். கொக்கோ கோலா பானத்தை கழிப்பறை கோப்பையில் ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவைத்து சுத்தம் செய்தால் கோப்பை பளிச்சென்று வெண்மையாக மாறுவதைப் பார்க்கலாம். கோக்/பெப்சியில் ஊற வைத்த ஒரு பல் 10 நாட்களில் சிதைந்து போவதைவும் பார்க்கலாம். கோலாவில் உள்ள அமிலத்தன்மை (P.H 3.4) நமது உடலில் உள்ள கால்சியத்தை கரைத்து இரத்தத்தில் சேர்க்கிறது. இதனால் சிறுநீரகத்திற்கு தீங்கு விளைகிறது. இந்த கோக் போன்ற மென்பானம் தொடர்ந்து குடித்தால் நமக்கு நீரிழிவு நோய் வருவது என்பது உறுதி.

கோக் ஆலைகளால் நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள்:

கொக்கோ கோலா நிறுவனம் எங்கெல்லாம் தொடங்கப்பட்டதோ அங்கெல்லாம் அந்த நிறுவனம் விதிமீறல் செய்து அந்தப் பகுதியின் விவசாயத்தை அழித்து, மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகிறது என்பதுதான் அப்பட்டமான உண்மையாகும்.

கேரளாவின் பாலக்காடு மாவட்டம் சித்தூர் வட்டம் பிளாச்சிமடா, உத்திரப்பிரதேசத்தில் வாரணாசிக்கு அருகே மெகத்கன்ச், ராஜஸ்தானில் ஜெய்பூர் அருகே கோவிந்த் நகர் ஒன்றியம் கலாதேரா, தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் படமாத்தூர், திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் என கோக் ஆலை அமைந்த இடங்களில் எல்லாம் நடைபெறும் மக்கள் பேராட்டங்கள், நமக்கு கோக் நிறுவனத்தின் சட்ட விரோத, மோசடிகளை கையும் களவுமாக பிடித்துக் காட்டும்.

வாரணாசி – மெகத்கன்ச் :

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி அருகே மெகத்கன்ச் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த கொக்கோ-கோலா ஆலையின் பாதிப்பை எதிர்த்து மக்கள் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக போராடி வந்தார்கள்.

கோக் ஆலை சுற்றுச்சூழலை பாதிக்கிறது. விவசாயத்தை அழிக்கிறது, நிலத்தடி நீராதாரங்களை அழித்து விட்டது, கழிவு நீரை ஆலை சுத்திகரிப்பு செய்யாமல் பள்ளம் தோண்டி வெளியே விடுகிறது. ஆலை அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாக உற்பத்தி செய்கிறது. அதற்காக சட்டவிரோதமாக மிக அதிகமான நீரை எடுத்து பயன்படுத்துகிறது எனக் கூறி மக்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்ததது.

2014ஆம் ஆண்டு சூன் மாதம் கொக்கோ-கோலா ஆலை அரசால் முடப்பட்டது. ஆலை மூடுவதற்கு உத்திரபிரதேச மாசு கட்டுப்பாடு வாரியம் கீழ்கண்டவாறு காரணம் கூறியது. ‘கொக்கோ-கோலா ஆலை தொடர்ந்து இயற்கை விதி மீறல் செய்தது, சுற்றுச்சூழல் கேடுகளை ஏற்படுத்துகிறது, ஒரு நாளைக்கு 20, 000 கேஸ் (1 கேஸ் என்பது 24 பாட்டில் அடங்கிய பெட்டி) உற்பத்திக்கு அனுமதி வாங்கி 36, 000 கேஸ்களை உற்பத்தி செய்கிறது. இதனால் நிலத்தடி நீர்வளம் கடுமையாக பாதிக்கப்படுகிறது’ என்ற காரணங்களை கூறி ஆலையை இழுத்து பூட்டி உள்ளது.

கேரளா – பிளாச்சிமடா:

கேரளத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப் படும் பாலக்காடு மாவட்டம் சித்தூர் வட்டத்தில் அமைந்துள்ள பெருமாட்டி ஊராட்சிக்குள் அமைந்த முப்போகமும் விளைந்த பகுதிதான் பிளாச்சிமடா.

இயற்கை எழில் கொஞ்சம் இப்பகுதி மக்கள் காலம் காலமாக பாரம்பரிய அறிவுடன் நெல், தென்னை, கடலை, பருத்தி, கரும்பு, வாழை, மிளகு, கேழ்வரகு, மா, ஆரஞ்சு, ஏலக்காய், இரப்பர் என பயிரிட்டு முப்போகமும் விளைச்சல் எடுத்து வந்தனர். மேற்குத் தொடர்ச்சிமலையின் மூலம் இப்பகுதி நீர்வளம் பெற்று வந்தது, இப்படி இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மக்களிடையே, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நெல் விளைந்து வந்த பூமியில் நிலத்திற்கு அதிக விலை, இந்தப் பகுதி மிகப் பிரமாண்டமான வளர்ச்சி பெறும், ஊர் மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும், விவசாயத்தை மட்டும் மக்கள் நம்பியிருக்கத் தேவையிலை என பல்வேறு ஆசை வார்த்தைகளும், பல்வேறு உறுதிமொழிகளும், உத்திரவாதங்களையும் கொடுத்து தொடங்கப்பட்டதுதான் ‘இந்துஸ்தான் கொக்கோ- கோலா’ நிறுவனம். இந்த ஆலை தொடங்க 1998-இல் சி.பி.எம். கட்சி தலைமையிலான ஆட்சிதான் அனுமதியை கொடுத்தது.

2000 ஆம் ஆண்டில் தனது உற்பத்தியை 38 ஏக்கர் பரப்பளவில், தினசரி 5 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்வது என்ற அனுமதியை ஊராட்சியிடம் பெற்று தனது உற்பத்தியை தொடங்கியது கோக். மிகப் பிரம்மாண்டமான இராட்சச போர்களை போட்டு தினமும் கோக் நிறுவனம் 35 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சியது. எவ்வளவு தண்ணீர் கோக் நிறுவனம் எடுக்கிறது என்பதை யார் ஆலைக்குள் சென்று பரிசோதித்து பார்க்க முடியும். அனுமதி என்பது இது போன்ற நிறுவனங்களுக்கு காகிதத்தில் இருப்பது மட்டும் தானே, அனுமதிக்கப்பட்ட தண்ணீர் 5 லட்சம் லிட்டருக்குப் பதிலாக தினமும் 35 லட்சம் லிட்டர் நீரை எடுத்து பல ஆண்டுகளாக பயன்படுத்தியுள்ளது கோக் நிறுவனம். இதனால் ஓர் ஆண்டு காலத்திற்குள் பிளாச்சிமடா சுற்று வட்டாரம் முழுவதும் கிணறு, குளம், ஏரி, என அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் வற்றிப் போனது.

கோக் நிறுவனம் தனது நச்சுத் திடக் கழிவுகளை உரங்கள் என சொல்லி அப்பகுதி விவசாயி களுக்கு வழங்கியது. இலவசமாக உரங்கள் கோக் நிறுவனம் தருகிறது என நம்பி வாங்கி அதை தனது வயல்களில், தென்னை மரங்களுக்கு போட்டனர் அப்பாவி விவசாயிகள். கோக் ஆலையின் கழிவு நீரையும் 0 % சுத்திகரிக்கப்பட்ட நீர் எனக் கூறி விவசாய நிலங்களுக்கு பாய்ச்சியது கோக் நிறுவனம். மேலும் கழிவுநீரை நிலத்திற்கு அடியிலும் இரகசியமாக செலுத்தியது. நிலத்தடி நீர் வற்றியது, தண்ணீரின் சுவை மாறியது, கழிவுநீர் கலந்ததால் தண்ணீர் நிறம் மாறியது, ஆலையின் நச்சுக் கழிவுகளை உரம் என நிலத்தில் போட்டதால் விவசாய உற்பத்தி கடுமையாக பாதித்தது. ஆலைக்கழிவால் விளைநிலத்தில் கடுமையான துர்நாற்றம் ஏற்பட்டது. தென்னை மரங்களே அழியத் தொடங்கியது. மக்களுக்கு இனம் புரியாத பல புதிய, புதிய நோய்கள் வரத் தொடங்கின.

ஆலை தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் கோக் ஆலையின் பாதிப்புகளை மக்கள் உணர்ந்தனர். அரசின் கதவுகளை தட்டினர் மக்கள். எந்த மனுவும், முறையீடும் அரசிடம் வேலை ஆனபாடில்லை. பெரும்பாலும் பழங்குடி மக்களே இருந்த இப்பகுதியில் மக்கள் தனது வாழ்வாதாரத்திற்கான போராட்டத்தை தொடங்கினர். அதிகாரிகளையும் பல்வேறு அரசியல் கட்சிகளையும் தனது பணபலத்தால் கோக் நிறுவனம் விலை கொடுத்து வாங்கி மௌனியாக்கி வைத்திருந்தது. ஆனாலும் அதனால் மக்கள் எழுச்சியை தடுக்க முடியவில்லை 2002ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி அந்த எளிய பழங்குடி மக்களின் உறுதியான “பிளாச்சிமடா போரட்டம்” தொடங்கியது.

2200 நாட்களுக்கு மேல் அந்தப் போராட்டம் தொடர்ந்து இடைவெளியின்றி நடந்தது. பிளாச்சிமடா மக்களின் விடாப்பிடியான உறுதி மிக்க போராட்டம் கேரளம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மிகுந்த கவனத்திற்குள்ளாகியது. கோக் ஆலை வருகையால், அனைவருக்கும் தண்ணீர் கொடுத்த பிளாச்சிமடா மக்கள், தங்களின் தாகத்தை தீர்த்துக் கொள்ள லாரி தண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய அவலம் தொடங்கியது.

மதிப்பிற்குரிய மயிலம்மா போன்ற எளிய உறுதிமிக்க பழங்குடி பெண்மணி தலைமையில், தொடர்ந்து உறுதியாக நடந்த மக்கள் போராட்டத்திற்கு, இந்தியா முழுக்க உள்ள மக்கள் நலன் பேணும் அனைத்து தலைவர்களும் நேரில் சென்று ஆதரவளித்தனர். பிளாச்சிமடா போராட்டத்திற்கு ஆதரவான போராட்டங்கள் நாடெங்கும் பரவத் தொடங்கியது.

லண்டன் பி.பி.சி தொலைக்காட்சியின் ரேடியோ-4 சேனலின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் பிளாச்சிமடாவுக்கு நேரில் வந்து மக்களை சந்தித்தார். பிளாட்சிமடா ஊரின் மண்ணையும் நீரையும் லண்டனுக்கு கொண்டு சென்று ஆய்வு செய்ததில் அதில் மிகவும் ஆபத்தான அளவுக்கு (அனுமதிக்கப்பட்டதை விட 400 மடங்கு அதிகம்) நச்சுத்தன்மை மிகுந்த கேட்மியம் எனும் இரசாயனப் பொருளும், ஈயமும், கலந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். “Face the Fact” என்ற நிகழ்ச்சி மூலம் பி.பி.சி இந்த உண்மைகளை ஒளிபரப்பியது. இது உலகம் முழுக்க அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இதன் பின்புதான் இந்திய ஊடகங்களின் பார்வை பிளாட்சிமடாவை நோக்கி திரும்பின. பெருமாட்டி ஊராட்சி கொக்கோ-கோலா ஆலைக்கு கொடுத்த அனுமதியை இரத்து செய்தது. இதை எதிர்த்து கோக் நிர்வாகம் கேரள உயர்நீதிமன்றத்திற்கு சென்றது. கேரள உயர்நீதிமன்றம் “பிளாட்சிமடா நிலத்தடி நீரை, அதன் மீது உரிமையற்றோர் அதிகமாக உறிஞ்சுவதையும், அசுத்தமாக்குவதையும், அனுமதிக்க அரசு இடங்கொடுக்கக் கூடாது. அரசு மக்கள் நலனை பாதுகாக்க வேண்டும்” என மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஒரு தீர்ப்பை வழங்கியது. ஆனால் டெல்லி உச்சநீதிமன்றம் கொக்கோ. கோலா நிறுவனத்திற்கு ஆதரவாக, அரசின் கொள்கை முடிவு இது எனவும், கோக்கிற்கு தடை விதித்தால் தொழில் வளர்ச்சி பாதிக்கும் எனவும் தீர்ப்பை வழங்கியது.

எனினும் 5 ஆண்டுகள் தொடர்ந்து நடந்த பிளாட்சிமடா மக்களின் உறுதியான போராட்டம் கொக்கோ-கோலா ஆலையை 2006 முதல் இயங்க விடாமல் தடுத்து வைத்துள்ளது. கேரளத்தின் இரண்டு முக்கிய கட்சிகளான ஆண்ட, ஆளும் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியும்(CPM), காங்கிரஸ் கட்சியும் இந்த எளிய மக்கள் போராட்டத்தின் பக்கமே திரும்பி பார்க்கவில்லை. கோக் நிறுவனத்தின் பலம் அப்படி.

மக்களின் போராட்ட அழுத்தத்தால் பல கட்டங்களுக்கு பின்பே கேரளத்தை ஆண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியின் தலைமையிலான அரசு வேறுவழியின்றி இதை பற்றி ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்தது. ஆனால் "பாதிக்கப்பட்ட மக்களுக்கு 216 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் " என்ற குழுவின் முடிவை இன்று வரை நடைமுறைப்படுத்த முயற்சிக்கவில்லை கேரளத்தை ஆண்ட இரு கட்சிகளின் அரசுகளும்.

பிளாச்சிமடா போராட்டம் வலிமையானவர்களை எளிய மனிதர்கள் தனது ஒன்றுபட்ட, உறுதியான, விடாப்பிடியான அர்ப்பணிப்புமிக்க போராட்டம் மூலம் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கும் போராட்டம். விதைத்த போராட்டம்.

தமிழ்நாடு - சிவகங்கை படமாத்தூர் :

தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் படமாத்தூரில் உள்ளது சக்தி சர்க்கரை ஆலை யூனிட் மிமி. வைகையாற்றின் கரையோரத்தில் சக்தி சர்க்கரை ஆலை வளாகம் அமைந்துள்ளது. இந்த சர்க்கரை ஆலை ‘அருட்செல்வர்’ என பல்வேறு ஊடகங்களால் கொண்டாடப்படும் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களுக்கு சொந்தமானது.

இந்தச் சக்தி சர்க்கரை வளாகத்திற்குள்ளேயே கொக்கோ-கோலா நிறுவனம் தனது பாட்லிங் யூனிட்டை அமைத்து அப்பகுதியின் நிலத்தடி நீரை உறிஞ்சத் தொடங்கியது. வெளியே பார்த்தால் தமிழ்நாட்டு முதலாளியான பொள்ளாச்சி மகாலிங்கம் முகம். உள்ளே மகாலிங்கம் அவர்களுடன் கூட்டு சேர்ந்து உள்ளூர் முகத்தை வைத்து கொக்கோ-கோலா தயாரிப்பு என தொடங்கியது. பிளாட்சிமடா மக்களின் தொடர் போராட்டம் படமாத்தூர் பகுதி மக்களை விழிப்புறச் செய்தது.

வைகைக் கரையோரத்தில் சுமார் 3000அடி (900மீ) ஆழத்தில் ஆழ்குழாய் போட்டு கொக்கோ-கோலா ஆலை பயன்பாட்டிற்குத் தினமும் 12 லட்சம் லிட்டர் நீரை எடுப்பது என திட்டமிட்டு வேலை தொடங்கியது கோக் நிறுவனம். வைகை கரையோராம் இராட்சச போர் போட்டு நீரை எடுப்பதால் சுமார் 7 கி.மீ சுற்றளவில் உள்ள வைகை கரையோரத்தில் தண்ணீர் எடுத்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெறும் சுமார் 40க்கு மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படும். சுற்றியுள்ள விவசாயநிலம் நீரின்றி அழியும். கோக் ஆலை கழிவால் எண்ணற்ற பாதிப்புகள் வரும் என்பதை கேரளா- பிளாட்சிமடாவிற்கு நேரில் சென்று பார்த்து உணர்ந்த இப்பகுதி மக்கள் இத்திட்டத்தை கடுமையாக எதிர்க்கத் தொடங்கினர். போராட ஆரம்பித்தனர்.

கிராமங்களில் கையெழுத்து இயக்கம், கிராமம்தோறும் பிரச்சார இயக்கம், ஊர்க்கூட்டம், தெருமுனைக் கூட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் என மெல்ல மெல்ல வளர்ந்தது போராட்டம். 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 அன்று பத்தாயிரம் மக்கள் பங்கேற்ற “மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை” என்ற மாபெரும் போரட்டம் நடத்தப்பட்டது.

காவல்துறை தடைவிதித்தபோதும் தடையை உடைத்து பேரணி தொடங்கியது. இடையில் பேரணியில் வந்த அனைவரும் கைது செய்யப்பட, சுமார் 1900பேர் மீது வழக்கு பதிவு செய்தது அரசு. ஆனால் மக்கள் கைது, வழக்கு என எதைக் கண்டும் எள்ளளவும் அஞ்சவில்லை. வாழ்வாதாரம் அழிந்த பின் போராடி பயன் இல்லை என உறுதியோடு போராட்ட களத்தில் நின்றனர். கொக்கோ-கோலா நிறுவனம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியது. கோக் ஆலை தொடங்கியதை தொடர்ந்து இனி இயக்க முடியாது, மக்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டார்கள் என உணர்ந்த கோக் நிறுவனம் சில மாதங்கள் கழித்து தனது கருவிகளை இயந்திரங்களை எடுத்துக்கொண்டு அப்பகுதியை விட்டுவெளியேறியது.

இப்போராட்டத்தின் தொடக்கத்தில் போராட்டக்குழு அமைக்கப்பட்டது. இதில் இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), உணவு மற்றும் வாழ்வாதார உரிமைக்கான பிரச்சார இயக்கம், எண்ணற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பல்வேறு தாழ்த்தப்பட்டோர் நலன் பேணும் இயக்கங்கள் முதன்மையான அங்கம் வகித்தன.

‘அருட்செல்வர்‘ என அழைக்கப்படும் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் கூட்டோடு அமைக்கப்படும் கோக் நிறுவனம் என்பதால், பல மக்கள் நலன் பேசும் அரசியல் கட்சிகள் இந்த போராட்ட திசை பக்கமே எட்டிக் கூட பார்க்கவில்லை. ‘அருட்செல்வரின்‘ பொருட்பலம் அப்படி .

பிற பகுதி போராட்டங்கள்:
=======================
கோக் ஆலையை எதிர்த்து தமிழ்நாடு- கங்கை கொண்டான், ராஜஸ்தான் - கலாதாரா, ஆந்திரா – கம்மம். ஸ்ரீசர்வராயசுகர்ஸ், உத்திரபிரதேசம் – பாலியா, குஜராத்- கோப்லெஜ், சனாஹ் என பல இடங்களிலும் கொக்கோ-கோலா ஆலையை எதிர்த்த போராட்டங்கள் நாடெங்கும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கோக் போலவே பெப்சி நிறுவனத்தையும் எதிர்த்த போராட்டங்கள் நாடெங்கும் நடைபெற்று வருகிறது.

திருச்சி-சூரியூர் பெப்சி


தமிழகத்தில் திருச்சி மாவட்டம் சூரியூரில் உள்ள தினசரி 90லட்சம் நிலத்தடி நீரை உறிஞ்சும் பெப்சி நிறுவனத்தின் எல்.ஏ பாட்டிலர்ஸ் நிறுவனம் காங்கிரசு கட்சியை சார்ந்த முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலராசு அவர்களின் குடும்பத்தை சார்ந்தது. மக்களின் தொடர் போராட்டத்தின் விளைவால் அரசு வழியேதும் இன்றி சனவரி முதல் கடந்த 3 மாதங்களாய் திருச்சி-சூரியூர் பெப்சி நிறுவனத்திற்கு தற்காலிகத் தடை விதித்து மூடியுள்ளது.

பெருந்துறை கொக்கோ/கோலா ஆலை :

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கொக்கோ-கோலா ஆலை அமைத்துக் கொள்வதற்காக சுமார் 71.34 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு 23.01.2014 அன்று 99 ஆண்டுகளுக்கு ஒதுக்கி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அரசு மதிப்பீட்டில் 71.34 ஏக்கர் நிலம் 17, 93, 50, 000/- (பதினேழு கோடியே தொண்ணூற்றி மூன்று இலட்சத்து, ஐம்பதாயிரம்) ஆகிறது. இதை கொக்கோ-கோலா நிறுவனத்திற்கு ஏக்கர் ரூ1.00 (ஒன்று) வீதம் ஆண்டுக்கு ரூ.71.34- (எழுபத்தி ஒரு ரூபாய் முப்பத்தி நான்கு பைசா) அரசுக்கு) என நிலத்திற்காக 98 ஆண்டுகள் செலுத்தவேண்டும், 99ஆம் ஆண்டு ஏக்கர் ஒன்றுக்கு ரூ2.00 (இரண்டு) வீதம் ஆண்டுக்கு 142.68- (நூற்றி நாற்பத்தி இரண்டு ரூபாய் அறுபத்துஎட்டு பைசா) 71.34 ஏக்கருக்கு செலுத்த வேண்டும் என கோக் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்த்ல் கல்தீராவில் உள்ள கோக் நிறுவனம், தான் பயன்படுத்திய 1 கோடி லிட்டர் தண்ணீருக்கு ரூ.550.00 என அரசுக்கு செலுத்தியது. காவிரி ஆற்றில் இருந்து சுமார் 25 கி, மீ. தூரத்திற்கு பல்வேறு நீரேற்றும் பம்புகள் மூலம்கொண்டு வரப்படும் தண்ணீர், பெருந்துறையில் அமையும் கோக் ஆலைக்கு லிட்டர் 4 பைசாவுக்கு வழங்கப்பட உள்ளது. தினமும் 35 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் இங்கு 80 கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் பாதிக்கப்பட உள்ளது.

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் பல்வேறு தொழிற்சாலைகளால் கடந்த 15 ஆண்டுகளாக சிப்காட் வளாகத்தை சுற்றியுள்ள 10கி.மீ. சுற்றளவில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நஞ்சாக மாறிப் போய்விட்டன. நிலத்தடிநீர், கிணறு, குளங்கள் என அனைத்தும் விசமாக மாறி எதற்கும் பயன்படாமல் செத்துப்போய் உள்ளன. ஓடைக்காட்டூர் குளம், சுள்ளிமேடு/கண்ணாங்காட்டு குளம், சென்னிமலை ஒன்றியத்தியேயே மிகப்பெரியதும் 400 ஏக்கர் நஞ்சை பாசனத்திற்கு ஆதாரமான பாலதொழுவு குளம் முழுக்க முழுக்க நஞ்சாகவே மாறிவிட்டது. இப்பகுதி காற்றும், மண்ணும் மாசுபட்டுள்ளது.

இங்கு உள்ள ஆலைத் திடக்கழிவுகள் அனைத்தும் சட்டவிரோதமான முறையில் அருகே உள்ள நிலங்களில் கொட்டப்பட்டதால் மண்வளமும் பாதிக்கப்பட்டுள்ளது.

சிப்காட் வளாக தொழிற்சாலைகள் அனைத்தும் தண்ணீரை 0% சுத்திகரிப்பு செய்துதான் வெளியேற்றுகிறோம் என சொல்லிக்கொண்டு இருந்தாலும் இதுவரை அவ்வாறு செயல்பட்டதே இல்லை. இங்குள்ள ஆலைகள் சட்ட விரோதமாக கழிவுநீரை வெளியேற்றுவதை கையும் களவுமாக பலமுறை பிடித்து நிறுத்தியதாலும், உயர்நீதிமன்றம்வரை இப் பிரச்சனையை கொண்டு சென்றதாலும்தான் பலமுறை இந்த தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டுள்ளது.

ஆலை தொடங்கப்பட்டு சில ஆண்டுகள் கழித்தே இதன் பல்வேறு பாதிப்புகளை உணர்ந்தனர் மக்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நேரடியாகவும், சட்டரீதியாகவும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இப் போராட்டங்களை, போராட்ட தலைவர்களை எல்லாம் பல்வேறு சதி, சீர்குலைவு, காட்டிக்கொடுப்பு, விலை பேசுதல், விலைக்கு வாங்குதல், பல்வேறு சலுகைகள், அச்சுறுத்துதல் அடக்குமுறை என பல வகையிலும் அரசு மற்றும் ஆலை நிர்வாகத்தால் கையாளப்பட்டு ஒடுக்கி முடக்கப்பட்டுள்ளது.

சில பிரச்சனைகளில், போராட்டங்களில் நேரடியாக ஆலையின் முறைகேடு கையும் களவுமாக பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில சட்டப் போராட்டங்களும் வெற்றி பெற்றுள்ளது.

இப்பகுதி மக்கள் ஆலைகளின் தொடர்ந்த நடைமுறையில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை உணர்ந்துள்ளனர். சூழல் பாதிப்பால் இப்பகுதியில் உள்ள ஒவ்வொருவரின் குடும்பத்திலும் புற்றுநோய் உட்பட பல்வேறு ஆபத்தான நோய்களில் பாதிக்கப்பட்ட ஒருவர் கட்டாயம் இருப்பர். இதற்கு காரணம் இப்பகுதி நீரும், காற்றும், மண்ணும் மாசுபட்டதே ஆகும்.

இப்படி பாதிப்பை உணர்ந்ததன் விளைவாக, 2010ஆம் ஆண்டு பெருந்துறை சிப்காட் வளாகத்தில் 8 மாவட்ட ஆபத்தான நச்சுக்கழிவுகளை கொண்டு வந்து அதை சுத்திகரிப்பு செய்யும் “நச்சுக்கழிவு மேலாண்மை திட்டம்” என்பது அரசால் கொண்டுவரப்பட்ட போது அதை நாங்கள் மிக கடுமையாக எதிர்த்தோம் .

பெருந்துறை, சென்னிமலை பகுதியை சார்ந்த சுற்றுச்சூழல் அக்கறையுள்ள பலரையும், பல்வேறு அரசியல் கட்சிகள், பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் இணைத்துக் கொண்டு, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு சுற்றுச்சூழல் போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வந்த நாங்கள் “நச்சுக்கழிவு மேலாண்மை திட்டம்” ஏற்படுத்தும் பாதிப்புகளை பற்றி மக்களிடம் தொடர்ந்து விளக்கப்படுத்தினோம். இத்திட்டத்திற்கான கருத்துக்கேட்புக் கூட்டத்தில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்று “நச்சுக் கழிவு மேலாண்மை திட்டத்தின்” உண்மையான நிலையையும், அதனால் இப்பகுதி எவ்வாறு பாதிப்படையும் என்பதையும், ஆலையின் நடைமுறையையும், அரசின் நோக்கத்தையும் கூறி அம்பலப்படுத்தி விரட்டியடித்தோம்.

பெருந்துறை சிப்காட் வளாகத்தை 1100 ஏக்கர் புதிதாக விரிவுபடுத்துவது என கம்புளியம்பட்டி உட்பட பல்வேறு கிராம பகுதியை உள்ளடக்கிய திட்டத்தை 2009ல் அரசு கொண்டு வந்தது. ஓராண்டுக்கு மேல் தொடர்ச்சியாக எண்ணற்ற வடிவங்களில் பல்வேறு போராட்டங்களை அப்பகுதி மக்களும், விவசாயிகளும் தொடர்ந்து நடத்தி “எங்கள் நிலத்தை இழக்க மாட்டோம்” என உறுதியாகப் போராடினர். இதன் விளைவாக தமிழக அரசு மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்தது. சட்டமன்றத்திலேயே அன்றை முதல்வராக இருந்த கருணாநிதி அவர்கள் “சிப்காட் வளாக விரிவாக்க திட்டத்தை” கைவிடுவதாக அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளை நேரடியாக உணர்ந்தும், பல்வேறு போராட்ட அனுபவங்களை பெற்றவர்களாக இப்பகுதி மக்கள் விளங்கி வருகின்றனர். “பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும்” என்ற முதுமொழிக்கேற்ப, ஏற்கனவே கடும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இப்பகுதியில், புதிய வரவாக சுற்றுச்சூழலை மிகக் கடுமையாக நாசப்படுத்தும் கோக் தொழிற்சாலை தமிழக அரசின் பேராதரவுடன் பெருந்துறையில் நுழைந்துள்ளது.

கோக் ஆலை தொடக்கமும், மக்களின் எதிர்ப்பும்:

coke 370பெருந்துறை சிப்காட் வளாகத்தில் ஆலை அமைக்க ஜனவரி 2014ல் கோக் நிறுவனம் ஒப்பந்தம் போட்டாலும், வேலைகளை மெதுவாக தொடங்கியது. முதலில் 10 ஆழ்குழாய் கிணறுகளை தாங்கள் பெற்றுள்ள நிலத்தில போட்டனர். டிசம்பரில் நிலத்தில் இருந்த முட்புதர்களை அகற்றி வேலி போட இராட்சச இயந்திரங்களோடு வந்தபோது தான் மக்களுக்கு சிப்காட்டில் கொக்கோ-கோலா ஆலை அமைக்க அரசு நிலம் ஒதுக்கியிருப்பது தெரிய வந்தது.

மக்கள் திரண்டு கோக் நிறுவனத்தின் இராட்சச இயத்திரங்களை தடுத்து நிறுத்தினர். உடனே அரசு நிர்வாகம் ஓடோடி வந்தது. மக்களில் சிலர் வாருங்கள், கோட்டாட்சியரின் அலுவலகத்தில் வைத்துப் பேசி முடிக்கலாம் என்றனர். மக்கள் பல்வேறு அனுபவங்களில் களம் கண்டவர்கள் ஆயிற்றே, அவர்கள் இதற்கு ஒத்துக்கொள்ள மறுத்துவிட்டனர். அரசாங்கம் அனைவரிடமும் நேரில் பேச வேண்டும். கோக் ஆலை பற்றி முழு உண்மையையும் கூறவேண்டும் என உறுதியுடன் இருந்தனர். அரசுக்கும், கோக் நிறுவனத்திற்கும் “திருடனுக்கு தேள் கொட்டியதுபோல்” ஆகியது.

ஆழ்குழாய் கிணறு மக்களுக்கு தெரியாமல் அமைத்தோம், இப்போது இப்படி ஆகிவிட்டதே என திகைத்தனர். வேறு வழியின்றி பெருந்துறை ஊராட்சி அலுவலகத்தில் அரசால் கூட்டம் கூட்டப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நாள் அறிவிப்பில் இதில் பங்கேற்றனர்.

10.-12.-2014 அன்று நடந்த இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) ரெ.சதீசு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர், ஆலை நிர்வாகத்தினர் இதில் பங்கேற்றனர். இதில் மக்களின் கேள்விகளுக்கு எதற்கும் முறையாக இவர்கள் யாரும் பதில் சொல்லவில்லை. கொக்கோ-கோலா ஆலை நிர்வாகம். தாங்கள் வருங்காலத்தில் CSR எனப்படும் நலத்திட்டத்தில் மக்களுக்கு செய்யப்போகும் சலுகைகளை பற்றி மட்டுமே திரும்ப திரும்ப பேசினர். திட்ட மதிப்பு எவ்வளவு, எவ்வளவு தண்ணீர் எடுக்கப்போகிறோம், அரசோடு என்ன ஒப்பந்தம் போட்டுள்ளோம் என எதையும் சொல்ல மறுத்துவிட்டனர்.

கூட்ட அரங்கில் 150 பேர் மட்டுமே அமர முடிந்ததால் மற்றவர்கள்அனைவரும் வெளியே அமர்ந்தனர். அவர்களுக்கு வீடியோ மூலம் அரங்கில் நடப்பது வெளியே தெரியும்படி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற அனைவரும் ஒருமித்த குரலில் (ஆலை ஊழியர்கள் தவிர) கொக்கோ-கோலா ஆலை அமைக்கக்கூடாது எனப் பேசினர். “எங்களுக்கு வளர்ச்சியும் வேண்டாம், உங்கள் சலுகையும் வேண்டாம், எங்களை இருக்கும் நிலையில் இப்படியே விட்டு விடுங்கள்” என்பதே அரசுக்கும், ஆலைக்கும் மக்களின் கோரிக்கையாக இருந்தது.

இந்த கூட்டத்திற்குப் பின்னரே, ஆலை 500 கோடி ரூபாய் மூலதனத்தில் 71.34 ஏக்கர் நிலத்தில் அமையும். ஏக்கர் ஒன்றுக்கு ஆண்டு குத்தகை ஒரூ ரூபாய் மட்டுமே என்பதும், தினசரி 20 லட்சம் லிட்டர் தொடங்கி படிப்படியாக 35 லிட்டர் தண்ணீரை ஆலையைப் பயன்படுத்தும் என்பவை உள்ளிட அனைத்த விவரங்களும் வெளிவரத் தொடங்கியது.

10.-12.-2014 அன்று நடந்த கோக் ஆலை பற்றிய கருத்துக்கேட்புக் கூட்டம் முறைப்படி அரசால் நடத்தப்படவில்லை. ஓர் ஆலை கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெறும் ஒரு மாதத்திற்கு முன்பே 1 தமிழ் 1ஆங்கில தினசரியில் செய்தி தரவேண்டும். ஆலையின் ணிமிகி எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு(EIA) அறிக்கையும், திட்ட அறிக்கையும் (PROJECT REPORT ) அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என அனைத்திலும் வெளிப்படையாக வைக்கவேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இணைய பக்கத்தில் (WWW.TNPCB.GOV.IN) இவை அனைத்தும் வெளியிடப்பட்டு இருக்க வேண்டும். இவை எவையும் செய்யாமல், எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லாமலே இக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்தக் கருத்துக் கேட்பு கூட்டம் பற்றி மாவட்ட வருவாய் அலுவலர் ((DRO)) ரெ.சதீசு அவர்கள் “கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 80% மக்கள் மட்டுமே கோக் ஆலை வேண்டாம்” என்றனர் என பத்திரிக்கையில் பேட்டி கொடுத்தார். பங்கேற்ற அனைத்து மக்களும் கோக் ஆலை வேண்டாம் என உறுதியாக கருத்து தெரிவித்தது வீடியோ ஆதாரமாகவே இருக்கின்ற நிலையில், பத்திரிகைகளுக்கு தவறாக செய்தி கொடுத்ததை கண்டித்தும், அதற்கான காரணத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ((DRO)) விளக்க வேண்டும் என 28.12.2014 அன்று ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் நான் கடுமையாக கூறினேன்.

ஈரோடு மாவட்ட ஆட்சிதலைவர் இதற்கு பல்வேறு விதமான மழுப்பலான பதிலைக் கூறி சமாளித்து அம்பலமானார். பெருந்துறை சட்டமன்ற தொகுதி தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்கின்ற தோப்பு வெங்கடாசலம் அவர்கள் வெற்றி பெற்ற தொகுதி. இவர் கோக் ஆலைக்கு எதிராகப் போராட்டங்கள் இப்பகுதியில் நடைபெறுவதைத் தடுப்பதற்கு தொடர்ந்து முயன்று வருகின்றார்.
ஜனவரி 5, ஆம் தேதி தோழர்.கந்தசாமி அவர்கள் பொறுப்பாளராக இருக்கும் பெருந்துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த பெருந்துறை பேரணியை காவல்துறையை வைத்து தடை செய்ய வைத்தார். பேரணி தடையை கண்டித்தும், அமைச்சரின் அத்துமீறல்களை பற்றியும் நான் கொடுத்த பத்திரிக்கை செய்தியை அனைத்து பத்திரிக்கையும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. அதை அமைச்சரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

"முகிலன் போன்றவர்கள் தீவிரவாதிகள், அவரை போராட்டத்திற்கு எக்காரணம் கொண்டும் அழைத்து வந்து விடாதீர்கள்" என தன்னை சந்தித்து மனு கொடுத்த வந்த பிரச்சினைக்கு உரிய பகுதி மக்களிடம் நேரிலேயே தெரிவித்துள்ளார் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அவர்கள்.

பிப்ரவரி 8ஆம் தேதி கொ.ம.தே.கட்சி பெருந்துறையில் நடத்திய உண்ணாநிலை போராட்டத்திற்கு அமைச்சர் காவல்துறை மூலம் அழுத்தம் கொடுக்க வைத்து, ஒலிபெருக்கி வைக்கவே அனுமதிக்கவிலை. 1500 பேர் வரை பங்கேற்ற உண்ணாநிலை போராட்டம் ஒலிபெருக்கி இன்றியே நடந்தது.

மக்கள் கோக் ஆலையை எதிர்த்த உண்ணாநிலை போராட்டத்திற்கு செல்வதை தடுப்பற்காகவே, வேறு ஒரு காரணம் கூறி அதே நாளில் ஏராளமான ஆடுகள் அடித்து அன்று தனியாக ஒரு விருந்து அமைச்சர் ஏற்பாட்டில் நடந்தது.

பெருந்துறையில் அரசின் நெருக்கடியையும் மீறி கோக் ஆலையை எதிர்த்து உண்ணாநிலை போராட்டம் சிறப்பாக நடத்தியதற்காகவே, கொ.ம.தே.கட்சி பொறுப்பாளர்களின் அலுவலகத்தை அரசு அதிகாரிகளை கொண்டு மூட வைத்தார் அமைச்சர்.

மார்ச் 5, அனைத்து கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் இணைந்து பெருந்துறை சென்னிமலை ஒன்றியத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக பெருந்துறை கடைவீதிகளில் துண்டறிக்கை கொடுத்தவர்களை காவல்துறை டிஎஸ்பியை வைத்து மிரட்ட வைத்தார். கடைக்காரர்களிடம் காவல்துறையை வைத்து கடைகளைத் திறங்கள் என நிர்பந்திக்க செய்தார். இரு ஒன்றியங்களிலும் மக்கள் கோக் ஆலையை எதிர்த்து கடைகளை அடைத்து, தொழில்களை முடக்கி, தனது தங்களது பலமான எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்தனர்.

தற்போது அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு பெருந்துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் ஏப்ரல் மாத இறுதியில் பெருந்துறையிலும், மே மாத தொடக்கத்தில் சென்னிமலையில் புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினரும், கோக் ஆலையை எதிர்த்து பேரணி-பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்து, மக்களிடையே விரிவான பரப்புரை செய்து வந்தனர்.

கோக் ஆலை தொடர்பாக இதுவரை எதுவும் பேசாத அமைச்சர், ஒரு பக்கம் மக்களின் எதிர்ப்பும் போராட்டமும் வழுவானதும், தமிழக சட்டசபையில் ஆலை பற்றி கேள்வி வந்தவுடன் “கோக் நிறுவனம் ஆலை அமைக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இதுவரை அனுமதி கேட்டே வரவில்லை. வந்தால் அம்மாவின் கவனத்திற்க்கு கொண்டு சென்று மக்களின் நலம் சார்ந்து நல்ல முடிவை அரசு எடுக்கும்” என மழுப்பலாகத் தெரிவித்துள்ளார்.

ஆலைக்கு 71.34 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ள தமிழக அரசு, ஆலைக்கு 35 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் ஆற்றில் இருந்து எடுக்க அனுமதி கொடுத்த அரசு, கோக் ஆலை 10 இராட்சச ஆழ்குழாய் கிணறு தோண்டும் போது கண்டுகொள்ளாத அரசு, கோக் ஆலை சுற்றுச்சுவர் அமைக்கும் நோக்கத்துடன் முள்வேலிகளை அகற்றியபோது கண்டுகொள்ளாத அரசு, கோக் ஆலையை எதிர்த்த மக்கள் உறுதியாக போராடிய போது மாவட்ட நிர்வாகத்தையே அனுப்பி சமாதானப்படுத்த முயன்ற அரசு, எப்படியாவது மக்கள் போராட்டத்தை முடக்கி ஆலையைத் தொடங்க வைத்து விடலாம் என கருத்துக்கேட்புக் கூட்டம் வரை நடத்திய அரசு, போராடும் அமைப்புகளுக்கும், போராட்ட முன்னணியினருக்கும் தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் அரசு, கோக் ஆலையை எதிர்த்து யார் எந்த போராட்டம் நடத்தவேண்டும என்று கேட்டாலும் உள்ளூரில் அனுமதி மறுத்து அதனால் உயர்நீதிமன்றம் சென்றே உத்தரவு பெறவேண்டும் என செயல்படும் அரசு, இப்படி அப்பட்டமாக கோக் ஆலை இதுவரை அனுமதி கேட்டு அரசையே அணுகவில்லை எனக் கூறி தமிழக அரசும், அதிகார வர்க்கமும் கொக்கோ-கோலா ஆலையின் ஏவலாட்களாகவே செயல்பட்டு வருகின்றனர்.

இதுவரை இந்தியா, மற்றும் தமிழகத்தை ஆண்ட, ஆளும் கட்சிகள் அனைத்தும் கோக் மற்றும் பெப்சி ஆலைகளுக்கும், பன்னாட்டு கம்பெனிகளுக்கும், எண்ணற்ற சலுகைகளை வாரி வழங்கி உள்நாட்டு தொழில்களை அழித்து வரும் வேலைகளை போட்டி போட்டு வேகமாக செய்து வருகின்றன. இதில் யாரும், எந்த கட்சியும் விதிவிலக்கல்ல.

இதுமட்டுமன்றி இந்நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்கவும், மக்களின் நலனுக்காகவும், போராடுபவர்களை காவல்துறையை ஏவிவிட்டு ஒடுக்குவதிலும், அவர்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என முத்திரை குத்தியும் வருகின்றன அரசுகள். ஆனாலும் அரசின் அடக்குமுறைகளை முறியடித்து மக்கள் போராட்டம் வெல்லும் என்பதே வரலாறு.

வெள்ளையனை விரட்டியடிக்க களம் கண்ட தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன் உட்பட எண்ணற்றோர் பிறந்து போராடி வாழ்ந்த மண் இது. ஆண்களுக்கு இணையாக வேலு நாச்சியாரும், வீரப்பெண் குயிலி உள்ளிட்ட எண்ணற்ற வீரபெண்கள் உலவிய மண் நமது தமிழ் மண்.

இந்திய அரசின் முப்படை தாக்குதலையும் எதிர்கொண்டு நின்று, உயிரை இழந்தும், எண்ணற்ற அடக்குமுறையை சந்தித்தும், கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தை 1350 நாட்களாக இன்றுவரை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் இடிந்தகரைப் பெண்கள் வாழும் வரலாறாய் திகழும் மண் நம் தமிழ்மண்.

மக்கள் போராட்டத்தின் விளைவாய் கோக் ஆலைக்கு கொடுத்த அனுமதி, தமிழக அரசால் தற்போது(ஏப்ரல்-22) ரத்து செய்யப்பட்டுள்ளது.

நமது தாய் தமிழ் மண்ணை, நீரை, இயற்கை வளங்களை நாசமாக்கி நமது வாழ்க்கையை அழிக்கும் கொக்கோ-கோலா, பெப்சி உள்ளிட்ட அனைத்து நாசகார ஆலைகளையும், பன்னாட்டு நிறுவனங்களையும் தமிழகத்தை விட்டு விரட்டியடிப்போம்.

தற்போது மக்கள் போரட்டத்தால் சனவரி-2015 முதல் அரசால் தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ள தினமும் 90 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கும் திருச்சி-சூரியூர் பெப்சி ஆலையை நிரந்தரமாக மூட வைக்கவும், நெல்லை -கங்கை கொண்டான் சிப்காட்டில் 38 ஏக்கர் பரப்பளவில் தினமும் 18 லட்சம் லிட்டர் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க மட்டும் அனுமதி பெற்று, மாசுக் கட்டுப்பாடு துறையிடம் இதுவரை எவ்வித அனுமதியும் பெறாமல், ஏன் இன்னும் விண்ணப்பமே கூட செய்யாமல், முறைகேடாக கட்டுமான பணிகளை தொடங்கியுள்ள பெப்சி ஆலையை தடுத்து நிறுத்துவோம்.

இனி மேல் தமிழகத்தில் பெப்சி , கோக் ஆலைகளுக்கு அனுமதி கொடுப்பதில்லை என்ற கொள்கை முடிவை தமிழக அரசை எடுக்கவைப்போம்

ஆதிக்கமற்ற, சுரண்டலற்ற, தற்சார்பு தமிழகம் அமைக்கும் நோக்கோடு “தமிழர்களின் தாகம் தமிழ்த்தேச தாயகம்” என்று செயல்படுவோம். தமிழகத்தில் நடைபெற்று வரும் நீர்வளக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்.

- முகிலன்

Pin It