நவம்பர் 26ஆம் நாள் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களது அறுபதாம் ஆண்டு பிறந்தநாள் விழாவும், நவம்பர் 27ஆம் நாள் தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த மாவீரர் நாள் நிகழ்வும் உலகத் தமிழர்களால் இவ்வாண்டு எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது.

புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் வாழும் நாடுகளில் கூட்டம் கூட்டமாக தமிழீழத் தமிழர்கள், இந்நிகழ்வுகளில் பங்கெடுத்து, தமிழீழத் தேசியத் தலைவர்க்குப் பிறந்த நாள் வாழ்த்தும் ஈழ மண்ணுரிமை மீட்க இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கு வீர வணக்கமும் தெரிவித்தனர்.

தமிழகத்திலும், பல்வேறு அமைப்புகள் சார்பில் இதற்கான நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்ட நிலையில், தமிழகக் காவல்துறையினர் இதற்குக் கடும் கட்டுப்பாடுகள் விதித்து, பல இடங்களில் நிகழ்ச்சியைத் தடை செய்தனர்.

பொடா வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தடை செய்யப்பட்ட அமைப்பினை ஆதரித்து சனநாயக வழியில் பேச, எழுத எவ்விதத் தடையுமில்லை என சுட்டிக்காட்டியது. ஆனால், இந்த நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் தமிழக அரசின் காவல்துறை, “தடை செய்யப்பட்ட இயக்கத் தலைவரை ஆதரிக்கிறீர்கள்” எனக் குற்றம்சாட்டி, பல்வேறு ஒடுக்குமுறைகளில் இறங்கியது.

சென்னையில், ம.தி.மு.க. சார்பில், தி.நகர் முத்துரங்கம் சாலையில் நடைபெறவிருந்த மாவீரர் நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டத்திற்கு, முதலில் காவல்துறையினர் தடை விதித்தனர். பின்னர், அது நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு, நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டுமென உத்தரவிட்ட பிறகே, காவல்துறையினர் அனுமதி வழங்கினர்.

சென்னை மயிலாப்பூரில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வைக்கப்பட்ட மாவீரர் நாள் பதாகையை, காவல்துறையினர் அகற்றியதைக் கண்டித்த, அவ்வமைப்பின் செயலாளர் தோழர் உமாபதி, காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். கால்கள் இரண்டும் செயல்படமுடியாத வகையில், முரட்டுத்தனமாகத் தாக்கப்பட்ட அவருக்கு நீதிகேட்டு, இராயப்பேட்டை காவல்நிலையம் முற்றுகையிடப்பட்டது.

புதுக்கோட்டை வடகாடு பகுதியில், தமிழீழ ஏதிலியர் குடியிருப்பில் எழுப்பப்பட்ட கோயில் ஒன்றின், குடமுழக்கு நிகழ்வுக்குக் கூட காவல்துறையினர் தடை விதித்தனர். தடையை மீறி, நிகழ்வை நடத்தக் குவிந்த தமிழீழ ஏதிலிகளை காவல்துறையினர் அடித்து விரட்டினர். இதில், பலர் காயமடைந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில், பிரபாகரன் பிறந்தநாள் விழாவிற்காகத் திரண்ட ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். சுவரொட்டிகளும், பதாகைகளும் காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டது. தர்மபுரியில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்த மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதே போல் திருச்சி – திருச்செந்தூர் பகுதிகளில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் மற்றும் தமிழர் தேசிய முன்னணி ஆகியவை ஏற்பாடு செய்த மாவீரர் நாள் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மதுரையில் அனுமதி மறுக்கப்பட்டது.

ஒருபுறம், தமிழீழ மக்களுக்கு ஆதரவாக சில சட்டமன்றத் தீர்மானங்களை இயற்றிய அ.தி.மு.க. அரசு, இன்னொரு புறம் முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்பு – தமிழீழ ஏதிலிகளை ஒடுக்குவது – மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடை செய்வது என அட்டூழியம் புரிகிறது. அ.தி.மு.க.வின், இந்த இரட்டை வேடத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழின உணர்வாளர்கள் மீதான, அ.தி.மு.க. அரசின் இந்த ஒடுக்குமுறையை தமிழ்த் தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தி.வி.க. பொறுப்பாளர் தோழர் உமாபதி அவர்களையும் அவருடன் இருந்த மற்ற தோழர்களையும் தாக்கிய காவல்துறையினரை இடைநீக்கம் செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழக அரசை வலியுறுத்துகிறது. இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக, தமிழின உணர்வாளர்கள் ஓராணியில் திரண்டு போராட அழைப்பு விடுக்கிறது!

- பெ.மணியரசன், தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

Pin It