‘பதிஎழு அறியாப் பழங்குடி’ என்றவொரு சொல்முறை செவ்வியல் இலக்கியமான சங்க இலக்கியத்தில் அடிக்கடி பயின்று வரும்; ‘தான் வாழுகின்ற ஊரிலிருந்து பிழைப்பிற்காக வெளியே கிளம்புதலை அறியாத பழங்குடியினர்’ என்பது அதற்கான பொருள். பிறந்த இடத்திலிருந்து வாழ்வதுதான் வாழ்க்கை; அதுவே உயர்ந்த வாழ்க்கை எனப் போற்றிக் கொண்டாடுகின்ற முறையில் சங்க இலக்கியத்தில் இந்தச் சொற்றொடர் பயன்படுத்தப்படுகின்றது. வகுப்பறையில் சொல்லிக் கொடுக்கப்பட்ட அந்தக் காலத்திலிருந்து 62-ஐ நெருங்கும் இந்தக் காலம் வரை மேற்கண்ட அந்த வார்த்தையாடல் குறித்துப் பெரிதாக நான் ஒரு போதும் எண்ணிப் பார்த்ததில்லை. இப்பொழுது அடிக்கடி அந்தச் சொற்கோலம் என் மனத்தை ஆக்ரமிக்கிறது. இன்னும் மூன்று மாதத்தில் ஓய்வு பெறப் போகிறேன். பிழைப்பிற்காக ஊரை விட்டுக் கிளம்பி இந்தப் புதுச்சேரி மண்ணில் வேலை கிடைத்து வாழத் தொடங்கிச் சரியாக 38 ஆண்டுகள் ஓடிவிட்டன. இனியும் இங்கேயே தொடர்வதா? பிறந்து வளர்ந்த தாய் மண்ணிற்கே திரும்பி விடுவதா? என்கிற அலக்கழிப்பு தொடங்கி விட்டது. இரவு விழித்துக் கொண்டால் பிறகு தூங்க முடிவதில்லை; பல்வேறு எண்ணங்கள் ஒரு கோட்டில் நகராமல் சாமி எறும்பு மாதிரி அப்படியும் இப்படியுமாக அங்கும் இங்குமாக இழுத்து அடிக்கின்றன. ஒவ்வொரு விடியலும் என் கண்ணில்தான் நிகழ்கின்றன. அதுவா? இதுவா? என முடிவெடுக்க முடியாத மனநிலையில், ‘இருத்தல்’ என்பது இருளாகத் தொடர்கிறது; பெரும் வலியாக நீளுகிறது.

refugee

இங்கேயே வாழ்ந்து முடித்து விடலாமென்பதற்குப் பக்க பலமாக சில நியாயங்கள் சில நாட்களில் தூக்கலாக நிற்கின்றன. சில நாட்களில் பிறந்து வளர்ந்த ஊரில் போய் விழுந்து கிடந்து புரண்டு, அந்த மண்ணில் மடிவதுதான் மகத்துவம் என்பதற்கான நியாயங்கள் முன்னுக்கு வந்து நிற்கின்றன. இரண்டு பக்கமும் நியாயங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் இப்படித்தான் எனக்கு.

சிலபேர், குறிப்பாக மலையாளிகள் இந்தப் பிசாசுத் தனமான அலைக்கழிப்பிற்குள் சிக்குவதில்லை; எங்களோடு பணியாற்றிய மலையாளிகள் பெரும்பாலும் பணி முடிந்தவுடன் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு, பார்த்துப் பார்த்துக் கட்டி வாழ்ந்த வீட்டையும் வந்த விலைக்கு விற்றுவிட்டு, நேரே கேரளத்திற்கு வண்டி ஏறி விடுகிறார்கள்.

எங்கள் தெருவில் ஒரு மலையாளிக் குடும்பம்; ஒரு பையன்; ஒரு பெண்; வீட்டுக்காரருக்கும் அந்த அம்மாவிற்கும் பத்து ஆண்டு இடைவெளி; பத்து ஆண்டுகளுக்கு முன்பே அவர் ஓய்வு பெற்றுவிட்டார். இந்தப் பத்து ஆண்டுகளும் இந்த அம்மாவிற்குச் சமைப்பது தொடங்கி, எல்லாவிதமான பணி விடைகளும் செய்வதுதான் அவருக்கான வேலையாக இருந்தது. இப்பொழுது இந்த அம்மாவும் ஓய்வு பெற்று விட்டார்கள். ஓய்வுக் காலத்தில் வழங்கப்படும் ‘பென்சனுக்கான’ ஆவணங்கள் கைக்கு வந்தவுடன் கேரளாவிற்குப் புறப்படத் தயாராகி விட்டார்கள்.

அழகான வீடு; வீட்டை உள்ளே எப்படி வைத்திருக்கிறார்களோ தெரியாது. ஆனால் வரவேற்பு அறையையும் வீட்டின் புறத் தோற்றத்தையும் பார்ப்பவர்கள் மனத்தில் பதியும்படி அழகாகப் பேணுவதில் மலையாளிகள் பெரும் சிரத்தை எடுத்துக் கொள்ளுகிறார்கள். இந்த அம்மாவும் அப்படித்தான். வீட்டைச் சுற்றியும் விதவிதமான பூச்செடிகள். அந்த அம்மா தாவரவியல் பேராசிரியர். மாணவர்கள் அவரை வகுப்பறைக்குள் பார்த்துப் பலநாள் ஆகிவிட்டது என்பார்கள். ஆனால் வீட்டைச் சுற்றிப் பார்த்தால் அவரொரு தாவரவியல் பேராசிரியர் என்பதை யாராலும் மறுத்திட முடியாது. அப்படி ஒவ்வொரு பருவத்திலும் பூத்துக் குலுங்கும் தாவரங்களை வீட்டைச் சுற்றி வைத்துக் குழந்தை போல வளர்த்தார்.

உரம் இடுவது, மருந்து தெளிப்பது எல்லாம் இந்த அம்மா வேலை. மறக்காமல் முறையாக நீர் விடுவது வீட்டுக்காரர் வேலை. ஒவ்வொரு மாலைப் பொழுதும் தண்ணீர்க் குழாயுடன்தான் அவருக்குக் கழிந்தது. எனவே எப்பொழுதும் பச்சைப்பசும் தாவரம் சூழப் பூத்துக் குலுங்கும் செடி கொடிகள் மணக்க அவர்கள் வீடு ஆனந்தத்தை அள்ளி வைத்திருக்கும் வீடாக எங்களுக்குத் தோன்றும். ஆனால் கொஞ்ச நேரம் பேசிவிட்டு வரலாமென்று வரவேற்பறையில் போய் உட்கார்ந்தால் கொசுத் தொல்லை தாங்க முடியாது. கொசுக்களை விரட்ட இன்றைக்கு இருப்பது போல நவீன உபகரணங்கள் பெரிய அளவில் அன்றைக்குச் சந்தையில் கிடைப்பதில்லை. கொசுவை விரட்டிக் கொண்டேதான் பேச வேண்டியதிருக்கும். அதனாலேயே அவர்கள் வீட்டிற்குள் யாரும் அதிகமாகப் போவதில்லை. அவர்களும் அதைத்தான் விரும்பினார்கள். வீட்டின் புற அழகைப் பார்த்து ரசித்துக் கொள்ள வேண்டியதுதான்.

அந்த வழியாகப் போகும் சில பள்ளிக்கூடத்துப் பையன்கள் எட்டிப் பூவைப் பறித்து விளையாடுவார்கள். ‘மேடம்’ பார்த்துவிட்டார்கள் என்றால் அவ்வளவுதான்; ஓடி வருவார்கள்; பசங்க பறந்து விடுவார்கள்; மேடம் வாயிலிருந்து புறப்பட்டு மலையாள உச்சரிப்போடு கலந்து வருகின்ற கெட்ட வார்த்தைகள் பெரும்பாலும் அந்தப் பசங்க காதில் விழாது; அந்த வழியாகப் போகின்ற எங்கள் காதில்தான் வந்து விழும். நான் மேடத்தின் தாவரங்களின் மேல் உள்ள பிரியத்தை நினைத்துச் சிரித்துக் கொள்வேன்.

ஒருநாள் ‘பாம்பு ‘பாம்பு’ என்று ‘மேடம்’ கத்துகிற சத்தம் கேட்டது. இரண்டு வீடு தள்ளிதான் எங்கள் வீடு. நான் வாசலில் என்னைப் பார்க்க வந்த மாணவரை வழியனுப்ப நின்று கொண்டிருந்தேன். சத்தம் கேட்டு நானும் மாணவரும் ஓடினோம். மேடம் மட்டும்தான். வீட்டுக்காரரும் இல்லை. பிள்ளைகளும் இல்லை. பக்கத்தில் நெளிந்து கொண்டு கிடந்த மண்ணுழிப் பாம்பைக் கட்டினார்கள். முகத்தில் அப்படியொரு அருவருப்பு தெரிந்தது. பாம்பைக் கையால் தூக்கிப் போட்டிருக்கிறார்கள். பையன்களின் குறும்பு. பூப்பறிக்க விடாத மேடத்தைப் பழிவாங்கப் பையன்கள் செய்த விஷமம்.

வீட்டின் ‘கேட்டில்’ தபால்களைப் போடுவதற்காக ஒரு சிவப்புப் பெட்டியைப் பொருத்தியிருந்தார்கள். அந்தப் பெட்டிக்குள் மண்ணுழிப் பாம்பைப் பிடித்து வந்து இரவோடு இரவாகப் போட்டு இருக்கிறார்கள். மதியம் தபால் எடுக்கக் கையை விட்டால், கையோடு பாம்பு வந்திருக்கிறது. பயத்தில் பாம்பை உதறிவிட்டுக் கத்தியிருக்கிறார்கள். எனக்குச் சிரிப்பு வந்தது; பையன்களின் குறும்பும், கற்பனையும் ரசிக்கத் தக்கவையாக இருந்தன. ஆனால் சிரித்தால் அவ்வளவுதான். உறவே போயிடும். ‘பக்கத்து வீட்டுக்காரரிடம் நட்போடு பழகுங்கள்’ என்கிற பைபிள் வாசகம் எனக்குப் பிடித்த ஒரு வாசகம். சிரிப்பை அடக்கிக் கொண்டேன். ஓடிச்சென்று எங்கள் வீட்டில் தண்ணீர் கொண்டு வந்து மேடத்தைக் குடிக்க வைத்தேன். என் மாணவரிடம் எதிரே கிடக்கும் காலி மனையில் அந்தப் பாம்பை அடித்துப் புதைக்கச் சொன்னேன். மாலையில் வீட்டுக்காரர் வந்து நன்றி சொன்னார்.

இப்படி கண்மணி போல் காத்த வீட்டை ‘விலை பேசுகிறார்கள்’ என்று கேள்விப்பட்டவுடனேயே எனக்கு ஆச்சிரியமாக இருந்தது. ‘எப்படி இப்படி வாழ்ந்த வீட்டை விலை பேச முடிகிறது’ என்று அடிக்கடிப் புலம்பிக் கொண்டிருந்தேன். புலம்பலைத் தாங்க முடியாத என் மனைவி ஒரு நாள் எரிந்து விழுந்தாள்.

"உங்களுக்கென்ன? அவங்க வீட்ட அவங்க விக்கிறாங்க, அவங்க வலி அவங்களுக்குத்தான் தெரியும்"

"ஆமா! அந்த வீட்டுல எவ்வளவு பெரிய துக்கம் நிகழ்ந்திருக்கு? மறந்திட்டிங்களா?"

மேடத்தோட ஒரே பொண்ணு அழகாக இருப்பாள். சில குழந்தைகள் அம்மா சாயலில் பிறக்கும்; சில அப்பா சாயலில் இருக்கும். அந்தப் பொண்ணு அம்மா சாயலில். அமைதி தவழும் முகம். இங்கே இருந்த ஒரே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துப் படித்துக் கொண்டிருந்தாள். அப்பொழுதெல்லாம் படித்து மதிப்பெண் எடுத்தால்தான் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய முடியும். இப்பொழுது போல் பணம் கட்டினால் டாக்டர் பட்டம் என்பதெல்லாம் அப்பொழுது இல்லை. ஐந்தாண்டு முடித்து விட்டு, பயிற்சி மருத்துவராக அதே மருத்துவமனையில் படித்துக் கொண்டிருந்தாள். மேற்படிப்பிற்குத் தேர்வு எழுதப் படிக்க வேண்டுமே! அதற்காக அங்கே உள்ள பெண்கள் விடுதியிலேயே தங்கிப் படித்துக் கொண்டிருந்தாள்.

ஒருநாள் காலை பத்துமணி இருக்கும்; தலைவிரி கோலமாக அடித்து அழுது கொண்டு ‘மேடம்’ காருக்குள் ஏறுகிறார்கள். நான் பார்த்துவிட்டு ஓடினேன். விடுதியில் அந்தப் பொண்ணு ‘தூக்கில் தொங்கிக் கொண்டு கிடப்பதாகத் தகவலாம்!' பின்னாலேயே நானும், எதிர்வீட்டுக்காரரும் என் வண்டியில் போனோம். அந்த அறைக்குள்ளேயே போய், தூக்கில் தொங்கிக் கிடந்த அந்தக் காட்சியைக் கண்டோம்; “ஏம் பொண்ண கொன்னு போட்டாங்களே! அவ தற்கொலை பண்ண மாட்டா! ஏம் பொண்ணாச்சே! அவ துணிச்சல்காரியாச்சே! வைராக்கியவதியாச்சே! இத நான் நம்பமாட்டேன்! கொன்னவங்கள சும்மா விடமாட்டேன்"

சொல்லிச் சொல்லி அழுதார்கள்; ஒரு தாயின் வலியை யார் தான் உணரமுடியும்? மேடம் சந்தேகப்பட்டது போலவே முழங்கால்கள் தரையில் ஊன்றியிருந்தன. பக்கத்திலிருந்த வாளிகள் கூட அப்படி அப்படியே இருந்தன.

போலீஸ் வந்தது; வழக்கம் போல் போட்டோ எடுத்தார்கள்; ‘போஸ்டு மாட’த்திற்கு அனுப்பினார்கள். மாலையில் ‘பாடி’ வீட்டு வரவேற்பறைக்கு வந்தது. மேடம் அதையே சொல்லிச் சொல்லி அழுதார்கள். ஆறுமணி அளவில் கொண்டு போய் எரித்து விட்டு வந்தோம். எங்கள் தெரு முழுவதும் துக்கம் நிறைந்திருந்தது. ஒருவாரம் ஓடியிருக்கும். என் மனைவி மேடத்தைப் பார்த்து விசாரிக்க வேண்டும் என்றார்கள். தயங்கித் தயங்கிப் போனோம். அன்றைக்கு ‘மேடம்’ எங்களிடம் சொல்லிய வார்த்தை இன்றைக்கும் எனக்குள் அப்படியே ஒலித்துக் கொண்டிருக்கிறது!

"என் மகளுக்கு 22 வயது; எல்லாம் வாழ்ந்து பாத்திட்டா சந்தோஷமா! இனிமேல் என்ன இருக்கு, துக்கத்தத் தவிர! போயிட்டா! சந்தோசமாகவே போயிட்டா! கொடுத்து வச்சவ".

மேடம் மனத்தை ஆறுதல் படுத்திக் கொள்கிற விதம் எனக்கு ஒரு பக்கம் வியப்பாகவும், மற்றொரு பக்கம் ஆறுதலாகவும் இருந்தது. இந்த வாழ்வில் வேறு என்னதான் செய்ய முடியும்?

இப்பொழுது இந்த வீட்டை விலை பேசுகிறார்கள். ‘மேடம்’ விலை பேசுவதிலும், கேரளாவிற்குப் புறப்படுவதிலும் உள்ள நியாயம் என் மனைவி பார்வையில் சரியாகவே படுகிறது. ஆனால் கேரளாவிற்குப் புறப்பட்டு விடுகிற மலையாளிகள் எல்லோருமே அப்படியொரு காரணமாகத்தான் புறப்படுகிறார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. சாவு எங்குதான் இல்லை.

இறந்து போன தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து, ‘என் குழந்தைக்கு உயிர் கொடுங்கள், தந்தையே’ என்று புத்தரிடம் ஒரு தாய் வந்து கெஞ்சுகிறாள். புத்தர் சொல்லுகிறார், ‘சாவே நடக்காத ஒரு வீட்டிலிருந்து ஒரு பிடி அரிசி வாங்கி வா! நான் உன் பிள்ளையை உயிருடன் தருகிறேன்’.

அந்தத் தாயும் வீடுவீடாக அலைகிறாள்; சாவே நடக்காத வீடு ஒன்று கூட இல்லை; வெறுங்கையோடு புத்தரிடம் திரும்புகிறாள்; ‘தெரிந்து கொண்டேன், தந்தையே! வருகிறேன்’ என்று சுடுகாட்டை நோக்கிப் போகிறாள்.

எனவே மனைவி கருதுவது போல பிறந்த மண்ணிற்குத் திரும்புவது வாழ்ந்த மண்ணில் நிகழ்ந்த துக்கங்களை மறக்கத்தான் என்றும் சொல்லிவிட முடியாது. 12 வயது வரை எந்த மண்ணில் பிறந்து வளர்ந்தோமோ அந்த வாழ்க்கைதான், நம்முடைய மற்ற வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றது. எனவே அந்த மூல வாழ்க்கைக்குத் திரும்புகின்ற பேரவா நமது உயிரோடு கலந்து கிடப்பதாகத் தோன்றுகிறது.

1931-ஆம் ஆண்டு தனது 70-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட போது ஆற்றிய ஒரு சொற்பொழிவில், இரவீந்திரநாத் தாகூர் இவ்வாறு பேசுகிறார்:-

“நான் இந்தப் புழுதி மண், புல், மரங்கள், மூலிகைகளில் என் உள்ளத்தை அள்ளிக் கொட்டுகிறேன். மண்ணின் மடியில் தவழ்பவர்கள், மண்ணால் வளர்க்கப்பட்டவர்கள், மண்ணிலேயே நடக்கத் தொடங்கி, இறுதியில் மண்ணிலேயே இளைப்பாறுபவர்கள் இவர்கள் எல்லோருக்கும் நான் நண்பன்; நான் கவி"

நான் பிறந்து வளர்ந்த தாய்மண் இப்பொழுது மண்ணாக இல்லை; புழுதியாக இல்லை; நான் ஏறிக் குதித்து விளையாடிய அந்த மரங்கள் இல்லை; முழு நிலா இரவுகளில் விடிய விடியச் சடுகுடு ஆடிய எங்கள் ஆற்று மணல் இப்பொழுது இல்லை; ஆனாலும் இந்த மண்ணிற்குத் திரும்பவே என் ஆழ்மனம் விரும்புகிறது.

அதேநேரத்தில் கோணங்கியின் ‘மதினிமார் கதை’யில் வரும், அந்த ஊருக்குத் திரும்பியவன், தான் அறிந்த அந்த ஊரும், மக்களும் இப்பொழுது இல்லாமல் போய்விட்ட வலியில், தன்னை யாரென்றே யாருக்கும் தெரியாமல் போய்விட்ட கொடூரச் சூழலில், தனியாய்ப் பயன்படாமல் கிடக்கும் ஆட்டுரலில் உட்கார்ந்து ‘ஓ’வென்று அழுகின்ற அந்தக் காட்சியைப் படித்து விட்டு அழுது தீர்த்ததும், ஓய்வு பெறப் போகும் இந்தக் காலத்தில் ஞாபகம் வருகிறது.

அதுவா? இதுவா? வலி தொடர்கிறது.

‘பதிஏழு அறியாப் பழங்குடி’ என்ற சங்கச் சான்றோரின் சொற்சித்திரம் எவ்வளவு அற்புதமானது; எவ்வளவு ஆழமானது!

- க.பஞ்சாங்கம், புதுச்சேரி -8.

Pin It