இராஜபக்சே என்றால் இனப் படுகொலை, பேரினவாதம், சர்வாதிகாரம், திறந்த பொருளாதாரக் கொள்கைகளுக்காக சொந்த இன மக்களை பலி கொடுத்து நாட்டை அடகு வைப்பவர் என புதிய பேரகராதிக்கான அர்த்தங்களை உருவாக்கிக் கொண்டு போகலாம். இராஜபக்சே என்பது இன்றைக்குப் பெயர் மாத்திரமல்ல; சென்ற நூற்றாண்டின் ஹிட்லரிசத்திற்கு, பாசிசத்திற்கு புதிய விளக்கம் தரக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது. நவீன முதலாளிய சனநாயகப் பயங்கரவாதம் எங்கெல்லாம் நடைமுறைக்கு வருகிறதோ அங்கெல்லாம் இராஜபக்சேக்கள் உருவாகின்றனர். குஜராத் அதற்கான தட்பவெப்பம் நிலவும் நிலமாக இருக்கிறது. அதிலிருந்து முளைத்து கிளம்பியிருக்கும் மற்றுமொரு இராஜபக்சேதான் மோடி. மோடியை இராஜபக்சே என்று சொல்லலாமா? நெருப்பை எப்படி பெயரிட்டு அழைத்தாலும் நெருப்பு என்பது போல இராஜபக்சேவை மோடி என்றும் அழைக்கலாம்தான் அப்படிப் பார்த்தால் இலங்கையின் மோடி இராஜபக்சேதான்.

modi 278இன்றைக்கு இராஜபக்சேயிசம், மோடியிசம் என்று தனியாக ஏதும் கிடையாது. நாட்டை உலமகாத் திருடர்களுக்கு திறந்துவிடும் பல மாநில முதல்வர்கள் மோடி மற்றும் இராஜபக்சேயிசத்தைதான் பின்பற்றுகிறார்கள். மத சகிப்பற்ற, இன சகிப்பற்ற படுகொலைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள். எனவே மோடி என்பதும் இராஜபக்சே என்பதும் இரண்டு வெவ்வேறு ஆட்கள் மட்டுமல்ல என்பது இந்த கட்டுரை விடுக்கும் முதன்மையான எச்சரிக்கையாகும்! குறிப்பாக இங்கு மோடி பற்றி பார்க்கும் பல அம்சங்கள் பலருக்கும் பொருந்தி வருவதை அவரவர் வசதிக்குப் பொருத்தி புரிந்து கொள்ளலாம்.

அடால்ஃப் ஹிட்லர் ஆகட்டும், இராஜபக்சேவாகட்டும், அல்லது மோடியாகட்டும் இவர்கள் யாவருமே நன்கு திட்டமிட்ட தேர்ந்த அமைப்பின் பின்னணியிலிருந்து வந்தவர்களாவர். இராஜபக்சே, சுதந்திரா கட்சியின் இனவெறித் தன்மையின் முகிழ்த்த வடிவம் என்றால், மோடி ஆர்.எஸ்.எஸ்.ஸின் நேரடி வாரிசாவர். மோடியின் முன்னோடிகளான விநாயக்ராம் சாவர்க்கர், கோல்வால்கர், சுதர்சன் மற்றும் சங்பரிவாரங்களின் ஒர் இலட்சிய வடிவமாவார். சாவர்க்கரின் அல்லது அதற்கு முந்தய சரித்திர முன்னனோடி பிரதி நாயகனான சத்ரபதி சிவாஜியின் இராம அல்லது-இந்து ராஜ்ஜியத்தின் வீர வாள், மொகலாய அட்டூழியங்களுக்குப் பழி வாங்கும் விதமாக துரு நீக்கப்பெற்று குசராத்தின் ஒரு மாதிரி செங்கோலாகி உள்ளது. 2002 –ல் மொலாய வாரிசுகளின் மீது சத்ரபதியின் வாரிசு மோடியினால் இஸ்லாமியரின் மொகலாய குருதி மண்ணில் வடிக்கப்பட்டதோடு வரலாற்று சபதமும் நிறைவேற்றப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்.சின் நன்கு வடிவமைக்கப்பட்ட வன்முறை அரசியலை, தனது அரச எந்திரங்களைத் துணை கொண்டு குசராத்தில் நிகழ்த்திப் பார்த்தார் மோடி. நாடு முழுமைக்குமான கள ஆய்வின் முன்னோட்டமாகும் அது. பல்வேறு உண்மை அறியும் குழுக்களால் கள ஆய்வு செய்து வெளியிடபட்ட குசராத் படுகொலை மற்றும் வன்முறை நிகழ்வுகள் பற்றிய அறிக்கைகள், இராஜபக்சே ஈழத்தில் நடத்திய கோரத் தாண்டவத்தின் மாதிரி வடிவமாகும். பேரினவாதத்தை முன்வைத்து பதவியை அறுவடை செய்து கொண்டவர்கள், அதைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் அவ்வப்போது இரத்தப் பலி கொள்வது வாடிக்கையாகும். இசுலாமியர்கள் இந்துப் பெரும்பான்மையை ஏற்க வேண்டும் அல்லது பாகிஸ்தானுக்கு சென்றுவிட வேண்டும் என்ற ‘நேர்மையான’ கோசத்தின் வழியே தேர்ந்தெடுத்து இஸ்லாமிய வீடுகள், வணிக நிறுவனங்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் தாக்குதலுக்கு இலக்காகினர். 83 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர் பட்டியல் பெறப்பட்டு படுகொலைக்கு ஆளாக்கப்பட்டது போல குசராத்திலும் நிகழ்ந்தது. சங்பரிவார் கும்பல்களும், அரச படைகளும் குசராத் தெருக்களில் மனித வேட்டையாடின. பெஸ்ட் பேக்கரி நிகழ்வில் அந்த பேக்கரி குடும்பத்தினர் உட்பட 13 பேர் கடையோடு வைத்து எரிக்கப்பட்டனர். பின்னர் நடந்த உச்சநீதி மன்ற விசாரணை, மறு விசாரணை என்பவற்றால் ஓரளவு நீதி பிழைத்தாலும், மிகச் சிலரே தண்டனை பெற்றனர். மோடி அரசு தந்த அழுத்தத்தில் பலரும் பிறழ்சாட்சியமளித்தமையால் பல கொடும் குற்றவாளிகள் பேக்கரி வழக்கிலிருந்து தப்பிக் கொண்டனர்.

அன்றைய கலவரத்தை அடக்குவதாகக் கூறி மோடி அரசு, இசுலாமியரையே குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியது. எனினும் காவல் துறையோ 97 இசுலாமியரும், 77 இந்துக்களும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக நீதி மன்றத்தில் ஒப்புக்கொண்டது. வன்முறையில் ஈடுபட்டவர்களை விட தப்பி ஓடியவர்கள் மீதே அரசின் வன்முறை பாய்ந்தது. பாரபட்சமான அரசின் போக்கு நாட்டின் ஒருபகுதி மக்களின் நம்பிக்கையை, மதசகிப்பின் மீதான உறுதிப்பாட்டை உருக்குலைப்பதாக இருந்தது. அன்றைக்கு கலவரங்களில் ஈடுபட்ட காவல்துறையினர், கைகட்டி வேடிக்கை பார்த்த பாதுகாப்பு அமைப்புகள் என பணியாற்றிய‌ யாவருக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. நடந்த நிகழ்வுகளை மூடி மறைத்த மத்திய பாஜக தலைமையிலான வாஜ்பாயி மற்றும் உள்துறை அமைச்சர் அத்வானி உட்பட வன்முறையின் சுவடுகளை அழிப்பதில் குறிப்பிடத்தக்க தமது பங்கை ஆற்றினர்.

கரசேவகர்கள் வந்த இரயில் பெட்டி கோத்ராவில் வைத்து எரிக்கபட்டதை சாட்டாகக் கொண்டு ஒட்டு மொத்த குஜ‌ராத்தையு இரயில் பெட்டியாக மாற்றி மோடி அரசின் துணை கொண்டு எரித்து சாம்பலாக்கப்பட்டது. கோத்ராவில் கருகிய உடல்களை, பொது இடத்தில் வைத்து, உடற்கூறு செய்யப்பட்டதும், வேறு சில உடல்களை தலைநகர் அக‌மதாபாத் மருத்துவமனைக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று மதவெறியை உசுப்பி விட்டதையும், பொது வேலை நிறுத்தத்திற்கு சங்பரிவார் அமைப்புகள் அழைப்பு விடுத்ததையும், அடுத்து கோத்ரா நிகழ்வை சாட்டாகக் கொண்டு திட்டமிட்டு கலவரம் மூட்டப்பட்டதையும் பார்க்கும் போது, இலங்கையில் 83 கலவரங்களுக்குக் காரணமான புலிகளால் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினர் உடலங்கள் வெறியூட்டும் விதமாக தலைநகர் கொழும்பில் ஊர்வலம் விட்டதும் நமது நினைவிற்கு வருகின்றன.

சர்வாதிகாரிகள் யாவரும் ஒன்று போலவே சிந்திப்பதும், செயல்படுவதையும் வரலாற்றில் காணக்கூடியதாக இருக்கிறது, குஜராத்தும் அந்த வழியில் செல்வதையே நிகழ்வுகள் அறிவுறுத்துகின்றன.

மதசகிப்பற்ற நிலத்தின் முதல் பலியாக, அன்றைக்கு காங்கிரசின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இசான் சாஃப்ரி உட்பட 69 பேர் மதவெறி கும்பல்களால் அடித்து, உதைத்து பின்னர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். திகைக்க வைத்த இந்த படுகொலைகளுக்கு நீதி கேட்டு உச்சநீதிமன்றத்தை அணுகிய ஜெப்ரியின் மனைவி ஜாகியா, படுகொலையில் தொடர்புடையவர்கள் என்று மோடி உட்பட 59 பேர் அடங்கிய பட்டியலை அளித்தார். மோடியின் அரசு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் காவல்துறை உயரதிகாரி அசோக்நாராயணன் போன்றோர் வன்முறையில் எந்த அளவிற்கு உதவியாக செயல்பட்டனர் என்பதை அவரது மனு தெளிவாக விளக்கியது. 514 பக்கங்கள் அடங்கிய அந்த குற்றச்சாட்டு மனு, தொண்டு அமைப்புகள், மற்றும் மனித உரிமை அமைப்புகளின் உதவியால் திரட்டப்பட்ட பல விவரங்களை உள்ளடக்கியதோடு மோடியின் மதவாத அசல் முகத்தை வெளிப்படுத்துவதாகவும் இருந்த‌து. மேலும் குஜராத் படுகொலை கலவரங்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் அமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வு அமைப்பினரின் விசாரணை அறிக்கை சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் மோடி மற்றும் அவரது நிர்வாக, நீதி, காவல் அமைப்புகளின் பங்கை அம்பலப்படுத்தியது. மேலும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களைப் பிடித்து வந்து ‘மோதல் கொலைகள்’ செய்யபட்டதை-படுவதை அம்மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் மத்திய புலனாய்வு விசாரணையில் ‘கக்கி’ வருகின்றனர். அதிர்ச்சியளிக்கும் இந்நிகழ்வுகள் நாள்தோறும் மோடியின் சர்வாதிகார ஆர்.எஸ்.எஸ்- செயல்பாடுகளை பிரதிநிதிப்படுத்துவதாக இருக்கின்றன.

கோத்ரா இரயில் வண்டி எரிப்பு கொடும் செயல் என்று ஒப்புக்கொள்வதில் தயங்க வேண்டியதில்லை. அதேசமயம் அந்நிகழ்வில் தொடர்புடையதாக, 31 பேர் கைது செய்யப்பட்டனர். எனினும் இரயில் எரிப்பிற்கு முன்னதாக, மதவெறியைத் தூண்டும் விதத்தில் கரசேவகர்கள், சங்பரிவார் மற்றும் வி.எச்.பி அமைப்பினர் தொடர்ந்து அப்பகுதியை அச்சத்திற்கும், கலவரத்திற்கும் ஆட்படுத்தும் உளவியலைக் கட்டமைத்தனர். கொலையைப் போலவே அதனைத் தூண்டும் போக்கிற்கும் சம பங்கு உள்ளது என்பதை மறுத்துவிட இயலாது.

ஹிட்லருக்கு ஒரு கோயபல்ஸ் போல மோடியை ‘மோஸசஸ்’ ஆக்கும் வேலையை அந்நிய, உள்ளூர் முதலாளிகளும், முதலீடுகளும், சங்பரிவார் அமைப்புகளும் ஏற்று நடத்துகின்றன. மோடியை இரட்சகர் என்கிற தொனியில் அவர் பிரதமரானால் நாட்டின் யாதொரு சிக்கலும் உடனடியாக முடிவுக்கு வந்துவிடும் என்பது போலவும் மோடிமஸ்தான் வார்த்தைகளை அள்ளித் தெளிக்கின்றனர் அவரின் பின்னிருப்போர். மோடியை இந்தியாவின் பிரதமராக்கும் வேலையையும் அவரது புகழ் பாடும் மாயத்தன்மை கொண்ட பரப்புரையையும் இஸ்ரேலைச் சேர்ந்த முன்னாள் உளவு அமைப்பினரின் நிறுவனமான அப்கோ வேர்ல்டு வைடு(apco world wide) என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதற்காக அந்நிறுவனத்திற்கு மாதம் 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மோடி விரும்பிகளால் கொடுக்கப்பட்டு வருகிறதாம். அரசியல் தொழில் ஆகிவிட்டதால் கட்சிகள் தமது நிறுவனத்தின் விலை போகா சரக்கை சந்தைப்படுத்துவதில் புதிய உத்திகளைக் கையாள்வதுதானே தொழில் விதியாக இருக்க முடியும்!

மோடியை சுற்றி இருக்கும் தொழிலதிபர் குழாமைப் பார்த்து எதிர்க் கட்சிகளே வியக்குமளவிற்கு இருக்கிறது. ‘முதலீடுகளின் பிரதமர்’ என்று மோடியைச் சொன்னால் அது எந்த விதத்திலும் தவறாகாது. அந்த அளவிற்கு மோடியின் ஆட்சியை அவரது கட்சியினரைக் காட்டிலும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்ப்பவர்கள் இந்த தொழிலதிபர்களே!. தாம் முதலீடு செய்துள்ள குதிரையின் மதிப்பு தெரிந்தவர்கள் அவர்கள்! குஜராத்தின் நிலங்களை திசையெட்டும் கூறு போட்டு கார்பரேட் நிறுவனங்களுக்கு வழங்குவதில் குஜராத் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. ஏழை உழவர்களுக்கு வழங்குவதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை சட்டத்திற்குப் புறம்பாக மோடி அரசு, அதானி மற்றும் டாடா போன்ற பெருவணிக நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலையில் அள்ளி வழங்கி வருகிறது. ஒரு சதுர அடி ஒரு ரூபாய் என்று ஏறக்குறைய 300 கோடிக்கு தானம் செய்துவிட்டார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அதே போல மும்பை நகர் பரப்பு கொண்ட கடற்கரைப் பகுதியை அதானி நிறுவனத்திற்கு வெறும் 30 கோடிக்கு மோடி தாரை வார்த்துவிட்டதாக சொல்லப்படுகிறது. நாட்டின் மிக நீண்ட கடற்கரையை உடைய குஜராத் இன்றைக்கு பெருநிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

டாடா கார் நிறுவனத்தை மேற்கு வங்கத்திலிருந்து வரவேற்ற மோடி, மிகக் குறைந்த வட்டியில் பத்தாயிரம் கோடியை அதற்கு அள்ளி வழங்கியுள்ளார். இந்த இலட்சணத்தில்தான் குஜராத் தொழிற்துறையில் முன்னேறிய மாநிலமாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. உண்மை என்னவெனில் கடந்த சுதந்திரத்திற்குப் பின்பும், 80, 90களிலும் குஜராத் தொழில் துறையில் இந்தியாவில் அதிக வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் 3 அல்லது 4 ஆம் இடங்களில் தொடர்ந்து இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக குஜராத்தைப் பார்க்கும் போது மோடியின் ஆட்சிக் காலத்தில் (2001-2012) அது அபரிமிதமான நிலையை எட்டிவிடவில்லை என்பதை அரசியல் மற்றும் பொருளாதார‌ நிபுணர்கள் கருதுகிறார்கள். அமர்த்தியா சென் போன்ற பொருளாதார மேதைகள் குஜராத்தை வளர்ச்சியுற்ற மாநிலம் என்பதை கொஞ்சமும் ஒத்துக்கொள்ளாததோடு, மோடியின் வளர்ச்சிப் பாதை வெற்று விளம்பரம் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். தலித்துகள், பழங்குடிகள், சிறுபான்மையினர் ஆகியோரை மேலும் வறியவராக்கும் திட்டங்கள் வழி குஜராத்தின் வளர்ச்சி பற்றி பேசுகிறார்கள். வளர்ச்சி உண்மையெனில் அது யாருக்கானது என்பதை அவர்கள் ஒரு போதும் சொல்லப் போவதில்லை!

அதானி, நிர்மா, டாடா, அம்பானி போன்றோருக்கு குஜராத்தி பெரும் பகுதியை எழுதிக் கொடுத்துவிட்டார் மோடி. இராஜபக்சே கிழக்கு மாகாணத்தில் சம்பூர் மக்களை வெளியேற்றி இந்திய அரசிடம் ஒப்படைத்தது போல, குஜராத்தைவிட்டு, பழங்குடியின‌ரும், தலித்துகளும், மீனவர்களும் தமது நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மஹீவா பகுதியில் நிர்மாவின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக புறம்போக்கு நிலங்கள் என்று சொல்லி மேய்ச்சல் மற்றும் விளை நிலங்களை கையகப்படுத்திக் கொடுத்ததன் வழி பதினைந்தாயிரம் மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கியுள்ளது குஜராத் அரசு. அணு சக்தியை அதன் ஆபத்துகளுடன் வரவேற்று தமது மாநிலத்தில் வைத்துக் கொண்டுள்ள மோடி, அதற்கான நிலங்களை லார்சன்-டூப்பர் நிறுவனத்திற்கு மிகக் குறைந்த விலையில் வழங்கியுள்ளார். எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்பதே அவரது வளர்ச்சிப் போக்காக மாறிக் கொண்டுள்ளது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கான நிலங்களை பெறும் போது, 80 சதவீதமான உழவர்களின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்ற விதிகளை புறம் தள்ளி அவசரகால நிலையை ஒட்டிய விதிகளைக் கொண்டு மக்களிடமிருந்து கட்டாயமாக நிலங்கள் பெறப்படுகின்றன. இதற்கான சட்டங்களை மாநில அரசு எதிர்க் கட்சியினரையும் கையில் போட்டுக் கொண்டு நிறைவேற்றி வைத்துள்ளது. பெரும் நிறுவனங்களின் அரசாக செயற்படும் மோடியை பிரதமாராக, விரிந்த சந்தையின் எதிர்கால நாயகனாக மாற்ற துடிப்பான குஜராத் முதலாளிகள் அவர்களது நியாயப்படி துடிக்கவே செய்வார்கள்.

மோடியின் ஆட்சியில் எந்த மாயமும் நிகழ்ந்து விடவில்லை என்பதை குஜராத் மாநில புள்ளிவிபரங்கள் தெளிவுபடுத்துகின்றன. குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டில், சதீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இணையாக உள்ளனர். அது போல இம்மாநிலத்தின் ஒவ்வொரு இரண்டாவது குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளது. நான்கில் மூன்று குழந்தைகள் இரத்த சோகையுடன் காணப்படுகின்றன என்பதை யுனிசெப்பின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகளின் இறப்பு விகித‌த்தை கணக்கில் கொண்டே ஒரு நாட்டின், மாநிலங்களின் வளர்ச்சி நிலை கணக்கில் கொள்ளப்படுகிறது. குஜராத்தைப் பொருத்தவரை பிறக்கும் 1000 குழந்தைகளில் 44 குழந்தைகள் இறந்துவிடுகின்றன. அந்தவகையில் மோடியின் மாநிலம் நாட்டில் 11 இடத்தில் இருக்கிறது. குறைவான விகிதத்திலேயே குஜராத் பெண்கள் ஊட்டச் சத்தினைப் பெறுகின்றனர் என இந்திய அரசின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பற்றிய ஆய்வுகள் குஜராத் பற்றி தெரியப்படுத்தியபோது, அதற்கு மோடி, ‘குஜராத் பெண்கள் உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பதாக’ ஜோக்கடித்தார். பெண் சிசுக் கொலைகள் தொடர்ந்து அதிகரிக்கும் புள்ளிவிபரங்ளுக்கும் தனது முன்னேறிய குஜராத்தின் விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பிற்கும் மோடி இதே வகையான விளக்கங்களைத் தந்தாலும் அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

கட்சிக்குள் மோடியின் நிலையான இடம் எப்படி நிலைநாட்டப்படுகிறது என்று பாத்தால் சந்திரிகாவை, இராஜபக்சே நாட்டைவிட்டே துரத்தியது போன்று மோடியின் காய் நகர்த்தலும் இருக்கிறது. தனக்கு மேல் நிலையில் இருந்த சங்கர் சிங்வகேலா, கேசுபாய் படேல், தனக்கு சமதையான இடத்தில் இருந்த கரேன்பாண்டியா, சஞ்சைஜோசி, எல்லாவற்றுக்கும் தமக்கு ஆதரவாக, உறுதுணையாக இருந்த அத்வானி தமது இலட்சியக் கனவான பிரதமர் பதவிக்கு போட்டியிட்ட காரணத்திற்காக- என பலரும் அரங்கிலிருந்து ஒரங்கட்டப்பட்டுவிட்டனர். பாஜக சார்பில் முன்னாள் பிரதமராக இருந்த இரும்பு மனிதரும் போட்டியில் இருப்பாரேயானால் இன்னேரம் துரும்பாக்கப்பட்டிருப்பார். எதிர்ப்பை அறவே ஒழித்துக்கட்டுவதே இராஜபக்சேக்களின் என்றைக்குமான தத்துவமாகும்.

நிலையான, வலிமையான அரசு இந்தியாவில் அமைய நடுநிலைமையான, தெளிவான தூய்மையான, நடைமுறையில் ஒளிமறைவற்ற ஒருவரைக் கோரி பிரதமர் வேட்பாளரை முன்நிறுத்தும் பாஜக, அதன் பிகார் தலைவர் கிரிராஜ்சிங் சொல்வது போல, மோடியை ஆதரிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விடவேண்டும் .(தினமணி-21-4-14) என்பதை, அதாவது எங்களுடன் இல்லாதவர்கள் பாகிஸ்தானுடன் இருக்கிறார்கள் என்ற தொனியிலான குரலை, முன்பு ஒபாமவிடம் கேட்டோம். பின்பு இராஜபக்சேவிடம்.. இம்முறை பாஜகவிடமிருந்து வந்துள்ளது. தெளிவான பதில்! தெளிவான அரசு. தெளிவான பிரதமருக்கான வேட்பாளர்!

- இரா.மோகன்ராஜன்

Pin It