எந்த “இலக்கிய மொழி” முதன் முதலில் என் கண்களில் கண்ணீர் வர வைத்தது? நினைத்துப் பார்க்கிறேன். “துல்லியமாகக் கூறிவிட முடியாது” என்கிற உண்மை முன்னுக்கு வந்து நிற்கிறது என்றாலும், நினைவு மண்டலத்தில் குடைந்து குடைந்து தேடியதில் ஒன்று அகப்படுகிறது. அதை இப்போதைக்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். என் பள்ளிப் பருவ காலத்தில் அது நடந்தது. 60-களின் முதல் ஆறு ஆண்டுகள் நானொரு உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். அந்தப் பள்ளியின் பெயரை இப்பொழுது சொல்லிப் பார்க்கும் போதே எனக்குள் அதிசயமும் ஆர்வமும் கூடிக் கும்மாளம் போடுகிறது. எங்கள் ஊரில் இருந்து மூன்று மைல் தூரத்தில் அது இருந்தது. தினமும் போக வர ஆறு மைல் நடந்து படித்தேன்; புத்தகச் சுமையோடு சாப்பாட்டுத் தூக்குவாளியும் சேர்ந்து கொள்ளும். சாப்பாடு என்றால் பெரிதாக எண்ணிக் கொள்ளாதீர்கள்; நீராகரத்தில் மிதக்கும் பழைய சோறுதான்; பல பேருக்குக் கேப்பைக் கஞ்சிதான் அல்லது சோளச் சோறுதான்; கடித்துக் கொள்ள உரித்துப் போடப்பட்ட வெங்காயம்தான். மதியம் இடைவெளியில் அதைச் சாப்பிடும் போது தேனாமிர்தமாக இருக்கும். அதுவும் அந்தச் சாப்பாட்டை வகுப்பறைக்குள் இருந்து சாப்பிட்டதாக எனக்கு நினைவில்லை. மணி அடித்தவுடன் தூக்குவாளியைத் தூக்கிக் கொண்டு, பள்ளிக்குப் பின்புறத்தில் உயர்ந்து நிற்கும் மொட்டை மலையில் ஏறத் தொடங்கி விடுவோம். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்க வேண்டும்தானே! குமரனும் இருப்பான்; பக்கத்தில் சில்லென்ற தன்மையுடன் ஓர் அழகான குழி வடிவில் நீர்ச்சுனையும் இருக்கும். வேகாத அந்த வெயிலில் ஏறி வரும் பொடிப் பையன்களுக்குக் குளிர்ச்சியான அந்தச் சுனை நீர் தரும் சுகம் சொல்லி முடியாதது. இன்று நினைத்தாலும் உள்ளம் குளிர்கிறது.

eelam people 320சாப்பிடுவதற்கு வட்டமாக உட்காருவதற்கு முன், அந்தத் தண்ணீரை அள்ளி அள்ளி முகத்தில் அடித்துக் கொள்வோம். சட்டையெல்லாம் நனைந்தாலும் கீழே இறங்கிப் போவதற்குள் காய்ந்து விடும். காய்ந்து விட்டதா என்று அதையும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஈரம் கண்ணில் பட்டு விட்டது என்றால் ஆசிரியரின் “பிரம்பிற்கு” அன்றைக்கு வேட்டைதான். அந்தப் பிரம்பையும் ஒடிய ஒடிய நாங்கள்தான் மீண்டும் மீண்டும் ஊரில் இருந்து தயாரித்துக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். எனவே ஆசிரியர் அடித்தாலும் நாம் பண்ணிக் கொடுத்த பிரம்புதானே என்கிற பெருமிதமும் வலியோடு கூடவே வரும். என்ன அற்புதமான பருவ காலம்! அது மீண்டும் வருமா?

மலைமேல் ஏறுவது சலித்ததென்றால், பள்ளியைச் சுற்றி இருக்கும் கிணறுகளுக்குப் போவோம். கிணற்றில் தண்ணீர் கீழே கிடக்கும். சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு அம்மணமாக மேலே இருந்து 'ஒரு தேவன் போலக்’ கையை விரித்து விழுவதில் அப்படியொரு ஆனந்தம். கண் சிவக்க ஆடிவிட்டுச் சோற்றையும் குடித்து விட்டுத் தலையை நன்றாக உலர்த்திக் காய வைத்த பிறகு ‘அப்பிராணி’ மாதிரியான ஒரு பாவத்தில் மணி அடிப்பதற்குள் வந்து உட்கார்ந்து கொள்வோம். அப்படியும் சில வாத்தியாரிடம் மாட்டிக் கொள்வோம். குறிப்பாகக் கணக்கு வாத்தியார் கண்டுபிடித்து விடுவார். “கண் சிவந்திருக்கிறதே”! அவர் முதல் வகுப்பிற்கு வந்தவுடனேயே அறிவித்த அந்த வாசகமே இதுதான்:- “எவனொருவன் தவறு செய்கிறானோ, அவனொருவன் மோட்டிலே தலை கீழாகத் தொங்கவிடப்பட்டு, குண்டி சிவக்கச் சிவக்க அடிக்கப்படுவான்”. எனவே கணக்குப் பாடம் மாதிரியே அந்த வாத்தியாரும் எங்களுக்குள் பயத்தையே விதைப்பவராக விளங்கினார். எனவே சாப்பாட்டிற்குப் பிறகு முதல் வகுப்பு அவர் வகுப்பாக இருக்கிற அன்றைக்குப் பள்ளிக்குப் பக்கத்திலேயே தறியும் சாயப்பட்டறைகளுமாக இருக்கும் தொழிற்சாலைகளுக்குள் சாப்பிடப் போய் விடுவோம். தறி ஓடுவதையும் சாயம் கலப்பதையும் வேடிக்கை பார்ப்பது சலிக்கவே சலிக்காது.

பள்ளிக்கூடம் முடிந்து மாலையில் வீட்டிற்குத் திரும்பும் போதும் ஒரே கொண்டாட்டம்தான். கிடைக்கிற நயாபைசாவிற்கு (அந்தக் காலத்தில்தான் முக்கால் துட்டு, கால் துட்டு, அரையணா, முக்காலணா என்பனவற்றிக்குப் பதிலாக, நயாபைசா அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு பைசா, ஐந்து பைசா, பத்துப் பைசா என்று புதிதாக வந்தது என்பதால் ‘நயா பைசா’ என்கிற வழக்கு இருந்தது) பொட்டுக்கடலைப் பொட்டலத்தை வாங்கிக் கொண்டு, சிறிதாக இருக்கும் அந்தப் பொட்டலம் சீக்கிரம் காலியாகி விடக்கூடாதே என்பதற்காக ஒவ்வொரு பொட்டுக் கடலையாக வாயில் போட்டுக் கொண்டு நடந்த அந்தக் காலமே தனி அழகாய் இன்றைக்குத் தெரிகிறது. சாலைகள் இன்றைக்குப் போல் தார்ச் சாலைகள் அல்ல. காரை மண்ணையும் பெரிய கல்லையும் கொட்டி வைத்திருப்பார்கள். அதுவும் எங்கள் புத்தூருக்குப் போகும் சாலை ஒரு குளத்தின் நடுவில் போடப்பட்டது. எனவே குண்டு, குழிகளுக்குப் பஞ்சமே இருக்காது. காலிரண்டிலும் புண் இல்லாத காலம் ஒன்று இருந்ததாக என் நினைவில் இல்லை. ஆனாலும் ஆனந்தத்திற்குக் குறைவில்லை.

மழைக்காலங்களில் குளம் நிரம்பி, இரண்டு பக்கத்திலும் மொத்துமொத்தென்று தண்ணீர் கிடக்கும். தண்ணீர்ப் பாம்புகளைப் பிடித்து விளையாடுவோம். தலையைத் தூக்கிக் கொண்டு தண்ணீர்ப் பாம்பு சாலையை நோக்கித் தண்ணீரின் விளிம்பில் நிற்கும். பாம்பைப் பிடிக்கப் போகிறவன் வேகமாகச் சாலையை விட்டு இறங்குவான். அது “வாலை” இந்தாப் பிடிச்சுக்கோ என்பது போல மெதுவாகத் திருப்பித் தண்ணீருக்குள் போக முயலும்; இவனும் அதன் ஆசைப்படி வாலைப் பிடித்து விடுவான். வாலைப் பிடித்தவுடன் வேகமாக வட்டம் வட்டமாகச் சுழற்றி ஓங்கித் தரையில் ஒரு போடு போடுவான்; அவ்வளவுதான்! “பாம்பு” அப்படியே செத்தது மாதிரி கிடக்கும். மற்ற பசங்க, கல்லெடுத்து எறிஞ்சு நைய் நைய்யென்று நைத்து விட்டுத்தான் நகர்வார்கள். (குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் உயிர்களை நைய நசுக்குவதில் ஒரு சுகம் இருக்கும் போல) பாம்பு பிடிக்கும் அந்தக் கணங்கள் தருகின்ற தீவிரப்பட்ட மனநிலை இருக்கிறதே அது தரும் போதை இன்பம் கொஞ்ச நஞ்சமல்ல. பாம்பு பிடித்த கையை எவ்வளவு சோப்பு போட்டுக் கழுவினாலும் அந்த வீச்சம் போகாது. ஒரு வாரம் வரை, பாம்பு பிடித்தவன் தன் மூஞ்சிலேயும், பிறர் மூஞ்சிலேயும் வைத்து வைத்து விளையாட்டுக் காட்டுவான். இப்படி ஒரே கொண்டாட்டம் கூத்துமாகக் கழிந்து கொண்டிருந்தது பள்ளிப் பருவம். அப்படிப்பட்ட ஒரு காலத்தில்தான் இது நடந்தது.

எங்கள் தமிழ் ஆசிரியரின் பெயர் சுந்தர மகாலிங்கம். கண்ணு கொஞ்சம் கோணலானவர். கதர் சட்டைதான். பனியன் போட மாட்டார். தொட்டுப் பொட்டு வைத்துக் கொள்ளலாமென்கிற அளவிற்கு எப்பொழுதும் எண்ணெய் வடியும் கறுப்புதான். ஆனால் வகுப்பு எடுப்பார்; இன்றைக்கு உள்ள ஆசிரியர்கள் போல் அல்லர். மாணவர்களுக்குப் புரிய வேண்டுமே என்பதற்காக அவர் என்னபாடு பட்டிருக்கிறார் என்பதை இன்றைக்கு 38 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பிறகு எண்ணிப் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது. விடுதலை இந்தியாவில் “உழைக்கும் கலாச்சாரத்தைத் தொலைத்து விட்டோம்” எனத் தோன்றுகிறது. அப்பொழுது பத்தாம் வகுப்பில் எங்களுக்குச் சிலப்பதிகாரத்தின் “ஊர்சூழ்வரி” (19-வது காதை) பாடப் பகுதியாக இருந்தது. வெட்டுண்டு மதுரை நெடுந்தெருவில் கிடந்த கோவலன் மேல் விழுந்து கண்ணகி அழுது புலம்பும் காட்சியை வர்ணிக்கும் ஒப்பாரி வரிகளை அவர் நடத்தினார். நடத்தும் போதே அந்த வெள்ளைக் கதராடை உடுத்திய கறுத்த உருவம் அழுது ஏங்கியது. நாங்களும் அழுது விட்டோம். அப்பொழுது ஆசிரியருக்காக அழுதோமா? கண்ணகிக்காக அழுதோமா? இன்றுவரை தெரியவில்லை. ஆனால்,

என் உறு துயர் கண்டும் “இடர் உறும் இவள்” எண்ணீர்
பொன் உறு நறுமேனி பொடி ஆடிக் கிடப்ப தோ?

யாரும் இல் மருள்மாலை இடர்உறு தமியேன் முன்
தார்மலி மணி மார்பம் தரை மூழ்கிக் கிடப்பதோ?

கண்பொழி புனல் சோரும் கடுவினை உடையோன் முன்
புண்பொழி குருதியராய்ப் பொடி ஆடிக்கிடப்பதோ?

என்கிற அந்த வரிகள் “மனப்பாடப் பகுதியாக” இருந்தன. வீட்டிற்குப் போய் மனப்பாடம் பண்ணும் போதெல்லாம் அழுததாக நினைவிருக்கிறது. என்னை முதன்முதலாக அழ வைத்த “இலக்கிய மொழி” இளங்கோவின் மொழிதான். பின்னால் அந்த இளங்கோவின் படைப்பில்தான் ஆய்வு செய்து டாக்டர் பட்டமும் பெற்றேன் என்பதையும் நினைத்துப் பார்க்கிறேன். எனது சின்ன வயதிலேயே மகாகவி பாரதி கூறியது போல “நெஞ்சை அள்ளிய சிலம்பு” என்னை விட்டு நீங்காமல் எனக்குள்ளேயே இருந்து வந்திருக்கிறது.

அந்த வரிகள் என் கண்களுக்குள் இருந்து கண்ணீரை வரவழைக்க என்ன காரணம்? நான் இந்தக் கேள்வியை இப்பொழுது கேட்டுப் பார்க்கிறேன். “கண்ணகி என்கிற அந்த அபலையின் அநாதரவான அகதி நிலைதான், அந்தப் பிஞ்சு மனத்திற்குள் இறங்கி இளக வைத்திருக்கிறது”. எனக்குக் கிடைக்கிற விடை இதுவாகத்தான் இருக்கிறது. “மொழியின் வார்த்தைக்குள் இல்லை கவித்துவம். அந்த வார்த்தைகள் எத்தகைய சூழலோடு வைக்கப்படுகின்றன என்பதில்தான் அவைகளுக்குள் ஆற்றலும் கவித்துவமும் வந்து நிறைகின்றன” என்பதை இப்பொழுது புரிந்து வைத்திருக்கிறேன். அப்படியென்றால் அங்கே எத்தகைய சூழலில் கண்ணகியின் வார்த்தைகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன? என்பது முக்கியமாகி விடுகிறது. அதுதான் “அநாதரவான அந்த அகதி நிலை”. இப்பொழுதும் இத்தகைய அகதி நிலைகளைப் பார்க்கும் போது என் கண்களைக் கண்ணீர் நிரப்பி விடுகின்றது. ‘ஈழத்தமிழர்கள் இப்படி அநாதவராக அகதிகள் போல உலக அரங்கில் விடப்பட்டு விட்டார்களே’ என்கிற உணர்வு மேலெழுந்து வரும் பொழுதெல்லாம் கண்ணீரைத் தடுக்க முடிந்ததில்லை.

இரவொன்று மூட்டிய தீயில் - தினம்
எரிந்து கருகும் என் இதயம்

அன்றைய ஓர் இரவின்
அனர்த்தத்தால்
இன்றைய இரவும்
எரிகிறதாய் உணர்கிறேன்
இதே இருட்டு
சூரியனை விழுங்கி
இரைமீட்டுத் துப்பியது போல்
எரிந்து கொண்டன
எங்களின் குடிசைகள்
படுத்த பாயில்
பிணங்கள் சுற்றி

புதைத்துவிட்டு அழுதோம்
துயருற்றோர் இசைத்த
ஒப்பாரிப் பாடலில்
தூங்கிப் போயினர்

எங்களின் பிள்ளைகள்
அடுத்த நாள்
உலகம் விடிந்தது – எங்கள்
ஊர் தவிர
ஒப்பாரி இசைத்தவரும்
உயிரின்றிப் போனதால்
மயானபூமி மௌனமாய்க் கிடந்தது – எங்கள்

(மெலிஞ்சிமுத்தன், தொடரும் இரவுகள், முட்களின் இடுக்கில்(2005) ஸ்ரீபாரதி பதிப்பகம், பாரிஸ்)

இப்படி நொறுக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் அநாதரவான நிலையைப் படம் பிடிக்கும் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், செய்திகள் என்று எதைப் பார்த்தாலும் நான் அழுது விடுகிறேன்.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம், 2006-இல் எடுத்த புள்ளி விவரப்படி 8.4 மில்லியன் மக்கள் உலக அளவில் அகதிகளாகத் தவித்துக் கொண்டு கிடக்கிறார்கள். மற்றும் “ஐக்கிய அமெரிக்க அகதிகள் மற்றும் குடிவருவோருக்கான குழுவின்” கணக்குப்படி இது 12-மில்லியனைத் தாண்டுகிறது. உள்நாட்டுக்குள்ளேயே போரினால் அகதியானோர் தொகை உலக அளவில் 3 கோடியே 40 லட்சம் பேர். ஈழத் தமிழர்கள் இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு மேல் அகதிகளாக அவஸ்தைப்படுகிறார்கள். உள்நாட்டுக்குள்ளேயே ஐந்து லட்சத்திற்கும் மேல் அகதிகளாய் வாழும் வாழ்க்கை ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்துள்ளது. இந்தச் செய்திகள் எல்லாம் என்னைத் தூங்க விடுவதில்லை. ஆதிக்க அதிகார சக்திகளின் ஈவிரக்கமற்ற கொடூரம் இன்னும் எத்தனை காலம்தான் சரித்திரத்தில் தொடர்வது? இத்தாலி திவாலாகிறது என்றால், ஐரோப்பிய நாடுகள் ஆயிரக்கணக்கான கோடி டாலர் மூலம் முட்டுக் கொடுத்துக் காப்பாற்ற விரைந்தோடுகின்றன. ஆனால் தங்கள் ஈவிரக்கமற்ற காலனித்துவத்தால் சுரண்டப்பட்டுச் சீரழிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் (1930 வரை உலகில் 83.4மூ நிலப்பகுதி காலனித்துவத்திற்கு உள்ளாகியிருந்தது) வறுமையும் பட்டினிச் சாவும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இந்த ஆதிக்க சக்திகள் கண்டு கொள்வதே இல்லை.

தங்களின் அதீதமான நுகர்வு வெறிதான் (பூமியில் 100 ஆப்பிள் விளைகிறது என்றால் உலக மக்கள் தொகையில் சுமார் 20 விழுக்காடே இருக்கும் ஐரோப்பிய, அமெரிக்க நாட்டு மக்கள்தான் 80 ஆப்பிளை நுகர்கிறார்கள்) இந்தச் சமூகத்தின் அனைத்துத் தீமைகளுக்கும் - போர், வறுமை, அகதி, பூமி வெப்பம், சுற்றுச்சூழல் கேடு, பிறநாடுகளில் உள்நாட்டுக் கலவரம் முதலிய அனைத்துக் கேடுகளுக்கும் - அடிப்படைக் காரணம் என்பதை உணர்ந்து தங்களின் வாழ்முறையை மாற்றிக் கொள்ள முயல்வதே இல்லை. மாறாகத் தங்களின் சுயநலத்தால் இந்தக் கேடு கட்ட நெறியைத்தான் உலகம் முழுவதும் பின்பற்றும்படிச் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த இலட்சணத்தில் சூன் 20-ஆம் தேதியை “உலக அகதிகள் நாளாக” ஐ.நா – சபை அறிவித்து விழிப்புணர்வைத் தூண்ட முயன்று கொண்டிருக்கிறது. இந்த அகதி நாள் பூமிப் பரப்பில் அநாதரவாக நிறுத்தப்பட்ட அகதிகளுக்காக ஒரு பக்கம் கண்ணீரையும் மறுபக்கம் கோபத்தையும் கொண்டு வருவதாகத் தொடர்கிறது.

எங்கள் பள்ளியின் பெயரை இன்னும் உங்களுக்குச் சொல்லவில்லையே. அது மிக நீண்டது. “தளவாய்புரம் நாடார்களுக்குப் பாத்தியப்பட்ட பு.மூ.மா. மாரிமுத்து நாடார் உயர்நிலைப் பள்ளி”. விடுதலை கிடைத்த அடுத்த ஆண்டிலேயே நாடார்கள் தொடங்கியிருக்கிறார்கள் இந்தப் பள்ளியை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It