2012 நவம்பர் 7-ஆம் தேதி சர்வாதிகார ஜாதி வர்க்க அரசின் காதுகளில் கேட்காத ஒப்பாரி ஓலங்கள் இன்னும் ஓயாத நிலையில் தர்மபுரி ஜாதிவெறி வன்முறை சம்பவம் நடந்த நாளை ஜாதி வெறி அரசியல் எதிர்ப்பு நாளாக கடைபிடிக்க நான்கு நாட்களே மீதமிருந்த   நிலையில், நவம்பர் 3-ஆம் தேதி வேலூர் மாவட்டம், சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த ரெண்டாடி கிராமத்தில் உள்ள தலித்துகள் வாழும் பகுதியில் அவர்கள் வாழ்வாதாரங்கள் மீது பெரும் பாதிப்பையும், உயிர் பயத்தையும் ஏற்படுத்தும் விதமாக, இதே ஜாதி வெறியர்களால் தர்மபுரியில் நடத்தப்பட்ட தாக்குதல் மக்களிடம் ஏற்படுத்திய சலசலப்பை இச்சம்பவம் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு இரவு 10.30 மணியளவில் மேற்சொன்ன ரெண்டாடி தலித் காலனியின் கடைசிப் பகுதியில் அமைந்திருந்த குடிசையை எரித்து ஜாதிவெறி வன்முறை தாக்குதலை ஆரம்பித்தனர் ஜாதிவெறி வன்னியர்கள்.

dalit_colony_480

இந்த வன்முறை சம்பவம் குறித்து எந்தவொரு செய்தியையும், சர்வாதிகார ஜாதி வர்க்க அரசுக்கு ஜால்ரா தட்டும் இந்த ஊடகத் துறையாகட்டும் பத்திரிக்கை துறையாகட்டும் ஒளிப்பரப்பவோ, பிரசுரிக்கவோ செய்யாது என அப்பட்டமாக தெரிந்த நிலையில் இந்த ஜாதிவெறி வன்முறை சம்பவம் குறித்த உண்மைகளை ஆய்வு செய்யும் பொருட்டு தோழர்கள் ஜோசுவா ஐசக், மகிழ்நன், தமிழ்பாலா இவர்களுடன் நானும் உண்மை அறியும் குழுவாக சம்பவ இடத்திற்கு சென்றோம்..

வேலூர் மாவட்டம், வாலாஜா முதல் கீழ்புதுப்பேட்டை, அம்மூர், நரசிங்கபுரம் மற்றும் மருதாலம் ஊராட்சிகளின் பிரதான சாலையின் நடுவே பார்க்கும் விதமாக சாலையில் இருபுறமுள்ள மரங்களை இணைத்து பா.ம.க.-வின் கொடியை கட்டி, யாராக இருப்பினும் அங்கு செல்பவர்களின் மனதில் இது எங்களது அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதி, எந்த நேரத்திலும் எங்களது எந்த நடவடிக்கைகளை யாரும் கேள்வி கேட்க முடியாது என அப்பட்டமாக அழுத்தமாக அவர்களது ஜாதிவெறியின் ஆரம்ப எல்லையாக எங்களை அழைத்துச் சென்றது.

பிரதான சாலையில் இருந்து இடதுபுறமாக 4 கி.மீ. தூரத்தில் இருக்கும் ரெண்டாடி கிராமத்திற்கு அந்த ஒரே ஒரு மண் சாலை மட்டுமே வழி.  எதார்த்த நிலையை மீறிய பதற்றம் நம்மை தொற்றிக் கொள்ளும் விதமான சூழ்நிலையே அங்கு நிலவியது. இவ்வன்முறை சம்பவமும் நடந்த தலித் காலனிக்கு செல்லும் வழியில் இருந்த தெருவிளக்கு கம்பம், மின்சார இணைப்புப் பெட்டி, நிலத்தடி நீர் குழாய், ஊராட்சி தண்ணீர் தொட்டி, மரங்கள் மற்றும் கடை வாசலில் கூட தீட்டப்பட்டிருந்த பா.ம.க.வின் கட்சிக் கொடியின் நிறம் மங்கிய நிலையும் இவ்வன்முறை சம்பவமும் நமக்கு உணர்த்துவது இதுநாள்வரை செலுத்தி வந்த ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காகவே!

வன்முறை சம்பவம் நடந்த தலித் காலனியின் முகப்பிலேயே வெளியிலிருந்து ஆதரவு குரலோ, உதவிகளோ, போராட்டக் குரலோ எங்கே உள்ள வந்து விடுமோ என்பதற்காகவே, அப்பகுதியின் ஜாதிவெறி வன்னிய அரசியல்வாதிகளின் கையாளாக இருக்கும் காவல்துறை அதிரடிப் படை அங்கு முகாமிட்டிருந்தது. இதனாலேயே இந்த ஜாதிவெறி வன்முறை சம்பவம் பற்றிய உண்மைகள் வெகுஜன மக்களை சென்றடையவில்லை.

வன்முறை சம்பவம் நடந்த இடத்தில் இரண்டு இருசக்கர வாகனத்தையும் ஒரு இலகுரக வாகனத்தையும், வீடுகளின் கண்ணாடி ஜன்னல்களையும் உடைத்திருந்தது ஜாதிவெறி கும்பல், இதற்கு இலகு ரக வாகனத்தில் உள்ளே கிடந்த உருட்டுக் கட்டையே சாட்சி.

இந்த ஜாதிவெறி வன்முறை சம்பவத்தில் வீட்டிலிருந்த அத்தியாவசிய பொருட்களோடு சேர்த்து அரசு வழங்கிய வண்ண தொலைக்காட்சி பெட்டியின் உதிரி பாகங்கள் கூட மிச்சமின்றி எரிக்கப்பட்டதில் குடிசையின் 4 அடி சுற்று சுவரே மிஞ்சியிருந்தது.  தனது குடிசையோடு சேர்த்து 6ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான தனது அனைத்துப் பாடப்புத்தகங்களும் எரிக்கப்பட்டன எனக் கூக்குரல் எழுப்பினார் ஒரு இளைஞர்.

பிறப்பைக் கொண்டு தீண்டத்தகாதவன் என ஒதுக்குவதும் தாழ்த்தப்பட்டவன் என ஒடுக்குவதும் போதவில்லை என்று எங்கள் இருப்பிடங்களையும் வாழ்வாதாரங்களையும் எரித்து சாம்பலாக்கிய இந்த ஜாதிவெறி கும்பல், அவர்கள் ஜாதிவெறிக்கு தீனி போடும் வகையில் கோழிகளையும் எரித்து சாம்பலாக்கியதாக கதறினார் ஒரு தாய்.

தாக்குவதற்கு தயாராக பதுங்கி இருந்த ஜாதிவெறியர்கள் குடிசையை நெருங்கும் சலசலப்பு கேட்டு திரும்பி பார்த்து குரல் எழுப்புவதற்குள் இரும்பு கம்பி கொண்டு தன் தலையில் அடிக்க முற்பட்டபோது தற்காத்துக் கொள்வதற்கு கையை தலைக்கு மேலே உயர்த்திய போது அடி கையில் பட்டதில் எலும்பு முறிந்துவிட்டது என்றார் 62 வயது முதியவர்.

dalit_colony_481

இந்த ஜாதிவெறி கும்பலிடம் தன் மகன் சிக்கிவிடுவானோ என்று தன் மகனை காப்பாற்ற சென்ற போது தன்னை சுமார் 20 பேர் சுற்றி வளைத்து இரும்பு கம்பிகள் மற்றும் உருட்டுக் கட்டைகள் கொண்டு கொடூரமாக தாக்கியதில் உடல் முழுவதும் பல காயங்கள் ஏற்பட்டதோடு தலையிலும் 40-க்கு மேற்பட்ட தையல்கள் போடப்பட்டு வேலூர் சிவிசி மருத்துவமனையில் 7 நாள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு உயிர் பயத்தோடு வீடு திரும்பியிருப்பதாக தெரிவித்தார் அந்த 50 வயது தந்தை.

இந்த ஜாதிவெறி வன்முறை தாக்குதலின் பின்னணி குறித்து விசாரிக்கும் பொழுது ரெண்டாடி கிராமம் தலித் குடியிருப்பில் சுமார் 150 குடும்பங்கள் வசிப்பதாகவும் அருகில் 60 அருந்ததியர் குடும்பங்கள் இருப்பதாகவும் இவர்களைத் தவிர இந்த வட்டார முழுவதும் வன்னியர்களே அதிகபடியாக இருப்பதாக தெரியவருகிறது.

ஒரு அருந்ததிய பெண்ணை வன்னிய இளைஞர்கள் தகாத வார்த்தைகளால் கிண்டல் செய்ததை எதிர்த்து கேட்ட தலித் இளைஞருடன் ஜாதிவெறி வன்னிய இளைஞர்கள் அடிதடி சண்டையில் ஈடுபட்டதே இந்த ஜாதிவெறி வன்முறைக்கு ஆரம்ப புள்ளியாக அமைந்தது.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யும்போது, டிராக்டர் உதிரி பாகங்கள் வாங்கிய கொடுக்கல் வாங்கலின் போது ஏற்பட்ட பிரச்சினை என்று வழக்கை முடிப்பதற்காக காவல் துறையினர் கண்துடைப்பிற்கு இரு தரப்பிலிருந்தும் 3 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.  இதில் வன்னிய இளைஞர்கள் மட்டும் 3 நாட்களில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கடுத்து, கொண்டாபுரத்தில் செங்கல் சூளை வைத்து தொழில் நடத்தும் வன்னியரிடம் ரெண்டாடி தலித் காலனியை சேர்ந்த ஒருவர் வீடு கட்டுவதற்காக ரூ.40,000/- மதிப்புள்ள செங்கல்களை வாங்கியுள்ளார்.  அதில் ரூ.10,000/- நிலுவை இருந்துள்ளது.  வீட்டிற்கு நிலுவை தொகையை வாங்க சென்ற வன்னியரிடம் வாங்கிய செங்கல்களில் நிறைய சேதமடைந்திருந்த காரணத்தினால் 1000 ரூபாய் குறைத்துக் கொள்ளுமாறு தன் கணவன் கேட்க சொன்னதாக கூறியதற்கு அப்பெண்ணை அவர் தகாத வார்த்தைகளால் பேசியதோடு எங்களிடமே பேரம் பேசும் அளவிற்கு வந்துவிட்டீர்களா என மிரட்டி முழு பணத்தையும் வாங்கி சென்றுள்ளார்.  நியாயம் கேட்க சென்ற அந்த கணவனோடு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர் ஜாதிவெறி வன்னியர்கள்.

 இதையும் ஜாதிவெறி வன்னியர்களுக்கு ஆதரவாகவே காவல்துறை செயல்பட்டு அடிதடி  வழக்காக  முடித்துள்ளது.   இவ்விரண்டு சம்பவங்களை வைத்து தலித்துகள் ஜாதிவெறி வன்னியர்களுக்கு சமமாக வளர்ந்து விடுவார்களோ என்ற குரூர ஜாதிவெறி மனப்பான்மையின் வெளிப்பாடே நவர்பர் 3ம் தேதியன்று நடந்த இந்த வன்முறை சம்பவம்.

ரெண்டாடி தலித் காலனியில் பெரும்பாலும் கான்கிரீட் தளங்கள் போடப்பட்ட வீடுகளாகவும் அதிலும் சில மாடி வீடுகளாகவும் இருந்துள்ளன.  வெறும் 3 வீடுகளே குடிசை வீடுகள், குறிப்பாக மற்ற எல்லா பக்கங்களிலும் பொட்டல் வெளிகளுடன் காலனிக்கு ஒதுக்குப்புறமாக இருந்த குடிசையில் இருந்து தங்களது ஜாதிவெறி தாக்குதல் நடத்த திட்டமிட்டு, இரவு சீனி என்பவரது கறிகடையில் இருந்து வெடிக்கப்பட்ட வெடிச்சத்தமே பொட்டல்வெளிகளில் பதுங்கியிருந்த வன்னிய ஜாதி வெறியர்களுக்கு அழைப்பு மணியாக இருந்துள்ளது.

உடனே தாக்குதலை ஆரவாரத்துடனும் பெருங்கூச்சலுடனும் ஆரம்பித்திருக்கினறனர்.  முதலாவதாக வெளியே கட்டிலில் படுத்திருந்த முதியவரின் கையை அடித்து உடைத்தும், அவரது மனைவி அவரைக் காப்பாற்றி வீட்டுக்குள் அழைத்துச் சென்றபின்னரும் ஈட்டி மற்றும் கடப்பாரையினால் ஆக்ரோசமாக ஜாதியைப்பற்றி தகாத வார்த்தைகளால் கூச்சலிட்டபடியே வீட்டுக்கதவை உடைக்க முற்பட்டிருப்பது கதவிலிருந்த வெட்டுகள் பறைகூறின.  அதன்பிறகு குடிசைக்கு தீவைத்து கொளுத்திவிட்டு காலனிக்குள் சென்றுள்ளனர்.

கலவரத்தில் தனது மகன் சிக்கி பாதிக்கப்படக்கூடாது என வெளியில் தலைகாட்டிய ஒருவரை சுமார் 20 பேர் வரை (அதிலும் குறிப்பாக பாதிக்குமேல் தனக்கு தெரிந்தவர் என்று அவர் அழுத்தமாக சொன்னார்)  சூழ்ந்து தலையிலும் உடலிலும் தாக்கிவிட்டு சுற்றியிருந்த வாகனங்களையும் வீடுகளில் பெரும்பாலும் கண்ணாடி ஜன்னல்களாகவே கதவுகளுமே இருந்ததால் அவற்றையும் உருட்டுக்கட்டையால் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

தாக்கவந்த ஜாதிவெறியர்களில் 100 பேருக்கு மேல் தனக்குத் தெரியும் என்றும கை உடைக்கப்பட்டவரும், தன்னை தாக்கியவர்களில் 7 வன்னியர்களை தனக்கு தெரியும் என்று தலையில் தாக்கப்பட்டவரும் கூறினர்.  பிறகுதான் நமக்கு தெரியவந்தது இவற்றிற்கெல்லாம் அடித்தளமாக செயல்பட்டு திட்டமிடலுட்பட அனைத்தையும் பின்னிருந்து செயல்படுத்தியது முன்னர் சொன்ன சீனி. இவரது அண்ணன் பா.ம.க-வில் பொறுப்பில் இருப்பவர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.  இத்தனை பிரச்சனைகள் நடந்தும் மிகச்சாதாரணமாக கையாண்டு ஒவ்வொன்றையுமே ஜாதிவெறி வன்னியர்களுக்கு சாதகமாகவே வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள் R-3 சோளிங்கர் காவல்நிலைய அதிகாரிகள்.  குறிப்பாக நவம்பர் 3-ஆம் தேதி வன்முறை நடக்கப்போகிறது எனத் தெரிந்து காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி சென்ற ரெண்டாடி தலித்காலனியினருக்கு ஒருவேளை நீங்கள் சொல்வதுபோல் அங்கு வன்முறை நடக்கவில்லையெனில் உங்கள் அனைவரையும் கைது செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

சம்பவம் நடந்த உடனேயே தகவல் சொல்லப்பட்டாலும், ரெண்டாடி காலனி கட்டுப்பாட்டிற்குள் வரும் சோளிங்கர் R-3 காவல் நிலைய அதிகாரிகளும் அவசர மருத்துவ உதவி வாகனமும், தீயணைப்பு படையும், நடப்பவை நடந்து முடிந்துவிடட்டும் என்று மிகத்தாமதமாக மேம்போக்கிற்காக மட்டுமே 1 மணி நேரம் கழித்து அங்கு சென்றுள்ளனர். அருகிலுள்ள சிப்காட்டிற்கு பெரும்பான்மை ரெண்டாடி தலித் காலனி மக்கள் வேலைக்கு செல்கின்றனர்.

ஒரு சிலர் வாகனங்களை வைத்து சுயதொழிலும் செய்து வருகின்றனர். இதனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் இரண்டடுக்கு மாடிவீடு கட்டி வாழும் நிலைக்கு உயர்ந்துள்ளது.  மேலும் கல்வியறிவிலும் உயர்ந்துள்ளதற்கு உதாரணமாக பாதிக்கப்பட்ட அந்த இளைஞன் இளங்கலை மேலாண்மை (B.B.A.) பட்டப்படிப்பு முடித்து முதுகலை பயில தயாராக இருந்துள்ளார்.   யாரும் யாரையும் அண்டி பிழைக்கும் நிலையிலும் அங்கு இல்லை.  சுயமாக தொழில் செய்யும் அளவிற்கு அவர்களுக்கு பொருளாதார நிலையும் அங்கு உயர்ந்துள்ளது.  இத்தனை வருடங்களாக தேர்தலின்போது தீச்சட்டி வரைந்த மஞ்சள் நிற பனியனுடன் வந்து பா.ம.க-விற்குத்தான் ஓட்டுப்போட வேண்டும் என்று மிரட்டி தங்களிடம் ஓட்டு வாங்குவார்கள் என்று காலனி மக்கள் அழுத்தம் திருத்தமாக சொல்கின்றனர்.

தங்களது சர்வாதிகார ஜாதி அரசியல் இதுவரை அந்தப்பகுதியில் நடத்திவந்த வரையிலும், தலித் காலனி மக்களும், அவர்களது ஓட்டுகளும் தங்களுக்குத்தான் என்பது உறுதியான ஒன்று. தங்களது பா.ம.க-விற்கு வருகிற தேர்தலில் ஓட்டு கிடைக்காது போய்விடுமோ என்ற அச்சத்தினாலும் தற்போது ரெண்டாடி தலித் காலனி மக்கள் பட்டமேற்படிப்பு படிக்கும் அளவிற்கு கல்வித்தரத்தில் உயரந்துவிட்டதாலும் இவர்களை ஒடுக்கிவைப்பதன் மூலமே தங்களால் நிலைத்த கட்சியாக இருக்க முடியும் என்று மேலிடம் கற்பித்த பாடத்தை அடிமட்ட ஜாதிவெறி தொண்டன் வரை புரிந்துள்ளனர் என்பது இதிலிருந்து திண்ணமாகிறது.

ஜாதிவெறி வன்னியரின் வன்முறை தருமபுரியை அடுத்து சரியாக ஒருவருடம் நிறைவடைய  இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் சோளிங்கர் பகுதியில் அவர்கள் நடத்தியிருப்பதற்குள் இருக்கிறது ஜாதிவெறி அரசியலின் உண்மை முகம் என்பது!

ஆதிக்க ஜாதியான சர்வாதிகார ஒடுக்குமுறை, அதைக்கொண்டு இவர்களது கட்சிக்கு ஓட்டுப்பொறுக்குவது, பொருளாதார, கல்வி நிலையில் வளரலாம் ஆனால் தங்களைவிட மேலே செல்லக்கூடாது என்ற நவீன தீண்டாமையை வெறித்தனமாக செயல்படுத்துதல், இதற்கு தங்களின் கைக்கூலிகளாக இருக்கும் ஊழியர்களை சேர்த்துக்கொள்ளுதல் ஆகியவைகளே ஜாதிவெறியர்களின் தற்போதைய கொள்கை பிடிப்பாக இருக்கிறது.

தங்கள் ஜாதி மக்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் அதிகாரம் தங்களிடம் தொடர்ந்து இருக்கவும் வேறு யாருக்கும் ஓட்டுகள் சென்றுவிடக்கூடாது என்பதிலும் மிகத் தெளிவாக இருக்கும் பா.ம.க. கட்சியினர், இதுபோன்ற வன்முறை சம்பவங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது என்பதே இந்த சம்பவம் நமக்கு உணர்த்தும் அரசியல் ஆகும்.

- கிருபா முனுசாமி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It