நவம்பர் 12 ந்தேதி மாலை சட்டசபையில் இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா, அதே வேகத்தோடு இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தினை இடிக்க ஏற்பாடு செய்து, 13ந்தேதி அதிகாலையே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவரும், பூங்காவும் இடிக்கப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றிய 12 மணி நேரத்திற்குள் சுற்றுச் சுவர் இடிப்பு வேலைகள் நடந்தததைக் கண்டு ஈழ‌ உணர்வாளர்கள் கோபம் கொண்டு உள்ளனர். ஜெயலலிதாவின் இந்த விசித்திர நடவடிக்கைகளைக் கண்டு ஜெயலலிதாவை எப்பொதும் விமர்சிக்காத சிலர் கூட இப்போது விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் ஜெயலலிதாவின் இந்த செயலில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்பதுதான் புரியவில்லை. அவர் எப்போதும் முரண்களின் தொகுப்புதான். தனக்கென எந்த கொள்கையும் வைத்துக் கொள்ளாதவர். அதேபோன்று கொள்கை சார்ந்த ஆலோசனைகளையும் க‌ண்டு கொள்ளாதவர். தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை மட்டுமே செய்பவர். அதற்கு விளக்கம் சொல்லும் ஜனநாயகம் எல்லாம் தெரியாது. சொல்லவும் தேவையில்லை என்று நினைப்பவர். தன் அரசியல் வாழ்நாளின் பெரும்பகுதியை ஈழ எதிர்ப்பிலேயே கழித்தவர். ஆனால் அப்படிப்பட்டவர்க்கு வலியப் போய் ஈழத்தாய் பட்டம் கொடுத்தவர் யார்?

கருணாநிதி என்றால் விமர்சனத்தின் எல்லைவரை சென்று விமர்சிப்பதும், அதுவே ஜெயலலிதா தவறு செய்தால் அதனை பெரிது படுத்தாமல் விட்டு விடுவதும், அவர் தவறாக வழி நடத்தபட்டுவிட்டார், தெரியாமல் செய்து விட்டார் என பூசிமெழுகி எழுதுவதும் உயர்சாதி பத்திரிக்கைகள் இங்கு கட்டி வைத்திருக்கும் விமர்சன மரபு. ஆனால் அதே விமர்சனப் போக்கைத்தான் தமிழ்த் தேசியவாதிகளும், ஈழ‌ ஆதரவாளார்களும் கடைபிடிக்கிறார்கள் என்பதுதான் வருத்தத்திற்குரியது.

ஈழப்போரில் கருணாநிதி செய்தது துரோகம்தான், ஆனால் ஜெயலலிதா எப்படி ஈழத்தாய் ஆனார் என்பதுதான் புரியவில்லை. கருணாநிதி மத்திய, மாநில ஆட்சியில் பலன் பெற்றதால், ஆட்சியில் இருந்த‌தால் ஈழப்போரை நிறுத்தக்கோரி தமிழகத்தில் எழுந்த போராட்டங்களை திட்டமிட்டு மழுங்கடித்தார். ஆனால் அப்போது எதிர்கட்சியாக இருந்த ஜெயலலிதா தனது அரசியல் சுயலாபத்துக்காக கூட இவ்வளவு பெரிய இனப்படுகொலையை எதிர்த்துப் பொரடாமல் தடுத்தது எது? "போரில் மக்கள் சாகத்தான் செய்வார்கள்", "விடுதலைப்புலிகள்தான் மக்களைப் பிடித்து வைத்துள்ளனர்" என இலங்கையின் குரலில் ஏன் பேசினார்?. இப்போது முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச் சுவர் இடிப்புக்கு பேசும் தலைவர்கள் கூட அப்போது ஜெயலலிதாவின் கருத்துக்கு கண்டனத்தை ஏன் தெரிவிக்கவில்லை?

ஈழ ஆதரவை தமிழகத்திலிருந்து காணமல் போகச் செய்த‌தில் ஜெயலலிதாவிற்கு முக்கியப் பங்குண்டு. 91-96 ம் ஆண்டுகளில் தனது முதலாவது ஆட்சியின்போது தேவையெனில் போலிமோதல்கள்(என்கவுன்டர்) நிகழ்த்தியாவது தமிழகத்தில் இருக்கும் ஈழ ஆதரவை குறைக்க வெண்டும் என காவல்துறைக்கு ஜெயலலிதா அப்போது உத்தரவு வழங்கியிருந்தார் என சமீபத்தில் வெளியான‌ விக்கிலீக்ஸ் பதிவுகள் கூறுகின்றன. அப்போது தொடங்கிய புலிகளுக்கெதிரான, ஈழத்துக்கெதிரான தனது நடவடிக்கைகளை 2009ல் இனப்படுகொலையில் ஈழப்போர் முடியும்வரை மாற்றிக் கொள்ளாத‌வர். ஏன் இவ்வளவு இழப்புகளுக்குப் பின்பும் பெயரளவில் கூட அதிமுகவின் மூலமாக ஈழத்தமிழருக்கு ஆதரவாக எந்த போராட்டங்களையும் நடத்தாதவர். மற்ற கட்சிகள் கொண்டுவந்த ஈழ ஆதரவுத் தீர்மானங்களையும், போராட்ட‌ங்களையும் வர‌லாற்று முக்கியத் தருணங்களில் ஆதரிக்காமல் விதண்டாவாதம் பேசி எதிர்த்த‌வர். ஆனால், ஈழத்தாயாக கட்டமைக்கப்பட்டார்.

2009 ஈழப்போரின் இறுதி நாட்களின்போதே நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழருக்கு துரோகம் செய்த திமுகவும், அதிமுகவும் புற‌க்கணிக்கப்பட்டு தமிழர் நலன் சார்ந்த அணி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் மாற்று அரசியல் தேடாமல் ஜெயலலிதாவே கதி என போய்ச் சேர்ந்தனர். கருணாநிதி காங்கிரசு எதிர்ப்பு அதிமுக ஆதரவாக கட்டமைக்கப்பட்டது. இதனைச் செய்ததில் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தபடி ஜெயலலிதாவை விமர்சிக்காத ஈழ ஆதரவுத் தலைவர்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு.  ஜெயலலிதாவும் வலிய வரும் ஆதரவை ஏன் இழப்பானேன் என ஈழ ஆதர‌வு அவதாரம் எடுத்தார்.

கருணாநிதி எழுதிய அதே கடிதங்கள்தான், அதே தீர்மான‌ங்கள்தான் ஜெயலலிதாவும் நிறைவேற்றினார். இதிலும் பலன் ஏதுமில்லை. வழக்கம் போல மத்திய அரசு குப்பைத் தொட்டிக்குதான் அனுப்பி வைத்தது. ஆனால் கருணாநிதி மத்திய அரசில் அங்கம் வகித்ததால் விமர்சிக்கப்பட்டார். ஆனால் இப்போது ஜெயலலிதாவும், காங்கிரசும் எதிரெதிர் முகாமில் இருப்பதால் கடிதத்தில் கொஞ்சம் கடுமை அதிகமாக இருக்கிறது அவ்வளவுதான். ஒரு அரசியல்வாதியாக தனக்கு வரும் ஆதரவை ஈழத்தைப் பயன்படுத்தி வாங்கிக் கொள்கிறார் அவ்வள‌வுதான். இத‌னாலேயே ஜெய‌ல‌லிதா த‌னி ஈழ‌க்கொள்கையை ஏற்றுக் கொண்டுவிட்டார்; காங்கிர‌சுட‌ன் கூட்டணி வைக்க‌மாட்டா‌ர் என‌ எண்ணினால் நாம் முட்டாள்களாவோம்.

ம‌றுபுற‌ம் ம‌த்திய‌ காங்கிர‌சு க‌ட்சி ஈழ‌த்துக்கு எதிரான‌ க‌ட்சி என்ப‌தால், பாஜக‌ ஈழ‌ ஆத‌ர‌வு க‌ட்சிபோல‌ க‌ட்ட‌மைக்க‌ப்ப‌டுகிற‌து. காங்கிர‌சு ம‌ட்டுமே ஈழ‌த்துக்கு எதிரான‌ க‌ட்சியில்லை. பாஜக‌வும் க‌ம்யுனிஸ்டுக‌ளும் ஈழ‌ எதிர்ப்பாள‌ர்க‌ள் என்பதால்தான் இவ்வ‌ள‌வு பெரிய‌ இன‌ப்ப‌டுகொலை ந‌டைபெறும்போது எதிர்க்க‌ட்சியாக‌ கூட, தாங்கள் ஆற்ற வேண்டிய க‌ட‌மையை ம‌றுத்து ம‌வுன‌ம் காத்தார்க‌ள். இப்போதும் கூட‌ இலங்கையுட‌ன் இந்தியா கொண்டுள்ள அதீத உற‌வில் இவ‌ர்க‌ளுக்கு எந்த‌ விம‌ர்ச‌ன‌மும் இல்லை. உல‌க‌ம் முழுவ‌தும் அதிர்வ‌லைக‌ளை ஏற்ப‌டுத்திய‌ இன‌ப்ப‌டுகொலையின் ஆதாரங்களைக் க‌ண்டும் இன்னும் பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் மத்திய தலைவர்கள் இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்க‌வில்லை. மாறாக‌ இலங்கைக்கு எதிராக இந்தியா செய‌ல்ப‌ட‌க்கூடாது எனும் காங்கிர‌‌சின் நிலைப்பாட்டைத்தான் வ‌ழிமொழிகிறார்க‌ள்.

இங்கு தமிழகத்தில் மாநிலத் தலைவர்கள் கூறுவதையெல்லாம் தேசிய கட்சியின் நிலைப்பாடாக கருத முடியாது. எனவே திமுக எதிர்ப்பை அதிமுக ஆதரவாகவும், காங்கிரசு எதிர்ப்பை பாஜக ஆதரவாகவும் மடை மாற்றுவதால் ஈழத்துக்கோ, தமிழக அர‌சியலுக்கோ எந்த நன்மையும் விளைய‌ப்போவது இல்லை. மாற்று அரசியலையும், இனப்படுகொலை ஏன் தடுக்கப்படாமல் போனது என்ற உண்மையையும் மக்களிடம் கொண்டு செல்வதுதான் நமது தேவை. இனப்படுகொலை நடந்தபோது தமிழர்களுக்கு எதிர்ப்பாக செயல்பட்ட திமுக, அதிமுக என இரு கட்சிகளும் உண்மையான அக்கறை இல்லாவிட்டாலும் இன்று ஈழத்துக்கு ஆதரவாகப் பேசுவதற்குக் காரணம் மக்களிடம் செய்தி சென்றதுதான். இனி ஈழம் பற்றி பேசாமல் அரசியல் நடத்த முடியாது என்ற நிலைக்கு வந்துள்ளனர். இதே போன்று இந்திய அளவிலும் மக்களிடம் செய்தியைப் பரப்புவ‌தும், மனித உரிமையாளர்களைப் பேச வைப்பதுவும்தான் நமது தேவை. அதுதான் இந்திய அதிகார வர்க்கத்தினை ஈழத்துக்கு எதிராக செயல்படாமல் முடக்கும். இலங்கையின் நட்பு இந்தியாவிற்கு அவமானம் என்ற நிலை வரும்.

பெரிய கட்சிகள் எதுவும் மக்களுக்கு உண்மையாக செயல்படவில்லை என்பதால்தான் இவ்வளவு பெரிய இனப்படுகொலையை தடுக்க முடியாமல் போனது. திரும்பவும் அதே கட்சிகளிடமே ஆதரவு, எதிர்ப்பு என போய் நிற்பதில் பயன் இல்லை. எதிரி, துரோகி என இருகட்சிகளிடமே மாறி மாறி செல்வதால்  என்ன மாற்றம் வந்து விடப்போகிறது? மக்களுக்காகப் பேசும் வலுவான கட்சி இப்போது இல்லை என்ற உண்மையை மக்கள் உணரட்டும். அந்த வெற்றிடத்தை இட்டு நிரப்பும் அரசியல் உருவாகட்டும். அதை விடுத்து கருணாநிதியிலிருந்து ஜெயலலிதா, காங்கிரசிலிருந்து பாஜக என்ற வழி நடத்தல்கள் தெரிந்தே கிணற்றில் விழுவது போலத்தான்.

ஒன்னரை லட்சம் மக்களை இனப்படுகொலையில் பறிகொடுத்தும் நாம் அரசியலைப் புரிந்து கொள்ளவில்லையெனில், இந்த இனம் எப்போது அரசியலை புரிந்து கொள்ளும்?

Pin It