நாம் மதிப்பிட்டதைப் போலவே இந்திய அரசு தனக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை மாநிலங்களின் மீது சுமத்துவதற்கு உறுதியான திட்டம் தீட்டிவிட்டது. அதிலும் தமிழ் நாட்டை வஞ்சிப்பதில் குறியாக உள்ளது. இந்திய அரசு தான் வசூலிக்கும் வரி வருமானத்தில் மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கும் தொகையை பல்வேறு மாநிலங்களுக்கிடையே எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பது குறித்து ஆய்வு செய்ய இந்திய நிதியமைச்சர் நியமித்த இரகுராம்ராஜன் குழு அளித்துள்ள அறிக்கை 26.09.2013 அன்று வெளியாகி உள்ளது.

இரகுராம் ராஜன் குழு தனது பரிந்துரையை கடந்த செப்டம்பர் 2 ஆம் நாளே நிதியமைச்சரிடம் அளித்துவிட்ட போதிலும் அவ்வறிக்கை நிதியமைச்சகத்தின் ஆய்வுக்குப் பிறகு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

மறைமுக வரியிலும், நேரடி வரியிலும் இந்திய அரசு திரட்டும் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. பகிர்ந்தளிக்கப்படும் வரியினங்களின் பங்கீட்டு விகித்ததை தீர்மானிக்கவும், மாநிலங்களுக்கு என ஒதுக்கப்படும் பங்குத்தொகையை பல்வேறு மாநிலங்களுக்கிடையே எவ்வாறு பிரித்துக் கொடுப்பது என்பது குறித்து முடிவு செய்யவும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நிதி ஆணையம் அமைக்கப்படுகிறது. இப்போது 13 ஆவது நிதி ஆணையம் செயலில் உள்ளது.

நிதி ஆணையம் என்பது அரசமைப்புச் சட்டப்படி நிறுவப்படும் அமைப்பாகும். அது இருக்கும் போதே அரசமைப்புச் சட்டத்திற்கு தொடர்பில்லாமல் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அதே செய்தி குறித்து முடிவு செய்ய இன்னொருக் குழுவை நியமைச்சர் ப.சிதம்பரம் நியமித்ததே கடும் அத்துமீறலாகும்.

நிதியாணையம் அனைத்து மாநில அரசுகளிடமும் கருத்துக் கேட்டப் பின்பே தனது பரிந்துரையை அளிக்கிறது. ஆனால், நிதியமைச்சர் நியமித்த நிதிப்பங்கீட்டு குழுவுக்கு அப்படி ஒரு சட்டக் கடப்பாடே இல்லை. எனவே, தானடித்த மூப்பாக இப்பரிந்துரையை அளித்துள்ளது.

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் ஒட்டுமொத்த வரிப்பங்குத்தொகையை பல்வேறு மாநிலங்களுக்கிடையே எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதற்கு இரகுராம் ராஜன் குழு அளித்துள்ளப் பரிந்துரையை உற்று நோக்கினால், செயல்திறன் உள்ள மாநிலங்களை தண்டிக்கும் நோக்கில் அது அமைந்துள்ளதைப் புரிந்துகொள்ளலாம். குறிப்பாக இப்பரிந்துரை தமிழகத்தின் மீதுமிகக் கொடுமையான நிதித்தாக்குதலைத் தொடுக்கிறது.

மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கத் தகுதியான ஒட்டுமொத்த வரி நிதியில் அனைத்து மாநிலங்களுக்கும் தலா 8.4 விழுக்காட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் மீதம் உள்ள 91.6 விழுக்காட்டு நிதியை தேவை அதிகமுள்ள மாநிலங்களுக்கு முக்கால் பங்கும் செயல்திறன் உள்ள மாநிலங்களுக்கு கால்பங்கும் என்ற அளவில் பிரித்துக்கொடுக்கலாம் என்றும் இரகுராம் ராஜன் குழு அறிக்கை வரையறுக்கிறது.

தேவையுள்ள மாநிலங்கள் (needed states) என்பதைத் தீர்மானிக்க “வளர்ச்சியின்மை”யை (underdevelopment) அளவுகோலாக இரகுராம்ராஜன் குழு வைத்துக்கொள்கிறது. வளர்ச்சி குறித்த 10 முக்கிய அளவுகோல்களைக் கொண்டு வளர்ச்சியின்மைக் குறியீட்டை (underdevelopment index) இக்குழு வரையறுத்தது.

1) மாநிலத்தின் தனி நபர் மாத நுகர்வுச் செலவு 2) கல்வி நிலை 3) உடல் நலம் 4) குடும்பத்தில் உள்ள வசதிகள் 5) வறுமை விகிதம் 6)பெண் கல்வி 7) மாநில மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் தொகை விகிதம் 8) நகரமயமாக்கல் விகிதம் 9) மக்களிடையே நிதி ஆதாரப்பகிர்வு 10) சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் ஆகிய பத்து கூறுகளில் ஒரு மாநிலம் எந்த அளவுக்கு பின் தங்கியிருக்கிறதோ அந்த அளவுக்கு அதற்கான வளர்சியின்மைக் குறியீடு வழங்கப்படும்.

இந்த வளர்ச்சியின்மைக் குறியீட்டின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள மாநிலங்களை மூன்று தொகுதிகளாக இரகுராம் ராஜன் குழு வகைப்படுத்துகிறது.

முற்றிலும் எந்த வளர்ச்சியும் இன்மை என்பதை 1 ஆகக் கொண்டு இந்த குறியீட்டு அளவு தீர்மானிக்கப்பட்டது. இதன்படி 0.6 க்கு மேல் வளர்ச்சியின்மைக் குறியீடு உள்ள மாநிலங்கள் “மிகவும் வளர்ச்சிக்குறைவான” மாநிலங்கள் (least developed) என்றும், 0.4 க்கும் 0.6 க்கும் இடைப்பட்ட வளர்ச்சியின்மைக் குறியீடு உள்ள மாநிலங்கள் “வளர்ச்சிக் குறைவான” (less developed) மாநிலங்கள் என்றும் 0.4 க்குக் கீழ் வளச்சியின்மைக் குறியீடு உள்ள மாநிலங்கள் ஒப்பீட்டளவில் வளர்ந்த (relatively developed) மாநிலங்கள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
 
பீகார் , மத்தியப் பிரதேசம், இராசஸ்தான், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பெரும்பாலான வட மாநிலங்கள் மிகவும் வளர்ச்சிக் குறைவான மாநிலங்கள் என்றப் பட்டியலில் வருகின்றன. இவற்றிக்கு நிதித்தேவை அதிகம் என மதிப்பிடப்பட்டு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பதே இரகுராம்ராஜன் குழுவின் பரிந்துரை.

இவ் வகைப்பாட்டின்படி குசராத், ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் கூட வளர்ச்சிக்குறைவான மாநிலங்கள் எனப் பட்டியலிடப்பட்டு அவற்றிக்கு தமிழ்நாட்டைவிட கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாட்டு வளர்ச்சியின்மைக் குறியீட்டில் 0.34 பெற்று ஒப்பீட்டளவில் வளர்ந்த மாநிலம் எனற கிரீடம் சூட்டப்பட்டு நிதி ஒதுக்கிட்டில் கீழ் நிலையில் வைக்கப்படுகிறது.

கல்வி, சாலை வசதி உள்ளிட்டவற்றில் பிற மாநிலங்களைவிட சொந்த முயற்சியில் முன்னேற்றம் கண்டதால் தமிழ் நாட்டிற்கு இரகுராம் ராஜன் குழு அளிக்கிற பரிசு இது.

வரி வசூலில் தமிழ்நாடு இந்தியாவின் பெரும்பாலான பிற மாநிலங்களை விட திறன் பெற்ற மாநிலமாகும். இங்கேயும் வரி ஏய்ப்பவர்கள் உண்டு என்றாலும் ஒப்பீட்டளவில் குறைவு.

தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகக் கூறப்படும் குசராத், மகாராட்டிராவை விட தமிழ்நாட்டில் வரி வசூல் விகிதம் அதிகமாகும். 2012-2013 ஆம் நிதியாண்டில் தமிழ் நாட்டிலிருந்து இந்திய அரசு அள்ளிச்சென்ற வரி வருவாய் ஏறத்தாழ 85 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இது இந்திய அரசின் ஒட்டுமொத்த வரி வசூலில் 14.12 விழுக்காடு ஆகும்.

ஆனால் இந்திய அரசு கடந்த நிதி ஆண்டு தமிழகத்திற்கு ஒதுக்கிய வரிப் பங்கீடு மற்றும் மானியங்களின் மொத்த அளவு ஏறத்தாழ 25 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

மாநிலங்களுக்கென்று இந்திய அரசு ஒதுக்கீடு செய்யும் மொத்த நிதித்தொகையில் தமிழகத்திற்கு வழங்குவது 4.18 விழுக்காடே ஆகும். அதாவது 14.12 விழுக்காடு எடுத்துக்கொண்டு வரிப் பங்காக 4.18 மட்டுமே வழங்குகிறது.

13 ஆவது நிதி ஆணையம் இந்திய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கிடு செய்யும் மொத்த நிதித் தொகையில் தமிழ்நாட்டுக்கு 5.01 விழுக்காடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. திட்டக்குழு 4.46 விழுக்காடு பகிர்ந்த்தளிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. ஆனால் இந்திய அரசு தமிழத்திற்கு அளித்ததோ 4.18 விழுக்காடு தொகை.

இதையும் ஏறத்தாழ பாதியாகக் குறைத்து 2.51 விழுக்காடு தொகையை தமிழ் நாட்டிற்குக் கொடுத்தால் போதும் என இரகுராம் ராஜன் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஒப்பீட்டளவில் வளர்ச்சியடைந்த மாநிலங்கள் என்றப் பட்டியலில் தமிழ்நாட்டை விட முன்னே உள்ள கேரளாவுக்கு செய்த நிதி ஒதுக்கீட்டையும் விட இது குறைவானது. இதற்கு முன்னர் மாநிலங்களுக்கு இடையில் நிதிப்பகிர்வு வழங்குவதற்காக உருவாக்கபட்ட காட்கில் வழிமுறை (பார்முலா), காட்கில் - முகர்ஜி வழிமுறை ஆகிய அனைத்தையும் விட இரகுராம் ராஜன் குழு வழிமுறை தமிழகத்தைப் பெரிதும் வஞ்சிக்கக்கூடியது.

இந்திய அரசு தமிழ் நாட்டிலிருந்து அள்ளிச் செல்லும் வரி வருமானத்தில் பாதியையாவது தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற தமிழக மக்களின் கோரிக்கையை ஆய்வு செய்வதற்குப் பதிலாக, இருக்கும் குறைவான ஒதுக்கீட்டையும் இன்னும் பாதியாகக் குறைப்பது இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கில் இன்னும் ஒரு கொடிய நடவடிக்கையாகும்.

இந்திய அரசின் இந்த நிதித் தாக்குதலை எதிர்கொள்ள தமிழக முதலமைச்சர் செயலலிதா தமிழ்நாட்டின் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்துக்கொண்டு இந்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். இரகுராம் ராஜன் குழு பரிந்துரையை இந்திய அரசு ஏற்கக் கூடாது என வலியுறுத்த வேண்டும்.

இந்திய அரசு தனது நயவஞ்சகத்தை தொடருமேயானால் தமிழகத்திலிருந்து இந்திய அரசு வரி வசூல் செய்வதை தடுப்போம் என தமிழக அரசும் மக்களும் களம் இறங்கவேண்டிய நேரமிது.

- த.தே.பொ.க பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன்

Pin It