2008 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 12ஆம் நாள் தலைநகர் தில்லியில், குண்டுகள் தொடர்ச்சியாக வெடித்ததில் 30 பேர் கொல்லப்பட, 100 பேர் காயம் பட்டனர். இச்சம்பவம் நடந்து ஆறு நாட்கள் கழித்து செப்டம்பர் 19 ஆம் நாள், தில்லியில் உள்ள பாட்லா ஹவுஸ் பகுதியில் குடியிருப்பு எண் 108 ல் L-18 என்ற அறையில், குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் தங்கியுள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து, தில்லி காவல் துறை பாட்லா ஹவுசை முற்றுகையிட்டது. வீட்டின் உள்ளே இருந்த தீவிரவாதிகளை பிடிக்க தில்லி போலீஸ் தாக்குதல் நடத்தியது. இச்சம்பவத்தில், அத்தீஃப் அமீன், முகம்மது சாஜித் இருவரும் போலீசை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அப்போது காவலர்கள் திருப்பிச் சுட்டதில் இருவரும் கொல்லப்பட்டனர் என்று காவலர் தரப்பில் சொல்லப்பட்டது. மற்றொரு நபரான ஷாஜத் அகமது சுட்டதில் ஆய்வாளர் மோகன் சந்த் சர்மா இறந்ததாகவும் ஷாஜத் அகமது தப்பிச் சென்றதாகவும் சொல்லப்பட்டது. தப்பிச்செல்ல முயன்ற மேலும் இருவரை கைது செய்ததாகவும் தப்பிச்சென்ற சஜ்ஜத் அகமதை அவரது சொந்த ஊரான ஆசம்கரில் (கிழக்கு உ.பி) வைத்து உத்திரபிரதேச காவலர்கள் கைது செய்ததாகவும் காவல் துறை தரப்பில் சொல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை 2013, ஜூலை 30 அன்று, தில்லி உயர் நீதிமன்றம் அளித்திருக்கிறது. இந்த தீர்ப்பு தில்லி காவல் துறைக்கு கிடைத்தவெற்றியாக காவலர்கள் கருதும் அதே நேரம் பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள், பாட்லா ஹவுஸ் எண்கவுண்டரில் காவல்துறையின் அறிக்கை குறித்து சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

      ஜூலை 30 அன்று தில்லி நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதி, ராஜேந்தர் குமார் சாஸ்திரி, சாஜத் அகமதுக்கு ஆயுள் தண்டனை வழங்கியும் 25000 ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இந்த தொகையில் 40000 ரூபாய் கொல்லப்பட்ட ஆய்வாளர் மோகன் சந்த் சர்மாவின் குடும்பத்திற்கு கொடுக்கவேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியிருக்கிறார்.

      இந்த மோதல் தீடீர் என நிகழ்ந்ததல்ல. காவல் துறைக்கு முதலில் துப்பு கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில், குற்றவாளிகளை பிடிக்கும் படை அமைக்கப்பட்டிருக்கிறது. விசாரிக்க வரும் அதிகாரிகளை நோக்கி சுட குற்றம் சாட்டப்பட்டவருக்கு அனுமதி இல்லை. காவலர்களுக்கு அவர்கள் உதவ வேண்டும் என்று தான் எதிர் பார்க்க பட்டனரே அன்றி காவலர்கள் தாக்கப் படுவார்கள் என எதிர்பார்க்கவில்லை என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

       சஜ்ஜத் மீது கொலை குற்றம், கொலை செய்ய முயற்சி, காவலர்களை பணிசெய்ய விடாமல் தடுத்து, காவலர்களை தாக்கியது, அதிகாரிகளுக்கு கடுமையான காயங்கள் உண்டு பண்ணியது ஆகிய குற்றங்கள் விசாரனையில் உண்மையென நிருபிக்கப்பட்டதாக நீதிபதி கூறியிருக்கிறார்.

      ஆய்வாளர் சர்மா கொலையில் ஒரே குற்றவாளியாக இருக்கும் சாஜத், இந்திய முஜாஹிதீன் அமைப்புடன் அவரது தொடர்பு குறித்த குற்றச்சாட்டுக்காக வேறொரு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார். மூன்று முக்கிய என் கவுண்டர் கொலைகளில் பாட்லா ஹவுசும் ஒன்று. இஷ்ரத் ஜஹான், சொரபுதீன் ஷேக் என் கவுண்டர்கள் மற்ற இரண்டுமாகும்.

      காங்கிரசின் பல தலைவர்களும், பாட்லா ஹவுசின் பிற குடியிருப்பு வாசிகளும் இதனை போலி எண் கவுண்டர் என்றே கருதுகின்றனர். இந்த எண் கவுண்டர் தொடர்பாக கூச்சல் குழப்பம் எழுந்தன. இருப்பினும், உச்சநீதிமன்றம், “நீதிதுறை விசாரனை” வைக்க மறுத்து தேசிய மனித உரிமைகள் ஆனையத்தின் (NHRC) விசாரணைக்கு உத்தரவிட்டது. 2009-ல் அறிக்கை சமர்பித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், இந்த எண் கவுண்டர் நேர்மையாக நடத்தப் பட்டுள்ளது என்று அறிவித்தது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் குழுவினர், சம்பவம் நடந்த இடத்தினை நேரில் பார்க்கவில்லை, பாட்லா ஹவுசின் குடியிருப்போரிடமும் கைது செய்யப்பட்டிருப் போரிடமும் ஒருமுறை கூட சந்தித்து கருத்து கேட்கவில்லை. முற்றிலும் காவலர்கள் கொடுத்த ஆவணங்களை வைத்து அறிக்கை தயாரித்திருக்கிறார்கள். காவல்துறை மீது விசாரணை நடத்தினால் காவல் துறையினரின் மன உறுதி (morale) பாதிக்கப்படும் என்று கருதிய மத்திய அரசு இந்த வழக்கை கையாள்வது குறித்து செய்வதறியாது இருந்தது.

       நீதிமன்ற தீர்ப்பு முற்றிலும் அரசு தரப்பு வாதத்தையே சார்ந்துள்ளது. எதிர் தரப்பு வாதம் உறுதியாக இருந்துள்ள போதும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று மனித உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வழக்கை விசாரித்த காவல்துறை உறுதியான ஆதாரங்களை கொடுக்க முடியாமல் போன நிலையிலும், காவல்துறை சாட்சியங்கள் மற்றும் சூழல் ஆதாரங்களையே பெரும்பாலும் நீதிமன்ற தீர்ப்பு சார்ந்திருக்கிறது.

      நீதிமன்றத்தில் காவல்துறை கொடுத்த சாட்சியத்தின் மூன்று பகுதிகள் சிக்கலாக மாறியது. ஒன்று, சம்பவம் நடந்த வீட்டில் இருந்து கைப்பற்றியதாக சொல்லப்படும் சாஜத்தின் காலாவதியான பாஸ்போட்-டை வைத்து அந்த வீட்டில் சாஜத் குடியிருந்ததாக சொல்லப்பட்டது.

இரண்டு : சாஜத் தப்பிக்கும் முன்னர் ஆய்வாளர் சர்மா மற்றும் இதர காவலர்கள் மீது துப்பாக்கியால் சுட்டார் என்று சொல்லப்படுகிறது.

மூன்று : என் கவுண்டரில் கொல்லப்பட்ட அத்தீப் அமீன் முன்னர் சாஜத்துடன் தொலைபேசியில் உரையாடியிருப்பதாகவும் சாஜத் ஆஜம்கர் செல்வதற்கு 2008, செப்டம்பர் 24 ல், அத்தீப் அமீன் ரயில் டிக்கட் பதிவு செய்து கொடுத்ததாகவும் காவல் தரப்பு, சாட்சியாக கூறியது. மேலும் தொடர் குண்டு வெடிப்பு நடந்த பின்னர் தில்லியில் இருந்து தப்பிக்க சாஜத் திட்டம் போட்டதாகவும் காவல் தரப்பு சொல்லியது.

ஜாமியா ஆசிரியர் ஐக்கிய கழகம் : 2013, ஜூலை 31 ம் நாள், ஜாமியா ஆசிரியர் ஐக்கிய கழகம் (Jamia Teacher’s Solidarity Association) “Beyond reasonable doubt? The Conviction of Shahzad Ahamad” (சாஜத் அகமது மீதான குற்றம் சந்தேகமற நிருபிக்கப்பட்டதா) என்ற பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

      இந்த அறிக்கை நீதிமன்ற தீர்ப்பை சாடியது மட்டுமின்றி, காவல் துறை தரப்பு வாதத்தை வரிக்கு வரி மறுத்து கூறியிருக்கிறது.. சர்மா சுட்டுக் கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை காவல் துறை இதுவரை கண்டு பிடிக்கவில்லை. குறைந்த பட்சம், சாஜத் சுட்டதாக சொல்லப்படும் துப்பாக்கி ரவைகளையாவது சாட்சியமாக கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், காவல் துறை கொண்டு வந்த சாட்சியங்களில் இவை காணப்படவில்லை. பாட்லா ஹவுஸ் பகுதியில், மிகவும் மக்கள் நெருக்கடியான நான்காவது அடுக்கில் குடியிருப்பு எண் 108 உள்ளது. குடியிருப்பை நாலாபுறமும் காவலர்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் ஒருவர் அங்கிருந்து தப்பிப்பது சாத்தியமே இல்லை. சாஜத்தை முதலில் பப்பு என்று குறிப்பிடார்கள். நீதிமன்றத்தில், வெவ்வேறு சாட்சியங்களின் போது, பப்புவை, ஷானவாஸ், ஷாபாஸ், ஷாஜத் என்று தொடர்ச்சியாக வெவ்வேறு பெயர்களில் காவல்துறை குறிப்பிட்டது.

      சுதந்திரமான சாட்சி எதனையும் காவல்துறை கொடுக்கவில்லை. சாட்சி சொன்ன அனைவரும் காவல்துறையை சார்ந்தவர்கள் தான். அவர்களும், சாஜத் தப்பிச் சென்றதை நாங்கள் பார்க்கவில்லையென்று தான் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்கள் என்று ஜாமியா ஆசிரியர்கள் ஐக்கிய கழகம் (JTSA) தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

      காவல்துறை சொல்லும் குற்றம் சாட்டின் நேர்மை குறித்து கேள்வி கேட்கும் JTSA தலைவர் மனிஷா சேத்தி, “முதலாவதாக அத்தீப் அமீனும் சாஜத்தும் தொலைபேசியில் உரையாடியதற்கான பதிவுகள் இருப்பதாக காவல்துறை சொல்வது உண்மையாக இருக்குமானால், நீதிமன்றத்தில் குரல் பதிவுகள் எதையும் ஏன் சாட்சியாக கொடுக்கவில்லை. இரண்டாவதாக, பாட்லா ஹவுசில் இருந்து சாஜத்தின் வேறு உடமைகள் கைப்பற்றப் படவில்லை. இதிலிருந்தே, அவரது பாஸ் போட்டை காவல்துறை அங்கு வைத்து பின்னர் எடுத்திருக்க முடியும் என்பது தெளிவாக தெரிகிறது. அந்த குடியிருப்பில் சாஜத் குடியிருப்பதாக காவல்துறை எப்படி குற்றம் சாட்டுகிறது. மூன்றாவதாக, தீவிரவாதி குண்டு வெடிப்பு நடந்து பதினோரு நாட்கள் கழித்து தப்பிப்பதற்காக ரயில் பயணத்திற்கு பதிவு செய்வது சாத்தியமா?” என்றும் கேள்வி எழுப்புகிறார்.

      அத்தீப் அமீன் மற்றும் முகம்மது சாஜித் ஆகியோரின் உடல்கூறு சோதனை அறிக்கைகள் (post-mortem reports) நீதிமன்றத்தால் பரிசோதிக்கப்படவில்லை. உடல்கூறு சோதனை அறிக்கைகள் ஆதாரங்களின் மிக முக்கியமான அம்சமாக இருந்திருக்க முடியும். அத்தீப் உடலின் பின்பகுதியில் குண்டுகள் துளைத்த காயங்கள் இருப்பதை தெளிவாக காட்டுகிறது. சாஜித்திற்கு தலையில் மட்டும் தான் துப்பாக்கிச் சூட்டின் காயங்கள் உள்ளன. அத்தீப்பின் உடலில் முனை மழுங்கிய (blunt) மற்றும் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்ட காயங்கள் காணப்படுகின்றன என்கிறார் மனிஷா சேத்தி. இந்த துப்பாக்கி சூட்டில் குண்டுகள் நுழைந்த வாயில்களைப் பார்த்தால், அத்தீப் அமீனின் நெற்றி, தலை, பின்பக்கம் சுடப்பட்ட போது, காவலர்கள் அவரை பலமாக மடக்கி பிடித்து கீழே கிடத்தி வைத்திருக்க வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது. எந்த ஒரு நேர்மையான என் கவுண்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர் தலையிலும், பின்பகுதியிலும் மட்டும் காயமடைய முடியும்? என்று JTSA அறிக்கை கேள்வி எழுப்புகிறது.

      நீதிமன்ற தீர்ப்பு, பல கேள்விகளுக்கு விடையளிக்க வில்லை. சொன்னதையே திரும்ப திருப்ப சொல்வதாகவும் (tautology), புரிந்து கொள்ள முடியாத வகையிலும்(obfuscations) இருக்கிறது.. காவல்துறையினரின் முன்னுக்குப் பின் முரணான வாக்கு மூலங்களையும் தாண்டி, அத்தீப் அமீனை, சாஜத்திற்கு ஏற்கனவே தெரிய வாய்ப்புண்டு என்பது தான், சாஜத் குற்றவாளி என்பதற்கு ஆதாரமாக நீருபிக்கப்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாக இருந்திருக்க கூடும் என்ற ஒன்று மட்டும் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது. மொத்தத்தில், காவல் துறை தரப்பு சாட்சியத்தை மட்டுமே நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. காவல் துறை தந்த முன்னுக்குப் பின் முரணான செய்திகளையே அரசு தரப்பு நீதிமன்றத்தில் சமர்பித்திருக்கிறது என்று ஜாமிய ஆசிரியர்கள் ஐக்கிய கழகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.. மேலும் அவர்கள் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

Pin It