போராட்டக் குழு
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
இடிந்தகரை 627 104
நெல்லை மாவட்டம்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
தலைமைச் செயலகம்
புனித ஜார்ஜ் கோட்டை
சென்னை 600 009

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு:

வணக்கம். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உண்மை நிலையினை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருவதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.

கடந்த யூலை மாதம் 11-ம் நாள் அணுப் பிளவு தொடங்க அனுமதி கிடைக்கப்பெற்று, யூலை 13 அன்று இரவு 11:05 மணிக்கு கூடங்குளம் அணுஉலையின் முதல் அலகு இயக்கப்பட்டது. முப்பது முதல் 45 நாட்களுக்குள் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து மத்திய மின்தொகுப்பில் விடுவோம் என்று இந்திய அணுமின் கழக உயர் அதிகாரிகள் ஆணித்தரமாக அறிவித்தனர். ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி அடுத்தக் கட்ட அனுமதியைப் பெற்று “சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள் கிடைத்திருக்கும் அணுசக்தி ஒழுங்காற்று வாரிய அனுமதி பெரும் திருப்தியை அளிக்கிறது” என்று ஊடகங்களிடம் சொன்ன கூடங்குளம் அணுமின் திட்ட வளாக இயக்குனர் திரு. ஆர். எஸ். சுந்தர் ஆகஸ்ட் இறுதிக்குள் 400 மெகாவாட் மின்சாரம் வரும், நவம்பர் மாத இறுதிக்குள் 1,000 மெகாவாட் வரும் என்று உறுதியளித்தார்.
 
ஆனால் இன்று வரை கூடங்குளத்தில் இருந்து எந்த மின்சாரமும் வரவில்லை, கூடங்குளம் அதிகாரிகளிடமிருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கூடங்குளம் திட்டத்தில் 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும்போது, 1025 மெகாவாட் தமிழகத்துக்கு தருவோம் என்று மத்திய அரசு நம்மையெல்லாம் கேலி செய்வது போல அறிவித்திருக்கிறது.
 
கூடங்குளம் பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருந்த தங்களையும் ஏமாற்றி, தவறான தகவல்கள் தந்து, 2012-ம் ஆண்டு மே மாதம் தில்லியில் முதல்வர்கள் மாநாட்டில் தாங்கள் கலந்து கொண்டபோது, “இன்னும் பத்து நாட்களில் கூடங்குளம் திட்டத்தைத் தொடங்குவோம்” என்று அறிவிக்கச் செய்தார்கள் மத்திய அரசும், அணுசக்தித் துறையும். மத்திய அமைச்சர் திரு. நாராயணசாமி இன்னும் 15 நாட்களில் அணுமின் நிலையம் இயங்கும் என்று சுமார் 20 முறை இந்திய, தமிழக மக்களை ஏமாற்றினார்.
 
ஒரு சிறிய குழு 120 கோடி மக்களை இப்படித் தொடர்ந்து ஏமாற்றுவதை இந்தியாவிலுள்ள பெரிய அரசியல் கட்சிகளோ, அவற்றின் தலைவர்களோ,ஊடகங்களோ கேள்விக்குள்ளாக்காது, அவர்களின் பொய்யான, ஏமாற்றுச் சொற்களை அப்படியே ஏற்றுக்கொள்வது மிகவும் ஆபத்தானது. இது இந்தியாவின் சனநாயகத்துக்கும், பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும், எதிர்காலத்துக்கும் நல்லதல்ல. தரமற்றப் பொருட்களை அதிக விலை கொடுத்து அந்நிய நாடுகளிடமிருந்து வாங்கி, அவர்களுக்கு லாபமும், தங்களுக்கு கமிஷனும் கிடைக்க வழிவகை செய்துவிட்டு, இந்திய மக்களை இப்படித் தொடர்ந்து ஏமாற்றுவது, திசைதிருப்புவது, தவறான வழியில் நடத்துவது உண்மையில் ஒரு மிகப் பெரிய குற்றம் ஆகும்.
 
கூடங்குளம் அணுமின் திட்டம் உண்மையிலேயே உலகத் தரமானது, உன்னதமானது என்றால், அதனை இயக்குவதில் ஏன் இத்தனை காலதாமதம்,குழப்பம், குளறுபடிகள், சிக்கல் என்று தமிழக மக்கள் பெரும் மன அழுத்தத்திலும், கவலையிலும் இருக்கிறார்கள். தரமற்ற ரஷ்ய உபகரணங்கள் பயன்படுத்தியிருக்கின்றனர், பொருளாதார மோசடிகள் செய்திருக்கின்றனர் எனும் எங்களின் ஆதாரபூர்வமானக் குற்றச்சாட்டுக்களுக்கு உரிய பதிலும் கிடைக்கவில்லை, அவற்றின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே தென் தமிழகத்தில் தீவிரவாதிகள் நுழைகிறார்கள் என்று மக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் பரப்பி, தோல்விகரமான கூடங்குளம் திட்டத்திலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். இந்த கூடங்குளம் திட்டத் தோல்வியால் தமிழகத்தில் மீண்டும் பரவலாக மின்வெட்டுப் பிரச்சினை தலைதூக்கியிருக்கிறது.

இந்நிலையில், தாங்கள் மத்திய அரசின், அணுசக்தித் துறையின் கூடங்குளம் திட்ட மோசடியைப் புரிந்து கொண்டு, போராடும் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும், எங்கள் தரப்பு நியாயங்களை உணர வேண்டும், தமிழக மக்களைக் காக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
தங்கள் உண்மையுள்ள,
 
சுப. உதயகுமார்            
ம. புஷ்பராயன்             
மை.பா. நன்மாறன்
எஃப். ஜெயகுமார்
இரா.சா.முகிலன்
பீட்டர் மில்டன்
வே.ராஜலிங்கம்

Pin It