100 நாள் வேலைத்திட்டம், என்று பரவலாக்கக் கூறப்படும் “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்”, பயனற்ற திட்டமாகவும், பெரும்பாலும் ஊழல் மலிந்தும், மக்களை சோம்பேறிகளாக்கி, இந்திய விவசாயம் வீழ்ச்சி பெறவே இத்திட்டம் இன்று வழிவகுத்து வருகிறது.

 இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நீங்களாக 06-02-2006 முதல் நாடெங்கும் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. கிராமப்புறத்தில் வாழும் மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலைக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டதால் ‘100-நாள் வேலை’ என்று திட்டத்தின் நோக்கத்தைப் போலவே பெயரும் சுருங்கிப் போனது.

 கிராமப் பொருளாதார முன்னேற்றம், விவசாய வளர்ச்சி, ஏழை மக்களின் பொருளியல் வளர்ச்சி என்று மேலோட்டமாகப் பார்க்கும்போது இத்திட்டம் சிறப்பானதாகத் தெரிந்தாலும் இந்தியாவின் வளர்ச்சிக்கே ஒருதடைக் கல்லாக இத்திட்டம் இருந்து வருவது நடைமுறை உண்மையாகும். எப்படி?

 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் இத்திட்டத்தின் பயனாளியாக தகுதி உடையவராவார். ஒரு குடும்பத்தில் எத்தனைநபர் வேண்டுமானாலும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். ஆனால் குடும்பத்திற்கு 100 நாட்கள் மட்டுமே வேலைக்கு உத்திரவாதம். பயனாளியின் தினக்கூலி அதிகபட்சம் ரூ.148 ஆகும். அதாவது 1.20 கனமீட்டர் மண்ணை வெட்டி எடுத்தால் மட்டுமே ரூ.148 கிடைக்கும். (ஒரு கனமீட்டர் என்பது 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 1 மீட்டர் ஆழம் கொண்டதாகும்.)

 இதன்படி ஒரு கிராமத்தில் 100பேர் இத்திட்டத்தில் வேலை செய்கிறார்கள் என்றால் அவரவர்களின் உழைப்பிற்கேற்ப கூலி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் பெரும்பாலான கிராமங்களில் அப்படி இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச அல்லது சராசரி கூலி என்பது ஒரு நபருக்கு ரூ.80 ஆகும்.

 ஊழல் எப்படி நடைபெறுகிறது என்பதை இக்கட்டுரையை நீங்கள் படித்து முடிக்கும்போது ஓரளவிற்குப் புரிந்துகொள்ள முடியும். அதிகபட்ச கூலி ரூபாய் 148 என்பது மக்களுக்குத் தெரிந்திருந் தாலும், அந்தக்கூலியை பெறும் அளவிற்கு மக்கள் உழைக்கத் தயாராக இல்லை. உண்மையான உழைப்பின்படி கூலியை நிர்ணயிக்க வேண்டுமானால் ரூ.60க்கும் குறைவாகவே கொடுக்க வேண்டிய சூழல் வரும். (சிவகங்கை, விருதுநகர், வேலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் ரூபாய் 10, 5 அளவிற்கே கூலி வழங்கப்பட்டு வருவதாக வழங்கப்பட்டு வருகின்றன). ஊராட்சிமன்றத் தலைவர் + பயனாளிகளின் கூட்டில் இத்திட்டத்தின் மூலம் பெரும் பணமோசடி நடந்து வருகின்றன. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தின் பயனாளிகளாக சேர்க்கப்படுவர் என்று மட்டும் உள்ளதால், இயலாதவர்களும், முடியாதவர்களும் கூட இத்திட்டத்தின்படி பயனாளிகள் ஆகிவிடுகின்றனர். எந்திரத்தின் உதவி இல்லாமல் முழுக்க முழுக்க மனித உழைப்பைச் செலுத்தியே பணிகள் நடைபெறுவதால் உடல் தகுதி முக்கிப் பங்காற்றுகிறது. ஆனால் 80 வயது தாத்தா, பாட்டிகள் கூட இத்திட்டத்தின் பயனாளிகளாக அடையாள அட்டைபெற்று ஊதியம் பெற்று வருகின்றனர்.

 ஏரி, குளம் தூர் வாருதல், நீர் வழித்தடங்களை புணரமைப்பு செய்தல், புதிய பண்ணைக் குட்டைகள் அமைத்தல், வனவளத்தைப் பெருக்கும் வகையில் மரக்கன்று நடுதல், கிராமப்புற பகுதிகளில் புதிய சாலைகள் அமைத்தல், பழைய சாலைகள் செப்பணிடுதல், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிஇன மக்களின் நிலங்களில் பாசன மேம்பாட்டுப் பணிகள் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் நடைபெற வேண்டும். ஆனால் இதில் எந்த வேலையும் உருப்படியாக தமிழகத்தின் எந்த மாவட்டத்திலும், எந்தப் பகுதியிலும் நடைபெறவில்லை. உண்மையாகவே பணிகள் ஓரளவு நடைபெற்றிருக்குமேயானால் பயனாளிகளின் கூலிகளில் ஏற்றத்தாழ்வு இருக்கும். ஆனால் அப்படி எதுவும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை தென்படவில்லை என்பதே, ஊழலில் திளைக்கும் திட்டமாக இது விளங்கி வருவதை காணமுடிகிறது.

 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் நிலங்கள் மற்றும் விவசாயம் மேம்பட அவர்களின் நிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றிருந்தாலும் நடைமுறையில் எங்கும் அந்த அதிசயம் நிகழவேயில்லை. தம்முடைய நிலங்களில் 100நாள் வேலைத்திட்டப் பணிகள் வருகிறது என்பது கூட தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கு தெரியாது. தெரிவிக்கப்படவுமில்லை. கிராமப்புறங்களில் 100நாள் வேலை என்றுகூட சொல்லமாட்டார்கள். பலரும் ‘ஏரி வேலை’ என்றே கூறுவார்கள். அந்தஅளவிற்கு இத்திட்டம் ஏரியுடன் மட்டுமே சுருங்கிவிட்டது. கிராமப்புற ஏரிக்கரைகளில் ஆண்களும், பெண்களும் காலையில் கூட்டம் கூட்டமாய் உட்கார்ந்திருப்பதே இதற்கு சாட்சியாகும்.

 இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு பல சலுகைகள் அறிவிக்கபபட்டிருந்தாலும் அதுபற்றி எதுவும் மக்களுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை. ஒரு பயனாளியின் வீட்டிலிருந்து 5 கி.மீ சுற்றளவிற்குள்ளாகவே அவருக்குப் பணி வழங்கப்பட வேண்டும் என்பது விதிமுறையாகும். அப்படி வழங்கமுடியாத பட்சத்தில் ஊராட்சி ஒன்றிய அளவில் வேலைத் தரப்படவேண்டும். இதனால் பயனாளியின் தினக்கூலியில் 10 விழுக்காடு கூடுதலாகத் தரப்பட வேண்டும். அதேபோல பணியின் போது தூய்மையான குடிநீர், ஓய்விடம், குழந்தைகள் பாதுகாப்பகம், முதலுதவிக்கான ஏற்பாடு, அவசரசிகிச்சைக்குத் தேவையான வசதிகள் அமைத்துத் தரப்பட வேண்டும். ஆனால் இதுபற்றி எதுவும் மக்களுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் உழைக்காமல் வரும் ஊதியம் மட்டுமே. சுயநலமுள்ள முட்டாள்களாக இருக்கும் இவர்களின் மனநிலையைத் தெரிந்து கொண்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் அகப்பட்டதைச் சுருட்டிக் கொள்ளும் அவசரத்தில் அடுத்தத் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

 தேர்தல் நேரத்தில், செத்தவர்களின் பெயர்களில் வாக்குப்பதிவு செய்வது பெரும் தில்லுமுல்லாகவும், திறமையாகவும் மதிக்கப்பட்டது. ஆனால் இன்று இத்திட்டத்தின் மூலம் நம் தலை சுற்றுமளவிற்கு திறமையாக ஊழல் நடக்கிறது.100 நாட்களுக்கு மேல் ஒரு குடும்பத்திற்கு வேலை தரக்கூடாது என்கிற விதிமுறைகளை தூக்கி எறிந்து விட்டு ஒரு நபருக்கே 100 நாட்களையும் கடந்து வேலை தருகிறார்கள். அதுமட்டுமல்ல செத்தவர்கள், வெளிநாட்டில் வேலை செய்பவர்கள், திருமணமாகி வெளியூருக்கு இடம் பெயர்ந்தவர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் பெயரிலும், போலியாக அடையாள அட்டை தயாரித்து, கையெழுத்தும், கைநாட்டும் பதிவு செய்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஊழலில் திளைத்து வருகின்றனர். மேற்படி ஊழலை விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டம், இராவுத்தநல்லூர் ஊராட்சியில் அதன் தலைவர் செய்தது கண்டுபிடிக்கப்பட்டும், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டவிதி 205ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படாமல் மாவட்ட நிர்வாகம் ஊழல் பேர்வழியை பாதுகாத்து வருகிறது. சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திலும் இதுபோன்ற ஊழல்கள் பரவலாகக் காணப்படுகின்றன.

 உள்ளாட்சித் துறையின் கீழ்வரும் இந்த 100 நாள் வேலைத் திட்டத்தின் தமிழக அளவிலான தலைமை அதிகாரி ஊரக வளர்ச்சி இயக்குநர் ஆவார். இவருக்குக் கீழே மாவட்ட ஆட்சியர்கள் வருகிறார்கள். ஊரக வளர்ச்சித் துறையின் பெருந்தலைவர்களாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் திகழ்கிறார்கள். அதற்கடுத்து திட்ட இயக்குநர், இவர்தான் மாவட்ட அளவிலான பணிகளை திட்டமிடுபவர். ஒருங்கிணைத்து, கண்காணித்து வழி நடத்துபவர். அடுத்தது வட்டார வளர்ச்சி அலுவலர். ஊராட்சி மன்றத்திற்கு காசோலை வழங்கும் அதிகாரம் கொண்டவர். கடைசியாக ஊராட்சி மன்றத் தலைவர்.

 ஊராட்சி அளவில் திட்டப்பணிகளை தேர்வு செய்பவராக ஊராட்சித் தலைவரும், பணி மேற்பார்வையாளராக ஊராட்சி செயலரும், தொழில் நுட்ப அங்கீகாரம் வழங்குபவராக ஊராட்சி ஒன்றியப் பொறியாளரும் உள்ளனர்.

 பயனாளிகளுக்கு வாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை கூலிகள் கொடுக்கப்பட வேண்டும். ஊராட்சியின் வங்கிக் கணக்கில் வட்டார வளர்ச்சி அலுவலர், ஒருபெரும் தொகையைச் செலுத்துவார். உதாரணமாக 10 லட்ச ரூபாயைச் செலுத்துகிறார் என்றால், அந்தவாரம் அல்லது 15 நாட்களில் அந்த ஊராட்சியில் எத்தனைப் பயனாளிகள் எவ்வளவு ரூபாய்க்கு பணிமுடித்திருக்கிறார்கள் என்று ஊராட்சியின் செயலாளர் வட்டார வளர்ச்சி அதிகாரிக்குத் தெரிவிக்க வேண்டும். இதன்பிறகு கூலித் தொகைக்கு உண்டான பணத்தை மட்டும், வங்கியிலிருந்து பெற்றுக்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் வங்கிக்கு பாஸ் ஆர்டர் வழங்குவார். (உதாரணத்திற்கு 10 லட்ச ரூபாயில் 2 லட்சம் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம் என்பதுதான் பாஸ் ஆர்டர் ஆகும்.)

 ஊராட்சி செயலாளர் காசோலையில் கையெழுத்திட்டு பணத்தைப் பெற்று ஊராட்சித் தலைவரிடம் வழங்குவார். பல ஊராட்சி மன்றத் தலைவர்கள் உடனடியாக மக்களிடம் கூலி வழங்காமல் தன் சொந்தத் தேவைகளுக்காக பணத்தை பயன்படுத்தி வருவதாலேயே கூலிகேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், முற்றுகை, சாலை மறியல் என்று களம் இறங்குவதை நாள்தோறும் ஊடகங்களில் காண்கிறோம்.

 பயனாளிகளின் தினசரி உழைப்பைக் கணக்கிட்டே ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள ஓவர்சீர்கள் என்று சொல்லப்படும் பணிமேற்பார்வை யாளர்கள் கிராமங்களுக்குச் சென்று பணி நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்டு உழைப்புக் கேற்ற ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். நடைமுறையில் இது சாத்தியமில்லாதது. காரணம் ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் 7 அல்லது 8 பணிமேற் பார்வையாளர்கள் உள்ளனர். அலுவலக வேலையுடன் கூடுதலாக 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஒரே நாளில் சென்று ஆய்வு செய்து கூலி நிர்ணயம் செய்வது சாத்தியமா?

 ஒருசில இடங்களில் பணியிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வுசெய்யும் பணிமேற் பார்வையாளர்கள் வேலைகள் எதுவும் நடக்காதது கண்டு கேள்வி எழுப்பினாலோ அல்லது கூலி குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கினாலே அவர்களை முற்றுகையிட்டு அவர்களுக்கு எதிராக ஒன்று திரளுகிறார்கள் பொதுமக்கள். இதன் பின்னணியில் ஊராட்சி மன்றத் தலைவரின் பங்களிப்பும் உள்ளது. இதனால் பயந்து பின்வாங்கும் பணிமேற் பார்வையாளர்கள் நடக்காத பணிக்கு எதற்கு கூலி நிர்ணயம் செய்தாய் என மேலதிகாரிகளின் மிரட்டலையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. (பல இடங்களில் பணிமேற்பார்வையாளர், கிராமத் தலைவர், பொதுமக்கள் என முக்கூட்டு ஊழலும் நடக்கிறது)

 கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தினால் இன்று கிராமப்புற பொருளாதாரம் நசிந்து மக்களை சோம்பேறிக் கூட்டமாக மாற்றியுள்ளது. பல்வேறு நெருக்கடிக்கிடையில் தாக்கு பிடித்து நடந்து கொண்டிருக்கும் இந்திய விவசாயத்தின் மீது இத்திட்டம் பெரும்இடியாக விழுந்துள்ளது.

 விவசாய பணிகள் நடைபெறாதக் காலக்கட்டங்களிலும், வறட்சிச் சூழலிலும் மராமத்துப் பணிக்கு ஏற்ற கோடைக்காலங்களிலும் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். ஆண்டுமுழுவதும் சராசரி 100 நாள் வேலை என்றால் எல்லாம் பாழாகிவிடுகிறது. உழைத்து உரமேறிப்போன மக்கள் சமூகம் உழைக்காமலேயே ஊதியம் பெறுவதை பெருமையாகக் கருதும் நிலைக்கு இன்றைய ஆட்சியாளர்கள் அவர்களை உருவாக்கிவிட்டார்கள்.

 பருவநிலைக் கோளாறு, பருவமழையில் வீழ்ச்சி, நிலத்தடி நீரின்மை, இடுபொருட்களின் விலைஉயர்வு, விளைபொருட்களுக்கு உரிய விலையின்மை போன்ற பல்வேறு சவால்களை எதிர்நோக்கி தட்டுத் தடுமாறி முட்டிமோதி நடைபெற்றுவரும் சிறு, குறு விவசாயத்திற்கு இன்று கூலிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் உண்மையான உழைப்பை செலுத்தத் தயாராக இல்லை. தமிழர்கள் இப்படி சோம்பேறிகளானதின் விளைவாக தமிழகத்தில் இன்று பீகார், அசாம், மேற்குவங்காளம் போன்ற வடமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகிவிட்டது.

 திட்டத்தின் நோக்கம் சரியான முறையில் அமைந்திருந்தால் தமிழ்நாட்டிலுள்ள 39202 ஏரிகள், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட குளங்கள் நீர்வழித் தடங்கள் புதுப்பிக்கப்பட்டு, செப்பணிப்பட்டு, மேம்படுத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் வருடத்திற்கு 400க்கும் மேற்பட்ட டிஎம்சி மழை நீரை சேமித்திருக்க முடியும். ஆனால் ஒருசில ஏரிகளே கூட இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளன. (வளர்ச்சித் திட்டம் என்கிற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளை 1968லிருந்து இன்று வரை தமிழக அரசு கபளீகரம் செய்துவிட்டது. ஆயிரக்கணக்கான ஏரிகள் தனியாரின் கோரப்பிடியில் சிக்கி மூச்சுத்திணறி வருவது தனிக்கதை).

90 விழுக்காடு நடுவண் அரசின் நிதிஉதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்து உரிய திருத்தம் கொண்டு வந்து இத்திட்டத்தின் மூலம் உண்மையாக வேளாண்மைக்கு முன்னுரிமைக் கொடுக்க வேண்டும்.

 கேரளாவில் 100 நாள் வேலைத்திட்டப் பயனாளிகளை, தனியார் விவசாய நிலங்களுக்கு அனுப்பி வேலை வழங்குவதன் மூலம் விவசாயம் அங்கு தடையின்றி நடைபெறுகிறது. கூலியில் நிலஉரிமையாளர்கள் பாதி பொறுப்பேற்றுக் கொள்வதன் மூலம் விவசாயிகளுக்கும், செலவு மிச்சப்படுகிறது. இதை தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் இதர மாநிலங்களில் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இத்திட்டத்தை முழுமையாக நிறுத்தி விடுவதே நாட்டிற்கு செய்யும் பெரும் நன்மையாகும்.

-    கா.தமிழ்வேங்கை, தலைவர், ஐந்திணைப் பாதுகாப்பு இயக்கம், விழுப்புரம். பேச : 94421 70011

Pin It