சிங்கள இனவெறி அரசு நடத்திய கொடூரமான இனப்படுகொலையில் சிக்கிச் சிதையுண்டு, சின்னா பின்னமாகி, குற்றுயிரோடும், குலையுயிரோடும் கிடந்து, எஞ்சிய தங்கள் வாழ்க்கையை நகர்த்தவே திண்டாடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்கள், போருக்குப் பிந்தைய சூழலில் தங்களுக்குள் எழுந்த “இலக்கியத் தாகத்தை” யாரேனும் தணிக்க முன்வரமாட்டார்களா என்று ஏங்கிக் கிடந்த நிலையில், அவர்களின் “தணியாத இலக்கியத் தாகத்தைத்” தணிப்பதற்காகவும், இன்றைய உலகம் போற்றும் “உன்னதமான சனநாயகவாதிகள்” ராஜபக்சே சகோதரர்களின் சாம்ராஜ்யம் தமிழ் ஈழப்பகுதியில் கருத்துச் சுதந்திரத்தை எவ்வாறெல்லாம் அனுமதித்து, போற்றிப் பாதுகாக்கிறது என்பதை உலகிற்குப் பறைசாற்றவும் ஜூலை மாதம் இறுதியில் யாழ்ப்பாணத்தில் “மிகச் சிறப்பாக” ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி, 41-வது இலக்கியச் சந்திப்பு. உலகின் பல பாகங்களிலிருந்தும் தமிழ் “இலக்கியவாதிகளும்”, “கலை உலக பிரம்மாக்களும்” “சுதந்திரமாக” கலந்து கொண்ட இச்சந்திப்பில் தனது அனுபவங்களை இந்து பத்திரிகை வாசகர்களுக்கு (11.08.2013, ஞாயிறு சிறப்பிதழ்) கட்டுரையாகப் படைத்துள்ளார், லீனா மணிமேகலை.

“குணப்படுத்துதல் தொடங்கட்டும்” (Let the healing begin) என்ற தனது கட்டுரை மூலம் போருக்குப் பிந்தைய சூழலிலும் தமிழ் இலக்கியம் புத்துயிர் பெற்றுவிடும் என்ற நம்பிக்கையை ஊட்டிய இந்த இலக்கியச் சந்திப்பு குறித்த பல தகவல்களை வழங்கி நம்மையெல்லாம் பிரமிக்க வைக்கிறார்! “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்று சொல்லி ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொடூரமாகக் கொன்று குவித்த மனித குலப் பகைவன் ராஜபக்சே மீது எந்தவித விமர்சனக் கணைகளையும் தொடுக்காமல், நடந்த இனப்படுகொலையை வெளியே கொண்டுவரத் தேவைப்படும் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை பற்றி எந்தக் கருத்தையும் முன்வைக்காமல், “இலக்கியச் சந்திப்பு” என்ற பெயரில் அட்டகாசமாக மொக்கை போடுவதை யார்தான் ரசிக்காமல் இருக்க முடியும்?

ஈழத் தமிழர் மீது அக்கறையும் ஆதங்கமும் கொண்டு யாழ்ப்பாணம் சென்று, இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்ட இலக்கியவாதிகளிடம் நாம் கேட்க வேண்டிய அடிப்படையான ஒருசில கேள்விகள்:

* போர் முடிவுற்று நான்கு ஆண்டுகள் ஆன பின்னரும் கூட சிங்கள இராணுவத்தின் பெரும்பாலான துருப்புகள் தமிழர்கள் வசிக்கின்ற பகுதிகளில் இன்னும் நிலை கொண்டுள்ளதே! தமிழரின் தாயக பூமியில் நடைபெற்று வரும் இந்த இராணுவ மயமாக்கலைத் தடுக்க வேண்டும் என்று உங்களது இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்ட எவராவது பதிவு செய்தீர்களா?

* சிங்கள இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டிலும், தீவிரக் கண்காணிப்பிலும் அங்கு வசிக்கும் ஒவ்வொரு தமிழனும் வாழ்கின்றான். அங்கு தமிழர்களுக்கான சுதந்திரமான நடமாட்டம் என்பதே கேள்விக்குறி. சிங்கள அரசுக்கு மாற்றாக எதிர்க் கருத்துக்களை வெளிப்படையாகச் சொன்னால் உயிரோடு அங்கு அவர்கள் உலவ முடியாது என்ற அச்ச உணர்விலே வசிக்கும் ஈழத் தமிழர்களின் வாழ்நிலை குறித்து யாராவது அச்சந்திப்பிலே கேள்வி எழுப்பினரா?

* வடக்கு, கிழக்கு பகுதிகளில் சிங்கள - பவுத்த மயமாக்கல் மிகத் தீவிரமாக நடந்து வரும் நிலையில், தமிழருக்குச் சொந்தமான காணிகளும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் சிங்கள இராணுவத்தால் வலிந்து பிடுங்கப்பட்டு, தமிழ் மக்கள் அவர்களது பூர்வீக இடங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப்படுகின்றனரே! அது குறித்து விவாதம் எழுந்ததா?

* சிங்கள இராணுவத்திற்கான நிரந்தர குடியிருப்புகள் இப்பகுதியில் கட்டப்பட்டு தமிழ் மக்கள் தங்களது சொந்த பூமியில் அந்நியமாகி வருகின்றனரே! இது குறித்து உங்கள் இலக்கியச் சந்திப்பில் சிறிய அளவிலாவது விவாதம் நடந்ததா?

* தமிழ் ஊர்ப் பெயர்கள் ஒவ்வொன்றாக சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டு, திட்டமிட்ட சிங்கள மயமாக்கலுக்கு ஒவ்வொரு நாளும் பலியாகி வருகின்றனரே! சிங்கள அரசே தமிழர் பகுதிகளில் புத்த கோவில்களைக் கட்டுவதும், புத்தர் சிலைகளை வைப்பதுமாக உள்ளது. இதைப் பற்றி ஏதாவது பேசினீர்களா?

* போர் நடைபெற்ற வன்னிப் பெரு நிலப்பரப்பில் தமிழ் மக்களின் வாழ்வாதாரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, விவசாயிகள் விவசாயமும், மீனவர்கள் மீன் பிடித்தொழிலும் செய்யமுடியாமல் விளிம்பு நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது குறித்தோ, பாதிக்கப்பட்ட எம் மக்களது வாழ்வாதாரங்கள் பற்றியோ ஏதேனும் ஒரு பதிவு உங்கள் இலக்கியச் சந்திப்பில் உண்டா?

* ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் சிங்கள இராணுவத்தால் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, தங்கள் வாழ்வை இழந்து, மனித மாண்பையும் இழந்து நடை பிணமாக இருக்கிறார்களே! நிர்க்கதியற்று வாயில்லாப் பூச்சிகளாக இருக்கும் அப்பெண்களின் சார்பில் சிங்கள இராணுவத்தின் கொடுஞ்செயல்களை கண்டித்து ஒரு வரி அறிக்கை கொடுக்க முடிந்ததா, உங்கள் இலக்கியச் சந்திப்பில்?

* இன்றைய யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் சிங்கள அரசு திட்டமிட்டு உருவாக்கி வரும் பண்பாட்டுச் சீரழிவைக் குறித்து கவலையோடு ஏதாவது கருத்துத் தெரிவிக்க முடிந்ததா?

* நடந்த இனப்படுகொலை குறித்து உங்களுக்கு அக்கறையோ, ஆதங்கமோ இருந்திருந்தால், 2009 - ஆம் ஆண்டு சனவரி முதல் மே மாதம் வரை கிளிநொச்சி - புதுக்குடியிருப்பு - முல்லைத் தீவு - முள்ளிவாய்க்கால் பகுதிகளில் சிங்கள இராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதல்களின் பதிவுகளைத் தொகுத்து, உலகின் மனசாட்சியை உலுக்கிய கலம் மேக்ரேவின் ஆவணப்படத்தை உங்கள் இலக்கிய சந்திப்பில் திரையிட்டு இருக்க வேண்டுமே!

* இசைப்பிரியா என்ற ஈழத்தமிழ் பெண் ஊடகவியலாளரை மிருகத்தனமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொடூரமாகக் கொலை செய்த சிங்கள மிருகங்களைக் கண்டித்து ஒருவரித் தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டுமே! இறந்த பெண் போராளிகளைப் புணர்ந்து, அவர்களின் உடல்களைக் கூட கடித்துக் குதறிய சிங்கள வெறியர்களை வன்மையாக கண்டித்திருக்க வேண்டுமே!

* பால்மணம் மாறாத பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனை பத்தடி தூரத்தில் நிறுத்தி வைத்து படுபாதகமாக கோழைத் தனமாகச் சுட்டதற்கு இலங்கை இராணுவம் பதில் சொல்ல வேண்டும் என்று உங்கள் இலக்கியச் சந்திப்பில் கேள்விக் கணைகளைத் தொடுத்திருக்க வேண்டுமே!

* “இறுதிக்கட்டப் போரின் போது ஏறக்குறைய 1,46,000 ஈழத்தமிழர்கள் காணாமல் போய்விட்டனர். இவ்வளவு எண்ணிக்கையில் காணாமல் போன எம் மக்களுக்கு பதில் சொல்!” என்று சிங்கள வெறியன் இராஜபக்சே அமைத்த “கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க குழுவின்” முன் சாட்சியளித்து, சர்வ தேசக் சமூகத்தின் இறுகிக் கிடக்கும் மனசாட்சியைத் தட்டி எழுப்பினாரே, மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு ராயப்பு. இரண்டாண்டுகளுக்கு முன் அவர் எழுப்பிய கேள்விக்கு என்ன பதில் என்று சிங்கள சேனையரைப் பார்த்து நீங்கள் கேட்டிருக்க வேண்டுமே!

* போரில் கொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தியதற்காக அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்களை சிங்கள இராணுவம் ஓட ஓட விரட்டியடித்ததை கண்டித்திருக்க வேண்டுமே!

* ‘உதயன்’ பத்திரிகை அலுவலகம் தொடர்ந்து சிங்கள இனவெறியர்களால் தாக்கப்படுவதும், தமிழ் பத்திரிக்கையாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்படுவதும் உங்களைப் பொறுத்த வரையில் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகத் தென்படவில்லையா?

* இனவெறி பிடித்த சிங்களச் சிப்பாய்கள் தமிழரைக் கொடுமைப்படுத்துவது போதாதென்று, சீனாவிலிருந்தும் கூலிப்பட்டாளத்தை இறக்கி, தமிழர் வசிக்கும் பகுதிகளில் நடமாட விட்டு, தமிழர்தம் தாயகப் பூமியில் அந்நிய ஆக்கிரமிப்பை நிலைநிறுத்திட அனைத்து கேவலங்களையும் அரங்கேற்றி வரும் இலங்கை இனவெறி அரசைக் கண்டித்து யாழ்ப்பாணத்து இலக்கியச் சந்திப்பில் ஒரு வாக்கியம் இடம் பெற்றிருக்குமா?

* ஈழத் தமிழினத்தை அழிக்கின்ற இதுபோன்ற எந்தப் பிரச்சனைகளையும் விவாதிக்காமல், இராசபக்சேவின் ஏற்பட்டால் நடைபெற்ற இந்த இலக்கியச் சந்திப்பில் நீங்கள் என்ன விவாதித்திருக்க முடியும்? “உளுந்த வடையில் ஓட்டை போட்டது யாரு” என்று வடிவேலு பாணியில், புதுக்குடியிருப்பில் புண்ணாக்கு வியாபாரம் செய்வது எப்படி? முல்லைத் தீவில் முறுக்குத் தின்பது எப்படி? என்பன போன்ற யார் மனதையும் புண்படுத்தாத விஷயங்களை மணிக்கணக்கில் மண்டை காயும்வரை விவாதிக்கலாம். இதுபோன்ற இலக்கியச் சந்திப்புகளுக்கு சிங்கள இராணுவத்தின் அனுமதியும், அரவணைப்பும் நிச்சயமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இன்றைய தமிழ் ஈழம் எதிர்கொள்ளும் மேலே குறிப்பிட்ட முக்கிய பிரச்சனைகளான வடக்கு - கிழக்குப் பகுதிகள் இராணுவ மயமாக்கல் - திட்டமிட்ட சிங்கள - பௌத்த மயமாக்கல் - ஈழத் தமிழரின் பூர்வீக நிலங்கள் சிங்கள இராணுவத்தால் அபகரிப்பு - தமிழர் தாயகப் பூமியில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் - ஈழத் தமிழரின் வாழ்வாதாரங்கள் முற்றிலும் பாதிப்பு - ஈழத் தமிழ்ப் பெண்களுக்கு பாதுகாப்பின்மை - போன்ற எரியும் பிரச்சனைகள் எதனையும் விவாதிக்காமல் - இனப்படுகொலைக்குத் தீர்வு - போர்க்குற்ற விசாரணை - சுதந்திரமான பொது வாக்கெடுப்பு பற்றியெல்லாம் ஒரு வார்த்தை கூட பேசாமல் இன்றைய சூழலில் யாழ்ப்பாணத்தில் ஒரு இலக்கியச் சந்திப்பு நடக்கிறது என்று சொன்னால், அதை யார் நடத்துவார்? எவனுடைய ஏற்பாட்டில் நடக்கும்? என்று அரசியல் அரிச்சுவடி தெரியாத ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் கூட எளிதில் புரிந்து கொள்வர்.

இந்து நாளேட்டில் லீனா மணிமேலை எழுதிய அனுபவப் பகிர்வு - கட்டுரையின் சாராம்சம் இதுவே: “விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள்; அவர்கள் கட்டுப்பாட்டில் தமிழிழீழப் பகுதிகள் இருந்தபோது கருத்துச் சுதந்திரம் என்பதே கிடையாது; போருக்குப் பிந்தைய சூழலில் ராஜபக்சே ஆட்சியில் சுதந்திரமாக இதுபோன்ற இலக்கியச் சந்திப்புகளை நடத்தி பல தலைப்புகளில் சிங்களவரும், ஈழத் தமிழரும் சேர்ந்து விவாதிக்க முடிகிறது”. இதைத்தான் சிங்களப் பேரினவாதிகள் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார்கள். இதையே இந்திய உளவுத்துறையும், இந்து ராம் போன்ற மார்க்சிஸ்டுகளும் பேசி வருகின்றனர். இதே கருத்தைத்தான் இவர்களைப் போன்ற முற்போக்கு இலக்கியவாதிகளும் விதைக்கின்றனர். ஈழப்பிரச்சனை என்று வரும்போது மேற்குறிப்பிட்டோர் அனைவரும் இந்த மையப்புள்ளியில் ஒன்றிணைவதை எளிதில் இனங்காணலாம்.

அவருடைய கட்டுரையில் மூன்று இடங்களில் விடுதலைப் புலிகளைப் பற்றி குறிப்பிடுகிறார். மூன்று இடங்களிலும் அவர்களை வன்முறையாளர்களாக, மாற்றுச் கருத்திற்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்க மறுத்தவர்களாக சித்தரிக்கிறார். விடுதலைப் புலிகளைக் குற்றம் சுமத்தும் போது மட்டும் அழுத்தந்திருத்தமாக, இருவேறு கருத்துக்களுக்கு இடமளிக்காமல் தனது கட்டுரையில் மிகத் தெளிவாகக் குறிப்பிடும் இவர், இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை அரசை எந்த இடத்திலும் நேரடியாகக் குற்றப்படுத்தவோ, விமர்சிக்கவோ இல்லை. இந்த ஒரு செய்தியே இவர் எந்தப் பக்கம் நின்று ஈழப் பிரச்சனையை அணுகுகிறார்? யார் சார்பாக இந்த இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்டிருப்பார் என்று எளிதில் நம்மை யூகிக்க வைக்கிறது. விடுதலைப் புலிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதல்ல நம் வாதம். தமிழினத்தையே பூண்டோடு கருவறுக்க வேண்டும் என்று வெறி கொண்டு தாக்குதல் தொடுக்கும் சிங்கள இனவெறி அரச பயங்கரவாதத்திற்கும், அரச ஒடுக்குமுறையை எதிர்த்து நின்று இன விடுதலைக்காகப் போராடுகின்ற போராளிகளுக்கும் அடிப்படையில் வேறுபாடுகள் உண்டு. இந்த அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ளாத அல்லது புரிந்து கொள்ள மறுக்கும் இலக்கியவாதிகளை நாம் எப்படி பார்ப்பது?

தனது கட்டுரையில் “ஒரு தோல்விக்குப் பின் கலையும், இலக்கியமும் ஏன் பின்னுக்குத் தள்ளப்பட வேண்டும்? பிரச்சனைகள் மற்றும் சமூக மாற்றங்களின் போது எழுத்தாளர்கள், கலைஞர்களின் பங்கு என்ன? மக்களது அடையாளங்கள் தனியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் அழிக்கப்படுகிற போது, இந்த மோதல்களை யார் வெளியே கொண்டு வருவது? பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களை இலக்கியப் படைப்புகள் குணப்படுத்த முடியுமா?” என்பன போன்ற “புரட்சிகரமான கேள்விகளை” எழுப்பி நம்மையெல்லாம் புல்லரிக்க வைக்கிறார், கட்டுரையாளர்.

இக்கேள்விகளுக்கு ஊடாக நாம் யோசிக்க வேண்டிய முக்கியமான அம்சம் என்னவெனில், இதுபோன்ற கேள்விகள் எல்லாமே பொதுமைப்படுத்தப்பட்ட கேள்விகள். எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இந்தக் கேள்விகளை யாரும் எழுப்பலாம். ஒரு தோல்வி என்பது எது? யாருடைய தோல்வி? பிரச்சனை அல்லது சமூக மாற்றம் என்று குறிப்பிடுகிறாரே, அது என்ன? “மக்களது அடையாளங்கள்” என்று கூறுகிறாரே? “பாதிக்கப்பட்ட மக்கள்” என்று பொதுமைப்படுத்துகிறாரே? அந்த மக்கள் யார்? கொடூரமான இனப்படுகொலை நடந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு இதுபோன்ற கேள்விகளை பொத்தாம் பொதுவாக எழுப்புவது, ஈழத் தமிழருக்கான மையப்பிரச்சனையை நீர்த்துப் போகச் செய்வதற்கான சூழ்ச்சியே!

அண்டார்டிக்காவிலும், அலாஸ்காவிலும் இந்தக் கேள்விக் கணைகளை எழுப்பலாம். சைபீரியாவிலும், சைனாவின் வடகிழக்கு மூலையிலும் இதுபோன்ற பொதுவான கேள்விகளை எழுப்பலாம். கோழிக்கோட்டிலும், கொல்கத்தாவிலும் இவற்றை எழுப்பலாம். யாரையும் பாதிக்காது, யார் மனதும் புண்படாது. ஆனால் நாம் இங்கே பார்க்க வேண்டியவை: இலக்கியச் சந்திப்பு நடைபெற்ற இடம்: யாழ்ப்பாணம் / தமிழ் ஈழம். நடந்த சூழல்: மிகப்பெரிய மனித பேரவலம் / இனப்படுகொலை நடைபெற்று முடிந்த காலம். அவமானப்பட்டதும், அழிந்து போனதும் தமிழினம். கொல்லப்பட்டதும், வெல்லப்பட்டதும் எமது இனம். நொறுக்கப்பட்டதும், நொறுங்கிப் போனதும் எமது ஆன்மா. சிதைக்கப்பட்டதும், சின்னாபின்னமாக்கப்பட்டதும் எமது இதயம். சுரண்டப்பட்டதும், சூறையாடப்பட்டதும் தமிழ் ஈழத் தேசம். இழந்ததும், இழிவுகளைச் சுமந்ததும் ஈழத் தமிழர்கள். வற்றாத வளங்களும், வாழ்வாதாரங்களும் சேதமாக்கப்பட்டதும், சிதறடிக்கப்பட்டதும் எமது மண்ணில். சிறைப்பிடிக்கப்பட்டதும், சித்திரவதைக்குள்ளானதும் எமது இளைஞர்களும், இளம் பெண்களும். நிம்மதியை இழந்தும், நிர்கதியற்று நடு வீதியில் நிற்பதும் எமது மக்கள்.

இவ்வளவு கொடுமையான மனித பேரவலத்தை நிகழ்த்தியது, சிங்களப் பேரினவாத அரசு - அதற்குத் துணை நின்றவை, இந்திய வல்லாதிக்கமும் – சீனா, அமெரிக்கா, ரஷ்ய, பாக்கிஸ்தானிய, ஈரானிய, இஸ்ரேலிய அரசுகளும். இவ்வளவு பெரிய இனப்படுகொலையை கைகெட்டி வேடிக்கை பார்த்து மவுனம் சாதித்தது, ஐ.நா. மன்றம். எனவே சுதந்திரமான பன்னாட்டு விசாரணை மூலம் நடந்த இனப்படுகொலையை வெளியே கொண்டுவந்து, இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவதும், இதற்கான தீர்வை நோக்கி நகர்வதுமே இன்றைய தேவை. இதையெல்லாம் மறைத்துவிட்டு இலக்கியச் சந்திப்பு என்ற பெயரில் தங்களது வசதிக்கு பொத்தாம் பொதுவாகப் பேசுவது, ஐ.நா. மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வந்த உப்புச் சப்பில்லாத தீர்மானம் போலவே அமையும். இவ்வாறு செய்வது படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களுக்கு செய்யப்படும் பச்சைத் துரோகம்!

ரொமானியாவில் பிறந்து, ஆஸ்விட்ச் நாஜி வதை முகாமில் சித்திரவதைக்குள்ளாகி, பின்னர் உயிர் பிழைத்த, உலகம் அறிந்த அரசியல் விமர்சகர், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் எலியி வீசல் (Elie Wiesel) ஒரு முறை குறிப்பிட்டார்: “மனிதர்கள் துன்புறுவதையும் அவமானப்படுவதையும் எங்கு, எப்போது எதிர் கொண்டாலும் ஒரு போதும் மவுனமாக இருக்கக் கூடாது என்று நான் உறுதி எடுத்துக் கொண்டேன். நடுநிலைமை என்பது ஒடுக்குபவனுக்கு உதவுகிறது; ஒருபோதும் ஒடுக்கப்பட்டவருக்கு அல்ல. மவுனம் எப்போதுமே கொடுமையாளர்களை ஊக்குவிக்கிறது. கொடுங்கோலர்களால் பாதிப்படுவோருக்கு அது எதிராகவே இருக்கும்.”

இந்திய அறிவு ஜீவிகளில் பலரும் விடுதலைப் புலிகளை விமர்சனம் புரிவதிலும், சாடுவதிலும் எதிர் நிலைப்பாடு எடுக்கின்றனர். ஆனால் சிங்கள பேரினவாதிகளைக் குறித்துப் பேசும்போது நடுநிலை வகிக்கின்றனர். இந்த இடத்தில் மேலே கூறிய எலியி வீசல் கூற்றை நினைவுபடுத்தினால், இந்த அறிவு ஜீவிகள் யார்பக்கம் நிற்கிறார்கள் என்பது தெட்டத் தெளிவாகும்.

நடந்து முடிந்த கொடூரமான இனப்படுகொலையில் 1,46,000 அப்பாவித் தமிழ் மக்களை அநியாயமாகப் பறிகொடுத்துவிட்டு நடுத்தெருவில் நிற்கிறது தமிழினம். “முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை என அங்கீகரி” என்று சர்வதேச சமூகத்தின் சட்டையைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கிறது, அதன் குரல். இனப்படுகொலைகளுக்குப் பலியான இந்தத் தமிழினத்திற்கு நீதியோ, நியாயமோ கிடைக்காமல், ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமாதானம், சம உரிமை, சம அந்தஸ்து, சகவாழ்வு என்றெல்லாம் பேசுவது எவ்வளவு அபத்தமானதும், அயோக்கியத்தனமானதும், திட்டமிட்ட மோசடியானதுமாகும்!

வடக்கு மாகாணத் தேர்தல் நடந்தால் எல்லாம் சரியாகிவிடும். 13 - வது சட்டதிருத்தமே இன்றைய ஈழப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு என்றெல்லாம் விளக்கெண்ணைய் ஊற்றி விடிய விடிய வியாக்கியானம் செய்கிறார்கள். இந்த மந்திரத்தையே காங்கிரசும், பாரதீய ஜனதாவும், மார்க்சிஸ்டுகளும் வாய்ப்பாடு போல ஒப்பிக்கின்றன. “டெசோ மாவீரர்களும்” இந்த அட்டைக் கத்தியை கையில் ஏந்தி மற்போர் புரிந்து கொண்டிருக்கின்றனர். இந்திய வல்லாதிக்கம் வரையறுத்துக் கொடுக்கும் வரைவைவும், வடிவத்தையும் கையில் வைத்துக் கொண்டு அவரவர் தளங்களில், அவரவர் திறமைக்கும், தகுதிக்கும், ஏற்றாற்போல் அதற்கேற்ற சொல்லங்காரங்களோடு விளக்கவுரை கொடுக்கிறார்கள்.

அதே வேளையில் இனப்படுகொலை, போர்க் குற்றங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும், வரவிருக்கும் பன்னாட்டு விசாரணையிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் தனது கைக்கு கிடைக்கும் கவசங்களையெல்லாம் தேடி எடுத்து, அவற்றை தன்னால் முடிந்த மட்டும் பயன்படுத்திட முயற்சித்து வருகிறது, சிங்கள இனவெறி அரசு.

இரத்தக் கறைபடிந்த சிங்களவெறி கொண்ட இராஜபக்சே சகோதரர்களும், தமிழினப் பகை கொண்ட இந்திய வல்லாதிக்க ஆரிய வம்சாவழி பூணூல் பிதாமகர்களும் இணைந்த கூட்டுத் தயாரிப்பில் உருவான ஈழத் தமிழர்களுக்கு எதிரான முழு நீளத் திரைப்படத்தின் முதல் பாகம் 2009 - மே மாதம் திரையிடப்பட்டு முடிந்தது. திகிலூட்டும் இப்படத் தயாரிப்பில் மறைமுகமாகப் பங்கெடுத்த ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூனும், அவரது உதவியாளரான விஜய் நம்பியாரும் அத்திரைப்படத்தை கைதட்டி ரசித்ததோடு, தயாரிப்பாளர்களுக்கு மறைமுகமாகப் பாராட்டுப் பத்திரமும் வாசித்தனர். திரைக்கதை வசனங்களை கனகச்சிதமாக எழுதி இயக்கியதாக இந்திய உளவுத்துறையும், சிங்கள இராணுவத் தலைமையகமும் தங்களுக்குள் பரஸ்பரம் பாராட்டு மழையைப் பொழிந்து கொண்டன. அதோடு ஈழத் தமிழரின் கதை முடிந்து விடும் என்று கனவு கண்ட இந்தக் கதாசிரியர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் படுபயங்கரமான அதிர்ச்சி காத்திருந்தது.

இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் என்ற பூதம் இப்போது ராஜபக்சே சகோதரர்களை மட்டுமல்ல, இந்திய ஆளும்வர்க்கத்தையும், ஐ.நா. பங்காளிகளையும் தூங்கவிடாமல் தொடர்ந்து விரட்டிக் கொண்டே இருக்கிறது. கலம் மேக்ரே எடுத்த ஆவணப் படங்களும், ஐ.நா. முன்னாள் பணியாளர் பெற்றி அறிக்கையும், பன்னாட்டு பொது மன்னிப்பு சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற அமைப்புகளின் அறிக்கைகளும் இவர்களின் தூக்கத்தைக் கலைத்துக் கொண்டே இருக்கின்றன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளையும் தன்கையில் வைத்திருக்கும் சாட்டையை இலங்கைக்கு எதிராகச் சுழற்றுவதை நிறுத்தவில்லை. “இனப்படுகொலை புரிந்த இலங்கையைப் புறக்கணிப்போம்” என்ற முழக்கங்களை புலம் பெயர்ந்த தமிழரும் பூமிப்பந்தின் பல பகுதிகளிலும் முழங்கத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் எழுந்த மாணவர் எழுச்சியும், தமிழகத்தின் கொந்தளிப்பான சூழலும் இலங்கைக்கு எதிரான பரப்புரையை மேலும் முன்னுக்கு நகர்த்திவிட்டன. இனப்படுகொலையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கெடுத்த கூட்டுக் கொலையாளிகளும், பக்கத்து வீட்டுப் பங்காளிகளும் இப்போது தங்கள் கைகளைப் பிசைந்து நிற்கின்றனர்.

வேறு வழியின்றி இனப்படுகொலையில் தங்களது பங்கை மறைப்பதற்காக அத்திரைப்படத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் ஒன்றைத் தயாரித்துத் திரையிடுவதற்கான சூழ்நிலைக்கு இவர்கள் அனைவரும் தள்ளப்பட்டிருப்பதைத்தான் இப்போது தமிழ் கூறும் நல்லுலகு பார்த்துக் கொண்டிருக்கிறது. தங்களைத் தற்காத்துக் கொள்ளத் துடிக்கும் இந்தக் கயவர்கள் தயாரித்துக் கொண்டிருக்கும் இரண்டாவது பாகத்திற்கேற்ற களங்களையும், பொருத்தமான கதாப்பாத்திரங்களையும் கடந்த நான்காண்டுகளாக வடிவமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழர்களைக் கொத்துக் குண்டுகள் போட்டு கொடூரமாகக் கொன்று குவித்த கொலை பாதகர்களுக்கு இதுபோன்ற களங்களை உருவாக்குவதும், கதாபாத்திரங்களை வடிவமைப்பதும், அதற்குப் பொருத்தமான, விசுவாசமான, “திறமை மிக்க கலை இலக்கியவாதிகளையும்” கண்டுபிடிப்பதுமா கடினமான வேலை? அதுவும் தமிழகத்தில் அதுபோன்ற கதாப்பாத்திரங்களுக்கும், கலைஞர்களுக்குமா பஞ்சம்? காலணா காசுக்கு கூட கால்கடுக்க நேரம் காலம் பார்க்காது நேர்த்தியாகக் களமாடும் கருணாக்கள் பரவிக் கிடைக்கும் இந்த தேசத்தில், விசுவாசமான கலைஞர்கள் - முற்போக்கு முடிமூடிகள் கிடைக்க மாட்டார்களா என்ன?

அதற்கான வேலைகளை சிங்களவன் எதிர்பார்க்கும் “இலக்கியத் தரத்தோடு” நேர்த்தியாகவும், விசுவாசமாகவும் செய்ய வேண்டிய “பொறுப்பும் கடமையுணர்வும் கொண்ட”, கைத்தடிகளும், கலைஞர்களும் சிங்கள அரசின் பட்டியலில் தயாராக உள்ளன. இந்த “வரலாற்றுக் கடமை” தங்கள் தோள்மீது போட்டுக் கொண்டு திறம்படப் பணியாற்றும் கலை இலக்கியவாதிகளுக்கு அவரவர் பங்களிப்புக்கு ஏற்ப தக்க சன்மானங்களை சிங்கள அரசும் வழங்காதா, என்ன? சிங்களச் சேவையைச் சிறப்பாக ஆற்றும் சிப்பந்திகளுக்குத்தான் சிங்களத் தலைநகரில் எவ்வளவு மரியாதை கிடைக்கும்!

இப்போது புரிகிறதா தோழர்களே, அந்த முழு நீளத் திகில் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் யார் யாருக்கு என்னென்ன பங்கு? என்னென்ன வேடம் என்று? அதில் இதுபோன்ற இலக்கியச் சந்திப்புகளுக்கு ஓர் இடம் நிச்சயம் இருந்திருக்கும்! இந்தத் திரைப்படத்தின் அடுத்தடுத்த கதைக்களங்களை இந்த தயாரிப்பாளர்களும், கதாசிரியர்களும் ஏற்கெனவே உருவாக்கி தயாராக வைத்துவிட்டனர். அவனது நிதியுதவியிலே 'மெட்ராஸ் கபே' என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு திரையரங்குகளில் திரையிடப்படுவதற்கான வேலைகள் அத்தனையும் முடிந்தாகிவிட்டது. இவ்வாறு ஒவ்வொரு களத்தையும் அவர்கள் தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். வடக்குப் பகுதிகளில் நடைபெறப் போகும் “சுதந்திரமான” தேர்தலுக்கான அறிவிப்பு, நாக்கு வழிக்கக் கூடப் பயன்படாத 13-வது சட்ட திருத்தமும், அதுகுறித்த மயிர் பிளக்கும் விவாதமும், இறுதியில் கொழும்புவில் நடைபெறப்போகும் உலகப் புகழ்பெற்ற காமன்வெல்த் மாநாடு. முடிசூடா மன்னனாக ராஜபக்சே சக்கரவர்த்தி காமன்வெல்த் நாடுகளின் கதாநாயகனாக வலம் வருவதற்கான தடபுடலான ஏற்பாடுகளை செய்ய வேண்டாமா! ராஜாதி ராஜா ராஜ குல மார்த்தாண்ட சிங்க நிகர் மன்னன் கையில் குத்தீட்டிகளோடும், கூர்வாள்களோடும் தமிழரின் எஞ்சிய இரத்தத்தை குடிக்க சிங்கள தேசத்தில் கொலைவெறியோடு பவனி வரும்போது இந்த சால்ராக்கள் அனைவரும் மகிந்தன் மகிழும் வண்ணம் என்னென்ன செய்யலாம் என்று இப்போதே ஒத்திகை பார்க்கின்றனர்.

“இராஜபக்சே ஒரு சிங்களப் பயங்கரவாதி, அவரது மனதை மாற்றவோ, அவரைத் திருத்தவோ முடியாது; தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளும் சூழலும் இல்லை; இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது” என்று சிங்கப்பூரை உருவாக்கிய சிற்பியும், சிங்கப்பூரின் முதல் பிரதமருமான லீ குவான் யு அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். சிங்களவனைப் பற்றி ஒரு சிங்கப்பூர் முன்னாள் பிரதமருக்கு புரிந்த அளவுக்குக் கூட இங்குள்ள ‘சிரிப்பு இலக்கிய வாதிகளுக்கு’ புலப்படவில்லை என்று சொன்னால் அது அவர்களது அரசியல் அறியாமையா? அல்லது அடிப்படை அயோக்கியத்தனமா? என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வர்.

எனவே, நடந்து முடிந்த இனப்படுகொலைக்குப் பொறுப்பானவர்கள் யார் என்றோ, அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்ததுவது குறித்தோ யாழ்ப்பாணம் இலக்கியச் சந்திப்பில் பேசியிருக்க முடியாது. அது போன்று கருத்தைக் கொண்டிருப்பவர் என்றால் நீங்கள் அந்தச் சந்திப்பிற்கு அழைக்கப்பட்டு இருக்கமாட்டீர்கள். அதையும் மீறி அங்கு இவை குறித்துப் பேசினீர்கள் என்றால், சிங்கள இராணுவத்தால் தமிழகத்திற்கு உயிரோடு நீங்கள் திரும்ப அனுப்பப்பட்டு இருக்க மாட்டீர்கள். இப்படிப்பட்ட சூழலில் “கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை” என்றெல்லாம் பிதற்றுவதும், பித்தலாட்டம் பண்ணுவதும் இங்கு இருப்போரின் காதில் பூ வைக்கிற வேலை. ராஜபக்சேவின் “ராஜதந்திரத்திற்கும்”, மக்களை மடையர்களாக்க முனையும் அவனது முயற்சிகளுக்கும் வேண்டுமானால் சான்றுகளாக அமையலாம்.

இந்தியா, அமெரிக்கா போன்ற சனநாயக நாடுகளிலே கூட “கருத்துச் சுதந்திரம்”, “பேச்சுரிமை” என்பதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று என்பதை மக்கள் இப்போதெல்லாம் நன்றாகப் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டனர். மிகத் தெளிவான சமீபத்திய இரண்டு சான்றுகள்: அமெரிக்காவின் உளவு நிறுவனங்கள் உலகின் பல நாடுகளிலும் உள்ள அமைச்சர்களையும், அரசு நிறுவனங்களையும் மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டின் குடிமக்களும் தங்களுக்குள்ளே பரிமாறிக்கொள்ளும் அனைத்துத் தகவல்களையும் கண்காணிப்பதோடு, தனது சொந்த நாட்டு குடிமக்கள் தமக்குள் மின்னஞ்சல்கள், செல்பேசிகள், ஸ்கைப் மூலம் பரிமாறிக் கொள்ளும் உரையாடல்கள் அனைத்தையும் முழுமையாக கண்காணித்து வருவதை எட்வர்டு ஸ்னோடென் என்ற மனசாட்சி உள்ள ஓர் அமெரிக்க இளைஞன் புட்டு புட்டு வைத்து விட்டான். உலகையே அதிரவைத்த இந்த கருத்துரிமைப் போராளியை ரஷ்யாவிலிருந்து தூக்கிச் செல்வதற்கும், அப்படியே தூக்கிலிடவும் அமெரிக்கா இப்போது துடியாய்த் துடித்துக் கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இந்திய சனநாயக நாட்டிலும் இந்த இலட்சணம் தான் என்பதை விளக்கவும், விவரிக்கவும் அதிகமாக மெனக்கெட வேண்டியதில்லை. அரசுகளை எதிர்த்து வீச்சோடு குரல் எழுப்பும் போதோ, அதிகமான எண்ணிக்கையில் மக்களை ஒருங்கிணைத்து தங்களது வாழ்வாதார உரிமைகளுக்காக சனநாயக ரீதியில் அறவழியில் போராடத் துணிகிற போதோ, இங்கே பேசுவதற்கு உரிமையும் இல்லை, கருத்துச் சொல்ல சுதந்திரமும் இல்லை. அதையும் மீறி போராடத் துணிந்தால் என்னென்ன கடுமையான பிரிவுகளில் எத்தனை எத்தனை வழக்குகள் பாயும்; எவ்வளவு கொடூரமான அரசின் அடக்குமுறைகளை எதிர் கொள்ள நேரும் என்பதை கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுக்கும் இடிந்தகரைப் போராளிகளைக் கேட்டால் தங்கள் அனைத்து அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வர், இங்கு கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை என்பதல்லாம் அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள வெற்று அலங்காரச் சொற்களே! சாதாரண சாமானிய மக்களை ஏமாற்ற “சனநாயக அரசுகள்” பயன்படுத்தும் வலிமையான ஆயுதமே!

Pin It