மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பத்திரிக்கை செய்தி

கடந்த 4.7.2013 தேதி தர்மபுரியில் மர்மமான முறையில் உயிரிழந்த நாய்க்கன் கொட்டாய் பகுதி இளஞர் இளவரசனின் மரணம் பெரும் அதிர்ச்சியினையும் பல்வேறு ஐயங்களையும் எழுப்பியுள்ளது.  இந்த மரணத்திற்கு உரிய நீதியும் நியாயமும் வழங்க அரசு எந்த விதத்திலும் முட்டுக்கட்டை போடக்கூடாது. அரசு முழு மனச்சுத்தியுடன் செயல்பட்டு இதற்கான சிறப்பு நிபுணர்கள் மற்றும் புலனாய்வு அதிகாரிகளை நியமித்து இந்த மரணத்திற்குக் கரணமானவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். அதற்குப் பதிலாக இளவரசனின் மரணத்தை காவல்துறை ஆரம்ப கட்ட புலனாய்விலேயே தற்கொலை என முடிவு செய்ததும், அந்த மரணத்திற்கு நியாயம் கேட்டுப் போராடுவோர் மீது  தாக்குதல் தடியடி நடத்துவதும்,  சனநாயகப் போராட்டமான ஆர்ப்பாட்டங்களுக்குக் கூட அனுமதி மறுப்பதும், மக்கள் கூடுவதை 144 குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தடை செய்வதும் ஏற்புடையதல்ல.

மேலும்  நீதிபதி சிங்காரவேலர் தலைமையில் நீதி விசாரணை ஆணையம்  அமைப்பது பிரச்சனையின் வீரியத்தை குறைப்பதற்கும், நீர்த்துப் போகச் செய்வதற்கு மட்டுமே உதவும். ஏனெனில் விசாரணை ஆணையங்களின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டிய எந்த சட்டப்பூர்வமான நிர்பந்தமும் அரசுக்குக் கிடையாது. மேலும் தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகளில் ஏற்கனவே போடப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகளின்  விசாரணை ஆணையங்கள் அப்பட்டமாக காவல்துறையின் நிலைப்பாட்டை எந்த தயக்கமுமின்றி நியாயப்படுத்தியுள்ளன.

மக்களின் அடிப்படை மனித உரிமை மற்றும் தனிமனித சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகள் சமூகத்தில் நடைமுறைப்படுத்துவதில் ஒரு பகுதிதான் விரும்பிய ஆணும் பெண்னும் திருமணம் செய்து குடும்பமாக மாறுவது; அந்த உரிமை சனநாயக உரிமை. உச்ச நீதிமன்றம் மேற்கண்ட உரிமையினை மனித உரிமை என உறுதியிட்டுள்ளது. ஆனால் அந்த உரிமைகளை மறுக்கின்ற வகையில் சாதிய வாதம் பேசி வன்முறைக்கு வித்திட்டு தீராத பகைமையினை மக்கள் மனங்களில் விதைக்கின்றவர்களின் செயல்பாடுகளை உறுதியாகத் தடுக்க அரசு தவறிவிட்டது.

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் காதலர்கள் மற்றும் காதல் திருமணம் புரிந்தோர் படுகொலைகள் சிறப்பு கவனம் செலுத்தப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றது. இது போன்ற வழக்குகள் நீதிமன்றங்களில் பெரும்பாலும் சாட்சியமற்று குற்றம்சாட்டப்பட்டோர் விடுவிக்கப்படுவது நடைமுறையாக உள்ளது. இந்த நிலை குற்றம்புரிவோர்க்கு சாதகமாக உள்ளது. இது தீராத அச்சத்தை சமூகத்தில் விதைத்துள்ளது.

சாதியம் உறுதிப்படவும், மேலும் காதல் மணம் புரிந்தோர்க்கு பாதுகாப்பற்ற சுழலுக்கும் வழிவகுக்கின்றது. இது பெரும் அடிப்படை மனித  உரிமை மீறலாகும். திருமணப் பிரச்சனைகளில் சம்மந்தப்பட்ட ஆண் பெண் தவிர்த்து ஊரார் தலையீடு செய்வதையும், கட்டப்பஞ்சாயத்து செய்வதையும், வன்செயல்களில் ஈடுபடுவதையும் தடுக்க மத்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்த திருமணம் தொடர்பன நிகழ்வுகளில் தலையிடுவதை தடுக்கும் சட்டம் The prohibition of unlawful assembly (interference with the freedom of matrimonial alliance ) bill 2011 சாதிய காப் பஞ்சாயத்துகளின் தலையீட்டால்  சட்டமாக வடிவம் பெறவில்லை.

சட்டம் ஒழுங்கு மாநில பட்டியல் சார்ந்தது என்பதாலும், தமிழகம் தொடர்ந்து இது போன்ற திருமணம் சார்ந்த பிரச்சனைகளில் வன்முறைகளை எதிர்நோக்கிக் கொண்டு உள்ளதாலும் இது போன்ற ஒரு சட்டத்தை உருவாக்கி சாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.  சாதியத்தின் தீண்டாமைப் பிடியில் பெரும்பாலான தமிழக கிராமங்கள் சிக்கியுள்ளன. இங்கு  தீண்டாமை ஒழிப்புக்கான தொலைநோக்குப் பார்வையுள்ள செயல்திட்டங்களை அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என மக்கள் சிவில் உரிமைக் கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
                                                                                                     
- ச.பாலமுருகன், மாநிலச் செயலர், மக்கள் சிவில் உரிமைக்கழகம், தமிழ்நாடு மற்றும் புதுவை

Pin It