பாரதிதாசன் பல்கலைக்கழத்தில் உள்ள ஆராய்ச்சி மாணவர்கள் தங்கியுள்ள பொருணை விடுதியில்  ஆங்கில இலக்கியத்தில் எம்.ஃபில் படிக்கும் ஆசைத்தம்பி என்ற மாணவரும் தங்கியுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 06 ஆம் நாள் தோழர் அம்பேத்கரின் நினைவுநாளில் ஆசைத்தம்பி விடுதியில் கதவில் அம்பேத்கரின் படத்தை ஒட்டியுள்ளார். அப்போது அதே விடுதியில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களான பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் இதைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். ஆனாலும் ஆசைத்தம்பி அம்பேத்கரின் படத்தை எடுக்கவில்லை.

 அதன்பிறகு சிலமாதங்கள் கழித்து கடந்த 09.05.13 அன்று  ஆசைத்தம்பி  பொருணை விடுதியிலேயே பல மாணவர்கள் முன்னிலையிலேயே கடுமையாகத் தாக்கப்பட்டார். தாக்கப்பட்ட ஆசைத்தம்பி அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். தாக்கியவர்களில் ஒரு வன்னியர், ஒரு நாடார், ஒரு முத்தரையர் இவர்களோடு ஒரு பறையரும் இருந்துள்ளார். அவரும் சேர்ந்தே ஆசைத்தம்பியைத் தாக்கியுள்ளார்.  இந்தத் தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி ஆசைத்தம்பி  காவல்நிலையத்துக்குச் சென்றார். ஆனால் தீண்டாமை வன்கொடுமை வழக்காகவோ, சாதராண அடிதடி வழக்காகவோகூட பதிவு செய்யப்படவில்லை. பல்கலைக்கழக நிர்வாகத்தால் சமரசம் செய்யப்பட்டு அப்போதைக்கு சிக்கல் தீர்க்கப்பட்டது. தாக்கிய மாணவர்கள் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டு தற்போது மீண்டும் பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டுவிட்டனர்.

 இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு பழிவாங்கவேண்டும் என்ற எண்ணத்தோடு மீண்டும் தற்போது ஆசைத்தம்பியை நோக்கி பொய்யான - ஆதாரமற்ற - அவசியமற்ற -சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுக்களைக்கூறி அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மற்ற மாணவர்களையும் தூண்டிவிட்டு வருகின்றனர்.

 துணைவேந்தருக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் ஆசைத்தம்பி தரப்பு நியாயங்கள் நன்கு புரியும். பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் புரிதல் அற்ற கோபமும் புரியும். ஒரு சில ஜாதி ஆதிக்கச்சிந்தனை கொண்ட மாணவர்களின் விருப்பத்திற்காக தேவையின்றி  ஆசைத்தம்பி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என தமிழ்நாடு மாணவர் கழகம் பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்கிறது.

 முக்கியமாக, பல்கலைக்கழகத்தின் அனைத்து விடுதிகளும் பல்கலைக்கழகத்தின் நேரடி நிர்வாகத்தின்கீழ் இயங்குகின்றன. ஆனால் அடிக்கடி மோதல் எழுகின்ற பொருணை விடுதி மட்டும் மாணவர்களின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. அனைத்து விடுதிகளையும் போல பொருணை விடுதியையும் பல்கலைக்கழகத்தின் நேரடிக்கட்டுப்பாட்டில் இயக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மாணவர்கள் கட்டுப்பாட்டிலேயே இயக்க வேண்டும் என்றால் அனைத்து சமுதாய மாணவர்களும் விடுதி நிர்வாகத்தில் பங்கேற்கும் வகையில் சுழற்சி முறையில் விடுதிநிர்வாகத்தை நடத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

Pin It