மக்கள் சிவில் உரிமைக் கழக துணைத் தலைவர் திரு. குறிஞ்சி சண்முக சுந்தரம் அவர்களின் ஈரோட்டில் உள்ள வீட்டிற்கு கடந்த 12.6.2013 தேதி சத்தியமங்கலம் காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவல்துறை துணைக் கண்கானிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் சென்று அவரின் அலுவலகம் மற்றும் நூலகங்களை சோதனையிட்டுள்ளனர்.

சத்தியமங்களம் மலையில் உள்ள தாளவாடியில் மேற்குத் தொடர்ச்சி மலை மக்கள் இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த திரு.மனுவேல், சத்தியமங்கலம் மலையில் புலிகள் காப்பகத்திற்கு எதிராக மக்களிடம் பீதியைப் பரப்புவதாக, அவர் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக அவரின் தொடர்பில் இருந்தவர்கள் என்ற அடிப்படையில் திரு குறிஞ்சி சண்முகசுந்தரம் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக காவல்த்துறை கூறியிருக்கின்றது. அவரிடமிருந்து புலிகள் காப்பகத்திற்கு எதிரான ஒரு துண்டறிக்கையை வாங்கிச் சென்றுள்ளனர். அதே போன்று மக்கள் சிவில் உரிமைக் கழக ஈரோடு மாவடக்ச் செயலாளர் பாலன், துணைத்தலைவர் வழக்குரைஞர் ந.இராதாகிருட்டிணன் ஆகியோர் உள்ளிட்ட சில சனநாயக ஆர்வலர்களின் வீடுகளுக்கும் சென்று காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

மக்கள் சிவில் உரிமைக் கழகத்திற்கு எந்த குறிப்பிட்ட அரசியல் சார்பும் இல்லை, கட்சி அரசியல் சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுப்பதும் இல்லை. அதே சமயம் சனநாயக பண்புகள், மனித உரிமைகள், அரசியலைமைப்பு வழங்கிய உரிமைகளைக் காக்க அது அறவழியில் தன் செயல்பாடுகளை கட்டமைத்துக் கொண்டுள்ளது. சனநாயக சமூகத்தில் அரசுக்கு எதிராக மாற்றுக்கருத்துக்களை அற வழியில் முன் வைப்பது ஓர் உரிமை (Right to dissent)என இவ் இயக்கம் கருதுகின்றது.

நமது சமூகத்தில் ஏழை மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் நாள்தோறும் அவர்களின் வாழ்வாதாரங்களிலிருந்து வளர்ச்சி மற்றும் பல்வேறு வகையில் விவரிக்கப்படும் காரணங்களின் மூலம் வெளியேற்றப்படுகின்றனர். இந்த வெளியேற்றம் நமது அரசியலைமைப்பு சட்டத்தின் நான்காவது அட்டவணையான மாநிலங்களின் வழிகாட்டுதல் கொள்கையின் (directive principals of state policy) கோட்பாடுகளுக்கு எதிராக உள்ளது.

சமீபத்தில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மேற்குத் தொடர்ச்சி மலையில் சுமார் 1,411.6 சதுர கிலோமீட்டர் பகுதியானது வன விலங்குகள் மற்றும் புலிகளின் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட சரணாலயம், வனவிலங்கு சட்டப்படியும், 2006 வன உரிமைச் சட்டத்தின் படியும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பின் பற்றப்படாமல் எதோச்சாதிகாரமான முறையில் உருவாக்கப்பட்டது. அடிப்படையில் வன விலங்குகளும் வனத்தில் வாழும் மக்களும் சேர்ந்து வாழும் சூழலை (co existence) உருவாக்குவதே சரணாலயத்தின் நோக்கம். இத் திட்டத்தின் அறிவிப்புக்கு முன் வனத்தில் உள்ள கிராம சபைகளின் ஒப்புதல் (consent)அவசியம். ஆனால் மலைப்பகுதியில் உள்ள 19 பஞ்சாயத்து கிராம சபைகள் தங்கள் பகுதியில் சரணாலயம் வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பகுதி மக்களின் ஒப்புதல் (consent) மற்றும் சட்ட விதிகள் எதையும் கடைப்பிடிக்காது உருவாக்கப்பட்ட வன சரணாலயம் சட்ட விரோதமானது. மலைப்பகுதியில் அற வழியில் குரல் கொடுக்கும் மக்கள் இயக்கங்களுடன் மக்கள் சிவில் உரிமைக் கழகமும் இணைந்து செயல்படுகின்றது.

இச் சூழலில் திரு. மனுவேல் அவர்களின் கைதினை ஒட்டி, பொது நிகழ்வில் பங்கெடுத்த எல்லா சனநாயக சக்திகளின் வீடுகளுக்கும் சென்றும் அல்லது தொலைபேசி வழியாகவும் விசாரணை மேற்கண்ட காவல்துறையின் செயல் ஒரு நேரிடையான அச்சுறுத்தல் நடவடிக்கை என மக்கள் சிவில் உரிமைக் கழகம் கருதுகின்றது. புலிகள் காப்பகம் எதிர்ப்பு என்பது ஒரு சனநாயக அரசியல் சார்ந்த கோரிக்கையாகும். அந்த கோரிக்கையில் ஒத்த கருத்துடைய ,மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் உறுப்பினராக இல்லாத, வேறுபட்ட அரசியல் கருத்துடைய பலரும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய அரசியல் பண்பாடு உள்ளது. அதே போல இந்திய தண்டனை சட்டத்தின் தேசவிரோத சட்டப் பிரிவுகளான 124 A தொடர்ந்து துர்பிரயாகம் செய்யப்படுவதையும் மக்கள் சிவில் உரிமைக்கழகம் எதிர்க்கின்றது.

மக்கள் சிவில் உரிமைக்கழக துணைத்தலைவரும், சனநாயக செயல்பாட்டாளருமான கண.குறிஞ்சியின் வீட்டில் சோதனை செய்த காவல்துறையின் நடவடிக்கை பொதுவெளியில் வேலை செய்பவர்களின் வீட்டில், தெருவில் பிரச்சனையை உருவாக்குவது, அதன் மூலம் அவர்களின் பொது செயல்பாடுகளை மட்டுப்படுத்துவது என்ற குறுகிய நோக்கம் கொண்டது. மேலும் இது அப்பட்டமான அச்சுறுத்தல் நடவடிக்கையாகும். காவல்துறையின் இந்த நடவடிக்கைகளை மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL)
வனமையாகக் கண்டிக்கின்றது.

- ச.பாலமுருகன், பொதுச்செயலர், மக்கள் சிவில் உரிமைக் கழகம், தமிழ்நாடு மற்றும் புதுவை

Pin It