நமது நாடு ஒரு நீண்ட விடுதலைப் போரினை நடத்தி விடுதலை என்ற பாதுகாப்பு உணர்வினை மக்கள் சமூகத்திற்கு வழங்கியுள்ளது. இந்த நெடிய போராட்டம் ஒரு குறிப்பிட்ட செழுமை மிக்க சமூகத்தால் நடத்தப்பட்டதல்ல. அதில் வனப்பகுதியில் பழங்குடி மக்கள் துவங்கி,  நகர்ப் பகுதியில் ஏழை எளிய மக்களின் நீண்ட, நெடிய பங்களிப்பு இருந்து வந்துள்ளது.

நமது நாட்டின் அரசிலமைப்புச் சட்டம் அடிப்படை உரிமைகளை மக்களுக்கு வழங்கியுள்ளதாக நம்பப்பட்டாலும், உண்மையில் அரசியலமைப்புச் சட்டம் நாட்டு குடிமக்களுக்கு அடிப்படை உரிமை உள்ளது என அங்கீகரித்தே உள்ளது; அது வழங்கவிலை. மக்களின் கண்ணியம், உரிமை, சமத்துவம், சகோதரத்துவம் என்ற அடிப்படை உரிமைக் கோட்பாடுகளை, அதன் பலனை மக்கள் வரலாறு தோறும் நடத்தி வந்த நெடிய போராட்டங்களின் மூலம் பெற்றார்கள் என்பதே உண்மை. எனவே அரசியலமைப்பு சட்டம் அதனை அங்கீகரிக்க மட்டுமே செய்கின்றது.

அடிப்படை விடுதலை உணர்வு என்பது அச்சத்திலிருந்து விடுதலை அடைந்திருப்பதே ஆகும். ஒரு சனநாயக சமூகத்தில் அதன் குடிமக்கள் தனது இருப்பு குறித்தும், வாழும் உரிமை குறித்தும் அச்சம் கொள்ளும் நிலை உருவாகும் போது விடுதலையின் அனைத்து விழுமியங்களும் கேள்விக்குள்ளாகி விடுகின்றது. இந்த சமூகத்தின் ஒர் அங்கம் தான் இல்லை என ஒரு பகுதி மக்கள் அந்நியப்படும் நிலை உருவாகும்போது அது வெறும் சட்டம் சார்ந்த பிரச்சனை அல்லது பகுதி சார்ந்த பிரச்சனை என ஒதுக்கப்பட முடியாது. அது நமது அரசியல் அமைப்பின் மீது எழுப்பப்படும் கேள்விகளாக உருவாகின்றது. சாதி, இனம், மதம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், ஆண்டான், அடிமைகள் என்ற வேறுபாடுகளைக் கடந்து மக்கள் சமூகத்தின் முன் வைக்கப்பட்ட "இந்திய மக்களாகிய நாம்" என்ற முழக்கம் அதன் உயிர்ப்பை இழந்து விடுகின்றது. நான் அந்த மக்கள் சமூகத்தின் ஓர் அங்கமிலையா? என்ற உணர்வு சார்ந்த அடிப்படைக் கேள்வி அன்றாட வாழ்வில் நாம் அலட்சியப்படுத்தும் எண்ண‌ற்ற கேள்விகளில் ஒன்றா?

விடுதலைக்குப் பின் நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் ஐந்து கோடிக்கும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அடிப்படை உரிமைகள், மனித கண்ணியம், சனநாயக் கூறுகள் என பல்வேறு நாட்டு விடுதலை ஏற்படுத்திய நம்பிக்கைகள் இம் மக்களை பாதுகாக்கவில்லை. சனநாயகத் தூண்கள் இம் மக்களின் பாரங்களைத் தாங்கவில்லை. நாள்தோறும் வாழ்வாதாரங்களிலிருந்து சட்டத்தின் மூலம், தீர்ப்புகள் வழி, காவல் படைகள் மூலம் சமூகத்தின் ஓர் இடத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த விரட்டல்களும், அது ஏற்படுத்திய அவநம்பிக்கைகளும் விரிந்து கொண்டே வருகின்றன‌. நம்பிக்கைகளை இழந்த நாடோடிகளாக விரட்டப்படும் இம் மக்கள் பெரும்பாலோனோர் பழங்குடி மக்கள் உள்ளிட்ட ஏழை மக்கள். வரலாற்றின் நெடுங்காலம் சுயமரியதையுடன், தங்களுக்கென ஒர் உயர்ந்த பண்பாட்டை நிறுவி வாழ்ந்த இம் மக்கள் இன்று இடைவிடாத அச்ச உணர்வில் தள்ளப்பட்டுள்ளனர்.

வரலாற்றின் துவக்க காலத்தில் பழங்குடி சமூகம் தனது சுய ஆட்சியினை வனத்தில் நடத்தியது. வேளான் சமூகம் தனது நிலையினை விரிவுபடுத்தும் சமயம் பழங்குடி சமூகம் அதன் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடியது. கோவை பகுதியில் உள்ள அண்ணன்மார்சாமி கதைகள், தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் கொடுமணல், கோவை மாவட்டம் ஆனைமலைகளில் காணப்படும் பாண்டவர் குழிகள் பழங்குடி சமூகத்தின் மிச்சங்கள். இவையன்றி மேற்குத்தொடர்ச்சி மலைகளின் பல பகுதிகளில் வனப்பகுதியில் காணப்படும் வீரக் கற்கள், நடு கற்கள் பழங்குடி அரசாட்சிக்கான சான்றுகளாக உள்ளன‌. ஆங்கிலேயர் நமது நாட்டை காலனியாக மாற்றிய பின் பசுமை மிக்க வனங்களை தங்களின் சுரண்டலுக்கு பெரும் லாபம் தரும் பகுதியாக கண்டனர்.

ஆங்கிலேய அரசின் காலனியாதிக்க மன‌ப்பான்மைக்கு எதிராக வனப்பகுதிகளில் பெரும் போராட்டங்கள் எழுந்தன‌. ஆங்கிலேய அரசாங்கம் தனிச் சொத்துரிமை என்ற கருத்தாக்கத்தை விரிவாக்கும் முகமாக ஜமீன்தாரி முறையினை உருவாக்கியது. பழங்குடி மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன. காலனியாதிக்க ஜமீன்தாரிகளால் பதிப்படைந்த பழங்குடி மக்கள் 1794 ல் அந்த சுரண்டலுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்தனர். சந்தால் பழங்குடிகளின் அப் போராட்டம் பழங்குடிகளின் பாரம்பரிய நில உரிமையை பாதுகாக்க எழுந்தது. அதன் தொடர்ச்சியாக பல போராட்டங்கள் வெள்ளையருக்கு எதிராக பழங்குடியினர் நிகழ்த்தினர். இப் போராட்டங்கள் பழங்குடி மக்களின் நில உரிமை என்ற சுய மரியாதை உணர்வின் உந்து சக்தியில் எழுந்தது.*

பழங்குடி பகுதிகளில் தங்களின் அதிகாரத்தை கட்டமைக்க வேண்டி 1894 ஆண்டு வனக்கொள்கை உருவாக்கப்பட்டது. இந்த வனக்கொள்கை முழுக்க வனத்தின் இயற்கை செல்வங்களை சுரண்டும் நோக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. வனத்தில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படவில்லை. 1894 கொண்டு வரப்பட்ட நில ஆர்ஜித சட்டம் "பொது பயன்பாடுக்கு" என்று அறிவித்து மக்களின் நிலங்களை கையகப்படுத்தும் அதிகாரத்தை அரசாங்கத்தின் கைகளுக்கு கொடுத்தது. அதே சமயம் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஆங்கிலேய காலணி ஆதிக்க நாடுகளில் பழங்குடி மக்களின் நிலங்களை யாருக்கும் உரிமையில்லா தரிசு நிலங்கள் என முடிவு செய்து அரசாங்கம் கைப்பற்றிக் கொள்ளும் நடைமுறை தொடர்ந்தது. இதன் தொடர்ச்சியாக இந்தியவின் முதல் வனச்சட்டம் 1927 ஆண்டு உருவாக்கப்பட்டது. பழங்குடிகள் பூர்வ குடிகள் என்ற உயரிய நிலைக்கு பதிலாக வனத்திற்குள் அவர்கள் அந்நியர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். பழங்குடி மக்கள் வனத்துடனிருந்த ஆன்மீக உறவை கைவிட நிர்பந்திக்கப்பட்டனர்.

நாகா பழங்குடிகள் உள்ளிட்ட வலுவான பழங்குடிகள் ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்காக அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம் என பல மாநில மக்களாக சிதற‌டிக்கக்கப்பட்டனர். 1874 செட்டியூல் மாவட்டச் சட்டம், 1919 இந்திய அரசாங்கச் சட்டம், 1935 இந்திய அரசாங்க சட்டத்தின் படி பழங்குடி மக்கள் வாழும் பகுதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகத்தின் கீழ் வராது என அறிவிக்கப்பட்டது. இதனால் பழங்குடி மக்கள் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தின் ஆட்சியில் பங்கு பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதுவே விடுதலைக்குப் பின் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் வடகிழக்கு மாநிலம் தவிர்த்த பகுதியில் சிறப்பு அங்கீகாரம் வழங்கும் ஐந்தாவது அட்டவணை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஆறாவது அட்டவணை என சிறப்பு பழங்குடி கவுன்சில்கள் உருவாக்க அரசிலமைப்பு சட்டத்தில் புதிய பிரிவுகள் சேர்க்க வழி வகுத்தது.

ஆங்கிலேய ஆட்சியின் சுரண்டல்கள் விடுதலைக்குப் பின்னும் அப்படியே பின்பற்றப்பட்டது. பழங்குடி மக்களின் கண்ணியம் கேள்விக்குள்ளாகப்பட்டது. வனத்தின் ஆக்கிரமிப்பாளர்களாக தொடர்ந்து சுதந்திர நாட்டில் பழங்குடிகள் வனத்துறையினரால் அடையாளப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து காப்புக்காடுகள் (rserve forest) என்ற பெயரில் பழங்குடிகளின் நிலங்கள் வனத்துறையினரால் கையகப்படுத்தப்பட்டது. 1961 முதல் 1981 வரை 4.1 கோடி ஹெக்டேர் என்றிருந்த வனத்துறையின் காப்புக்காடுகள் பின் 6.7 கோடி ஹெக்டேர் ஆக விரிவாக்கப்பட்டது. இந்திய வன சர்வே கருத்துப்படி 4.2 கோடி நிலம் வனம் சாரா நடவடிக்கைக்கு வழங்கப்பட்டது. குறிப்பாக 1.6 கோடி நிலம் சாலைகள், தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.(2)

சமூக நிர்பந்தங்கள் மற்றும் போராட்டங்கள் வழியாக பழங்குடி மக்களின் கண்ணியமிக்க வாழ்க்கை அவர்களின் வாழும் உரிமையுடன் தொடர்புடையது மற்றும் அது அடிப்படை உரிமை என்ற புரிதல் நிறுவப்பட்டது. இதன் தொடச்சியாக 1988 தேசிய வனக் கொள்கை அறிவிக்கப்பட்டது. அது வனத்திலுள்ள மக்களுக்கும் வனத்துக்குமுள்ள ஆன்மீக உறவை அங்கீகரித்தது. 1991 திருத்தப்பட்ட வன உயிர் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கமானது

பழங்குடிகளின் உரிமையை அங்கீகரிக்கக் கூடியதாகவும் மேலும் வனத்தில் வாழும் பழங்குடி உள்ளிட்ட மக்களின் உரிமைகள் அவர்களுக்கு அளிக்கப்படாமல் வன சரணாலயம் அமைப்பதில்லை என்றும், பழங்குடிகளும் வன விலங்குகளும் இணைந்து வாழும் நிலையை உருவாக்குவது எனவும் கூறியது. எனினும் வனத்துறையினரால் மக்கள் வெளியேற்றப்படுவது தொடர்ந்தது. அதன் பின் பல்வேறு சனநாயகப் போராட்டங்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக புதிதாக ஆட்சியமைத்த ஐக்கிய மக்கள் முன்னணி( UPA 1) அரசு தனது குறைந்தபட்ச செயல்திட்டத்தில் பழங்குடி மக்கள் வனத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலை கைவிடப்படுவதாக அறிவித்தது. மேலும் 21.7.2004ம் தேதி உச்ச நீதி மன்றத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில் "பன்னெடுங்காலமாக பழங்குடி மக்களுக்கு அரசு வரலாற்று அநீதியை செய்திருப்பதாக" ஒப்புக்கொண்டு அதை நீக்க உரிய வழிவகை கையாளப் போவதாக கூறியது. 2006 ஆண்டு இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வன உரிமைச் சட்டம் பழங்குடி மக்களின் வாழ்வாதார உரிமையை அங்கீகரித்தது. பழங்குடி மக்களின் சம்மதமின்றி வனத்தில் புதிய சரணாலயங்கள் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட மாட்டாது என தெளிவுபடுத்தியது.

இதன் பின் சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனங்கள் மற்றும் வனத்துறை அதிகார வர்க்கம் இடைவிடாது, நேரிடையாகவும் மறைமுகமாகவும் எடுத்த முயற்சியினால் வற்புறுத்தல்களால் புதிய புலிகள் சரணாலயங்கள் தமிழகத்தில் நிறுவ தமிழக அரசின் வனத்துறை முடிவு செய்து அத் திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலையும் பெற்றது. அதன் படி ஆனைமலை, முதுமலை, களக்காடு முண்டந்துறை ஆகிய பகுதிகளில் சரணாலயம் உருவாக்கப்பட்டது. இது போக சமீபத்தில் புதிதாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலை, மேகமலை புலிகள் சரணாலயம் ஆகியவற்றை என அரசு அறிவித்தது. அரசின் இத் திட்டத்திற்கு எதிராக முன்னமே சத்தியமங்கலம் மலைப்பகுதிகளில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளும் தீர்மான‌ம் நிறைவேற்றின‌. இந்த எதிர்ப்பு அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. சட்டத்தின் படி வனப்பகுதியில் புலிகள் சரணாலயம் அமைப்பதற்கு முன் தங்களின் ஒப்புதல் பெற்றாக வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

இது ஒரு புறமிருக்க கடந்த 24.6.2012 அன்று உச்ச நீதிமன்றம், புலிகள் பாதுகாப்பு ஆணையம் தாக்கல் செய்த வழக்கில் புலிகள் வனப்பகுதியில் சுற்றுலாவை தடை செய்தது. மேலும் வனத்தில் புலிகள் சரணாலயப்பகுதிகளில் மையப்பகுதியைச் சுற்றியுள்ள சுற்றுப்பகுதியான buffer zone என்ற பகுதியினை அமைக்காத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் 3 வார காலத்துக்குள் அமைக்க வேண்டும் என்றும் இல்லாவிடில் ரூ 50000 அபராதம் என உத்திரவிட்டது.

இந்த வனத்தாங்கு தளப்பகுதியை உருவாக்குவதற்கு முன் அப்பகுதி மக்களின் ஒப்புதல், கிராம சபை மற்றும் அறிவியல் பூர்வமான ஆய்வு அவசியம். மூன்று வார காலம் அதற்குப் போதாது என அரசு கேட்பதற்கு பதில் அவசர அவசரமாக வனத்தின் புலிகள் சரணாலயப் பகுதிகளைச் சுற்றி இந்த பகுதிகளை மூன்று இடங்களில் அறிவித்து விட்டது. இந்த சுற்றுப்பகுதியான (buffer zone) பகுதியில் எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என இன்று வரை அரசு எந்த சட்ட வரையறையும் விதிக்கவில்லை. முழுக்க வனத்துறை அதிகார வர்க்கம் தன்னிச்சையாக எடுக்கும் முடிவுக்கு மக்கள் கட்டுப்பட வேண்டும்.

1) ஆனைமலை புலிகள் சரணாலயத்தின் வடக்கு, கிழக்கு எல்லைகள் மற்றும் மன்னவனூர், பூம்பாறை, பழனி மலை, கொடைக்கானல் மலையில் சில வருவாய் பட்டா பகுதி சேர்த்து மொத்தம் 521 சதுர கிலோ மீட்டர் பகுதியும் தாங்கு தளப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புலிகள் சரணாலயப் பகுதி என அறிவிக்கப்பட்ட 958 சதுர கிலோ மீட்டருடன் சேர்ந்து மொத்தம் 1479 சதுர கிலோ மீட்டர் பொள்ளாட்சி வனக்காப்பாளர் கட்டுப்பாட்டில் வந்து விட்டது.

2) முதுமலை வனப்பகுதியில் தென் மற்றும் கிழக்கு பகுதி, நீலகிரி வடக்கு, கூடலூர் பகுதி(சிங்காரா,செங்கூர் பகுதி), நீலகிரி தென் பகுதியான தெங்குமராட்டா பகுதி என 367 சதுர கிலோ மீட்டர் பகுதி வனத் தாங்குதள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புலிகள் சரணாலயம் 321 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்த தாங்குதளப்பகுதியுடன் சேர்த்து 688 சதுர கிமீ வனக்காப்பாளரின் கட்டுபாட்டில் வந்துவிட்டது.

3) களக்காடு முண்டந்துறை பகுதியில் கன்னியாகுமரி வனவிலங்கு பூங்கா பகுதி குற்றாலம் பகுதிகள் சேர்ந்து 706 சதுர கிமீ பகுதி தாங்கு தளப்பகுதியாக அறிவித்துள்ளது. ஏற்கனவே புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பகுதி 895 சதுர கிமீ. ஆக மொத்தம் 1601 சதுர கிமீ பகுதி வனத்துறையின் முழு கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.

தமிழகத்தில் மொத்தம் 5177.817 சதுர கிலோமீட்டர் நிலம் புலிகள் சரணாலயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பகுதிகளில் பல பஞ்சாயத்துகள் வருகின்றது. இப் பஞ்சாயத்துக்களில் அரசு எந்த கருத்துக் கேட்பும் நடத்தவில்லை. மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்குக் கூட வனத்துறை எஜமானர்களின் தயவுக்காக இனி எதிர்நோக்க வேண்டும். ஆனால் மக்கள் மற்றும் கிராம சபை ஒப்புதல், அறிஞர்களின் அறிவியல் பூர்வ ஆய்வு என பல செய்து இப் பகுதிகளை வன சுற்றுப்பகுதியாக அறிவித்ததாக அரசு அறிவித்து விட்டது. உண்மையில் சத்தியமங்கல‌த்தின் மலையிலிருக்கும் எல்லா பஞ்சாயத்துகளும் புலிகள் சரணாலயத்திற்கு எதிராக தங்களின் பஞ்சாயத்து சபைகளில் தீர்மான‌ம் நிறைவேற்றி இருந்தனர். மக்களின் ஒப்புதலின்றி உருவாக்கப்படும் வனவிலங்கு காப்பகங்கள் சட்டவிரோதமானவை.

பழங்குடி மக்கள் நாள்தோறும் பல்வேறு நேரான மற்றும் மறைமுகமான தாக்குதலுக்கு உள்ளகி வருகின்றனர். அவர்களின் மண், பண்பாடு அதன் தனித்தன்மை குறித்து எந்த சிறு முக்கியத்துவமும் உலகமயமாக்கல், நவீன தாராளமயமாக்கல் சூழலில் ஆட்சியாளர்கள் தர தயாராக இல்லை. பழங்குடி மக்களின் பகுதிகளுக்கென ஏற்கனவே நமது அரசியலமைப்பு சட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது பிரிவுகளில் உள்ள பாதுகாப்புகள், வன உரிமைச்சட்டம் 2006 மற்றும் பஞ்சாயத்து ராஜ் பட்டியல் பகுதி விரிவாக்கச் சட்டம் ஆகியவற்றில் உள்ள கூறுகளின் மையமான கருத்தான பழங்குடி பகுதியில் நடைபெறும் சுரங்கம் உள்ளிட்ட எந்த வளர்ச்சிப் பணியும் அம் மக்களின் ஒப்புதலோடு மட்டுமே நடைமெற வேண்டும் என்ற பிரிவு பன்னாட்டு மற்றும் இந்திய பெரு முதலாளிகளுக்கு வளங்களை கபளீகரம் செய்யும் சுதந்திரத்தினை தடுப்பதாக உள்ளதால் சுரண்டல்வாதிகள், முதலாளிகளுக்குத் தடையாக உள்ள அப்பிரிவுகளை நீக்க ஒரு பெரும்பணி (lobby) அதிகார மற்றும் ஆட்சியாளர்கள் மத்தியில் நடந்து முடிந்து விட்டது.

2013 பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின் Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Resettlement and Rehabilitation Bill என்ற சட்டம் நிறைவேறப் போகின்றது. போதிய இழப்பீடு என ஒன்றைக் கொடுத்து நிலத்திலிருந்து, அவர்களின் ஜீவாதார வாழ்வியல் உரிமைகளிலிருந்து அவர்களை அப்புறப்படுத்த எல்லா அதிகாரமும் அரசின் கைகளுக்கு வரப்போகின்றது. வாழ்வியல் உரிமை என்ற அடிப்படை மனித உரிமையினை காரணம் காட்டி இயற்கை வளங்களிருந்து மக்கள் வெளியேற மறுப்பதை, பணம் என்ற அளவீட்டைக் காட்டி அம் மக்களை விரட்டுவதே இச் சட்டத்தின் விளைவாக இருக்கப் போகின்றது. நவீன தாராளம‌யக் கொள்கையின் முக்கிய நோக்கமான எல்லாவற்றிக்கும் சந்தையினை (market structure)பாதிக்காதவகையில் பணத்தின் வடிவில் தீர்வு காண்பது என்ற வன்முறை, சட்டமாக மாறுகின்றது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மக்கள் குறிப்பாக பழங்குடி மக்கள்.

பழங்குடி மக்கள் ஒரு புறம் அரசு சார்ந்த அமைப்புகளின் தாக்குதலை எதிர் கொள்ளும் சூழலில் மற்றொரு புறம் வன சுற்றுச்சூழல்வாதிகள் மற்றும் வன விலங்கு ஆர்வலர்கள் என தங்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் கடும் தாக்குதலையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. வனம் என்பது முழுக்க விலங்குகளும், மரம் செடிகளும் இருக்கும் இடம் என்ற மேற்குலகு மற்றும் அமெரிக்கவின் வனச்சட்டத்தைப் பொருத்து வனம் வெறும் விலங்குகள் வாழும் இடம் மட்டுமே என்று (The US Wilderness Act (1964) defines wilderness as: “an area where the earth and its community of life are untrammeled by man, where man himself is a visitor who does not remain.” ) அமெரிக்கா சார்ந்த மக்களுக்கு எதிரான கருத்தாக்கங்களை இந்த கானுயிர் ஆர்வலர்கள் பேசுகின்றனர்.

அமெரிக்காவின் வனச்சட்டம் காரணமாக உலகம் முழுதும் ஏராளமான நிலங்கள் பூர்வகுடிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன‌. 1900 ஆண்டிலிருந்து 1950 வரை 600 வன விலங்கு பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. தற்போது உலகின் 12% நிலம் இந்த சூழல்வாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலப்பரப்பு ஆப்பிரிக்காவை விடப் பெரியது. இப் பகுதிகளிலிருந்து சுமார் 2 கோடி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்; இவர்கள் பெருபகுதியினர் பழங்குடி மக்கள், பூர்வ குடிகள். இம் மக்களை சூழல் அகதிகள்(conserve refugees) என அழைக்கின்றனர். பூர்வ குடிகள் வனத்தின் பிரிக்கப்பட முடியாத சக்திகள் என்பதையும் வனத்திற்கும் பழங்குடிகளுக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது என்பதையும் இச் சூழல் வாதிகள் மதிப்பதில்லை.

கானுயிர் பிரச்சாரத்திற்காக உலகின் பல்வேறு பெரும் செல்வம் படைத்த பன்னாட்டு நிறுவனங்களின் ஆதரவில் கானுயிர் பிரச்சாரம் செய்யும் தொண்டு நிறுவனங்களான உலக வன விலங்கு நிதியம் (World Wide Fund for Nature (WWF) ,international Union for the Conservation of Nature (IUCN), The Nature Conservancy (TNC), Conservation International (CI), , African Wildlife Foundation (AWF) and Wildlife Conservation Society (WCS) அதன் நிதியின் மூலம் இக் கருத்தாக்கத்தினை கானுயிர் தொண்டு நிருவனங்கள் மூலம் பிரச்சாரம் செய்கின்றன. அரசின் அதிகார மையம், வனத்துறை என இதன் செல்வாக்கும் கருத்து ஊடுருவல்களும் சட்டத்தின் பெயரிலும், அதிகார நடவடிக்கை வழியும் பழங்குடி மக்களை சூழல் அகதிகளாக மற்ற முயலுகிறது. இக் கருத்தாக்கம் மற்றும் நடவடிக்கைகள் பழங்குடி மக்களின் கண்ணியம் மற்றும் மனித உரிமைக்கு எதிரானது.

நாட்டில் எல்லா பழங்குடி மக்களும் ஏதேனும் ஒரு வகையில் இந்த அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர். இம் மக்கள் வாழும் 70% பகுதி வனமாகவும் 90% பகுதியில் கனிம வளம் மிக்கதாகவும் உள்ளது. இவர்களின் கலாச்சாரம் மொழி அனைத்தும் தனித்தன்மை வாய்ந்தது. ஆனால் நாள் தோறும் உயிர் வாழ கடுமையாக போராட வேண்டிய நிலையிலேயே இம் மக்கள் உள்ளனர். வளர்ச்சி என்ற பெயரில், திட்டங்கள் என்ற பெயரில் சுரங்கங்களுக்காக, பன்னாட்டு நிறுவனங்களுக்காக நாள்தோறும் இம் மக்களுக்கு சொந்த நாட்டில் அகதியம் பரிசளிக்கப்படுகிறது. மண்ணை விட்டு விரட்டப்படும் மனிதனுடன் கலாச்சாரத்தின் வேர்களும் பிடுங்கப்படுகின்றது. ஆயிரமாயிரம் ஆண்டுகால பழங்குடி மொழியும் நாள்தோறும் அதனைப் பேசி மறைந்த மனிதனின் புதை குழியில் சமாதி செய்யப்படுகின்றது. நமது சமூகம் வலியதே வெல்லும் (survival of fitness ) என்ற கொள்கையைக் கடைபிடிக்கின்றது. பழங்குடி மக்கள் தோல்வி கண்டவர்கள். தோல்வியடைந்த கோவனின் வாரிசுகள். அவர்களும் அருகி வரும் ஓர் உயிரின‌ம் (Endanger species) என்பதை உலகு அறியத் தயாராக இல்லை. பழங்குடி மக்கள் நமது ஆள்பவர்களிடம் எதிர்பார்த்து நிற்பது சலுகையல்ல, உரிமைகள். அவர்கள் கண்ணியத்தோடும் மனித உரிமைகளோடும் வாழ உரிமையுள்ளவர்கள். அதை அங்கீகரிக்கும் சமூகமே தன்னைத்தானே சனநாயக சமூகமாக உயிர்ப்பித்துக் கொள்கிறது.

உதவிய நூல்கள்:

1. PUCL Bulletin, February 2003
The Adivasis of India - A History of Discrimination, Conflict, and Resistance

-- By C.R. Bijoy,

2. Endangered symbiosis evictions and india's forest communities, campaign for survival and dignity

3.Conserve refugees - Mark Dowie

நன்றி: புலிகள் காப்பக எதிர்ப்பு கூட்டியக்க வெளியீடு

- ச.பாலமுருகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It