அணுஉலைக்கு ஆதரவான 247 பக்கங்களைக் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு திரு. கே.எஸ்.இராதாகிருஷ்ணன் மற்றும் நீதிபதி தீபக் மிஸ்ரா என்ற இரண்டு நீதிபதிகளால் 2013ஆம் ஆண்டு மே திங்கள் ஆறாம் நாள் வழங்கப்பட்டது.

தீர்ப்பின் முதல் நூறு பக்கங்கள் இந்திய அணுசக்தித் துறைகளின் அனைத்து அமைப்புகளின் நோக்கம், பணிகள், செயல்பாடுகள், சட்டதிட்டங்கள், ஒழுங்குமுறைகள், இந்தியாவில் உள்ள பல்வேறு அணுசக்தி சட்டங்கள், உலக அணுசக்தி அமைப்புகள், அவற்றின் செயல்பாடுகள், இந்தியா மற்ற நாடுகளோடு செய்து கொண்ட அணு ஒப்பந்தங்களின் விரிவான செய்திகள் என்று பல செய்திகளை அணுசக்தித் துறையினரே எழுதிக் கொடுத்தது போல விவரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விவரிப்பதன் மூலம் அணுப்புகழ் பாடி அணுசக்தியின் தேவையை நீதிபதிகள் அடிக்கோடிட்டு காட்டுகிறார்கள்.

koodankulam_636

இரண்டு நீதிபதிகளும் அவ்வாறு சொல்லிவிட்டு, இந்த இரண்டு நீதிபதிகளால் இந்திய அரசின் அணுசக்திக் கொள்கையை மாற்ற முடியாது, அணுசக்திக் கொள்கையை மாற்ற வேண்டுமென்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் அரசின் கொள்கைகளை மாற்றமுடியும் என்று தங்கள் கையாலாகாததனத்தை வெளிபடுத்தி இருக்கிறார்கள். ஆகவே மக்கள் மன்றம் மூலம் நிர்பந்தம் கொடுத்து பாராளுமன்ற நடவடிக்கைகள் மூலமாக அணுசக்திக் கொள்கையை மாற்றிக் கொள்ளலாம் என்று தீர்ப்பின் முதல் பக்கங்களிலே எடுத்துச் சொல்லி விடுகிறார்கள்.

பிரச்சனை குறித்த பார்வையிலே போலியாக முரண்படுவதாகத் தெரியும் நீதிபதிகள்– நாட்டின் நிலைத்த, நீடித்த வளர்ச்சிக்கு அணுசக்திதான் தீர்வு என்றும், இந்தியாவின் மின்சாரப் பசியை அணுமின்சக்தி தான் தீர்க்க முடியும் என்று அறுதியிட்டு சொல்கிறார்கள்.

.நீதிபதி கே.எஸ்.இராதாகிருஷ்ணன், நாட்டின் வளர்ச்சிக்காக சிறிய குழுவினர் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை, அது நாட்டின் பரந்துபட்ட பல மக்களின் தேவைக்கு, நன்மைக்கு பயன்படுகிறது என்றால் அதற்காக அணுஉலைகளை ஆதரிக்கத்தான் வேண்டும் என்று கருதுகிறார்.

ஆனால் நீதிபதி தீபக் மிஸ்ராவோ, வளர்ச்சிக்காக, பாதிக்கப்படும் மக்களின் (அவர்கள் சிறு குழுவாக இருந்தாலும்) பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று சிந்திக்கிறார்.

இன்று உலகத்தில் பல நாடுகள் ஆபத்தான, தீய அணுசக்தியை கைவிட்டு, மாற்று எரிசக்தி திட்டங்களுக்கு பாதை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில் நமது நாடு மட்டும் மீண்டும் உலக நாடுகள் ஒதுக்கித் தள்ளும் இந்த ஆபத்தான தொழில் நுட்பத்தை, அரவணைத்துக் கொள்வது கண்டிக்கத்தக்கது. கண்காணிப்பு, ஒழுங்குபடுத்தும் அமைப்புகளான இந்திய, தமிழக அரசுகளுக்கு, அணுசக்தித்துறை நிறுவனங்களுக்கு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் 15 கட்டளைகளை வழங்கி இருக்கிறார்கள். இதில் நமக்கு என்ன வருத்தம் எனில், குறைந்தபட்சம் இந்த 15 கட்டளைகளுக்கு, அவற்றை நிறைவேற்றும் காலக்கெடுக்கள் எதுவும் விதிக்காமல், பொறுப்பற்ற வகையிலே, பொத்தாம் பொதுவாக நிபந்தனைகள் கொடுத்திருப்பது தான். 

நிலைத்த, நீடித்த வளர்ச்சித்திட்டமா? 

நிலைத்த, நீடித்த வளர்ச்சிக்கு அணுமின்சாரம் தான் தீர்வு என்று தீர்ப்பின் தொடக்கத்திலே சொல்லியிருக்கிறார்கள் நீதிபதிகள். அணுமின்சாரம் இவர்கள் நினைப்பது போல தூய்மையானதும் அல்ல, மலிவானதும் அல்ல. அதிலே மறைக்கப்பட்ட, கணக்கில் வராத செலவீனங்கள் நிறைய உண்டு. அணு உலையில் வெளியாகும் வாயுக்களினால், அவைகள் இயங்குவதால், பருவநிலை மாற்றத்திலும் பாதிப்பு உண்டு. அணுஉலையின் திரவக்கழிவுகளினால் நீர்நிலைகள் மாசடைவது மட்டுமல்ல, அவைகள் கதிரியக்கத்தன்மை கொண்டதாக முற்றிலும் மாறிவிடும். இதனால் (Eco-SystemService) இயற்கை நமக்கு காலங்காலமாக வழங்கி வரும் அந்தப் பலன்கள், பல இலட்சக் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அந்த இயற்கையின் வரவு நமக்கு கிடைக்காமல் போய்விடும். அது மட்டுமல்லாது, அணு உலைகளினால் கதிரியக்க பாதிப்பு அடைந்த அந்த இயற்கையின் பலன்களை நாம் அனுபவிக்கும் போது, அது நமது உடல்நிலையை மிகவும் பாதிக்கிறது. அதற்கு நாம் செலவழிக்க வேண்டிய தொகை பெரிது. அது மட்டுமல்லாது, கதிரியக்க பாதிப்பின் காரணமாக, அணுஉலைகள் அருகே பல கிலோமீட்டர் தூரத்திற்கு மக்கள் வாழமுடியாமல் இடம் பெயர்ந்து செல்ல வேண்டிய சூழ்நிலை வரும். இதற்கான விலையே அதிகம். அணுஉலை தொழிற்நுட்பம் மிக அதிக செலவானது. அதைவிட அதன் கழிவுகளை சுமப்பது மிகவும் கொடூரமானது. அதைப் பாதுகாக்க ஆகும் செலவு, இந்தியா என்கிற ஏழை நாட்டையே, ஊழல் நிறைந்த நாட்டையே திவாலாக்கிவிடும்.

செர்நோபில் அணுஉலை விபத்திற்குப் பிறகு ஒருங்கிணைந்த ரஷ்யா, அதற்குப்பின் சிதறுண்டு பிரிந்தது போல இந்தியாவிலும் அப்படிபட்ட ஒரு நிலை வரும். ஆனால், என்னவோ, இந்திய அரசு எல்லா அணுஉலைகளையும் தமிழகத்திலே தான் கட்டுகிறது, கழிவுகளையும் தமிழ்நாட்டிலேதான் புதைக்க நினைக்கிறது. அப்படியே தமிழினத்தை முதலிலே கருவறுக்க நினைக்கிறது. இவைகளுக்கெல்லாம் விலை என்ன? இந்த சேதார மதிப்புகளை எல்லாம் கணக்கில் எடுத்தால், அணுஉலை மின்சாரம் மலிவானதா அல்லது அணுமின்சாரம் நிலைத்த, நீடித்த வளர்ச்சிக்கான திட்டமா என்பது விளங்கி விடும்.

பிணம் தின்னும் கழுகுகளுக்கு வாழ்வு கொடுக்கும் திட்டம்

 இந்த பதினைந்து கட்டளைகளில் பதின்மூன்று (13) கட்டளைகள் தான் நமக்கு ஏற்புடையவை. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமுகநல பொறுப்புத் திட்டங்களை பாதிக்கப்படும் மக்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்லி இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. அணு உலை இயங்கினாலே கதிர்வீச்சு பாதிப்புக்கு உள்ளாகும் மக்களுக்கு சமுகநல வளர்ச்சித் திட்டங்கள் எதற்கு? சாகப் போகிறவனுக்கு, கடைசியாக விருந்து போட்டு அவனைக் கொல்லப் போவது போல இருக்கிறது. கதிர்வீச்சு காற்றிலும், கடலிலும், நீரிலும், உணவிலும், உடலிலும் கலந்த பிறகு, மக்கள் கதிர்வீச்சுக்குப் பயந்து, தங்களின் வாழ்விடங்களை விட்டுவிட்டு அகதியாக செல்லவேண்டிய சூழலில் இவர்களுக்கு எதற்கு வளர்ச்சித் திட்டங்கள்? எல்லோருக்கும் ஒரு திருவோடு பரிசாகக் கொடுக்க பரிந்துரைத்திருக்கலாம்.

இந்த மண்ணின் மக்கள், தாங்கள் வாழ்ந்த மண்ணில் இருந்து வேரோடு பிடுங்கி எறியப்படுகின்ற சூழல் உருவாகி விடும். கடலில் கதிர்வீச்சு கலக்கும் போது, தாங்கள் பிடித்து வரும் மீன்களை அவர்களே சாப்பிட முடியாத நிலை வரும்போது, அந்த மீன்களை உள்நாட்டில் விற்கவோ, வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யவோ முடியாது. ஏற்கெனவே, கடல்மணல் சுரண்டும் ஆலைகளால், அவற்றின் கழிவுகளால், கடல் மீன்கள் நச்சாக்கப்பட்டுவிட்டன. அணுஉலை இயங்கினால் சொல்லவா வேண்டும்? திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை வாங்குவதற்கு இந்த நாட்டில் எவரும் இருக்க மாட்டார்கள். ஆகவே சுடுகாடாகப் போகும் இந்த மண்ணிற்கு இந்த ஐநூறு கோடி ரூபாய் வளர்ச்சித் திட்டத்தைக் கொட்டி, சில பிணம் தின்னும் கழுகுகளுக்கு மீண்டும் வாழ்வு கொடுத்து, அதிலும் அவர்களின் சுரண்டலுக்கு வழிவகுக்கும் திட்டங்கள் எங்களுக்கு எதற்கு? அந்தத் திட்டங்களை எங்கள் மக்கள் முழுமையாக நிராகரிக்கிறார்கள்.

மக்களின் பாதுகாப்பில் சமரசம்!

மக்களின் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம் என்று சொல்கிற நீதிபதிகள், அணுஉலையில் பேரிடர் ஏதாவது நிகழ்ந்தால் தங்களை எவ்வாறு காப்பாற்றிக் கொள்வது என்று கூடத் தெரியாமல் திண்டாடப் போகும் நிலையில், இந்த அணுஉலையைச் சுற்றி பதினாறு கிலோமீட்டர் பகுதியில் வாழும் மக்களுக்கு, குறைந்தபட்சம் கூடங்குளம் அணுஉலை செயல்படத் தொடங்கும் முன்னராவது, ஒட்டுமொத்தமாக 16 அல்லது 30 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒரே நேரத்தில் ஒருமுறை கூட ஒரு செயல்முறைப் பயிற்சி கொடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தாமல், வெறும் பரிந்துரை மட்டுமே வைப்பது வேடிக்கையாக உள்ளது. போராடும் மக்களுக்கு, இதைக்கூட செய்ய மறுப்பது, இந்த நாட்டின் நீதிமன்றங்கள் இந்த நாட்டு மக்களின் பாதுகாப்பு குறித்து எவ்வளவு அக்கறை கொள்கின்றன என்பது நன்கு புலப்படும். அணு உலையினால் ஆபத்து வரும்போது தங்களை காப்பற்றிக் கொள்ளக்கூட மக்களுக்கு சொல்லித்தாராத அரசு, அதை மறுக்கும் மாவட்ட நிர்வாகங்கள், தப்பித்துக் கொள்ளும் வழியையாவது மக்களுக்கு சொல்லிக்கொடு என்று ஒரு காலக்கெடுவிற்குள் வற்புறுத்தாத, ஆணையிடாத நீதிமன்றங்கள் இருந்து என்ன பயன்?

கடந்த வாரத்தில் வெளியான தமிழகத்தின் பேரிடர் தயாரிப்பு நிலை, குறிப்பாக ஆழிப்பேரிடர் போன்ற பேரிடர்கள் தயாரிப்பு நிலை குறித்து மத்திய தணிக்கை குழு வெளியிட்ட அறிக்கை நம்மை அதிக கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் பேரிடர்கள் நடந்தால் அவற்றை எதிர்கொள்ளும் சூழலில் இல்லை. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் அவலநிலையை மிகவும் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. ஏற்கெனவே, பேரிடர் பாதுகாப்பு மையங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் அரசின் வேறு பல துறைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அங்கே போதுமான பணியாளர்கள் இல்லை, அதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுவதில்லை. மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகமோ அல்லது மாவட்ட பேரிடர் மேலாண்மை நிர்வாகமோ இதுவரை ஒரு கூட்டம் கூட நடத்தியதில்லை என்ற பகிரங்கமான குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறைப்பதற்காக, செயலலிதா அரசு உலகவங்கி நிதி உதிவியோடு ரூபாய் 1,481 கோடி மதிப்பீட்டில் கடலோர பேரிடர் இன்னல் குறைப்புத்திட்டதை விதி 110இன் கீழ் அவசர அவசரமாக சட்டசபையில் அறிவித்து, உடனே மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுப்பது போல அறிவிப்பு நாடகம் செய்தது.

ஒவ்வொரு ஆண்டும் திருநெல்வேலி இராமயன்பட்டி மற்றும் திருச்சி அரியமங்கலம் போன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொட்டப்பட்டு, எரிக்கப்படும் நகர மற்றும் மாநகரக் கழிவுகளை பராமரிக்க, அங்கு பற்றி எரியும் தீயை அணைக்க, அதனை பல நாட்கள் ஆனாலும் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர, அவற்றை மேலாண்மை செய்ய, அதனால் மக்களுக்கு ஏற்படும் உடல் நோய்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்த அரசாங்கத்தால் இன்னும் முடியாத அவல நிலை தான் இங்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நம் நாட்டில் எந்தப் பேரிடர் வந்தாலும் மக்களை காப்பாற்ற எந்த அரசு இயந்திரமும், அமைப்புகளும், அதற்கான முன் தயாரிப்பும் இங்கே எங்கேயும் பார்க்க முடியாது. மக்களைப் பற்றி கவலைப்பட எவரும் இல்லை. பேரிடருக்குப் பின் முதலைக் கண்ணீர் வடிக்கும், இழவு வீட்டிலும் ஆதாயம் தேடும் சக்திகள் தான் இங்கு அதிகம். பேரிடர் நேரத்தில் 16 கிலோமீட்டர் பகுதியில் வாழும் மக்களை அப்புறப்படுத்துவதற்கான திட்டம், அதற்கான பயிற்சிகள், அதற்கான வழிமுறைகள் திட்டம் குறித்து திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்களிடம் தகவல் கேட்டால், அவர்கள் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் விதமாக, நீங்கள் அணுமின்கழகத்திடம் கேளுங்கள், அவர்கள் பதில் தருவார்கள் என்று சொல்கிறார்கள். அவர்களோ, நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் அதற்கான திட்டத்தை கொடுத்து விட்டோம் என்று தமிழக அரசின் மீது பழி போடுகிறார்கள். மக்களைக் காப்பாற்றக் கூட சிந்தனை இல்லாத அரசுகள்; பொறுப்பற்ற அதிகாரிகள்.

சட்டங்களை மதிக்காத அணுசக்தித் துறை

இந்த கூடங்குளம் அணுஉலைகள் நிறுவ ஒப்பந்தம் போடப்பட்டு ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டது. பல்வேறு அரசியல் காரணங்களால் இந்தத் திட்டம் தொடங்குவதற்கு வெகுகால தாமதமாகி விட்டது. அதன்பிறகு, இந்த இடத்தின் புவியியல், சூழலியல், நீரியல், நிலவியல், கடலியல் என பல தன்மைகள் இன்று மாறிப்போய்விட்டன. நாட்டில் பல சட்டங்கள் காலச்சூழலுக்கு ஏற்ப இயற்றப் பட்டுள்ளன. ஆனால், கூடங்குளம் அணுஉலைகள் இந்த மண்ணில் இன்று நடைமுறையில் இருக்கும் எந்தச் சட்டத்தையும் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை; அவற்றின்படி நடக்கவேண்டிய நிர்பந்தம் அவைகளுக்கு,அவர்களுக்கு இல்லை என அவர்களாகவே ஒரு முடிவு எடுத்து விடுகின்றனர். சட்டங்கள் இவர்களுக்காக திருத்தப்படுகின்றன; தளர்த்தப்படுகின்றன. சட்டத்தில் இவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகின்றன. காலாவதியான சட்டங்களின் அடிப்படையில் இவர்களுக்கு அனுமதிகள் வழங்கப்படுகின்றன. அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு, அதிலே பொருத்தப்பட்டுள்ள இயந்திரங்களுக்கு, அவற்றை கட்டிய அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படாமல் தப்பித்துக் கொள்கின்றனர். இந்த விதிமீறல்களை எல்லாம் கண்டு கொள்ளாமல், கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துவிட்டு, வெறும் ஆலோசனைகளை மட்டுமே வழங்கி இருக்கிறார்கள் நீதிபதிகள். சட்டத்தின் படி நடக்க அவர்களை கட்டாயப்படுத்தாமல், நீதிமன்றங்களே அவர்களின் சட்ட விதிமீறல்களுக்கு துணை போகியுள்ளன; அவற்றை நியாயப்படுத்தியுமுள்ளன.

தரமற்ற இயந்திர பாகங்களுக்கு மறைமுக சான்றிதழ்!

தரமற்ற இயந்திரப் பாகங்களினால் உருவாக்கப்பட்டு செயல்படாமல் முடங்கிக்கிடக்கும் இந்த அணுஉலை இயந்திரப்பாகங்களின் தரம் குறித்து, ஆதாரப்பூர்வமான, வலுவான ஆதாரச் செய்திகளை நீதிமன்றத்தில் தனி மனுவாகக் கொடுத்தும் நீதிமன்றம் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாகத் தெரியவில்லை. பாதுகாப்பு பற்றி கவலைப்படும் நீதிபதிகள் இந்த குற்றச்சாட்டு குறித்து நல்லதொரு விசாரணைக்கு உத்தரவு கொடுத்திருக்க வேண்டாமா? முழுக்க முழுக்க காயலான் கடைச்சரக்குகளைப் பெற்றுக் கொண்டு கட்டப்பட்ட, ரஷ்யாவில் கழித்து ஒதுக்கப்பட்ட, தரமற்ற கலவைகளினால் கட்டப்பட்ட இந்த அணு உலைகள், பற்றவைக்கப்பட்ட அதன் கொதிகலன்கள் எல்லாமே மக்களின் உயிருக்கு வேட்டு வைப்பதாகவே உள்ளன. இப்படியான பேராபத்தை உருவாக்க காத்திருக்கும் அணுஉலை உதிரிபாகங்களை கண்டு கொள்ளாமல் இருக்கும் இந்த நீதிமன்றம் போராடும் மக்களின் உயிருக்கு எப்படி உத்தரவாதம் கொடுக்க முடியும்? கடந்த 2007ஆம் ஆண்டே தொடங்கப்பட வேண்டிய அணுஉலை இன்று 2013ஆம் ஆண்டு ஆகியும் இன்னும் செயல்படுத்த முடியாமல் முடங்கிக் கிடக்கிறதே என்று குறைந்தபட்சம் சந்தேகமாவது அடைந்திருக்கலாமே? ஏன் தாமதம் என்று அப்படியாவது கேள்விகேட்டு விசாரணையை முடுக்கி விட்டிருக்கலாமே? தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் தப்பித்துக் கொள்ளலாம்! ஆனால் தீர்ப்புக்கு உள்ளானவர்களின் நிலையோ மிகவும் கவலைக்கிடம்.

போராட்டத் தள்ளுபடி

கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து கடந்த 640 நாட்களாக அறவழியில் போராடுகின்ற மக்கள் மீது 20க்கும் மேற்பட்ட தேசத்துரோக வழக்குகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட தேசத்தின் மீது போர் தொடுத்த வழக்குகள் உட்பட சுமார் 360க்கும் மேற்பட்ட வழக்குகள் பாய்ந்துள்ளன. அறவழியில், அமைதி வழியில், அறிவுவழியில் தங்கள் உயிருக்காக, வாழ்வாதாரத்திற்காக போராடிய மக்கள்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இது சனநாயக நாடுதானா என்ற ஐயம் எழுந்துள்ளது. மருத்துவர் இராமதாசுவின் கட்சிக்கார்கள் சுமார் 600 கோடிக்கு மேல் பொது சொத்து மற்றும் தனியார் சொத்துக்கு சேதாரம், உயிர்ச்சேதாரம் எல்லாம் விளைவித்து இருக்கிறார்கள் என்று சட்டமன்றத்திலே அறிக்கை வாசிக்கிறார் தமிழக முதல்வர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாகர்கோவிலில் உள்ள இந்து முன்னணியைச் சார்ந்த திரு.எம்.ஆர்.காந்தி என்பவர் தனது குடும்ப பிரச்சனையை திசைதிருப்ப, அதை ஒரு மதக்கலவரமாக மாற்ற முயற்சி எடுக்கிறார். அதன் விளைவு, மீண்டும் பொது வேலை நிறுத்தம் செய்து ஐம்பது பேருந்துகளுக்கு பெருத்த சேதாரத்தை ஏற்படுத்திருக்கிறார்கள். அவர்களில் பலர் கைது செய்யப்படவில்லை. சிறைக்கு சென்ற சிலர் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

நீதிபதிகள் போராடிய மக்களுக்கு இப்படியாக ஒரு தள்ளுபடி சலுகை வழங்கி இருக்கவேண்டிய அவசியமில்லை. மாறாக, அரசியல் சாசனச்சட்டம் வகுத்துக் கொடுத்துள்ள உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமையை நிலைநாட்ட போராடிய மக்கள்மீது பொய் வழக்குகள் போட்டு, அரசின் பணத்தை விரயமாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீதும், அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்த அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மீதும், வழக்கிற்காக மக்களை அலைய வைத்து சித்திரவதை செய்த நீதிபதிகள் மீதும், அரசு வழக்கறிஞர்கள் வீணாக மக்கள் பணத்தை செலவழித்ததற்காக அவர்கள் மீதும் கண்டனத் தீர்மானம் இயற்றி, அவர்களிடம் அபராதம் வசூலித்திருக்க வேண்டாமா? அவர்களுக்கும் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா? மக்களின் அறவழிக்கு இது தான் பரிசா?

இன்று உச்சநீதி மன்றம் இவ்வளவு வலிந்து கீழிறங்கி வந்து, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது போடப்பாட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், கூடங்குளம் பகுதியில் அமைதி ஏற்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு சொல்லி இருக்கிறது. இப்படியாக உச்சநீதி மன்றமே பரிந்துரை செய்கிறது என்றால், கூடங்குளம் அணுஉலைத் திட்டத்திலே தீர்க்க முடியாத மாபெரும் சிக்கல் ஏற்பட்டு விட்டது என்று தானே பொருள் கொள்ளவேண்டும். மக்கள் தொடர்ந்து போராடுவதால், அணுசக்திக் கழகமும் மக்கள்முன் அதிகமாக அம்பலப்பட்டுக் கிடக்கிறது. அணுஉலை இயங்குவதற்கான தாமதத்திற்கான காரணத்தை ஒவ்வொரு வாரமும், மாதமும் மக்களுக்கு தெரியப்படுத்தி தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அசிங்கப்பட வேண்டியிருக்கிறது.

தேர்தல் வேறு விரைவில் வரப்போகிறது. வழக்குகளை திரும்பப் பெறுவதாக சொன்னால், கடந்த மார்ச் 2012ல் ரூ.500 கோடி வளர்ச்சித் திட்டம் அறிவித்தபோது சிலர் விலைபோனது போல, இப்போது வழக்குகளை வாபஸ் பெற்றால், மக்கள் தங்கள் கூடாரத்தைக் கலைத்துவிட்டு சென்று விடுவார்கள், போராட்டத்தை கைவிட்டு விடுவார்கள் என்ற நப்பாசையில், அணுசக்தித் துறை, மற்றும் மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் தங்கள் வழக்கறிஞர்கள் சார்பாக இந்தப் பரிந்துரையை வைக்கச் சொல்லி நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தியிருக்கலாம். இந்தப் பரிந்துரையினால், மக்கள் இதுவரை போராடியது அனைத்தும் நியாயம் என்று நீதிமன்றமே சாட்சி சொல்லிவிட்டது. இதற்கு மேல், எதற்கு வழக்குகள்? எதற்கு அச்சுறுத்தல்கள்? எதற்கு இன்னும் காவல்துறை குவிப்பு? போராட்ட வழக்குகளை திரும்பப் பெறச் சொல்லி பரிந்துரைப்பதே, அரசின் பலவீனத்தைக் காட்டுகிறது. அணுஉலை திட்டத்தின் பலவீனத்தைக் காட்டுகிறது. .

கண்காணிப்பு கங்காணிகள்

நானே விளையாட்டு வீரன், நானே அம்பயர், நானே கள்ளன், நானே போலீஸ் என்கிற சித்தாந்தத்தில் இயங்கக்கூடிய அணுசக்தித் துறைகளுக்கு, தமிழ்நாடு மாசுக் (காசுக்) கட்டுப்பாட்டு வாரியங்கள் அனைத்தும் தங்கள் எசமானர்கள் சொல்படி நடக்கும் கூண்டுக்கிளிகள். பல் இல்லாத, சொந்தக் காலில் நிற்காத முடியாத, தனித்து இயங்கும் அதிகாரம் இல்லாத அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் போன்ற ஊனமுற்ற, செயல்திறன் இல்லாத ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கும் துறைகளால் எவ்வாறு ஒருவருக்கு ஒருவர் கடிவாளம் போடமுடியும்? இவர்கள் நிற்கச் சொன்னால் நிற்பார்கள், நடக்கச் சொன்னால் நடப்பார்கள்! எழுதச் சொன்னால் எழுதிக் கொடுப்பார்கள்! குதிக்கச் சொன்னால் குதிப்பார்கள்! இவைகள் சாவி கொடுத்தால், அசைந்தாடும் தஞ்சாவூர் பொம்மைகள். பொதுவாகவே இவர்கள் கூட்டுக்கள்ளன்களாகவே செயல்பட்டனர். சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கண்காணிக்கும், அவற்றின் பாதிப்புகளை மதிப்பிடும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் போன்ற அமைப்புகள் அனைத்தும் எலும்புத்துண்டிற்கு மண்டியிடும் கங்காணிகள். இவர்களிடமா நமது பாதுகாப்பை அடகு வைப்பது இந்த நீதிமன்றங்கள்?

கொல்லைப்புறத்தில் அணுக்கழிவு (அணு சொத்து)

அணுஉலைகளை அமைக்க ஒப்பந்தம் போட்டவர்கள், அணுக்கழிவை கொட்டி வைப்பது குறித்து சிந்திக்க, இறுதி முடிவு எடுக்க மறந்துவிட்டனர். அணுஉலை அமைக்க உருவாக்கப்பட்ட அனைத்து அடிப்படைத் தகவல்களையும் பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகும் இன்று வரை மக்களோடு பகிர்ந்து கொள்ள மறுக்கும் அணுசக்தித் துறை, அணுக்கழிவு குறித்து நாம் அனைவரும் தலைகீழாகக் நின்றாலும், நடந்தாலும் அது குறித்து நிச்சயம் தெரிந்து கொள்ள வாய்ப்பே இல்லாமல் போகும். இந்த சனநாயக நாகரீக நாட்டில், மனிதக்கழிவை அகற்ற இன்னும் ஒரு கருவி கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த 21ஆம் நூற்றாண்டில் கூட வீட்டுக்குப்பையை கூட்டி வைக்கத் தெரியாதவர்கள், அதை தரம் பிரிக்கத் தெரியாதவர்கள், எப்படி அணுக்கழிவை மேலாண்மை செய்ய முடியும்?

அணுக்கழிவை எங்கே வைப்பது, அதற்கான இடத்தேர்வு, தல சூழல் ஆய்வுகள், பாதுகாப்பு கவசங்கள், தொழில் நுட்பங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு என்று எதைப் பற்றியும் நீதிமன்றம் கடினமாக கேள்விகளைக் கேட்டு அவர்களிடம் இருந்து பதிலைப் பெறாமல், அணுஉலையை தொடங்குமுன், 'கழிவை வைப்பதற்கு இடத்தை முடிவு செய், மக்களிடம் கருத்து கேட்டுவிட்டுவா' என்று கட்டளை பிறப்பிக்காமல், உடல் நோகாமல் அடிப்பது போல அணுசக்திக் கழகத்திடம் விரைவில் ஒரு இடம் கண்டுபிடி என்று சொல்லி, ஆலோசனை கூறுவது ஏற்புடையது அல்ல. வளர்ச்சி அடைந்த பிரான்சு நாட்டில் இப்போது எங்கே, எப்படி அணுக்கழிவை சேகரித்துப் பாதுகாக்கப் போகிறோம் என்று மக்களிடம் கருத்து கேட்க புறப்பட்டு இருக்கிறார்கள். இப்போது வல்லரசு பிரான்சு நாட்டின் இன்றைய தலையாய சிக்கலாகி விட்டது அணுஉலைக்கழிவு பிரச்சனை. இப்போது அவர்கள் வீதிக்கு வந்து மக்களிடம் கெஞ்ச வேண்டிய சூழல் வந்துவிட்டது.

இது கழிவு அல்ல, மாறாக இது ஒரு சொத்து/முதலீடு என்று மக்களை இன்னும் மடையர்களாக்கி வருகிறது. போராட்டக் குழு டெல்லி சென்று மன்மோகன் சிங்கைப் பார்க்கும் போது, அங்கே அணுசக்திக் கழகத்தின் அன்றைய தலைவர் திரு. எஸ்.கே.ஜெயின் சொன்னார், 'அணுக்கழிவு ரொம்பவும் கொஞ்சமாகத் தான் கிடைக்கும். இப்போதெல்லாம் அதை ஒரு உருண்டையாக உருட்டி அழகுசாதனப் பொருளாக நமது வரவேற்பு அறைகளில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு இன்றைக்கு இந்தியாவில் அறிவியல் வளர்ந்துள்ளது' என்று பிரதமரை வைத்துக்கொண்டே உடல் கூசாமல் விவரமானவர்கள் இருக்கும் சபையிலே இப்படி ஒரு விஞ்ஞானப்பொய் ஒன்றை அள்ளித் தெளித்தார். இப்படி பொய்யான தகவல்களை வாய்கூசாமல் சொல்லுவது, அவற்றை மறைப்பது இந்த அணுசக்திக் கழகங்களுக்கு கைவந்த கலை. இவர்களே, இப்படி பொய் சொல்லும் போது, அரசியல்வாதியான பிரதமர் எவ்வளவு பொய் சொல்லி இருப்பார். என்ன கொடுமை இது? இவர்களை எப்படி நாம் நம்புவது? நாட்டை இப்படித்தானே பல நேரங்களில், பல இடங்களில் பொய் சொல்லி அடகு வைத்து விட்டார்கள். கேட்கிறவன் கேனையனாக இருந்தால், எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்! சுண்டைக்காய் கால்பணம் சுமைகூலி முக்காப்பணம் என்ற பழமொழி இந்த அணுக்கழிவுக்கு ரொம்ப பொருந்தும்.

கானல் நீராகும் அணுவிபத்து இழப்பீடு

 மாசுபடுத்துபவர்கள் தாங்கள் மாசுபடுத்தியதற்கான இழப்பீட்டுத் தொகையை தண்டமாக கட்ட வேண்டும் என்பது தான் உலக நியதி. ஆனால், இங்கே இந்தியா, மாசுபடுத்தியவர்கள் சுதந்திரமாக வலம் வரும் நாடு. அவர்களின் மாசுபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் தான் அஞ்சி நடுங்கி, கூனிக் குறுகி நிற்கவேண்டும். இழப்பீட்டுக்காக தெருவில் நின்று அதன் பாதிப்புகளோடு போராட வேண்டும். கூடங்குளம் அணுஉலையைப் பொருத்தவரை இந்தியா இரகசியமாக அணுகுண்டு சோதனை நடத்திய பிறகு, இந்தக் குற்றத்திற்காக உலக அரங்கில் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியது. அப்போது அந்த நெருக்கடியை சமாளிக்க, அன்றைக்கு நட்பு வல்லரசு ஒருங்கிணைந்த நாடாக இருந்த ரஷ்யப் பேரரசு, இந்தியாவுக்கு உதவிகரம் நீட்டியது. அந்த நன்றிக்கடனுக்காக, சன்மானமாக உலக அரங்கில் விலை போகாத, ரஷ்யாவின் காலாவதியான தொழிற்நுட்பங்களை, காயலாங்கடைச் சரக்காக எவை இருந்தாலும் சரி, இந்தியா எந்தவித நிபந்தனையும் இன்றி பெற்றுக் கொள்வதாக அன்றைய இந்திய ஆட்சியாளர்கள் அன்றைய சோவியத் ஒன்றிய ரஷ்யாவோடு பல உடன்படிக்கைகளை மறைமுகமாக செய்து கொண்டார்கள்.

அதனுடைய விளைவுதான், இன்று உலகத்தில், இந்தியாவில் பல இழப்பீட்டுச் சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், நாங்கள் எந்த இழப்பீட்டுச் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல, அவைகள் எதுவும் எமக்குப் பொருந்தாது; நாமும் அவர்களிடம் கேட்கமுடியாது என்கிற தொனியில் இந்திய அணுசக்தி நிறுவனங்களும், இந்திய அரசும் கூடங்குளம் அணுஉலை விபத்து இழப்பீடு குறித்து பேச மறுக்கின்றன. ரஷ்ய அணுஉலை நிறுனங்களுக்கு விபத்து இழப்பீட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று இந்திய அரசு சொல்லி வருகிறது. நீதிமன்றங்களும் இந்திய அரசின் அபத்தமான, ஆபத்தான கொள்கை முடிவுகளில் தலையிட முடியாமல் மவுனம் காத்து நிற்கின்றன. இது இந்திய அரசியல் சாசன சட்டவிதிமுறைகளுக்கு எதிரானது. பன்னாட்டு மனித உரிமை உடன்படிக்கைகளுக்கு எதிரானது. இழப்பீடு பெறுவது என்பது நமது பிறப்புரிமை! அதை தட்டிப் பறிக்கும் அரசுக்கு நீதிமன்றங்கள் துணை போகின்றன. இதுதான் சட்டத்தின் காவலர்கள் இந்திய மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம்!

ஆக, சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, ஒட்டுமொத்தத்தில் இந்திய அணுஆயுதப் பேரரசை கட்டி எழுப்ப, இந்தியாவில் பன்னாட்டு அணுவணிகத்தை/சந்தையை வளர்த்தெடுக்கும் தீர்ப்பு!

- ம.புஷ்பராயன், அமைப்பாளர், கடலோர மக்கள் கூட்டமைப்பு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It