இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமாக விளங்குவது நிதித்துறை. நிதித்துறையின் முதுகெலும்பாகத் திகழ்வது பொதுத்துறை வங்கிகள்.

 இந்திய பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கிட நடுவன் அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. உலகமயக் கொள்கைகளின் அடிப்படையில் வல்லாண்மை கொண்ட அமெரிக்காவும், அதற்கு வால்பிடிக்கும் அந்நிய நாடுகளும் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியாவை நிர்ப்பந்தம் செய்கின்றன.

 தனியார் வங்கிகள், முதலாளிகளின் தத்துப்பிள்ளைகளாக விளங்கின. மக்களின் வைப்புத் தொகைகளைத் தாமே சுரண்டிக் கொள்ளையடித்தவற்றைத் தம் பகாசுரப்பைகளில் நிரப்பிக் கொண்டன. அத்தனியார் வங்கிகள் பத்தென்பதையும், 1969 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் நாள் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி நாட்டுடைமையாக்கினார். அதன் மூலம் இந்திய ஏகபோக முதலாளிகளின் நிதி மூலதனப் பற்றாக்குறைக்குப் பெருமளவு உதவியாக அமைந்தது. அதேவேளை, இந்திய மக்களும் சில நன்மைகளை அடைந்தனர்.

 நடுவன் அரசு 1990 ஆம் ஆண்டு முதல், புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கியது. உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு, பன்னாட்டு நிதி நிறுவனம் ஆகியவற்றின் கட்டளைகளையும், நிபந்தனைகளையும், ஆலோசனைகளையும் சிரமேற்கொண்டு செயல்பட்டு வரத் தொடங்கியது.

 இந்திய வங்கிகளைச் சீரமைப்பதற்காக, 1991 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் நரசிம்மராவும், நிதி அமைச்சர் ப. சிதம்பரமும் ‘நரசிம்மம் குழு’, ‘ரங்கராஜன் குழு’ ஆகியவற்றை அமைத்தனர்.

அக்குழுக்களின் பரிந்துரைகள் வருமாறு:-

 பாரத ஸ்டேட் வங்கி உட்பட சர்வதேசத் தரம் வாய்ந்த நான்கு வங்கிகள் மட்டும் செயல்பட அனுமதிக்கலாம்.

 நாடு தழுவிய அளவில் கிளைகளைக் கொண்டதும் தேசியத் தன்மையுள்ளதுமான பத்து வங்கிகளை மட்டும் உருவாக்கிட வேண்டும்.

 விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் கடன் தொகையைக் குறைக்க வேண்டும். (அதாவது தற்போது வழங்கப்படும் விவசாயக் கடன் தொகையை நாற்பது விழுக்காட்டிலிருந்து பத்து விழுக்காடாகக் குறைக்க வேண்டும்).

 வங்கிகள் லாப நோக்கில் செயல்பட, முதலாளிகளுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்கான வட்டியை குறைக்க வேண்டும்.

 அந்நிய, தனியார் வங்கிகளுக்கு இந்தியாவில் முழு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.

 இந்திய ரிசர்வ் வங்கியின் நிபந்தனைகளிலிருந்து அவற்றுக்கு முழு விடுதலை அளிக்க வேண்டும்.

 வங்கிகளில், புதிய பணி நியமனங்களை முற்றாகத் தடை செய்ய வேண்டும்.

 வங்கிகளைக் கணினிமயம் ஆக்கவும், நவீனப்படுத்தவும், விருப்ப ஓய்வுத் திட்டத்தை அமல்படுத்தவும் வேண்டும். வங்கிப்பணிகளை வெளிநிறுவனங்கள் மூலம் செய்துகொள்ளவும் அனுமதிக்க வேண்டும்.

தற்போதைய இந்தியப் பிரதமர் அமைத்த ரகுராம்ராஜ் தலைமையிலான மற்றும் ஒரு குழு, தனது பரிந்துரைகளை நடுவண் அரசிடம் அண்மையில் அளித்துள்ளது. அந்தப் பரிந்துரைகளில் கூறப்பட்டிருப்பதாவது:- (1) பொதுத்துறை வங்கிகளைத் தனியார் முதலாளிகளிடமும், அந்நிய நாட்டு நிறுவனங்களின் கண்காணிப்பிலும் ஒப்படைக்க வேண்டும். (2) நாட்டுடைமை வங்கிகளை இணைத்து எண்ணிக்கையைக் குறைத்திட வேண்டும். (3) அந்நிய நாட்டு வங்கிகளின் மூலதனத்துக்குக் கட்டுப்பாடு எதுவும் விதிக்கக் கூடாது. (4) அவற்றுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.

இந்திய பொதுத் துறைவங்கிகளில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்கள் வாராக்கடன்களாக உள்ளன. வாங்கிய கடனைத் திருப்பித் தராதவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட வங்கி நிர்வாகங்கள் மறுத்து வருகின்றன. இந்தியாவின் பெரும் முதலாளிகளும், பெரிய நிறுவனங்களும் வசதிகூடி இருந்தும், வருமானம் பெருகி இருந்தும் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்திடத் தயாராக இல்லை. ஆனால், சாதாரண மக்கள் வங்கியில் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தவில்லையெனில் ‘ஜப்தி’ நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவர்கள் மீது வருவாய் வசூல் சட்டம் பாய்கிறது. இதே வங்கி நிறுவனங்கள், பெரு முதலாளிகள் பெற்ற வங்கிக் கடனை வசூலிக்க அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஏன் இந்தப் பாகுபாடு?
வருமான வரிச் செலுத்தாதவர்களின் வரிப்பாக்கி விபரங்கள் நமது நாடாளுமன்றத்தில் ஆண்டுதோறும் அறிவிக்கப்படுகிறது. அதுபோல், வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றும், திரும்பச் செலுத்தாத முதலாளிகளின் பெயர்பட்டியலையும் உலகறிய வெளியிட வேண்டும்.

இந்தியாவில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய தொழில் நிறுவனங்கள், தாம் வங்கிகளில் பெற்ற இருபதாயிரம் கோடி ரூபாய்க் கடன்களை இன்றுவரை திருப்பிச் செலுத்தவில்லை.

தமிழகத்தில் மட்டும் இருநூற்றி இருபத்து ஐந்து பெரும் பணக்காரர்கள் வங்கியிலிருந்து ஓராயிரத்து அறுநூற்றி நாற்பத்தி மூன்று கோடி ரூபாயை கடனைப் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் யாவரும் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டுமென்ற கலக்கமின்றி உலவுகிறார்கள்!

வாராக்கடன் ஐந்து விழுக்காட்டிற்கு மேல் இருந்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படையும். இது பொருளாதார நிபுணர்களின் கணிப்பு!

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் பொது மக்களின் வைப்புத் தொகை மட்டும் ரூபாய் இருபத்திரண்டு லட்சம் கோடியாக வளர்ந்துள்ளது.

பொதுத்துறை வங்கிகள், நடுவண் அரசின் தானியக் கொள்முதலுக்கு எழுபதாயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. தொழில் வளர்ச்சிக்காக மட்டும் இருபதாயிரம் கோடி ரூபாய் கொடுத்துள்ளது. ஏற்றுமதிக்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அரசு பத்திரங்களின் மூலம் அறுபதாயிரம் கோடி ரூபாய் முதலீடாகியுள்ளது.

உலகமயமாக்கக் கொள்கைகளை நாம் உயர்த்திப்பிடிக்கிறோம். விளைவு? பொதுத்துறை வங்கிகள் அந்நியநாட்டு தனியார் நிறுவனங்களுக்குத் தத்துக் கொடுக்கப்படுகின்றன. இப்படித் தாரை வார்ப்பதன் மூலம் 74 விழுக்காடு பங்குகளை விற்றால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம் அவற்றுள் முக்கியமானவை வருமாறு.

 சிறு தொழில் – சுய தொழில் புரிவோர்-சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் – கால்நடைகள் வளர்ப்போர் - சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் – நலிந்த பிரிவினர்- ஆகியோருக்குப் பொதுத்துறை வங்கிகள் வழங்கி வந்த குறைந்த வட்டிக் கடன்கள் இனிக் கிடைக்காது.

  தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட ஏழை, நடுத்தரப்பிரிவு மாணவர்களுக்கு கல்விக் கடன் கிட்டாது. கடன் பெறுவது எட்டாக்கனியாகிவிடும்.

 வெள்ளம், வறட்சி, பூசம்பம், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களினால் ஏற்படும் பேரிழப்புகளைச் சந்திக்க, சலுகைக் கடன்கள் பெற முடியாது.

 பல்லாயிரக்கணக்கான கிராமப்புற வங்கிக் கிளைகள் மூடப்படுவதால், கிராம மக்கள், கந்துவட்டிக்காரர்களிடம் மீண்டும் தஞ்சமடையும் அவலம் ஏற்படும்.

 நாடு முழுவதும் உள்ள பல லட்சம் மகளிர் சுய உதவிக் குழுவினர், பொருளாதார முன்னேற்றத்திற்காகக் கடன் பெறுவது கடினமாகும். சுய தொழிலுக்கான நிதி உதவிகள் பெறுவது இயலாமல் போகும். மொத்தத்தில், கடன் பெற்று முன்னேறும் வாய்ப்புகளுக்கான வாசல் கதவுகள், ஏழை எளியோருக்கு இறுக்கி அடைக்கப்படும்.

 பொதுத்துறை வங்கிகளை நவீனமயமாக்கம் செய்வதால் பல லட்சக்கணக்கான படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு மேலும் பறிபோகும். வங்கிப் பணித் தேர்வு ஆணையம் முடங்கிப் போவதால் வேலையிண்மை பெருகிப் போகும்.

 பொது மக்களின் சேமிப்புக்கும், வைப்பு நிதிக்கும் தனியார் நிறுவனங்கள் பொறுப்பு ஏற்காமல், திவாலாகிக் கையை விரித்திடும் அவலம் அரங்கேறும்.

 இறையாண்மைக்கு ஏற்படும் ஆபத்து, இந்தியாவை எட்டிப்பார்க்கும். சுதந்திரம் பறிபோனால் இந்தியர்கள் மீண்டும் அடிமைகளாக வேண்டுமா??

ஆகவே, பொதுத்துறை வங்கிகள் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்படுவதைத் தடுத்தல் அவசியம். பங்குகளை அந்நிய நாட்டு நிறுவனங்களுக்குத் தங்குதடையின்றி விற்பதை நிறுத்த வேண்டியது மிக முக்கியம். வாய்ப்புகள் பறி போவதிலிருந்தும் - இந்திய பொருளாதாரம் நலிவடைவதிலிருந்தும் நாட்டை மீட்டெடுக்க வேண்டியது மிகவும் அவசியம். இவ்வழியில் சிந்திப்பதும், செயல்படுவதும், நாட்டுப்பற்று மிக்கவர்களின் கட்டாயக் கடமையாகும்.

- பி.தயாளன் 

Pin It