‘லங்காஸ்ரீ’ விருதபெற்றவர்களின் குடும்ப இதழான இந்து இதழில் (ஏப்ரல் 3, 2013) ‘யாழ்ப்பாணத்தின் பாலச்சந்திரன்கள்’ எனும் தலைப்பில், பி.ஜெய்ராம் என்பவர் கட்டுரை வரைந்துள்ளார். 1999 காலத்தில் விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தில் கோலோச்சிய காலத்தில், இலங்கையில் யூ.என்.ஐ. செய்தியாளராகப் பணிபுரிந்த ஜெயராம், சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியாலும், ஏற்பாட்டிலும் பிற செய்தியாளர்கள் உடன் வர ஈழப்பகுதிகளில் சென்று வந்ததைப் பற்றி எழுதியுள்ளார். குழந்தைப் போராளிகளின் மீது என்ன அக்கறை! அதனை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு குழந்தைப் போராளியின் படம் (உதவி:ராய்ட்டர்). குழந்தைகள் விளையாடும் பூங்காக்களில் கூட சீசாப் பலகைகள் கைப்பிடிகளுக்கு மாற்றாக துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருந்த ‘சோகத்தை’ எழுதியுள்ளார்.

ஈழத் தமிழ்க் குழந்தைகளின் துயரினைப் பல்வேறு கோணங்களில், தொடர்ந்து எழுதிக் கொண்ட வண்ணம் உள்ளனர். ஆனாலும் இப்போது பாலச்சந்திரன் மரணித்த காட்சி, தமிழர்களின் நெஞ்சில் முள்ளாகத் தைத்து விட்டபடியால், அதனைப் பிடுங்கிட ஜெயராமும் முயல்கிறார் என்றே தோன்றுகிறது.

குழந்தைகள் உள்ளிட்ட முழுக்குடும்பத்தினரையும் பதுங்குகுழிகளில் வாழ்ந்திடப் பழக்கப்படுத்தியவர்களின் ஆதரவாளர்களே இப்போது புலம்பத் தொடங்கியுள்ளனர். பிறந்துவிட்ட குழந்தைகளை மட்டுமன்றி, கருவில் உள்ள குழந்தைகளைக் கூட தாயின் வயிற்றைக் கீறி எடுத்து தாரில் எறிந்த போது கேட்காத ‘ஆதரவுக்குரல்’ இப்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளதை உன்னிப்பாகக் கேட்டு வைப்போம்.

துப்பாக்கிகளுடனும் வெடிகுண்டுகளுடனும் குழந்தைகள் திரிவதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாதுதான்.ஆனால் வளர்ந்து விட்டால் இவனும் ஒரு புலி ஆகிவிடுவானோ என அஞ்சி அழித்தொழிக்கும் சூழலில், ஆயுதம் ஏந்தாமல் வாழ முடியுமா? புத்தகப் பொதி தூக்க வேண்டியதோளில், துப்பாக்கியையும், சாக்லேட்டுகளுக்கு மாற்றாக சயனைடுக் குப்பிகளையும் ஈர நெஞ்சினர் தம் பிள்ளைகளுக்குத் தருவார்களா? ஆயினும் இந்தப் போர்க்களம் அந்தக் குழந்தைகள் மீது திணிக்கப்பட்ட அவலத்தை யார் சொல்வார்கள்? எதிரிகளின் கைகளில் சிக்கி, கண்ணியமற்ற முறையில் கொல்லப்படுவதைவிட, போராடி மாள்வதை வீரச்சாவு எனத் தமிழ்ச் சமூகம் காலம் காலமாகப் போற்றியே வந்துள்ளது.

ஈழத்துக் கவிஞன் ஒருவனும் ‘தாயை நேசித்திட மீசை முளைக்கத் தேவையில்லை’ என மொழிந்து இருபத்தைண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. தாய்நாட்டைக்காத்திடக் குழந்தைகளைப் போர்க்களத்தில் ஈடுபடுத்துவது உலகெங்கிலும் உள்ள நடைமுறைதான். இந்திய தேசிய இராணுவத்தில் கூட ‘பாலர் பிரிவு’ என ஒன்று இருந்தது. அதிலும் எந்தவித நாகரிகத்திற்கும் நடைமுறைக்கும் இடம் தராது சொந்த மக்களையே இழிவுபடுத்திக் கொலை செய்யும் இலங்கை அரசை எதிர்த்துத் துப்பாக்கியைத் தூக்குவது தவிர்க்க முடியாத ஒன்றே! ஆயினும் இரண்டாயிரம் கால வரலாறுடைய தமிழ்ச் சமூகத்தில் இதற்கெனத் தனி மரபே பெருமிதத்துடன் உள்ளது. அதனை நினைவுபடுத்தும் சில புறநானூற்றுப் பாடல்களே இது போன்ற கட்டுரையாளர்களுக்கு விடையாகத் தர விழைகின்றேன்

புறநானூறு : பாடல் எண் : 86

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

யாண்டுளனோ? என வினவுதி என் மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்

புலி சேர்ந்து போகிய கல்அளை போல

ஈன்ற வயிறேலா இதுவே

தோன்றுவன் மாதோ போர்க்களந்தானே

பொருள் : என் மகன் எங்கிருக்கிறான் எனக் கேட்கிறாய். அந்தப்புலி தங்கியிருந்த கற்குகை (தன் வயிறைக் காட்டி) இதுதான். ஏதேனும் போர்க்களத்திற்குச் சென்று பார், அவனைக் காணமுடியும்.

புறநானூறு : பாடல் எண் : 279 (ஒக்கூர் மாசாத்தியார்)

கெடுக சிந்தை கடிது இவள் துணிவே

மூதின் மகளிர் ஆதல் தகுமே

மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை

 யான எறிந்து களத்து ஒழிந் தனனே

நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்

பெருநிரை செருப்பறை கேட்டு விழுப்புற்று மயங்கி

வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்

பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி

ஒருமகன் அல்லது இல்லோள்

செருமுக நோக்கிச் செல்க என வகுமே

பொருள் :நேற்று முன்தினம் நடந்த போரில் இவளுடைய தந்தை யானையைக் கொன்று தானும் வீழ்ந்தான். நேற்றைய போரில் பசு மந்தையைக் காத்து இவளது காதல் கணவன் மாண்டான். ஆயினும் இன்று போருக்கு எழுமாறு வீரரை அழைக்கும் பறையைக் கேட்டு, அறிவு மயங்கி, வீரப்புகழில் விருப்பம் கொண்டு, தன் ஒரே மகனை அழைத்து வேலினைக் கையில் கொடுத்து போர்க்களம் செல்வாயாக என ஆணையிடுகின்றாளே இத்தாய்.

புறநானூறு : பாடல் எண் 278 ( காக்கை பாடினியார் நச்செள்ளையார்)

நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள்

முளரி மருங்கின் முதியோள் சிறுவன்

படை அழிந்து மாறினன் என்று பலர் கூற

மண்டு, அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என்

முலை அறுத்திடுவென் யான் எனச்சினை இக்

கொண்ட வாளடு படுபிணம் பெயராச்

செங்களம் களவுவோள் சிதைத்து வேறாகிய

படுமகன் கிடக்கை காணூஉ

ஈன்றி ஞான்றினும் பெரிது உவந்தனளே

பொருள்:தாய் ஒருத்தி ‘நின் மகன் பகைவரின் படையைக் கண்டு அஞ்சிப் புறமுதுகு காட்டி மாண்டான்’ எனக் கேள்வியுற்று, ‘அஃது உண்மை ஆயின் அவன் வாய் வைத்து உண்ட என் மார்பை அறுத்தெறிவேன்’ என சினத்துடன் கூறி கையில் வாளுடன் போர்க்களம் வந்து, மாண்ட பிணங்களைத் திருப்பிப் பார்த்து, விழுப்புண் பட்டு மார்பில் வேல்தாங்கி மாண்ட தன் மகனின் உடலைப் பார்த்து அவனைப் பெற்ற நாளை விடப் பெரிது மகிழ்ந்தாள். 

இதற்கெல்லாம் பெருமை கொண்டவர்கள் தமிழர்கள் தாம்.

ஆனால் போரில்லா உலகைப் பேருவகையுடன் பாடியவர் நம் புரட்சிக் கவிஞர்தாம்!

புதியதோர் உலகு செய்வோம்  கெட்ட

போரிடும் உலகை வேருடன் சாய்ப்போம்  -  பாரதிதாசன்

Pin It