நாற்புறமும் சூழ்ந்திட்டனர் காண் தமிழினமே!

முல்லைப்பெரியாறு, காவிரி, பாலாறு, பெண்ணை . . . . . நீரின்றி அமையாது என்ற வள்ளுவன் நாட்டிற்கு நீர் சுமந்து ஆறுகள் மறித்துக்கட்டப்படுகின்றன. கடல்வழியே மீன் பிடிக்கச்சென்றால் கூட மறிக்கிறார்கள். அடிக்கிறார்கள். சுட்டுக்கொல்கிறார்கள். லங்கா என்ற அவர்களது நட்பு நாட்டின் கடற்படை சிறைப் பிடித்துச்செல்கின்ற விபரீதம்;கொடுமை. ஆற்று நீர் உரிமை காற்றில் ஆடும் கொடுமையில், நிலத்தடி நீர்மீதும் உரிமை இல்லையாம். இது ஐந்தாவது பக்க முற்றுகை என்பதா?

மீத்தேன் எடுக்க நிலத்தடி நீரை இறைப்போம். காவிரி பாய்ந்து வளப்படுத்திய பகுதிகளில் உப்பு நீரைவிட்டு தீய்ப்போம். உனக்கு என்ன பேச்சு? காடுகளை அழிப்பதும், மலைகளை சிதைப்பதும், சமவெளியைப்புரட்டிபோட்டு இவைகளை விற்பதும் எங்கள் பிறப்புரிமை என்பது போல பேசுகிறார்கள்.

யார் இவர்கள்?யாருக்கு என்ன உரிமை?

ஆற்று நீர் உரிமையா என்று அவர்கள் நகைக்கும் போது மகிந்தேயின் ஓநாய் சிரிப்பு கண்முன் ஒரு கணம் தோன்றி மறைகின்றது. உலகச்சட்டங்களை தூக்கி ஒரு ஓரமாக எறிகிறார்கள். உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை நீசக்காகிதங்களாக வீசுகின்றார்கள். கூட்டமாக குரல் எழுப்பினால் அகிம்சாமூர்த்திகளின் ஆயுதப்படை சூழ்கின்றது. இந்திய நீர் சட்டம் என்று மன்மோகன் புன்னகைக்கும்போது அதில் தெரியும் கபடத்தால் மனம் திடுக்கிடுகின்றது.

எல்லா இனங்களையும் ஆதிக்கம் செய்து கம்பெனிகளின் காவலன் ஆகும் அரசு.

எண்ணற்ற இனங்களின் கூட்டரசாக செயல்படவேண்டிய நடுவண் அரசு, எல்லா இன மக்களின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் கொடுங்கோலனாக மக்கள்முன் பூதாகாரமாக நிற்கிறது. உப்பிப்பெருத்த இந்த உருவத்தின் உள்காற்று மக்கள் சக்தி என்பதைவிட கம்பெனிகள் உள்ளூதும் சக்தி என்பதுதான் நாளும் வெளிச்சமாகிறது. மக்களாட்சி என்பது கையூட்டுஆட்சியாக ஆகிப்போன இந்நாட்களில் கையூட்டு கொடுப்பவன் அயல்நாட்டவன் என்றாலும் அவனுக்கே காரியம் ஆகின்றது. அன்னியனுக்கு வேலைகள் எளிதாக முடிய பல துறைகளிலும் அதிகாரங்களை நடுவண் அரசுக்கு மையப்படுத்துகிறார்கள். வாழும் இனங்களின் அரசுகள் கம்பெனிகளுக்கு வேண்டியவற்றை அவர்கள் வேண்டும் முறையில் நட்த்திக்கொடுக்கவேண்டும். மண்ணின்மக்கள் அடிமைகள் போல் வாழவேண்டியுள்ளது.

பொதுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, அதற்கேற்ற உயர்கல்வி, உலகத் தரம் வாய்ந்த ஐ. ஐ. டி கல்விக்கூடங்கள் என்றும் தற்சார்பு, அன்னியப்பொருட்களுக்கு மாற்று காணுதல் அவசியம் என்று இருந்த நாட்டில் இன்றைய நிலை என்ன? பிறந்த குழந்தைக்கு சிறுநீர் மலம் கசியாமல் கட்டிவைக்கும் காலாடைகளில் கூட அன்னியமோகம்தான். கால் செருப்பு முதல் தலைமுடிக்கு போடும் சாயம் வரை எல்லாம் அன்னியத்தரத்தில். உணவு, உடை, கல்வி, ஆரோக்கியம் எங்கும் எதிலும் அன்னியப்பொருட்கள்தான். ஆனால் வேளாண்மை, நெசவுத்தொழில், சிறு தொழில்கள், சில்லரை வணிகம் போன்றன மோசமாக அழிகின்றன, அரிய இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன. கம்பெனிகள் ஊதிப் பெருக்கின்றன. மக்கள் பொருளாதாரச் சுமையில் திண்டாடுகின்றனர்.

இந்தியத் துணைக்கண்டம் காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை, பஞ்சாப் முதல் மணிப்பூர் வரை நாட்டின் பல்வேறு இன மக்களின் போராட்ட களமாக ஆகிக் கொண்டிருக்கின்றது. சொந்த மக்களை படைகொண்டு தகர்க்கும் மூர்க்கமான அரசாக வளரும் இந்திய அரசு கம்பெனிகளுக்கு நாட்டின் வளங்களை கைமாற்றுவதில் மிகவும் ஈடுபாடு கொண்டுள்ளது.

 நதிநீர் உரிமை, நிலங்களின் மீதுள்ள உரிமை, நிலத்தடி நீர், கனிமவள உரிமை. யாருடைய உரிமை?

 இன்றைய சட்டங்கள் மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப் படுவதில்லை. மங்கிய ஒளியில், மதுவின் அணைப்பில் கம்பெனிகளின் நலன்களுக்கான கணிப்பில் எழுதப்பட்டு மக்கள் மன்றத்தில் பெயருக்கு ஆராதனை காட்டப்பட்டு சட்டமாகின்றன. இந்த புதிய சட்டங்கள் ஒவ்வொன்றும் ஆழமான பரிசீலனைக்கு விடப் படவேண்டும். பெரும்பாலான சட்டங்கள் மக்கள் நலன்களுக்கு எதிரானவைகளாகவே உள்ளன.

இந்திராகாந்தியை கொன்றவர்கள், ராசீவ் காந்தியை கொன்றவர்கள், உலகமயத்திற்கு இந்தியாவை வாங்கியவர்கள் யார்.? அவர்கள் வேறு வேறா? அல்லது ஒன்றுதானா? ராசீவ் கொலைக்குப்பின் ஏன் இந்த விலைபோகும் படலம்---மனிதனும், கனிமங்களும், காடு, மலை, கடல், சமவெளிகளும், நேரு காலத்தில் இருந்து கட்டியமைக்கப்பட்ட கம்பெனிகளும் எல்லாம் தாறுமாறாக விலை போவது ஏன்? மண்ணோடு சேர்ந்து காலம் காலமாக வாழ்ந்த பகுதி மக்களுக்கு இல்லாத உரிமையை இவர்களுக்கு யர் கொடுத்தது. கிழக்கிந்தியக்கம்பெனியின் சிந்தனையோட்டத்தை இந்தியத்துணைக் கண்டத்தின் சட்டங்களாக வரிக்கும் இந்தியக்கட்சிகளை எப்படி இந்திய மக்களுக்கான கட்சிகளாக ஏற்பது? வேலியே பயிரை மேய்கின்றது!! மக்கள் எத்தனை நாட்கள் வேடிக்கை பார்த்து நிற்பது?

நிலம், நீர், காற்று, காடு, மலை, கடல், ஆறுகள், மணல், கனிமங்கள் தேசிய இன மக்களின் பொது வாழ்வாதாரங்கள். எதிர்கால தலைமுறைக்கு வேண்டிய சேமிப்புகள். இந்திய அரசு அவற்றை விற்று காசாக்குவது நாட்டுத்துரோகம், மக்கள் விரோதம். கொள்ளை.

தமிழின சொந்தங்களே எழுவோம் ஓரணியில்!!

காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு முதலிய அனைத்து நதிநீர் உரிமைகளையும் மீட்க போராடுவோம். இதுவே தமிழர்களின் தலையாய கடமை.

காவிரிப்படுகையை அழித்து மீத்தேன் எடுப்பது, நிலக்கரி எடுப்பது ஆகியவைகளைத் தடுப்போம்.

நிலத்தடி நீர், நிலத்தடி கனிம வளங்கள் தமிழினத்தின் வாழ்வாதாரம் என அறிவித்து இதில் இந்திய அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என அறிவிப்போம்.

ஆறுகளில் மணல் அள்ளுவது ஆற்றுப்படுகை, நிலத்தடி நீர், நீரின் தரம் ஆகியவைகளை கெடுக்கும். எனவே மணல் கொள்ளையை தடுப்போம்.

ஆற்றல், சாலைகள் அமைத்தல் கட்டிடவேலை போன்ற அனைத்திற்கும் அன்னிய கம்பெனிகள் காட்டும் சுய லாப வழிமுறைகளை புறந்தள்ளி “ நிலைத்த நீடித்த தீர்வுகளை “காணவேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றோம்.

இந்திய துணைக்கண்டத்து சகோதரமக்களின் உரிமைக்கான போராட்டங்களில் நாம் இணைந்து நிற்போம்.

Pin It