திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கூடங்குளம் பிரச்சினை பற்றிய தனது பழைய அறிக்கை ஒன்றினைத் தூசி தட்டி, தேதி மாற்றி வெளியிட்டுள்ளார். இந்த “மறு ஒளிபரப்பு” பெருத்த ஏமாற்றத்தைத் தருவதாகவும், தி.மு.க.வின் வெற்று அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது.
 
ஒட்டு மொத்தத் தமிழகமே தனது வாழ்வாதாரங்கள் பற்றியும், வருங்கால தலைமுறைகளின் நல்வாழ்வு பற்றியும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது. கூடங்குளத்தில் மட்டுமல்லாமல், கல்பாக்கத்திலும், கலைஞர் அரசு அனுமதி வழங்கிய நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து தேனி மாவட்டத்திலும் தமிழக மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஈழத் தமிழர் எதிர்கொண்ட இனப்படுகொலை, தமிழீழத்தின் தேவை போன்றவற்றுக்காகப் போராடுகிற மாணவர்கள் இங்குள்ள தமிழர் எதிர்கொண்டு நிற்கும் “மெல்லக் கொல்லும் இனப்படுகொலையாம்” அணுஉலைகளையும் எதிர்த்துப் பேசி வருகின்றனர்.
 
இந்த நிலையில் தமிழக மக்களின் நலன்களை மனதில் நிறுத்தி, அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, தனது கட்சியின் நிலையை, கொள்கைகளை அதற்கேற்றவாறு மறுபரிசீலனை செய்து, தேவைப்பட்டால் மாற்றியமைத்து உண்மைத்தன்மையுடன் கருத்து சொல்வதற்குப் பதிலாக கலைஞர் அவர்கள் வழக்கம்போல அ.தி.மு.க. எதிர்ப்பு அரசியல் செய்து கொண்டிருப்பதை நாங்கள் கடுமையாக ஆட்சேபிக்கிறோம்.
 
அறுநூறு நாட்கள் உண்ணாவிரதம், பேரணி, ஆர்ப்பாட்டம் என்று அலைந்து திரிந்து, மிகப் பெரிய மன அழுத்தத்துக்குள்ளாகி, கடுமையானப் பொருளாதார இழப்புகளை சந்தித்து, அசிங்கமான அவதூறுகளுக்கு ஆட்பட்டு,காவல்துறையின் அடக்குமுறைகளால் அவதியுற்று, உயிர்ப்பலி கொடுத்து, சிறைச்சாலைகளிலும், நீதிமன்றங்களிலும் உழன்று கொண்டிருக்கும் மக்களைத் தேற்றும் வகையில், உதவும் வகையில் உருப்படியான ஆலோசனைகள் சொல்வதற்குப் பதிலாக தமிழக ஆளுங்கட்சியுடனான தனது அரசியல் கணக்குகளைத் தீர்த்துக் கொள்ள எங்களை, எங்கள் போராட்டத்தை உபயோகிப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
 
தமிழகத்தின் மிக முக்கிய பிரச்சினையாக இன்று விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அணுசக்தி பிரச்சினை பற்றிய தனது கட்சியின் நிலையைத் தெளிவுபடுத்தி, தமிழ் மக்களுக்கு எப்படி உதவுவோம் என்று விளக்குவதற்குப் பதிலாக,மதில்மேல் பூனை போல தொட்டும் தொடாமலும் பேசிவிட்டு, எதிர்தரப்பையே குறை சொல்வது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.
 
கலைஞர் அவர்கள் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருப்பதைப் போல, தமிழக அரசு தனது நிலையை மாற்றிக் கொண்டபோது நாங்கள் அதைக் கடுமையாக எதிர்த்தோம். அன்றைய தினம் முதல் மத்திய அரசுடன், தமிழக அரசையும் எதிர்த்தே போராடி வருகிறோம்.
 
தமிழக முதல்வர் தனது நிலையினை மாற்றிக்கொண்டதுதான் மிகப் பெரிய பிரச்சினை என்பது போலப் பேசுவது,சித்தரிப்பது அரசியல் நேர்மையற்றத் தன்மையையேக் காட்டுகிறது. “கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு,நெய்க்காக ஊரெல்லாம் அலைகிறார் முதல்வர்” என்றும், உடனடியாக கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கவேண்டும் என்றும் முன்பு கருத்து சொன்ன கலைஞர் அவர்கள் இந்த அறிக்கையில் அப்படி எதுவும் சொல்லவில்லையே? 
 
தமிழரின் வாழ்வாதாரங்களை அழிக்கிற, வாழ்வுரிமையை மறுக்கிற, தரமற்ற உபகரணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட, தொழில்நுட்ப பிரச்சினைகள், சிக்கல்கள் நிறைந்த கூடங்குளம் அணுஉலை தமிழகத்தில் வேண்டாம் என்றுதான் போராடிக் கொண்டிருக்கிறோம். “ஆபத்து ஏற்படாமல் நடவடிக்கை எடுப்பது, உத்தரவாதம் அளிப்பது,ஆவன செய்வது, பேச்சுவார்த்தை நடத்துவது” என்று டெசோ-பாணி அரசியல் செய்து தமிழ் மக்களை இன்னும் உபயோகிக்கலாம் எனும் மனப்பான்மையை, அணுகுமுறையை கைவிட்டுவிட்டு, உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்ய தி.மு.க. முயலட்டும்.
 
தமிழகத்தின் முதுபெரும் தலைவர்களுள் ஒருவரும், ஐந்து முறை தமிழக முதல்வராக பணியாற்றியவரும், நடுவண் அரசில் கிட்டத்தட்ட இருபது வருடங்கள் தொடர்ந்து பங்கேற்றக் கட்சியின் தலைவருமான கலைஞர் அவர்கள் அணுசக்தி பற்றிய தனது கட்சியின் நிலை என்ன என்பதை தமிழர்களுக்குத் தெளிவுபடுத்தட்டும். தி.மு.க. தலைவர் மகள் நாடாளுமன்றத்தில் 2008-ம் ஆண்டு அவரது கன்னிப் பேச்சில் தெரிவித்ததுதான் தி.மு.க.வின் தற்போதைய கொள்கையா என்பதை அறிவிக்கட்டும். பகுத்தறிவு சார்ந்த அறிவியல் பூர்வமான எங்கள் வாதங்களை புறக்கணித்து,அணுஉலை இயங்கப் போவதாக மத்திய அரசும், அணுசக்தித் துறையும் சொல்லும் உண்மைக்குப் புறம்பான தகவலை நம்பும் கலைஞர் “இந்த முக்கியமான நேரத்தில்” பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று சொல்கிறார். இந்த முக்கியமான தமிழ் மக்கள் சொல்வதைக் கேளுங்கள் என்று அவர் சொல்வதற்கு எது தடையாக இருக்கிறது?

- போராட்டக் குழு, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

Pin It