மாணவர்கள் தமிழீழத்திற்காக வீதியில் இறங்கி களங்காணும் கண்கொள்ளாக் காட்சிகளை நாம் கண்டோம். இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்குப் பிறகு நமது காலத்தில் நாம் கண்ட மாணவர் பேரெழுச்சி இது. லயோலா மாணவர்கள் பட்டினிப் போராட்டம் தொடங்கினார்கள். வற்றிச் சுருங்கிய பட்டினி வயிறுகள் போராட்டப் பெருந்தீயை ஊட்டிவளர்த்தன. இந்திய அரசின் பச்சை துரோகத்தை ஆர்ப்பாட்டங்களால் அம்பலப்படுத்தினர். தமிழின துரோகம் முற்றுகையிடப்பட்டது. தமிழீழ மக்களின் படுகொலைக்கு விண்ணதிர நீதிகேட்டனர். ராஜபக்சே வீதிகளில் விசாரிக்கப்பட்டான். காங்கிரஸ் கட்சியின் அடையாளங்கள் தமிழகத்திலிருந்து பெயர்த்தெறியப்பட்டன. மாணவர் போராட்டம்.. எங்கும் மாணவர் போராட்டம். மாணர்களுக்கு நமது வீரவணக்கங்கள்.

இந்தப் போராட்டம் வலுப்பெற வேண்டும். தமிழீழத்திற்கு தொடர்ந்து குரல்கொடுத்துவரும் பல்வேறு இயக்கங்கள் பாடுபட்டோம். தங்களால் இயன்ற அளவுக்கு இப்போராட்டங்களோடு துணைநின்றோம். அதில் காலத்தாற் சிறந்த பணி சரியான அரசியல் கோரிக்கைகளை மாணவர் போராட்டத்தோடு இணைத்ததுதான். அதன் வெற்றியாக சுதந்திரமான பன்னாட்டு விசாரணை, இனப்படுகொலை, பொதுவாக்கெடுப்பு போன்ற திருத்தங்களைக் கோரி அமெரிக்கத் தீர்மானத்தை அம்பலப்படுத்தல், அமெரிக்கத் தீர்மானத்தைப் புறக்கணித்தல், இந்திய அரசிற்கு எதிராக போராட்டத்தை ஒன்றுகுவித்தல் என அடுத்தடுத்து மிகச்சரியான திசையில் அது பயணப்படடது. தி.மு.க.வை பதவி விலக வைத்து, தமிழக சட்டசபையின் தீர்மானமாக அதை மாற்றியது. இந்திய நாடாளுமன்றத்தைப் பணிய வைக்கும் போராட்டமாக தெளிவாக முன்னேறி வருகிறது. இந்த அரசியல் திசைவழியில் மாணவர்கள் சரியாக பயணப்படுவதற்கு மிக அடிப்படையான காரணம், தமிழீழ ஆதரவில் உறுதியாகக் களமாடிவரும் பல்வேறு கட்சிகளும் இயக்கங்களும் தனிப்பட்ட முறையில் சில உணர்வாளர்களும் போருக்கு முன்பும் பின்பும் ஆற்றிவரும் அரசியல் பணிகளே ஆகும்.

மாணவர்களும் அரசியலும்

இந்நிலையில் மாணவர்கள் போராட்டம் வலுப்பெற்றவுடன் மாணவர்கள் போராட்டத்தில் “அரசியல் வேண்டாம்”; “அரசியல் கட்சிகள் - இயக்கங்கள் வேண்டாம்”; என்ற கருத்து இயல்பாகவே மாணவர்களிடமிருந்து மேலோங்கியது. ஏனெனில் கொள்கையற்ற பிழைப்புவாத – சந்தர்ப்பவாத, தனிநபர் துதிபாடி அரசியல் கட்சிகளின் மீது அவர்களுக்குள்ள இயல்பான வெறுப்பின் காரணமாக அவற்றை அவர்கள் முன்வைக்கின்றனர். அவர்களின் நம்பிக்கையை பெறும் அளவில் எந்தக்கட்சியும் மாற்றாக வளராத நிலையில் அவர்களுக்கு அரசியல் என்பதே கெட்ட வார்த்தையாகப் படுவது என்பதும் இயல்புதான். இதில் அவர்களைக் குற்றம் சொல்ல ஒன்றும் இல்லை.

ஆனால் மாணவர்களின் ஒவ்வொரு கோரிக்கையும் அரசியல் கோரிக்கைகள். அவர்களின் இந்தப் போராட்டம் முழுக்க தமிழ் தேசத்தை எழுச்சி கொள்ள வைத்த அரசியல் பணியாக முன்னேறியது. அவர்கள் காங்கிரஸ் - தி.மு.க போன்ற அரசியல் கட்சிகளை அம்பலப்படுத்தினார்கள். இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைக்கெதிராக வீதிப்போரை பிரகடனப்படுத்தினார்கள். தமிழீழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று உலக உதாரணங்களைக் காட்டி அரசியல் பேசினார்கள். ஆயுதந்தாங்கிய அரசியல் இயக்கமான விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள். இதில் எங்கு அரசியல் இல்லை. எல்லாம் அரசியல் தான்.

அரசியலை கடுமையாக வெறுக்கும் மாணவர் மனம் எப்படி இதை ஏற்றது? இந்த பிரச்சனைகளின் மீது பொதிந்துள்ள நீதியும் இது ஒரு நீதியான அரசியல் போர் என்பதை மனதளவில் அவர்கள் ஏற்றதுதான் காரணம். ஆக மாணவர்களின் விருப்பம் நீதிக்கான அரசியல். அரசியலின் பேரால் நடக்கும்; சுயநலவேட்டையையும் பிழைப்பையும் மோசடிகளையும் ஒழித்து, ஒரு நேர்மையான கொள்கைப் பற்று கொண்ட அரசியல் வேண்டும் என்பதே மாணவர் விரும்பும் அரசியல். ஆக மாணவர் வெறுப்பது அரசியலையல்ல அரசியலின் பேரால் நடத்தப்படும் வியாபாரத்தையும் லாப வேட்டையையும் தான்.

மாணவர்கள் சமூகப் பொறுப்பற்ற உதிரிக்கூட்டமாக இருந்ததையே அனைவரும் பார்த்து வந்தோம். இதை உருவாக்கியவர்கள் ஆட்சியாளர்கள் தான். மோசமான கல்விமுறை மற்றும் வியாபாரக் கல்வியின் உற்பத்தியாகவே அவர்கள் இருந்தனர். அதே மாணவர்கள் தான் பாலச்சந்திரனின் படுகொலையைக் கண்டு வெகுண்டெழுந்து மழுங்கடிக்கப்பட்ட உணர்வுகளை மீட்டுள்ளனர். இனி தமிழக மாணவர்கள் ஒரு அரசியல் சக்தி. அவர்கள் சரியான அரசியலை நோக்கி பயணப்பட வேண்டும். ஒரு மெய்யான ஜனநாயக அரசியலை நோக்கியும் விடுதலை அரசியலை நோக்கியும் பயணப்பட வேண்டும். அவர்களின் சரியான பயணம் சரியான அரசியலை நோக்கிய தேடலில் தான் இருக்கிறது.

மாணவர்கள் அரசியலைத் தேடுவது மட்டுமின்றி ஒரே கொள்கையும் லட்சியமும் கொண்ட அமைப்பாகத் திரள வேண்டும். இப்போராட்டத்தில் அறிவிக்கப்படாத ஒரு அமைப்பாக திரண்டதன் விளைவுதான் மாணவர் சக்தியாக உருப்பெற்றது. ஆனாலும் பல இடங்களில் மாணவர்கள் வகுப்புகளைக் களைத்துவிட்டு வழிகாட்டுதல் இல்லாமல் குழம்பி நிற்கக்கூடிய நிகழ்வுகளும் நேரத்தான் செய்தன. எனவே அப்படிப்பட்ட பலவீனங்களை அடுத்தகட்டப் போராட்டத்தில் களைய வேண்டுமானால் அமைப்பாதல் அவசியம். தேடுவதும், உரையாடுவதும், சரியான அரசியல் என்று அடையாளம் தெரிந்தால் அதில் இணைவதும் தான் முன்னேற்றத்தை நோக்கிய பயணமாக இருக்கும்.

சரியான அரசியலின் கீழ் சரியான கட்சி அல்லது அமைப்பாக அமைப்பாகும் வரை அந்தத் தேடல் நிற்கக் கூடாது. ஏனெனில் நமக்காக எந்த அதிகார அமைப்பும் துணைநிற்கப் போவதில்லை. கண்ணுக்குத் தெரியாத அற்புதங்களால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. நமக்கான பலம் நமது ஒற்றுமை. நமக்கான பலம் நமது கருத்தொற்றுமை. நமக்கான பலம் நமது செயல் ஒற்றுமை. நமக்கான பலம் நாம் ஒற்றை அமைப்பாக ஒரே முடிவும் ஒரே செயலும் கொண்ட அமைப்பாக மாறுவதுதான். எவராவது அமைப்பாகாதே என்று சொன்னால் அது உங்களைக் களைப்பதற்கான சதி. எவராவது அரசியல் சாக்கடை ஒதுங்கிவிடு என்று சொன்னால் அது நம்மை அரசியல் அரங்கிலிருந்து அகற்றிவிட்டு மீண்டும் சமூகப்பொறுப்பை கொடிய சக்திகளிடம் ஒப்படைக்கச் சொல்லும் சூழ்ச்சி. ஆகவே நாம் அரசியலை முன்னெடுக்க வேண்டும். ஒரே அமைப்பாக அணிதிரள வேண்டும்.

மாணவர் போராட்டமும் சில குயுக்தி அரசியலும்

இந்தப் போராட்டத்தில், தமக்கான அரசியல் கருத்துககளுடன் இயக்கம் நடத்தி வருபவர்கள், மாணவர்களுடன் தனிப்பட்ட முறையிலான நெருக்கத்தை பயன்படுத்திக் கொண்டு, மாணவர் போராட்டத்தில் “அரசியல் வேண்டாம்” என்று கிளப்பிவிட்டனர். பொதுவாக அரசியலுக்கு எதிராக வெறுப்பைக் கிளப்பிவிட்டு, தாம் மட்டும் மாணவர்களுடன் நின்று அரசியல் செய்வது என்பதே அதன் உள்நோக்கம். இப்படி குளிர்காயும் நோக்கம் வளர்ந்து யாரையும் நோட்டீஸ் கூட கொடுக்கக் கூடாது என்று விரட்ட முனைகிற ஜனநாயக விரோதமான வேலையைச் செய்தனர். கடைசியில் சில இடங்களில் அதுவே அவர்களுக்கே எதிர்வினையாக முடிந்தது. இந்த வேலை, ஒட்டுமொத்தமாக தமிழீழத்திற்காகப் பாடுபடும் இயக்கங்களையும் சேர்த்து ஒதுக்கும் இடத்திற்கு மாணவர்களைத் தள்ளியது. மாணவர்களுக்கு அரசியல் கோரிக்கைகளையும் போராட்ட உத்திகளையும் சொல்லிக்கொடுத்தவர்களையே மாணவர்கள் வெறுத்து ஒதுக்கும் நிலைக்கு அவர்கள் காரணமாயினர்.

ஆகவே மாணவர்களை நேர்மையாக வழிநடத்தவும் முன்பின் முரணற்ற அணுகுமுறைகளையும் மேற்கொள்ள வேண்டியது பொறுப்புணர்வுள்ள ஈழ ஆதரவு இயக்கங்களின் கடமையாகும். முரணற்ற வகையில் மாணவர் ஒற்றுமைக்கும்; மாணவர் போராட்டத்தை வலுப்படுத்துவதற்கும் எப்போதும் போல் சுயநலமின்றி துணைநிற்போம்.

- தங்கப்பாண்டியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.), 7708543572

Pin It