தமிழக மின்வெட்டு அரசியல் குறித்த தொடர் கட்டுரைகள்:

கட்டுரை - 1

செப்டம்பர் 15 தொடங்கி சில நாட்களுக்கு முன்பு வரை மின்சாரத் தட்டுப்பாடு குறித்து தமிழக அரசு மௌனத்தையே கடைப்பிடித்து வந்தது. அக்டோபர் 20 ஆம் தேதியன்று, 3000 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரத்திற்கான கொள்கை அறிக்கையை வெளியிட்டது. அடுத்த நாளே மின்வெட்டுக்கு, முந்தைய ஆட்சியாளர்கள் மீது குற்றம் சாட்டியது. மேலும், 31.10.2012 அன்று அடுத்த 15 மாதங்களுக்குப் பிறகு (அதாவது 2013 டிசம்பருக்குப் பிறகு) மின்வெட்டு அடியோடு நீக்கப்படும் என்றும், தமிழ்நாடு மின்மிகு மாநிலமாக மாறும் என்றும் முதல்வர் சட்டமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். இதற்கான புள்ளிவிவரங்களையும் அந்த அறிக்கையில் முன்வைத்தார். இதற்குப் பிறகு, ஏதோ மின்சாரப் பிரச்சினையே தீர்ந்துவிட்டதுபோல அனைத்து ஊடகங்களும் நடந்து கொள்கின்றன.

TNEB_370ஆனால் விரைவில் மின்கட்டண உயர்வுக்கான மனுவைத் தமிழ்நாடு மின்வாரியம் சமர்ப்பிக்கப் போகிறது. இதனுடன் கோடைகாலத்தில் ஏற்படப்போகும் கூடுதல் மின்பற்றாக்குறை சேர்ந்து கொள்ளும்போது தமிழக மக்கள் மிகக் கடுமையான அச்சுறுத்தல் சூழ்நிலையை அடுத்த சில மாதங்களிலேயே சந்திக்க இருக்கின்றனர்.

தமிழ்நாடு மின்வாரியத்தின் அண்மை மற்றும் இடைக்காலக் கடன் ரூ.19,058 கோடி ஆகும். இதனை சரிசெய்வதற்காக மத்திய அரசு செப்டம்பர் 2012 இல் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெற வேண்டுமெனில் மாநிலத்தின் மின்வழங்கல் பிரிவினைத் தனியாருக்குத் தாரை வார்க்க வேண்டும் என்பதற்கான வரைவுத் திட்டத்தை ஓராண்டுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற முன்நிபந்தனையை மாநில அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த முன்நிபந்தனை அடங்கிய திட்டத்தினைத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது; அதில் கையெழுத்தும் இட்டுள்ளது; என்றாலும்கூட, இது குறித்த தகவல்களை இன்று வரை அது தமிழக மக்களிடம் தெரிவிக்கவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், முதல்வர் கூறுவதுபோல “அடுத்த பதினைந்து மாதங்களுக்குள் தமிழகத்தின் மின்சாரப் பிரச்சினையைத் தீர்க்க முடியுமா? அது சாத்தியம்தானா?” என்பது குறித்தும் “மாநிலம் இன்று சந்தித்து வரும் மின்சாரப் பிரச்சினைக்கு யார் காரணம்? அதற்கான அடிப்படை உண்மைக் காரணங்கள் என்ன? இதற்கு என்னதான் தீர்வு?” என்பது குறித்தும் அறிவியல் அடிப்படையிலான ஆய்வினை முன்வைப்பதுவும், இதுகுறித்து தமிழக அரசு பொதுவிவாதம் ஒன்றினை நடத்த வேண்டிய உடனடித் தேவையினை வலியுறுத்துவதும்தான் இந்தத் தொடர் கட்டுரைகளின் நோக்கமாகும்.

2013 இறுதிக்குள் தமிழ்நாட்டின் மின்பற்றாக்குறையைத் தீர்க்க முடியாது 

தமிழ்நாட்டின் இன்றைய மின்உற்பத்தி 8000 மெகாவாட்டாக உள்ளது. மின்பற்றாக்குறை 4000 மெகாவாட் என்று முதல்வர் அறிக்கை தெரிவிக்கிறது. இது 40 சத மின்வெட்டு மூலம் குறைக்கப்பட்ட மின்பற்றாக்குறை என்றும் இதன் அளவு 900 மெகாவாட் என்றும் மின்வாரியம் தெரிவிக்கிறது (1). எனவே இன்றைய மின்பற்றாக்குறை 4900 மெகாவாட் ஆகவும், இன்றைய மொத்தத் தேவை 12,900 மெகாவாட் ஆகவும் இருக்கிறது. 

ஒவ்வொரு ஆண்டும் 8 சதம் அளவிற்கு மின்தேவை கூடுகிறது. எனவே அடுத்த ஆண்டில் கூடுதலாக 1032 மெகாவாட் தேவைப்படும் (12900X0.08). அதாவது அடுத்த ஆண்டில் தமிழ்நாட்டின் மின்தேவையானது 13,932 மெகாவாட்டாக இருக்கும்.

கூடங்குளத்தின் இரண்டு அணுஉலைகளில் இருந்தும் கிடைக்கக்கூடிய 925 மெகாவாட் மின்சாரத்துடன் தமிழகத்தின் பிற புதிய மின்நிலையங்கள் மூலமாக கிடைக்கப் போகிற 3,460 மெகாவாட்டையும் சேர்த்துக் கொண்டால் 2013 இறுதிக்குள் 4,385 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு அதிகமாகக் கிடைத்திருக்கும் என்று முதல்வர் அறிக்கை சொல்கிறது. இதில் கூடங்குளம் 925 மெகாவாட்டைத் தவிர 3,460 மெகாவாட் திறனுடைய ஏனைய மின்உற்பத்தி நிலையங்கள் உற்பத்தி தொடங்க சாத்தியம் உள்ளது என நம்பலாம்.

ஆக, (கூடங்குளம் நீங்கலாக) 2013 இறுதியில் மின்உற்பத்தியானது 11,460 மெகாவாட்டாக இருக்கும். ஆனால் தேவையோ 13,932 மெகாவாட். எனவே, அடுத்த ஆண்டின் இறுதியிலும் மின்பற்றாக்குறை என்பது 2472 மெகாவாட் என்ற அளவில் இருக்கத்தான் செய்யும் (2). 2012 நவம்பர் 5 ஆம் தேதியன்று முதல்வர் அறிவித்திருக்கும் 21,000 கோடிக்கான புதிய தனியார் தொழிற்சாலைகளுக்கான திட்டங்கள் அடுத்த ஆண்டின் இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் மாநிலத்தின் 2013க்கான மின்தேவை 8 சதத்தையும் தாண்டிச் செல்ல (2008 ஆம் ஆண்டில் நடந்ததைப்போல) வாய்ப்பு உள்ளது. எனவேதான் 2013 இறுதியில் தமிழகத்தின் மின்வெட்டு அறவே நீங்கும் என்ற முதல்வரின் உறுதிமொழி நடைமுறை சாத்தியமற்றதாகத் தெரிகிறது.

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழகத்தின் மின்சாரச் சூழ்நிலை எப்படி இருக்கும்?

ஆண்டுக்கு ஆண்டு மாநிலத்தின் மின்தேவை 1100 மெகாவாட் அளவுக்குக் கூடுகிறது என்று வைத்துக் கொண்டால் அடுத்து வரும் ஆண்டுகளில் மாநிலத்தின் மின்தேவை பின்வருமாறு இருக்கும்:

ஆண்டு

மின்தேவை (மெகாவாட்)

2014

15,000

2015

16,100

2016

17,200

 டிசம்பர் 2013ற்குள் வரப்போகிற கூடுதல் உற்பத்தியான 3,460 மெகாவாட்டுக்குப் பிறகு இந்த ஆண்டின் இறுதியில் (2012) புதிதாக ஒப்பந்தம் வழங்கப்படவிருக்கின்ற உடன்குடி 1600 மெகாவாட் திட்டமும், எண்ணூர் 660 மெகாவாட் விரிவாக்கத் திட்டமும் திட்டமிடப்பட்ட காலத்தில் உற்பத்தியைத் தொடங்கினாலும்கூட அவற்றின் மின்சாரத்தை 2017 ஆம் ஆண்டிற்குள் எதிர்பார்க்க முடியாது.

எனவே, அடுத்து வரும் ஆண்டுகளில் தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறை என்பது பின்வரும் அளவுகளில் இருக்கும் என்று கூறலாம்:

ஆண்டு

மின்பற்றாக்குறை (மெகாவாட்)

2013

2470

2014

3570

2015

4670

2016

5770

இந்த கணக்கின் அடிப்படையில் பார்த்தால் 2016 ஆம் ஆண்டு வரையிலுமே தமிழ்நாட்டில் மின்வெட்டு என்பது தவிர்க்க இயலாது என்பது உறுதியாகிறது (3).

2015 ஆம் ஆண்டிற்குள் 3,000 மெகாவாட் மின்சாரத்தினை சூரிய சக்தியால் உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை 2012 அக்டோபர் மாதத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

எனினும், இங்கு சூரியசக்தியினால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் தன்மையை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். சூரிய மின்சாரம் நிலையற்றது; பகலில் மட்டுமே கிடைக்கக்கூடியது; அனல் மின்உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கு மின்சாரம் மட்டுமே தரவல்லது(4). 3000 மெகாவாட் சூரிய மின்சாரக் கட்டுமானத்தைப் பகலில் மட்டுமே இயங்குகின்ற 600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்நிலையமொன்றினைப் போன்றுதான் கணக்கில் கொள்ள வேண்டும். எனவேதான் இந்த 3000 மெகாவாட் சூரிய மின்சாரக் கொள்கை அறிவிப்பானது மாநிலத்தின் எதிர்கால மின்தேவைக்குத் தீர்வாக அமைய முடியாது. அது சாப்பாட்டில் வைக்கப்படும் ஊறுகாய் போன்றது; சாப்பாட்டிற்கு இணை அல்ல – துணை மட்டுமே. எனவேதான் சூரிய மின்சாரம் வந்தாலும்கூட மாநிலத்தின் மின்சாரப் பற்றாக்குறை தீரப்போவதில்லை. மேலும், தமிழக சூரிய ஒளி மின் திட்டத்தினால் மின்சார வாரியத்திற்கும், சென்னையைத் தவிர்த்த தொழில் துறையினருக்கும், சிறு-குறு வணிகர்களுக்கும், பரந்துபட்ட மக்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் கூடுதல் கூடுதல் கேடுகள் வர வய்ப்புள்ளதேயொழிய மின்சாரப் பற்றாக்குறை தீர வாய்ப்பில்லை. ஆனால், சூரிய மின் உற்பத்தி உபகரணங்களைத் தயாரிக்கும் அமெரிக்காவின் மான்சான்டோ (சன் எடிசன்), மற்றும் வால்மார்ட் (ஃபர்ஸ்ட் சோலார்) போன்ற நிறுவனங்களுக்கு இந்தக் கொள்கை மிகுந்த வரப்பிரசாதமாக அமையும் என்று உறுதிபடக் கூறலாம். (பார்க்க – சா.காந்தி, “தமிழக சூரிய மின் கொள்கை – ஓர் ஆய்வு” – புத்தகம் – அச்சில்).

ஆகவே, இன்றைப் போலவே அடுத்து வர இருக்கின்ற ஆண்டுகளிலும் காற்றாலை உற்பத்தி ஈடுகட்டும் நான்கு மாதகாலம் மட்டுமே மின்சாரத் தட்டுப்பாடு சிறிதளவு குறையும்; அதுவும் நிரந்தரமல்ல – காற்று வீசுவதைப் பொறுத்தே அது இருக்கும்.

எனவே தமிழகத்தின் இன்றைய மற்றும் எதிர்காலத்தைய மின்சாரப் பற்றாக்குறையினைத் தமிழக அரசால் இன்று முன்வைக்கப்பட்டிருக்கும் திட்டங்களின் மூலம் தீர்க்கமுடியாது என்பது தெளிவாகிறது.

அப்படியென்றால் இதற்குத் தீர்வுதான் என்ன? என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டறிவதற்கு முன்பாகத் தமிழ்நாட்டில் 1980களின் தொடக்கத்தில் இருந்த கடுமையான மின்சாரப் பற்றாக்குறைக்கு வெற்றிகரமாகத் தீர்வினைக் கண்ட தமிழ்நாடு அரசின் கடந்த கால அனுபவத்தைத் தொகுத்துக் கொள்வோம்.

1980-களின் மின்பற்றாக்குறையை வெற்றி கண்ட தமிழக அரசு 

1980-களின் தொடக்கத்தில் இன்றைவிட அதிகமான அளவில் தமிழகம் மின்சார நெருக்கடியில் சிக்கித் தவித்தது. பொதுவாக 85 சத மின்வெட்டும், 1982 ஆம் ஆண்டின் இறுதி மூன்று நாட்களில் 100 சத மின்வெட்டும் அமல்படுத்தப்பட்ட நாட்கள்அவை; அனல் மின்நிலைய உற்பத்தியினை தொழில்நுட்பப் பிரச்சினைகளின் காரணமாக 50 சதத்திற்கு மேல் கொண்டு செல்ல முடியாதிருந்த காலம் அது. கடுமையான மின்வெட்டு இருந்த அந்த காலகட்டத்தில், இன்றைப் போலல்லாமல், மின்சாரம் எப்பொழுது வழங்கப்படும் என்பதும், எப்பொழுது வழங்கப்பட மாட்டாது என்பதும் தெளிவாக வரையறுத்துச் சொல்லப்பட்டது; சொல்லப்பட்ட கால அளவுகளை அரசு தவறில்லாமல் நிறைவேற்றவும் செய்தது.   

மின்பற்றாக்குறையைத் தீர்க்க தீவிர முயற்சியிலும் அரசு ஈடுபட்டது. பிரச்சினைக்குக் காரணம் இவர்தான் என்று குற்றஞ்சாட்ட அது எவரையும் தேடவில்லை. அதனால் எடுக்கப்பட்ட முயற்சிகளின் காரணமாக, 1983 ஆம் ஆண்டில் அனல் மின்நிலையங்களின் உற்பத்தித்திறன் 70 சதத்திற்கும் மேலாகக் கூடியது; இந்தத் தொழில்நுட்ப சாதனைக்காக தேசிய அளவில் விருதுகள் பல கிடைத்தன. இதோடு சேர்த்து, வரிசையாகப் பல புதிய மின்நிலையங்கள் திட்டமிடப்பட்டன; உரிய காலத்தில் வெற்றிகரமாகக் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன. தூத்துக்குடி விரிவாக்கம், மேட்டூர் புதிய நிலையம், வடசென்னை புதிய நிலையம் என்று புதிய மின்நிலையங்கள் அடுத்தடுத்து செயல்பாட்டுக்கு வந்தன.

1987 இல் திட்டமிடப்பட்டு 1989 இல் பணிதுவங்க இருந்த வடசென்னை 3 X 210 = 630 மெகாவாட் மின்நிலையத்திற்கான இடத்தினை வி.ஜி.பி. நிறுவனமானது தனது “தீம்பார்க்”கிற்கான இடம் என்று சொந்தம் கொண்டாடியது; உச்சநீதிமன்றத்திற்கு சென்று தனக்கு சாதகமான தீர்ப்பையும் பெற்றது. ஆனால், 1989 ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சி மாறியபோது பதவியேற்ற புதிய அரசானது வி.ஜி.பி. நிறுவனத்தினுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த இடத்தை மின்நிலையத்திற்காகத் திரும்பப் பெற்றது. 1990 இல் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்ட அதன் மூன்றாவது 210 மெகாவாட் அலகானது 24-2-1996 அன்று செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. இதுதான் மின்பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காகத் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் கொண்டு வரப்பட்ட கடைசி மின்நிலையமாகும்.

1987 ஆம் ஆண்டிற்குப் பிறகு புதிய மின்நிலையங்களுக்கான திட்டங்களைத் தமிழ்நாடு மின்சார வாரியம் தீட்டியது என்றாலும்கூட அவையாவும் வெற்றுத்தாள்களில் தீட்டப்பட்ட, செயல்வடிவம் பெறாத திட்டங்களாகவே இருந்தன. 20 ஆண்டுகள் கழித்தே - அதாவது 2007 ஆம் ஆண்டில்தான் – அதன் புதிய மின்திட்டங்களுக்கான பணி மீண்டும் உருப்படியாகத் துவங்கியது.

1996 ஆம் ஆண்டு வரை மின்சார வாரியத்தால் துவங்கப்பட்ட மின்நிலையங்களே மாநிலத்தின் அடுத்து வந்த ஆண்டுகளுக்கான மின்தேவையை வெற்றிகரமாக ஈடுகட்டின. 

இவ்வாறாகக் கடந்த காலத்தின் 85 சத மின்வெட்டைத் தமிழக அரசு வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்தது. 

2008 ஆம் ஆண்டில் மீண்டும் தலைதூக்கிய மின்பற்றாக்குறை 

2008 ஆம் ஆண்டில் 400 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் இலவசத் தொலைக்காட்சிப் பெட்டிகளைத் தமிழக அரசு வழங்கியது. தொடர்ச்சியான விளம்பரங்களினால் கவரப்பட்ட நடுத்தர வர்க்க மக்கள் அந்த ஆண்டில் 640 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் குளிர்சாதனப் பெட்டிகளையும், 127 மெகாவாட்டிற்கான குளிர்சாதனப் பெட்டிகளையும் வாங்கினர். கூடிய மின்தேவையை சில மாதங்களிலாவது சமாளிக்க உதவிடும் காற்றாலைகளாலும், அந்த ஆண்டில் காற்று பொய்த்துப் போனதால், உதவ முடியவில்லை. எனவே, கடுமையான அறிவிக்கப்படாத மின்வெட்டினை அந்த ஆண்டில் அரசு நடைமுறைப்படுத்தியது. இதனை எதிர்த்து கடுமையான அரசியல் விமர்சனங்களும், மக்கள் போராட்டங்களும் உருவாகின. இதன் காரணம் அறிவிக்கப்படாத மின்வெட்டினை 21-10-2008 அன்று 40% மின்வெட்டாக தமிழக அரசு அறிவித்தது.

power_cut_610

1987-2007 வரையுள்ள 20 ஆண்டு காலத்தில் புதிய மின்நிலையங்களைக் கட்டுவதற்கான திட்டங்களை தமிழ்நாடு மின்சார வாரியத்தால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. மத்திய மாநில அரசுகளினால் போடப்பட்ட முட்டுக்கட்டைகளே இதற்குக் காரணம். இதன் விளைவாகவே 2008 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தமிழகம் கடும் மின்பற்றாக்குறையைச் சந்தித்துக் கொண்டிருகிறது.

புதிய மின்நிலையங்களைத் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் ஏன் தொடங்க முடியவில்லை? 

1991 ஆம் ஆண்டில் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட தாராளமயமாதல் பொருளாதாரக் கொள்கையே 2008 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுக்கான அடிப்படைக் காரணமாக இருக்கிறது.

1992-97 கால கட்டத்தில் வந்த எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் புதிய மின்உற்பத்திக்காக இதுவரையில் ஒதுக்கப்பட்டு வந்த மூலதன ஒதுக்கீடு அனைத்தையும் மத்திய அரசு ரத்து செய்தது. மாநில மின்வாரியங்களும், தேசிய அனல் மின்உற்பத்திக் கழகமும் (என்.டி.பி.சி) புதிய மின்நிலையங்களைத் துவக்குவதற்கான அனுமதியை மறுத்தது.

எதிர்கால மின்தேவையைத் தனியார் மின்நிலையங்கள் மூலம்தான் ஈடு செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டளையை அது மாநிலங்களுக்குப் பிறப்பித்தது. அத்தோடு நிற்காமல், பிரிவு 43 ஏ என்றழைக்கப்படும் சட்டத் திருத்தம் ஒன்றினையும் கொண்டு வந்தது. தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் விலையை நிர்ணயிக்கும் வரையறைகளை அந்த சட்டத் திருத்தம் முன்வைத்தது. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொள்முதல் தனியாரின் கொள்ளை லாபத்தாகத்திற்கு ஏதுவாக அமைந்ததே தவிர மின்வாரியத்தின் நலனுக்கோ, அல்லது மக்களின் நலனுக்கோ ஏற்றதாக அமையவில்லை.

சுதந்திர இந்தியாவில் இயற்றப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தினால் பொதுப்பட்டியலில் வைக்கப்பட்ட துறைகளில் ஒன்றுதான் மின்சாரத் துறையாகும். எனவே, இந்தத் துறையின் செயல்பாடுகளைத் தீர்மானிப்பதற்கான உரிமையை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆகிய இரண்டுமே கொண்டிருக்கின்றன.

என்றாலும்கூட, 1990-களில் மாநில மின்வாரியங்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் சட்டங்களையும், செயல்திட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு எதிர்க்கவில்லை. மாறாக, அவற்றை நிறைவேற்றுவதற்கான தன் முழு ஒத்துழைப்பையும் அது வழங்கியது.

2000-01 ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு மின்சார வாரியமானது லாபத்தை ஈட்டிக் கொண்டிருந்த நிறுவனம் ஆகும்; அந்த ஆண்டில் அது 387.67 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டியது. ஆனால் 2001-02லிருந்து இன்றுவரை (2002-03 நீங்கலாக) அது தொடர்ச்சியாக கடும் நஷ்டத்தை மட்டுமே சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் மத்திய அரசின் தாராளமயமாதல் கொள்கைக்கு மாநில அரசால் அளிக்கப்பட்ட ஒத்துழைப்பேயாகும். இதில் மாநிலத்தை அரசாண்ட இரண்டு கட்சிகளும் ஒன்றுபோலவே செயல்பட்டன; இந்திய அரசியல் சட்டத்தினால் மின்சாரத் துறையானது பொதுபட்டியலில் வைக்கப்பட்டிருந்த காரணத்தால் மாநிலத்திற்குக் கிடைத்த உரிமைகளை ஆளும் கட்சிகள் தாமாகவே முன்வந்து காற்றில் பறக்கவிட்டன.

1991-92 ஆம் ஆண்டுகளில் தனியாரை மின்துறையில் முதலீடு செய்யுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டது. 42 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஆனால் அவை நடைமுறைக்கு வரவில்லை. 1996 வரை எந்தத் தனியார் நிறுவனமும் தமிழ்நாட்டின் மின்துறையில் முதலீடு செய்யவில்லை. அந்த ஆண்டில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வந்தது. புதிதாக வந்த அரசு 1996-98 காலகட்டங்களில் ஆறு தனியார் நிறுவனங்களுடன் மின்கொள்முதல் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தங்கள் யாவும் தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே அனைத்து வகையிலும் சாதகமாக அமைந்தன. இவற்றில் மொத்தம் 988 மெகாவா திறன் கொண்ட ஐந்து நிறுவனங்கள் 1998-2002 காலகட்டத்திலிருந்து இயங்கத் தொடங்கின; வெறும் 40 சத மின்உற்பத்தியை மட்டுமே செய்தன; இந்த மின்சாரத்தை மிகவும் கூடுதலான விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தமிழ்நாடு மின்சார வாரியத்தைத் தமிழ்நாடு அரசு தள்ளியிருந்தது. இதன் பின்னரே, மின்சார வாரியம் பெருத்த நஷ்டத்தில் மூழ்கத் தொடங்கியது. 2011-12 ஆம் ஆண்டுக்குள் அதன் நஷ்டம் 53,298 கோடி ரூபாயாக உயர்ந்து போனது.

இவ்வாறு மத்திய, மாநில அரசுகளால் திட்டமிடப்பட்டு நஷ்டத்தில் மூழ்கடிக்கப்பட்ட தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அந்த அரசுகளை எதிர்த்துப் புதிய மின்நிலையங்களை எவ்வாறு உருவாக்க முடியும்?

***

இரண்டாம் கட்டுரை: தமிழகத்தின் மின்பற்றாக்குறைக்கு யார் காரணம்? எது காரணம்?

***

ஆதாரமும், விளக்கங்களும்:

1) PP&AP 2 &3/2012

2) கூடங்குளத்தில் உள்ள வி.வி.இ.ஆர் 1000 வகை அணுஉலை ஒவ்வொன்றின் அதிகபட்ச இயங்குதிறன் 80% ஆகும். அதாவது பிரச்சினைகளின்றி அது இயங்கினால் 800 மெகாவாட் மின்சாரத்தையே அதனால் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்த மின்சாரத்தில் அதன் கடல்நீர் உப்பகற்றி ஆலைகளை இயக்குவதற்கே சுமார் 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அணுஉலையின் இயக்கத்திற்கும், அது தொடர்பான மின்இயந்திரங்களின் இயக்கத்திற்கும் (auxillary consumption) மேலும் ஒரு 100 மெகாவாட் தேவைப்படும். எனவே, ஒரு அணுஉலையில் இருந்து கிடைக்கப் போவது என்னவோ 600 மெகாவாட் மின்சாரம்தான்.

கூடங்குளம் மின்நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வாய்ப்பிருப்பதாக சமீபத்தில் (!) கூறப்படும் பங்கு 70% ஆகும். முதல் உலையின் 1000 மெகாவாட்டில் இருந்து கிடைக்கும் 600 மெகாவாட்டில் தமிழ்நாட்டின் 70% பங்கு என்பது 420 மெகாவாட் ஆகும். 2013 ஜனவரியில் இருந்து அது இயங்க ஆரம்பிக்கிறது என்றால் படிப்படியாகவே அதன் 80% இயங்குதிறனை அதனால் அடைய முடியும். இதற்கு 2015 ஆம் ஆண்டுவரை ஆகலாம். அதுவரை அதனால் அதன் 30-50% இயங்கு திறனிலேயே இயங்க முடியும். எனவே, 2015 ஆம் ஆண்டு வரையிலுமே முதலாம் அணுஉலையில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வாய்ப்புள்ள மின்சாரம் என்பது 126 மெகாவாட்டில் இருந்து 210 மெகாவாட்டாகத்தான் இருக்க முடியும். பயனீட்டாளர்களை இந்த மின்சாரம் வந்தடையும்போது ஏற்படும் 22% கம்பி இழப்பில் இழந்த மின்சாரம் போக கிடைக்கப் போவதென்னவோ 98 மெகாவாட்டில் இருந்து 164 மெகாவாட்டாகத்தான் இருக்கும்.

இரண்டாம் அணுஉலை 2013 ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் துவங்கினால், அதிலும் நமக்கு 70% பங்கு கொடுக்கப்படால், 2015 ஆம் ஆண்டின் இறுதியில் இவ்விரண்டு அணுஉலைகளில் இருந்தும் நமக்கு உத்தேசமாக 200 மெகாவாட்டில் இருந்து 330 மெகாவாட் வரை கிடைக்கும். 2015க்குப் பிறகு இந்த அணுஉலைகள் அவற்றின் 80% இயங்குதிறனை அடையும்போது சுமார் 750 மெகாவாட் மின்சாரத்தை தமிழகம் எதிர்பார்க்கலாம்

கூடங்குளம் அணுஉலைத் தொழில்நுட்பம் என்பது இந்தியாவிற்குப் புதிய தொழில்நுட்பம் என்பதால் முதல் சில ஆண்டுகளுக்கு இந்தத் தொழில்நுட்பத்தினைக் கைக்கொள்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும் என்பதை நாம் எதிர்நோக்க வேண்டும். கல்பாக்கம் அணு உலைகள் அவற்றின் முதல் 15 ஆண்டுகளில் 30% திறனுக்கும் அதிகமாக இயங்கவில்லை என்பதை இங்கு நினைவில் வைப்பது அவசியம். எனவேதான், கூடங்குளம் மின்சாரத்தை 2015 வரையிலுமே உறுதியான ஒன்றாக எடுத்துக் கொள்ள முடியாது.

3) கூடங்குளம் அணுஉலைகள் இரண்டுமே எதிர்பார்க்கப்படும் ரீதியில் இயங்கினால்கூட தமிழகத்திற்கான அவற்றின் பங்களிப்பு 2015 வரை 200-330 மெகாவாட்டாகத்தான் இருக்கும். அதன்பின்னரும்கூட, அவற்றிலிருந்து 750 மெகாவாட்டிற்கு மேல் தமிழகத்தால் எதிர்பார்க்க முடியாது. எனவே, 2013-2016 காலகட்டத்தில் ஏற்படவுள்ள மின்சாரப் பற்றாக்குறையான 2400 – 5700 மெகாவாட்டைக் குறைக்க அவற்றால் பெரிதளவில் உதவ முடியாது என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. 

4) 3000 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்நிலையம் ஒன்றால் ஆண்டுக்கு 21,000 மில்லியன் யூனிட்டைக் (3000 X 7 million Units) கொடுக்கும்; ஆனால், அதே 3000 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சாரக் கட்டுமானத்தில் இருந்து நாம் வெறும் 4,500 மில்லியன் யூனிட் (3000 X 1.5 million Units) மின்சாரத்தையே எதிர்பார்க்க முடியும்.

- சா.காந்தி

Pin It