சாதி மறுப்புத் திருமணங்கள் - பா.ம.க.வின் கனவும், சிறுத்தைகளின் சிக்கலும் - பகுதி 2

வன்னிய ஆதிக்க சாதி வெறிக்கு எதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வை அமைப்பாக்கிய விடுதலைச் சிறுத்தைகளின் செயல்பாடு சாதி, தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளில் தவிர்க்கவியலாத வரலாற்றுப் பாத்திரமாகும்.

தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வின் வெளிப்பாட்டால் கட்டமைக்கப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள், தமது செயல்பாட்டின் ஊடாக, விளைவாக தாழ்த்தப்பட்ட மக்களின் சாதி தீண்டாமைக்கு எதிரான உணர்வை மேலும் மேம்படுத்தியது. இதனால் பெரும்பான்மை தாழ்த்தப்பட்ட மக்களின் செல்வாக்கு மிக்க அமைப்பாகவும் அது திகழ்ந்தது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வன்னிய ஆதிக்க சாதி வெறியை தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர் கொண்டே வருகின்றனர். இந்த ஆதிக்க சாதிவெறி பார்ப்பனியமாக அமைப்பாக்கப்பட்டிருந்தாலும், இதன் செயல் தளம் கிராம அளவிலானதாக சுருங்கி இருந்தது.

thirumavalavan_ramadoss_500

ஆனால் வன்னிய ஆதிக்க சாதி வெறி பாமக - வினால் மாநில அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு, அதன் எல்லை பரந்து விரிந்த போது, இதற்கு முன்பு வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவிற்கு அது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியது.

வெள்ளையர் ஆட்சிக் காலத்திலிருந்து சட்டப்பூர்வமாக கிடைத்த வாய்ப்புகள், உரிமைகளினால் தாழ்த்தப்பட்ட மக்கள் அடைந்த வாழ்வாதார நலன்களை பல இடங்களில் அமைப்பாக்கப்பட்ட வன்னிய ஆதிக்க சாதிவெறி, தனது கோரப்பசிக்கு இறையாக்கிக் கொண்டது.

இந்த வன்னிய ஆதிக்க சாதி வெறியை எதிர்த்துப் போராடி முறியடிக்காவிட்டால், தாங்கள் உயிர் வாழக்கூட முடியாது என்ற நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களின் இந்த உணர்வை அமைப்பாக்கி, வன்னிய ஆதிக்க சாதிவெறிக்கு வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவிற்கு சில இடங்களில் பதிலடி தந்தனர் விடுதலைச் சிறுத்தைகள். இந்த எதிர்தாக்குதல் ஒப்பீட்டளவில் சிறியதே ஆயினும் காலம், காலமாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமே இழப்பை ஏற்படுத்தி இருமாந்திருந்த வன்னிய ஆதிக்க சாதி வெறிக்கும்பலுக்கு, இது முற்றிலும் புதியது என்பதால் இதை எதிர்கொள்ள முடியாமல் அது திணறியது, அஞ்சி நடுங்கியது.

 தமது இந்த சிறு எதிர்வினையாற்றலைக்கூட எதிர்கொள்ள வக்கற்ற ஆதிக்கசாதிவெறி கும்பலின் பலவீனத்தை அறிந்து கொண்டதால், ஏற்பட்ட உற்சாகம் தாழ்த்தப்பட்ட மக்களிடையே காட்டுத்தீயாய் பற்றிப் பரவியது பட்டி, தொட்டியெங்கும் விடுதலைச் சிறுத்தைகளாக அவர்கள் தம்மை அமைப்பாக்கிக் கொண்டனர்.

 இதன் காரணமாக வன்னிய ஆதிக்க வெறியின் அடையாளமான பாமக, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தனது செயல்பாடு தற்கொலைப்பாதை என்பதை உணர ஆரம்பித்தது. இந்த உணர்வின் வெளிப்பாடுதான், பாமகவை தாழ்த்தப்பட்ட மக்களோடு அரசியல் ரீதியான கூட்டு என்ற நயவஞ்சக நாடகத்தை நடத்த வைத்தது. அமைப்பாக்கப்பட்டு மாநில அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதிக்க சாதி வெறித்தாக்குதல் வடிவத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு முந்தைய கிராம அளவிலானதாக சுருக்கிக் கொண்டது.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தனது நயவஞ்சக நாடகத்தில் திருமாவளவனை பங்கேற்க வைத்ததன் மூலம், ஆதிக்க சாதி வெறிக்கு எதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வின் வெளிப்பாடாக திகழ்ந்த விடுதலை சிறுத்தைகளை தனது பாத்திரத்தை கைவிட வைத்தது.

தமது செயல்பாட்டுக்கான தளத்தை கைவிட்டதும் வேறொரு ஆதாயத்தை அதாவது அரசியல் கட்சிகளோடு தேர்தல் கூட்டு என்ற அங்கீகாரத்தை விடுதலைச் சிறுத்தைகளுக்கு பெற்றுத்தந்தது. இதன் மூலம் சிறுத்தைகள் பொருளாதார ஆதாயங்களை அடைந்தாலும், தாழ்த்தப்பட்ட மக்களிடையே தம‌து செல்வாக்கை இழக்க ஆரம்பித்தது. விடுதலைச் சிறுத்தைகளுக்கு கிடைத்த பொருளாதார ஆதாயங்கள் பெருமளவில் அரசு எந்திரத்தோடு ஏற்பட்ட உறவின் மூலம் கிடைத்தது . இது படிப்படியாக வளர்ந்து அரசு எந்திரத்திற்கான தரகு வேலை பார்ப்பதே விடுதலைச் சிறுத்தைகளின் பிரதான வேலையாக, அலுவலாக மாறிப்போனது.

 சாராம்சத்தில் இது விடுதலைச் சிறுத்தைகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைத்த துரோகமாகும். இதன் காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து மேலும், மேலும் தனிமைப்பட்டு அவர்களிடையே செல்வாக்கை இழக்க ஆரம்பித்தனர்.

மக்கள் நலன்களைப் பாதுகாக்கவும், அதற்காகப் போராடுவதற்கும், தம்மை அர்பணித்துக் கொள்வதற்கு மட்டுமே எந்த ஒரு தனிநபருக்கும், அமைப்புகளுக்கும் உரிமை உண்டு. மக்கள் நலனை பாதிக்கும் எந்த காரியத்திலும் ஈடுபட எவருக்கும் உரிமையில்லை.

 சாதி தீண்டாமையை எதிர்த்த தாழ்த்தப்பட்ட மக்களின் நெடும்பயணத்தில் வன்னிய ஆதிக்க சாதி வெறித்தாக்குதலுக்கு எதிராக பதிலடி கொடுப்பது என்பதோடு விடுதலைச் சிறுத்தைகளின் பாத்திரம் நிறைவு பெற்று விட்டது. இந்த அளவில் மட்டுமே விடுதலைச் சிறுத்தைகளுக்கு தாழ்த்தப்ப‌ட்ட மக்கள் தமது அங்கீகாரத்தை வழங்கியும் இருந்தார்கள்.

 இந்த வரம்பிற்கு மேல் சாதி தீண்டாமை ஒழிப்பில் சிறுத்தைகள் பங்காற்றவும் முடியாது.

ஆதிக்க சாதி வெறித் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது என்ற தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்வினையாற்றல் நடவடிக்கையின் உள்ளடக்கம் பெருமளவில் தற்காப்பு என்பதே ஆகும், இதுவே சாதி தீண்டாமையை ஒழித்து விடாது.

 சாதி, தீண்டாமை நீடிப்பதற்கான அடிப்படையை சமுக மாற்றத்தின் மூலமே அகற்ற முடியும், இதை தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே தனித்து நின்று சாதித்து விடமுடியாது. இதை சமுகத்தில் உள்ள பெரும்பான்மை மக்களின் ஒருங்கிணைப்பின் முலமே அடைய முடியும்.

 விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள், சாதி தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளில் ஆதிக்க சாதி வெறியை கட்டுப்படுத்துதல் என்ற வகையிலான பாத்திரமே ஆற்ற முடியும்.

இது நிலவுகிற சமுக அமைப்பிற்கு உள்ளேயே ஆற்றும் பாத்திரமாகும். ஆகவே இது சாராம்சத்தில் நிலவுகிற சமுக அமைப்பை ஏற்கும் சீர்திருத்த நடவடிக்கையே ஆகும். நிலவுகிற சமுக அமைப்பை தூக்கி எறியாத சீர்திருத்த நடவடிக்கையின் உள்ளடக்கம், சாதி இருக்க சாதியினால் எழும் விளைவுகளை கட்டுபடுத்துவது என்பதே. அதாவது சாதியின் செயல்பாட்டு வடிவத்தை மாற்றுவதாகும்.

சாதிகள் இருக்கும் வரை அதன் பிரிக்க முடியாத அங்கமான தீண்டாமையும் நீடிக்கவே செய்யும். அவைகள் வடிவ மாற்றங்களை மட்டுமே ஏற்படுத்திக் கொள்ளும். இதன் காரணமாகத்தான் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்டவர்கள் சாதி தீண்டாமை ஒழிப்பில் தமது வரலாற்றுப் பாத்திரத்தை தாண்டித் செயல்பட முனையும் செயல்பாடுகள் அனைத்தும் அவர்களைத் தவிர்க்கவியலாமல் பிழைப்புவாத புதைகுழிக்குள்தான் தள்ளிவிடும்.

எனவே விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகளின் பிழைப்புவாதத்திற்கான அடித்தளம் அவர்களின் அரசியல் பாதையில் தான் கருக்கொண்டுள்ளது.

எந்த ஒரு அமைப்பினதும், குழுவினதும் பிழைப்புவாதமும் தனி மனிதர்களின் விருப்பு, வெறுப்புகளிலிருந்து உருவாவதில்லை. விடுதலைச் சிறுத்தைகளின் பிழைப்புவாதமும் திருமாவளவன் என்ற தனி மனிதரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பது எமது கண்ணோட்டமோ, கருத்தோ அல்ல. உண்மையிலேயே, மனப்பூர்வமாக தங்கள் சமூக நலன்களுக்காக பாடுபட வேண்டும், அதற்காக தம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினாலும் கூட, இவர்களின் இந்த விருப்பமே அதை நிறைவேற்றிவிடாது. அதற்கு மாறாக தாங்கள் அடைய விரும்பும் இலக்கும், அதை அடைவதற்கு அவர்கள் தெரிவு செய்து கொள்ளும் வழிமுறைகளுமே இதைத் தீர்மானிக்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களை பிரதிபலிக்கும் அமைப்பாக தாம் தொடர வேண்டும் என திருமாவளவன் கருதியிருந்தால், வன்னிய ஆதிக்க சாதிவெறி அமைப்பான பாமக ராமதாசுடன் ஒப்புர‌வு நாடகமாடியிருப்பாரா?

வன்னிய ஆதிக்க சாதி வெறியால் அன்றாடம் பல்வேறு வடிவங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே, இருசாதி மக்களிடையே எவ்வித ஒப்புர‌வும் ஏற்படாதபோது ராமதாசும், திருமாவளவனும் ஒப்புர‌வு கொண்டாடியதை தமது விருப்பத்திற்கு மாறானது என்று தாழ்த்தப்பட்ட மக்கள் கருதியதில் என்ன தவறு இருக்கிறது?

தாழ்த்தப்பட்ட மக்களின் இந்த கருத்தைத்தானே இப்போதுமட்டுமல்ல அப்போதும் எங்களைப் போன்றோர் வெளிப்படுத்தினோம்.

தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலைச் சிறுத்தைகளுக்கு வழங்கிய அங்கீகாரத்தை, தேர்தல் பங்கேற்பு, அரசியல் கட்சிகளோடு கூட்டு என்று அவர்கள் வரம்பு மீறி தவறாகப் பயன்படுத்திய போதே, இது உங்களை பிழைப்புவாத புதை சேற்றில் தள்ளிவிடும் என்று பலரும் எச்சரித்தபோது, இதை ஏற்க மறுத்து, 'போராட்டங்களினால் மேல்சாதி மக்களோடு பகையும், வழக்குகளுமே வந்து சேர்கிறது. அதற்கு மாறாக அவர்களோடு இணைந்து நின்று தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தால்தான் சாதி, தீண்டாமையைக் கட்டுப்படுத்த முடியும்' என்று தானே தமது செயலை நியாயப்படுத்தினார்கள்.

ஆதிக்க சாதி அமைப்புகள் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாமல் மக்களிடமிருந்து தனிமைப்பட்டாலும், மக்களிடம் தாம் இழந்த செல்வாக்கை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான ஆதிக்க சாதி வெறியை தூண்டுவதன் மூலம் மீண்டும் நிலை நாட்டி விட முடியும் என்பதை தர்மபுரி நிகழ்வின் ஊடாக பாமக நிரூபித்துள்ளது.

இதை எங்களைப் போன்றோர் அன்றே கூறி எச்சரித்தோமே, அதை ஏன் திருமாவளவன்கள் ஏற்கவில்லை?

'இந்திய சமுதாயத்திற்குப் பொருந்தாத வெறும் பொருளியல் அடிப்படையிலான மார்க்சிய கண்ணோட்டமுடைய' எங்களால் கூற முடிந்ததை, 'இந்திய சமுதாயத்திற்குப் பொருந்தும் சித்தாந்த அடிப்படையைக்' கொண்டவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் தடுத்தது எது?

தொடரும்...

- சூறாவளி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., தொடர்பு எண்:9842529188)

Pin It