மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஏற்படுவது காதல். இந்த காதல் இல்லையேல் உலகம் இல்லை என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால் காதலுக்கு பால் வேறுபாடு ஒன்று மட்டுமே போதும். அதாவது ஒரு ஆணும் பெண்ணும் காதல் கொள்வது இயற்கையே. இது விலங்காக இருந்த மனிதனுக்கு சரி.

தற்போதைய மனிதன் சிந்தனையாலும் செயலாலும் சிறப்பு பெற்று நாகரிகத்தின் உச்சிக்கு சென்று கொண்டிருக்கிறான். எனவே தாயென்றும் தாரமென்றும் வேறுபடுத்தி பார்க்க பழகியிருக்கிறான். சகோதரத்துவத்தை பொருளோடு உணரக் கூடியவனாக இருக்கிறான். எனவே தான் விலங்கொத்த காதலை தவிர்த்து எல்லையோடு கூடிய காதலுக்கு விளைகிறான்.

ஆனால், சமூகத்தை ஆண்டான் - அடிமையென்றும், மேலோர் - கீழோர் என்றும் அமைத்து ஆண்ட வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட ஜாதியும், மதமும் இந்த எல்லைகளாக மாறும்போது, மனிதனது அத்தனை வளர்ச்சிகள் மீதும் கேள்வி கேட்கப்பட வேண்டியுள்ளது. அதி நவீன இன்டர்நெட்டை அதே ஜாதியில் வரன் பார்க்க பயன்படுத்துவதுதானே நமது சமூகம் கண்ட அறிவியல் வளர்ச்சி.

தருமபுரி அருகே  இரு ஜாதியைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதால், வெறி கொண்ட ஜாதி வெறியர்களின் தூண்டுதலால் நத்தம் காலனி, கொண்டம்பட்டி, அண்ணாநகர் ஆகிய 3 தலித் குடியிருப்புகள் முற்றிலும் சூறையாடப்பட்டு குடிசைகளுக்குத் தீ வைக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன. போலீசையோ, அதிகாரிகளையோ பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்ல விடாமல் தடுத்து கொலைவெறி தாண்டவமாடியுள்ளனர்.

dharmapuri_attack_426

அந்த மக்களின் உழைப்பினால் சேர்க்கப்பட்ட சிறிய வாழ்வு கூட முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. அவர்களது வாகனங்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளன. மாற்று துணி கூட உடுக்க முடியாத நிலையில் அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்வது எனத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர். சொந்த நாட்டில், சொந்த ஊரில், ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டு மண்டியிட்டு கிடந்த மண்ணில் மீண்டும் மண்டியிட வைக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

திருமணம் செய்து கொண்ட காதலர்கள் அவர்களிடத்தில் சிக்கியிருந்தால் நிச்சயமாக ஒரு கௌரவக் கொலை நடந்திருக்கும். தலித் மக்கள் பயந்துபோய் அமைதியாக ஒளிந்து கொண்டதால் மோதல் வெடிக்கவில்லை. மாறாக ஏதாவது நடந்திருந்தால் உயிர்பலிகள் ஏற்பட்டிருக்கும். தங்களது உடமைகள் சிதைக்கப்படும்போது, அழிக்கப்படும் போது ஏன் என்று கேட்க நாதியற்று உயிருக்கு பயந்து ஓடுபவர்களாகத்தான் இன்றைக்கும் தமிழகத்தில் தலித்துகள் இருக்கிறார்கள் என்பதை இது வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டதால் ஆத்திரத்தில் நடந்தது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த ஊடகங்களும் அவற்றை முன்னிறுத்தும் ஒரு பிரிவினரும், ஏன் அரசாங்கமே கூட முனைகிறது.

போலீசார் உள்ளே சென்ற பின்பு போலீசாரே பாதிக்கப்பட்ட மக்களை மிரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சில அதிகாரிகள்கூட இவ்வாறான செயலில் ஈடுபட்டிருக்கலாம். இது போலீஸ், அரசு நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் ஜாதி இரண்டற முன்பை விட வேகமாக கோலோச்சுவதையே காட்டுகிறது.

அந்த பெண்ணின் தாயார் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கில், அவரது கணவரின் தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார்? அவரிடத்தில் ஜாதி வெறியைத் தூண்டி மாற்று ஜாதியில் மகள் திருமணம் செய்து கொண்டதால் உனது மேன்மை அழிந்துவிட்டது எனத் தூண்டி விட்டவர்கள் தானே அவரது தற்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள். தாழ்ந்த ஜாதிகாரனுக்கு மகளைக் கொடுத்து விட்ட துப்பு கெட்ட மனுஷன் என்று அவரை இழித்துப் பேசிய அவரது ஜாதிக்காரர்கள் தானே அவரது தற்கொலைக்கு பொறுப்பானவர்கள்.

ஆனால் இந்த வன்முறையை உற்று நோக்கினால் இது தங்களது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த அவர்கள் மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் ஓர் உச்சம் என்றுதான் சொல்ல முடியும். ஒரு நீண்டகால பகையினால் நடைபெற்ற போர். தலித் மக்களின் சிறிதான பொருளாதார வளர்ச்சியே அவர்களுடைய கண்ணைக் குத்தியுள்ளது என்பது தான் இதன் பின்னணியாக இருக்கிறது.

அரசு வந்து வன்செயலில் ஈடுபட்டவர்களுக்கு ஆறுதல் கூறலாம். நிதியுதவிகள் செய்யலாம். ஆனால் அந்த பகுதி மக்கள் மீது தொடுக்கப்பட்ட இந்த போரை அவர்களால் ஆண்டாண்டு காலத்துக்கு மறக்க முடியாது. இந்த நிகழ்வை உதாரணமாக எடுத்துக் கொண்டு செயலில் இறங்க தமிழகத்தில் பல கிராமங்கள் தயார் நிலையில் இருக்கின்றன என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். வட மாநிலங்களில் நடக்கும் கௌரவக் கொலைகள் இதற்கு உதாரணம்.

உயர் ஜாதி என்று சொல்லி சமூகத்தை ஆண்டு கொண்டிருந்தவர்களிடமிருந்து விடுபட்டு தலை நிமிர ஒரு பெரியாரும் இடதுசாரி இயக்கத் தலைவர்களும் வழிகாட்டினர். ஆனால், உயர் ஜாதியினரிடமிருந்து விடுபட்ட மக்கள் தங்களுக்கு கீழே சேவை செய்ய, அடிமைப்படுத்த, தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்த தங்களுக்கு கீழ் உள்ளோரை நசுக்கி, அடக்கி வைக்க நினைக்கும் கொடூரப்போக்கு தற்போதும் காணப்படுகிறது. இந்த போக்கு இடதுசாரிகளின் செல்வாக்கு குறைந்துள்ள பகுதிகளில் வேகமாக அதிகரித்து வருகிறது.

எனவே இதற்கு எதிரான ஒரு மாபெரும் சமூகப் போராட்டத்தை தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் துணிந்து மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்தப் போராட்டத்தில் தமிழகத்தில் செயல்படும் எத்தனை அரசியல் கட்சிகள் துணிந்து கைகொடுக்கும் என்பது கேள்விக்குறியே. ஒரு வேளை அவை தங்களது ஓட்டு வாங்கிகளுக்காக வெற்று அறிக்கைகளோடு நிறுத்திக் கொள்ளலாம். தலித்களுக்கான கட்சிகள் என்று தங்களை கூறிக் கொள்வோர்கூட சமரசம் செய்து கொள்ளலாம். ஆனால் களத்தில் சமர் புரியும் கம்யூனிஸ்ட்கள் என்றும் துணை நிற்பார் என்பது திண்ணம்.

நாடகத்தில் காவியத்தில் காத லென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்;
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்;
பாரினிலே காதலெனனும் பயிரை மாய்க்க
மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடரெய்திக் கெடுகின் றாரே.

எனக் காதலின் புகழ் பாடிய பாரதிதான் சமூகக் கொடுமைக்கு எதிராக 'ரௌத்திரம் பழகு...' என்றான்.

- மிகையிலான்

Pin It