மார்க்சியர் என்று சொல்லிக் கொண்டு வரலாற்றின் திறவுகோலைத் தங்கள் காற்சட்டைப் பின்புறப்பையில் வைத்திருப்பதாக நினைக்கிறவர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள்! ஏகலையும்(Hegal), ரிக்கார்டோவையும் பின்பற்றுகிறவர்களைப் போன்றவர்களிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுங்கள்! கோட்பாட்டுப் பணிக்கான விலகல் புள்ளி இனியும் மெய்ம்மை இல்லை; ஆனால் கோட்பாடு வல்லுநர் எந்த வடிவில் அதைச் செம்மைப்படுத்தினாரோ அந்தக் கோட்பாடு புதிய வடிவில் இருக்கும்போது எவ்வாறு சிதைகிறது என்பதை மார்க்சைக் காட்டிலும் மிக நன்றாகப் புரிந்து கொண்டவர்கள் அரிது.

‘இந்தக் கோட்பாடு அடிக்கடி மெய்நடப்போடு கொண்டுள்ள முரண்பட்ட உறவால்’ மதிப்புக்குலைக்கப்பட்ட சீடர்களின் அருங்காட்சியை நல்லவேளையாக மார்க்ஸ் காணவில்லை; மேலும் அவரது கோட்பாடு ‘அனுபவ வாதத்தாலும்’, ‘புலமைச் செருக்கு வழியிலான சொற்றொடர்களாலும்’, ‘தந்திரமான விவாதத்தாலும்’ இன்னமும் கூடச் சரியானது என்று விளக்கிக் காட்டும்படி தள்ளப்படுவதிலிருந்தும் அவர் தப்பித்துக் கொண்டு விட்டார். (எங்கெல்சை நம்பியாக வேண்டுமென்றால்)

karl_marx_340நல்லவேளையாக மார்க்ஸ், ‘எல்லாவற்றுக்கும் மேலாக’ ஏதாவது ஒரு வழியில் முதலாளிய சமூகத்தைத் தூக்கி ஏறிவதைத் தன் வாழ்க்கைப் பணியாகக் கொண்ட ஒரு புரட்சியாளராக இருந்த மார்க்ஸ், உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்காக மெய்யாகத் தேவைப்படுவது விழுமியங்கள் விலைகளாக உருமாற்றம் பெறுவதைப் பற்றியும், ஆதாய (இலாப) வீதம் வீழ்ச்சி அடைவதற்கான போக்கைப் பற்றியும் சரியாகவே மதிப்பிட்டார் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது; இதை இருபதாம் நூற்றாண்டு அறிவாராய்ச்சி வெளிப்படுத்துவதை மார்க்ஸ் காணத்தவறி விட்டார்.

இன்றைக்கு மார்க்சின் வாழ்நாள் பணியைத் தொடர்வது எப்படி? மேலும் முதலாளியத்தைத் தூக்கி ஏறிய நமது பங்களிப்பு என்ன? உழைக்கும் வர்க்கம் தனது சொந்த நிலையையும், தனது தேவைகளையும் விழிப்புணர்வோடு அறிவதற்கும், தன் விடுதலைக்கான நிலைமைகளை விழிப்புணர்வோடு அறிவதற்கும் நாம் எவ்வாறு உதவ முடியும்?

பல ஆண்டுகளுக்கு முன்பு ‘முதலாளியம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதற்கான காரணம் என்ன?’ என்ற தலைப்பில் ஓர் உரையாற்றினேன்; அது உடனே மன்த்லி ரிவியூ (Monthly Review சூன்2004) இதழில் வெளியிடப்பட்டது. அதில் நான் இரண்டு தலையாய சிறப்பியல்புகளை வலியுறுத்தினேன். முதலாவதாக மூலதனம் என்ற மார்க்சின் நூலிலிருந்து நாம் ஏதாவது புரிந்து கொண்டிருக்கிறோம் என்றால் மூலதனத்துக்குத் தேவையான உழைக்கும் வர்க்கத்தை மூலதனத்தின் இன்றியமையாத தேவைகளை தமக்குத் தாமே சான்றளிக்கும் இயற்கை விதிகளாகப் பார்க்கும் தொழிலாளர்களை உற்பத்தி செய்ய அது முயல்கிறது (tends) என்பதாகவே அது இருக்கும் ஏன்? அந்த கருத்து மெய்யாகவே எளிமையானது.

அ) கூலி என்பது செய்த வேலையின் அளவுக்கான சம்பளமாகக் கொடுக்கப்படுவதாகவே இன்றியமையாது தோன்றுகிறது. இவ்வாறாக அது சுரண்டலின் சுவடுகூட இல்லாமல் அழிக்கிறது.

ஆ) நியாயத்தைப் பற்றியும் நேர்மையைப் பற்றியும் நிலவுகிற எல்லா எண்ணப்போக்குகளும் உழைப்பைப் பணத்துக்காகப் பரிமாற்றம் செய்து கொள்ளுவதைப் பற்றிய இந்தத் தோற்றத்தின் மீது தான் கட்டமைக்கப்பட்டுள்ளன

இ) உழைப்பின் உற்பத்திப் பொருளான மூலதனம் முதலாளிகளின் தனிப்பட்ட பங்களிப்பு என்றும், அதனால் அதற்குத் தனியாக ஓர் ஆதாயம் கிடைப்பது சரிதான் என்றும் இன்றியமையாதவாறு தோன்றுகிறது.

ஈ) தொழிலாளர்கள் முதலாளிய உறவுகளுக்குள்ளே தனிப்பட்டவர்களாக இருந்து, தங்கள் சொந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மூலதனத்தைச் சார்ந்திருக்கிறார்கள்; மேலும், உண்மையிலும் அவர்கள் குறிப்பிட்ட மூலதனங்களைச் சார்ந்திருக்கிறார்கள்.

இதன்படி, மூலதனத்தின் இயல்பைப் பற்றி புரிந்து கொள்ளாத நிலையில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும்போது கூட இந்தப் போராட்டங்கள் முதலாளிய உறவுகளுக்குள்ளே ‘நேர்மைக்காகவும்’ ‘நியாயத்துக்காகவும்’ நடத்தப்படுகிற போராட்டங்களாக உள்ளனவே அன்றி முதலாளியத்துக்கு அப்பாற்பட்ட நியாயத்துக்காக நடப்பவை அல்ல-- அதாவது அவற்றைப் பற்றி மிகமிக நல்லபடி சொன்னால் கூட அவை மூலதனத்தின் தருக்கத்தைக் கேள்வி கேட்காத ஒரு தொழிற்சங்க அல்லது சமூக ஜனநாயக விழிப்புணர்வை எதிரொளிக்கின்றன. அப்போது போராடும் மக்களின் தன்னெழுச்சியான மறிவினை (துலங்கல்-response) மூலதனத்துக்கு அப்பாற்பட்டுப் போகவில்லை எனில் (அதனால் போக முடியாது) மார்க்சியர்களின் பொறுப்பு (எப்போதுமே இப்படித்தான்) மூலதனத்தின் சாரத்தைத் தொழிலாளர்களிடம் பரப்புவதாகவே உள்ளது; மேலும் அது இன்றியமையாதவாறு மூலதானத்துக்கு அப்பால் செல்ல வேண்டும், ஆனால் இது போதாது.

எனது இரண்டாவது கருத்து, “இருப்பினும் மூலதனத்தின் பிடிக்குள் உள்ளவர்கள் மூலதனத்தின் இயல்பையும், சுரண்டலில் அதன் வேர்களையும் வெறுமனே புரிந்து கொள்ளுவதை விட மேலும் கூடுதலாகப் புரிந்து கொள்ளுவது இன்றியமையாததாகும். இதைவிடச் சிறந்ததோர் உலகம் உள்ளதென்பதை மக்கள் நம்பியாக வேண்டும். (நம்பவேண்டிய தேவை உள்ளது) போராடுவதற்குத் தகுதியான இன்னொரு மாற்று உள்ளதென்று அவர்கள் உணர வேண்டிய தேவை உள்ளது. இந்த வகையில் ஒரு சோசலிச மாற்றின் இயல்பை விவரிப்பது--மேலும் இருபதாம் நூற்றாண்டில் அதற்காக நடந்த முயற்சிகளின் போதாமைகளையும், தோல்விகளையும் பகுத்தாராய்வது-- முதலாளியத்துக்கு முடிவுகட்டுவதற்காக மக்களை அணிதிரட்டும் நிகழ்முறையின் ஒரு சாராம்சமான பகுதி ஆகும்.

இந்த இரண்டாவது கருத்தை யாராவது வினையியலாக (seriously) மறுக்க முடியுமா? கருத்துகளுக்கு இடையிலான சண்டையில் ‘மெய்யான சோசலிசத்தின்’ தோல்விகளையும் இதுவரையில் மூலதனம் பெற்றுள்ள வெற்றியையும் மாற்றுக்கிடையாது (there is no alternative) என்று பார்க்கும் போது முதலாளியத்தைத் தூக்கி ஏறிவதற்கான பங்களிப்புச் செய்ய முதலாளியத்தின் காட்டு விலங்காண்டித்தனத்துக்கு ஒரு சோசலிச மாற்று உள்ளது என்பதை உழைக்கும் மக்களுக்கு நாம் விளக்கிச் செயலில் காட்டவேண்டிய தேவை உள்ளது.

இருபத்தோராம் நூற்றாண்டுக்கான சோசலிசம்

இப்போது முதலாளியத்தை ஒரு பூதம் ஆட்டிப் படைக்கிறது, அது மெய்நடப்பிலுள்ள அல்லது கோட்பாட்டளவிலான இருபதாம் நூற்றாண்டுச் சோசலிம் அன்று. மாறாக அது மனிதரின் தேவைகளிலிருந்து தொடங்கும் மூலதனத்துக்கான ஒரு சவால் ஆகும். இருபத்தோராம் நூற்றாண்டு சோசலிசத்துக்கான கருத்தியலின் உள்ளகத்தில் (core) மானுட மேம்பாட்டின் ஒரு குவியப்புள்ளி (குவியம்) உள்ளது. மார்க்சியர்கள் இந்தப் பூதத்தையும், மார்க்சின் சிந்தனைக்கு அது மையமாக அமைந்திருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

இருபத்தோராம் நூற்றாண்டுக்கான சோலிசம் என்ற சொற்றொடர் இயூகோ சாவேஸ்(Huga Chavez) 2005-இல் நடந்த உலக சோசலிசப் பொது அவையில் (WORLD SOCIALIST FORUM) சோலிசத்தை மறுபடியும் புதிதாகப் புனைந்துருவாக்கப்பட வேண்டிய தேவையைப் பற்றிப் பறைச்சாற்றிய பின்னர் பொது வழக்குக்கு வந்தது: “சோசலிசத்தை ஒர் ஆய்வுரையாக, ஒரு செயல் திட்டமாகவும் பாதையாகவும் ஆனால் ஒரு புதியவகை சோசலிசமாக, மனிதாபிமானம் மிக்க ஒன்றாக எல்லாவற்றுக்கும் முன்னதாக எந்திரங்களையோ அரசையோ முன்னிறுத்தாமல் மனிதரை முன்னிறுத்தும் ஒன்றாக நாம் மறு உருவாக்கம் செய்ய வேண்டும்”.

‘இப்போதே கட்டியமைப்போம்”’ (Monthly Review Press, 2006) என்ற கட்டுரையில் நான் சுட்டிக் காட்டுவதைப் போல் இருபத்தோராம் நூற்றாண்டுக்கான சோசலிசம்-அதற்க்கான தொலைநோக்குப் பார்வை(Vision) - இதுவரையில் சோசலிசத்தோடு அடையாளம்- காணப்படவில்லை; எனினும் பொலிவியன் அரசியலமைப்புச் சட்டத்தில் (1999) ஏற்கனவே இடம் பெற்றிருக்கிறது; அது ‘ஒட்டு மொத்தமான மேம்பாட்டை உறுதி செய்வதைப் பற்றிப் பேசுகிறது’; மேலும் ‘ஒவ்வொரு மனிதரின் படைப்பாற்றலை மேம்படுத்துவதைப் பற்றியும் ஒரு சனநாயக(மக்களாட்சி) சமுதாயத்தில் அவன் அல்லது அவளது ஆளுமையை முழுமையாகச் செயல்படுத்துவதைப் பற்றியும் பேசுகிறது’. 2003 இல் சாவேஸ் ‘சமூகப் பொருளாதாரத்தைப்’ பற்றிப் பேசினார். அதில் இக்கருத்து உயிரோட்டமுடன் இணைக்கப்பட்டுள்ளது அது தன் தருக்கத்தை (logic) மனிதர் வேலை என்ற அடித்தளத்தின் மீது வைக்கிறது; அதாவது தொழிலாளர் மீதும், தொழிலாளர் குடும்பத்தின் மீதும் அதாவது ‘மனிதர்’ மீது வைக்கிறது-முதன்மையாகப் பயன் மதிப்பை உண்டாக்கும் ஒரு பொருளியல்; இந்தப் பொருளியலின் நோக்கம் ‘ஒரு புதிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு புதிய ஆணை-ஒரு புதிய பெண்ணை உருவாக்குவதே’ ஆகும்.

இது மூலதனத்தின் ஏறுமாறான தrக்கத்தையும், எது ஆதாயம் தருகிறதோ அதுவே நல்லது என்கிற கட்டளை விதியையும் ஒதுக்கித்தள்ளுகின்ற ஒரு புலக்காட்சியாகும். பண்டப் பரிமாற்றத்தில் நமது கட்டளை விதி மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நமது கட்டளை விதி, தனியாட்களாகவோ அல்லது தனியாட்களின் குழுக்களாகவோ இது நமக்கு நல்ல பயன்தருகிறதா என்பதாகவே உள்ளது; இப்படிப்பட்ட பண்டப் பரிமாற்றத்தின் வாயிலாக மக்களை இணைப்பதை மூலதனத்தின் தருக்கம் ஒதுக்கித் தள்ளுகிறது. இஸ்த்வான் மெஸ்சாரோஸ் “மூலதனதுக்கு அப்பால்” என்றொரு நூலை எழுதியுள்ளார். அதில் சமூகப் பண்டப் பரிமாற்றம் மட்டுமின்றி, தேவைகள் மற்றும் சமூகக் குறிக்கோள்களின் மீது கட்டியமைக்கப்பட்ட நடவடிக்கைகளின் பரிமாற்றம் உள்ள ஒரு சமுதாயத்தைப் பற்றி மார்க்சைப் பேசவைக்கிறார். சாவேஸ் 2005 இல் ‘உற்பத்தி மற்றும் நுகர்வுக்கான ஒரு சமூக முறைமையை, ஒரு புதிய முறைமையை நாம் உருவாக்க வேண்டும்’ என்று சொன்ன போது அவர் மெஸ்சாரோசின் முழுப்பார்வையை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டார். நாம் ‘அதைக் கட்டியமைக்கவேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார். ‘உற்பத்தி மற்றும் நுகர்வுக்கான இந்தச் சமூக முறைமையை அவர் உருவாக்க உதவுவதற்கு, மக்களின் அடித்தளத்திலிருந்து சமூகங்களின் பங்கேற்போடு சமூக அமைப்புகள், கூட்டுறவுகள் தன் மேலாண்மை மற்றும் இந்த முறைமையைப் படைப்பதற்கான வெவ்வேறு வழிகளின் வாயிலாக நாம் அதைச் கட்டியமைக்க வேண்டும்’ என்றார்.

வெனிசூலாவில் தோன்றிப் பரிணாம வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிற இருபத்தோராம் நூற்றாண்டுக்கான சோசலிசக் கருத்தியல் மூன்று பண்புகளை ஒருங்கே கொண்டிருக்கிறது; (அ) உற்பத்திக் கருவிகளின் சமுதாய உடைமை; (ஆ) முதலில் சொன்னது தொழிலாளர்களால் ஒழுங்கமைக்கப்படும் சமுதாய உற்பத்திக்கான அடித்தளம் ஆகிறது; (இ) இந்தச் சமுதாய உற்பத்தி சமூகத்தின் தேவைகளையும் சமூகக் குறிகோள்களையும் நிறைவேற்றுவதற்கானது. (ஏப்ரல் 2007 மன்த்லி ரிவியூவில் வெளியான “சோசலிசத்துக்கான புதிய சிறகுகளில்” நான் இந்தக் கருத்தை வளர்த்தெடுத்திருக்கிறேன்). இருப்பினும் இந்தக் கருத்தியலின் இதயமாகவும், அதன் கூறுகள் அனைத்தின் ஊடாகப் பரவியும், மானுட மேம்பாட்டுக்கும் பயிற்சிக்கான எடுத்தக்காட்டுக்கும் இடையிலான சாராம்சமான இணைப்பு உள்ளது.

பொலிவிய அரசியலமைப்புச் சட்டத்தில் எடுத்த எடுப்பிலேயே நடை முறையின் மீது கவனம் குவிக்கப்பட்டிருந்தது; அது தனியாட்களுக்கும் மக்கள் கூட்டத்துக்கும் முழுமையான மேம்பாட்டை உறுதி செய்வதற்குரிய ஈடுபாட்டை எய்துவதற்கான இன்றியமையாத வழியாகவும், சமுதாயத்தின் எல்லா மட்டங்களிலும் சனநாயக முறையில் திட்டமிடுதல், நிதிநிலை நிர்வாகத்தில் எல்லாருடைய பங்கேற்பு ஆகியவற்றை அடையாளம் காண்பதிலும், எல்லாவடிவான தன் மேலாண்மை, கூட்டு மேலாண்மை, கூட்டுறவுகள் ஆகிறவற்றை ‘இருதரப்புக்கிடையிலான கூட்டுறவு மற்றும் ஒற்றுமை (solidarity) யின் விழுமியங்களால் வழிகாட்டப்படும் கூட்டிணைப்பு வடிவங்களின்’ எடுத்துக் காட்டாகக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறது. ஒரு புதிய வடிவிலான அரசின் சிறு குழுவாக உள்ள (நகர்ப்புறங்களில் 200 இலிருந்து 400 வரையிலான குடும்பங்களைச் சார்புபடுத்தும்) சமூகச் குழுக்களின் ( communal councils) இப்போதைய மேம்பாட்டோடும், தொழிலாளர் குழுக்கள் மற்றும் தொழிலாளர் மேலாண்மையோடும், சாவேஸ் ‘ஒரு புதியவகை சோசலிசம், மனிதாபிமானம் மிக்க ஒன்று’ என்று கூறுவதன் பால் வெனிசூலாவில் கடப்பாடு நிச்சயமாக ஆழமாகிக் கொண்டுள்ளது.

எனினும், ‘இப்போதே கட்டியமைப்போம்’’ என்ற நூலில் நான் சுட்டிக் காட்டியபடி இந்த நிகழ்முறைக்கு உள்ளேயும் வெளியேயுமான பல தடைகளைக் கணக்கிலெடுத்துப்பார்த்தால், வெனிசூலாவின் முயற்சி வெல்லுமா என்பது தெளிவாகவில்லை. எனினும் சோசலிசம் மறுபடியும் நிகழ்ச்சி நிரலுக்கு வந்து விட்டது. மார்க்சின் புரட்சிகர நடைமுறை என்ற கருத்தியலைத் தன் உள்ளீடாகக் கொண்ட இருபத்தோராம் நூற்றாண்டுக்கான ஒரு சோசலிசம்- அது சுற்றுச் சூழலையும் மானுட நடவடிக்கையையும் ஒருங்கை மாற்றுதல் அல்லது தன்னில் உண்டாகும் மாற்றம் ஆகும்.

‘இருபதாம் நூற்றாண்டில் சோசலிசம்’ என்பதைப் பற்றிச் சிந்திப்பதிலிருந்து ஒர் இடைவேளையாக இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பார்வையில் முதலாளியத்துக்குப் பின்பான முதலாவது கட்டமாக சோசலிசம் கருதப்பட்டது-தனக்கே உரிய பண்புகளையும் விதிகளையும் கொண்ட ஒரு சமுதாயம் அதை விட உயர்ந்த கட்டமாகிய பொதுவுடைமையில் இருந்து அது வேறு பிரித்து அறியப்பட்டது. முதலாளியத்தின் சுரண்டல் மற்றும் பகுத்தறிவுக்கு மாறான தன்மைக்கு அப்பால் கடந்து விட்ட நிலையில் சோசலிசம் உற்பத்தி விசைகளின் விரைந்த வளர்ச்சியை உறுதிப்படுத்தும்; மேலும் குன்றாத வளம் நிறைந்த பொதுவுடைமைச் சமுதாயத்துக்கான அடித்தளத்தைத் தயாரிக்கும்.

இந்தக் கருதுகோளும் அதன் விளைவாக உற்பத்தி விசைகளின் மேல் உண்டாகும் அழுத்தமும் முதலாளியத்திடமிருந்து முறித்துகொள்ள முயல்கிற, ஆனால் மிகவும் திறன்மிக்க முதலாளியன்எதிரிகளால் இன்னமும் சூழப்பட்டிருக்கிற அதே வேளையில் சமுதாயங்களின் உடனடி அக்கறைகளோடு பொருந்திப் போயின. சோசலிசத்தின் தனிக்கட்டம் எல்லா மக்களும் சேர்ந்து எடுக்க வேண்டிய இன்றியமையாத நடவடிக்கைக்க்கான மார்க்சின் பார்வையாக முன் வைக்கப்பட்டது. மேலும், புதிய சமுதாயத்தின் உள்ளார்ந்த குறைபாடுகளைப் பற்றிய மார்க்சின் சொந்த விமர்சனங்கள் தன்னார்வத்துக்கான அடிப்படையின் மீது கட்டியமைப்பதற்கான ஒரு நியாயப்படுத்தலாக எடுத்துக் கொள்ளப்பட்டன. ‘அவரவர் உழைப்புக்கு ஏற்ற ஊதியம்’ என்பதே உற்பத்தி விசைகளின் வளர்ச்சி குன்றாத வளம் நிறைந்த சமுதாயத்தை உருவாக்கும் வரையில் விதியாக அமைய வேண்டும்.

ஆனால் மார்க்சின் முழு கண்ணோட்டமும் (perspective) அது இல்லை. இரண்டு தனித்தனியான கட்டங்களுக்கு மாறாக, புதிய சமுதாயம் இன்றியமையாதவாறு ஒரு நிகழ் முறையின் ஊடாக மேம்பாடு அடைகிறது என்று மார்க்ஸ் புரிந்து கொண்டார். அந்த நிகழ்முறையில் சமுதாயம் முதலாளியத்திடமிருந்து மரபுரிமையாகப் பெற்ற பொருளியல், சமூகவியல், அறிவுசார் முரண்பாடுகளைக் கடந்து செல்லுகிறது. மேலும் அவர் அடையாளம் காட்டிய குறிப்பான குறையிடு உற்பத்தி விசைகள் மிகமிகத் தாழ்ந்த நிலையில் உள்ளன என்பதன்று. ஆனால் பழைய சமுதாயத்தில் பழைய கருத்துகளுடன் உருவாக்கப்பட்ட மனிதர்களின்--தம்மைச் சுற்றியே தொடர்ந்து சிந்திக்கிறவர்களாகவும், அதனால் தாம் சமுதாயத்துக்கு என்ன பங்களிக்கிறோமோ அதையே துல்லியமாகத் திரும்பப் பெற உரிமை உள்ளவர்கள் என்று கருதுகிற அந்த மக்களின்--இயல்பு மிகமிகத் தாழ்ந்த நிலையில் உள்ளதே அந்த குறைபாடாகும். குறைபாடுகளைத் துடை தழிப்பதற்கு விழிப்புணர்வோடு வேலை செய்வதற்கு மாறாக, அக்குறைபாடுகளின் மீதே கட்டியமைப்பது தான் முதலாளியத்தை மீட்பதற்கான ஒரு வழி முறையாகும். (பட்டறிவு இதையே நடைமுறையில் விளக்கிக் காட்டியுள்ளது)

சுருங்கச் சொன்னால், முதலாளியம் ‘சமுதாயத்தின் எல்லாக் கூறுகளையும்’ தனக்குக் கீழ்ப்படியச் செய்தும், அதனிடம் இல்லாத உறுப்புகளைத் தானே உருவாக்கிக் கொண்டும் எப்படி வளர்ந்ததோ அப்படித்தான் சோசலிசமும் வளர வேண்டும். மூலதனத்தின் தர்க்கம் மற்றும் அதன் நலன் ஆகியவற்றின் இடத்தில் புதிய சோசலிச சமுதாயம் மனிதர்களை மையமாக வைத்த அதன் சொந்தத் தர்க்கத்தைச் செருகுவதன் வாயிலாக வளர்கிறது. தன் நலனை மெய்கோளாக (முதனிலை வாசகமாக) கைக் கொள்ளுவதற்கு மாறாக இணை உற்பத்தியாளர்கள் (associated producars) சமுதாய உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டுறவு மற்றும் ஒருமைப்பாடு (ஒற்றுமை) ஆகியவற்றின் மீதமைந்த புதிய சமுதாய நெறி முறைகளை மேம்படுத்துவதற்குப் பணியாற்றுகிறார்கள்.

இவ்வாறாகப் புதிய சமுதாயத்தைக் கட்டியமைத்தல் என்பது பொருட்களின் உற்பத்தி பெருகுவதை வலியுறுத்துவதில்லை. ஆனால் அதற்கு மாறாக, மனித விசைகளின் மேம்பாட்டுக்கான நிலைமைகளை உருவாக்குவதை வலியுறுத்துகிறது. அதாவது முதலாளியத்தின் துண்டு துக்காணியாகச் சிதறிய முடங்கிய மனிதர்களன் இடத்தில் ‘முழுவதுமாக வளர்ச்சியடைந்த தனி மனிதரை வைக்கவும்’, மக்கள் தங்கள் சொந்த நடவடிக்கைகளின் ஊடாகத் தாம் வளர்வதற்கு ஏற்ற நிலைமைகள் ‘தனி நபரின் முழுமையான மேம்பாட்டோடு’, கூட்டுறவுச் செல்வத்தின் எல்லா ஊற்றுகளும் நிறைந்த வளர்த்துடன் பாயும்.

இருபத்தோராம் நூற்றாண்டுக்கான இந்தக் கருத்தியல் மார்க்சின் மூலக்கருத்தான ஒரு ‘கூட்டு, அதில் ஒவ்வொருவரின் கட்டற்ற மேம்பாடு என்பது எல்லாருடைய கட்டற்ற மேம்பாட்டுக்கான நிபந்தனை; எல்லா மாந்தரின் மேம்பாட்டை அதனளவில் முடிவாகக் கொண்ட ஒன்றின் மீது கவனம் குவிப்பதாக உள்ள ஒரு சமுதாயம் என்பதை மீட்டெடுக்கிறது. இது சேகுவாரா தன் செவ்வியல் படைப்பான ‘கியூபாவில் மனிதரும் சோசலிசமும்’ என்ற நூலில் வலியுறுத்தியுள்ளதைத் தழுவி ஏற்கிறது. அதில் சோசலிசத்தைக் கட்டுவதற்கு, புதிய பொருளாயத அடித்தளங்களைக் கட்டுவதோடு கூடவே, புதிய மனிதர்களையும் கட்டி எழுப்ப வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இவ்வாறாக, உற்பத்தி விசைகளை மேம்படுத்தும் பொருட்டு சமுதாய உறவுகளையும், மனிதர்களையும் புறக்கணிக்கும் நடைமுறையை--இருபதாம் நூற்றாண்டில் சோசலிசத்தைக் கட்டுவதற்காக மேலிருந்து கீழே செய்யப்பட்ட முயற்சிகளின் துரதிருஷ்ட வயமான பண்புக் கூறுகளை-- அது ஒதுக்கித் தள்ளுகிறது.

இருபத்தோராம் நூற்றாண்டுக்கான மார்க்சியம்

இருபதாம் நூற்றாண்டின் சோசலிசத்திற்கும், இருபதாம் நூற்றாண்டில் சோசலித்தைக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஏற்பட்ட பிழைகளுக்கும் இடையில் தொடர்பு ஏதும் உள்ளதா? பல பிழைகள் உள்ளதென்று நான் நினைக்கிறேன். முதலாவதாக, மார்க்சியர்கள் 1859 முகப்புரையை ( அதன் சூத்திரவகைப்பட்ட பொருளாதார நியதிவாதத்துடன் கூடவே ) ஒரு பழமொழித் தொகுப்பு நூலுடன் சேர்த்துக் கற்றிருக்க வேண்டும். இதற்கு மாறாக, கிரண்டிஸ்ஸே (Grundisse) ஒர் உயிர்ம அமைவத்தின் (organic system) இனி ஆகப்போவது(becoming) இப்போது இருப்பது(being) ஆகியவற்றைப் பற்றிகொண்டிருந்த உள்ளொளியைப் படித்தராய வேண்டும். இந்த நிகழ் முறையை மேலதிகமாய் நன்றாகப் புரிந்து கொள்ள இந்த உள்ளொளி அனுமதிக்கும். மேலும் கூடவே, உற்பத்தி உறவுகள் எவ்வாறு புதிய உற்பத்தி விசைகளை முந்திநின்று புதிய உற்பத்திவிசைகளின் பண்பை வடிவமைக்கின்றன என்பதில் மூலதனம் கருத்தூன்றுவதைப் புரிந்து பற்றிக் கொள்ளுவதானது, தொழில் நுட்பத்தையும், உற்பத்தி விசைகளின் மேம்பாட்டையும் வணங்கி வழிபடுவதைக் குறைக்க உதவும்.

எனினும், 20 ஆம் நூற்றாண்டு மார்க்சியத்தில் மூலதனத்தில் இருந்தே வருகிற சிக்கல் ஒன்று இருப்பதாக நான் நினைக்கிறேன். மானுட மேம்பாடு மற்றும் பணம் படைத்தவர்களின் கருத்தியல் பற்றி கேள்வியிலிருந்து மார்க்சியம் தானாகவே ஏன் தொடங்கவில்லை?

மெய்யான செல்வம் மனிதச் செல்வமே. செழுமையான தனித்தன்மை (individuality) நுகர்வதில் உள்ளதைப் போலவே அதன் உற்பத்தியிலும் பல பக்கப்பண்புடையது (all sided) என்பதை மார்க்ஸ் புரிந்து கொண்டதே மூலதனத்தை எழுதுவதில் மார்க்சின் மெய்க் கோளாக (premise) இருந்தது என்பதனை பல மார்க்சியர்களின் புரிந்து பற்றிக் கொள்ளாதது ஏன்? மேலும் கடந்தகால உழைப்பின் விளைப்பயன்கள் மேம்பாட்டுக்கான தொழிலாளரின் சொந்தத் தேவையை நிறைவேற்றுவதற்கே உள்ளன என்பதையும் இத்தனை பல மார்க்சியர்கள் புரிந்து கொள்ளாதது ஏன்? மார்க்ஸ் சோசலிச மாற்றத்தைத் தெளிவாக மனதில் கொள்ளவில்லை என்றால் விசித்திரமானதும், முதலாளிய உற்பத்தி முறைக்கே உரிய சிறப்பியல்பானதுமாகிய ‘இந்தத் தலை கீழ்ப்புரட்டலாக உண்மையில் இந்த உருக்குலைவாக’ உற்பத்திக்கருவிகள் தொழிலாளரை வேலைக்கு அமர்த்தும் சூழமைவை (situation) அவர் எவ்வாறு விளக்கி இருக்க முடியும்? எதைத் தலைகீழாகப் புரட்டுதல்?

மார்க்சின் மூலதனத்தைத் தவறாகப் புரிந்து கொள்ளுவதில் இச்சிக்கல் பிறக்கிறது -- மூலதனத்தினுடைய அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய விமர்சன உரையில் தொடங்கி மூலதனத்தைப் பற்றிய ஒரு புத்தாய்வுதான் மார்க்சின் மூலதனம் என்று பார்ப்பதற்கு மாறாக, மூலதனம் முதலாளியத்தைப் பற்றிய மார்க்சின் ஆராய்ச்சி என்று பார்ப்பதில் அந்தச் சிக்கல் பிறக்கிறது. மூலதனத்தின் வரம்புகளை நீங்கள் புரிந்து கொள்ளத் தவறும் போது, (மார்க்சே சுட்டிக் காட்டிய வரம்புகள்) பொருளாதார நியதிவாதம் அதாவது மூலதனத்தால் புகுத்தப்பட்ட உற்பத்திவிசைகள் நடு நிலையானவை என்ற பார்வை, பாட்டாளி வர்க்கத்தை அருவமானதாக நடத்துவது ( treatment) , தொழிலாளர்களுக்கான புதிய தேவைகளை உருவாக்குவதன் மீது மூலதனத்தின் இக்காலவலிமை தங்கி நிற்பது எவ்வாறு என்று புரிந்து கொள்ள இயலாமை, தொழிலாளரைப் பிரித்துத் தனிமைப் படுத்துவதற்கானமூலதனத்தின் பொதுவான மற்றும் இன்றியமையாதபோக்கை அடையாளம் காணத்தவறுதல், மேலும் தொழிலாளர் தரப்பிலிருந்து தீரமிக்க வர்க்கப் போராட்டம் மறைதல் ஆகியவைகள் எல்லாம் தொடர்கின்றன.

‘மூலதனத்துக்கு அப்பால்: மார்க்சினுடைய தொழிலாளர் வார்க்கத்தின் அரசியல் பொருளாதாரம்’ (பால்கிரேவ், 2003) மற்றும் யூட்ஷெர் (Deutscher) பரிசு உரையான ‘அனுமானத்தின் அரசியல், அரசியலின் அனுமானம்’ ( வரலாற்றுப் பொருள் முதலியல், 14-2-2006) என்பதிலும் மார்க்ஸ் தனது அறிவாதார முறையியல் செயல் திட்டத்தை (epistemological project) முடிக்கத் தவறியதால் உண்டான சிக்கல்களை நான் புதிதாக ஆராய்ந்திருக்கிறேன். குறிப்பாக, கூலி-உழைப்பு பற்றிய விட்டுப்போன அவரின் நூலின் பாதிப்புகளைப் புரிந்து கொள்ளத் தவறியதிலிருந்து தொடர்கின்ற ஒரு பக்கச்சார்வு மார்க்சியத்தை நான் விவரித்திருக்கிறேன். ஏன் அவர் அந்த நூலை எழுதாமல் விட்டார்? அவர் தனது புரட்சிகரச் செயல் திட்டத்தில் காட்டிய ஆர்வத்தைக் காட்டிலும் தனது அறிவாதார முறையியல் செயல் திட்டத்தை முடிப்பதில் காட்டிய ஆர்வம் குறைவே ஆகும் என்று நான் முன் மொழிந்திருக்கிறேன்.

இருப்பினும், மார்க்சை பின்பற்றுகிறவர்கள் என்ற வகையில் நாம் அந்த இரண்டையும் செய்ய முடியும் என்பது உறுதி. எனினும், விலகல் புள்ளி “இனிமேலும் மெய்மைஇல்லை; ஆனால் ஆசான் எந்த வடிவில் அதைத் தன்னையறியாமலேயே உயர் குறிகோளை நோக்கித் திருப்பினாரோ அந்தப் புதிய கோட்யிட்டு வடிவமே விலகல் புள்ளி” என்கிற மெய்ந்நூல் கருத்தாளர்களும் அவர்களின் மாணவர்களும் அந்த இரண்டில் ஒன்றைக் கூடச் செய்ய முடியாது. நாம் மார்க்சின் முதனிலை வாசகத்துக்குத் திரும்ப வேண்டிய தேவை உள்ளது. ‘தன் படைப்பாற்றல்கள் மிக்க திறமையிலிருந்து வெளிப்படும் முழுமை பெற்ற உழைப்பு’, ‘முழு முற்றான உழைப்பு இருக்கிற மானுட உள்ளடக்கத்திலிருந்து வெளிப்படும் முழுமை பெற்ற உழைப்பு’, ‘அதனளவில் முடிவதாக மானுட ஆற்றல் முழுவதும் மேம்பாடு அடைகிற செழுமையான மனிதர்களின் சமுதாயம் (rich human being)’ பற்றிய பார்வைதான் அந்த முதனிலை வாசகம். சுருங்கச் சொன்னால், இருபத்தோராம் நூற்றாண்டுக்கான சோசலிசம் பற்றிய கண்ணோட்டத்தை நாம் தழுவி ஏற்க வேண்டிய தேவை உள்ளது.

மேலும் இந்த மெய்யான உலகத்தில் வாழுகிற மார்க்சியர்களாக, இருபத்தோராம் நூற்றாண்டின் உழைக்கும் வர்க்கம் ‘தன் சொந்த நிலையையும், அதன் தேவைகளையும், அதன் மேம்பாட்டிற்காக விழிப்புணர்வடைவதற்குத் துல்லியமான நிலைமைகளுக்காக நாம் எவ்வாறு உதவ முடியும் என்று நாம் கேட்க வேண்டிய தேவைகள் உள்ளது. அவர்களுடைய தேவைகள் என்ன? அந்தத் தேவைகளை யாதார்த்ததில் நிறைவேற்றுவதற்கு இருபதோராம் நூற்றாண்டு முதலாளியம் என்னென்ன தடைகளை ஒருவாக்கி உள்ளது? அவர்களுடைய உண்மையான வாழ்க்கை நிலைமைகளைக் கணக்கில் எடுத்தால், இப்பொழுது தொழிலாளர்கள் மூலதனத்துக்கு எதிராகப் போராடுவதற்குரிய வழிகள் யாவை? உண்மையிலேயே, இப்பொழுது அவை என்ன செய்ய வேண்டும்?

சுருங்கச் சொன்னால், உலகளாவிய முதலாளியம் இருபத்தோராம் நூற்றாண்டில் உருவாக்கியுள்ள நிலைமைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது. அந்த நிலைமைகள் நாம் தேர்ந்தெடுத்திருக்கக் கூடியவை அல்ல என்பது வெளிப்படையானது. அந்த நிலைமைகள் மட்டுமே இப்போது நமக்கு இருக்கக்கூடியவையாகும், அவற்றில் இருந்துதான் நாம் வரலாற்றைப் படைக்க வேண்டும்.

(இந்தக் கட்டுரை முதலில் ஜங்வெல்ட் (Junge welt) என்ற ஜெர்மன் இடதுசாரி நாளிதழுக்காக, ஏப்ரல் 2007இல் ‘இருபத்தோராம் நூற்றாண்டுக்கான மார்க்சியம்’ என்ற தலைப்பில் பெர்லினில் நடந்த மாநாட்டுக்காக முன் கூட்டியே எழுதப்பட்டதாகும்).

தமிழில்: சே. கோச்சடை

Pin It